Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஸ்ரீனிவாச கல்யாணம்
 
பக்தி கதைகள்
ஸ்ரீனிவாச கல்யாணம்


நம் பாரத தேசத்தில் உள்ள பெருமை மிகுந்த வைணவத் திருத்தலங்கள் 108.  இந்த நுாற்றி எட்டுக்குள்ளேயும் சிறப்பாக பேசப்படுவது மூன்று. அவை கோயில்,  திருமலை, பெருமாள் கோயில்

கோயில் என்பது இரண்டு பக்கமும் காவிரிநதி மாலையாக அலங்கரிக்க நடுவிலே ஸ்ரீரங்கநாதன் பள்ளி கொண்டிருக்கும் திருவரங்கம்.

அடுத்தது திருமலை. திருமலை என்றாலே அந்த வெங்கடேசப்பெருமாள்  அருள் பாலிக்கும்  திருவேங்கடம் என்று சொல்லப்படும் திருமலை திருப்பதி.

மூன்றாவதாக சொல்லப்படும் பெருமாள் கோயில், வரதராஜ பெருமாள் குடிகொண்டிருக்கும் ஹஸ்தகிரி (அத்திகிரி) என்னும் காஞ்சிபுரம்..

திருமலை எனப்படும் திருப்பதி மாபெரும் பெருமை பெற்றது. திருமலையே தெய்வ வடிவம்தான். திருவேங்கடம் என்னும் இந்த தலத்திற்கு சென்றாலே பாபங்கள் அகலும்.  வேம் என்றால் பாபம், கடம் என்றால் பொசுக்குவது.  பாபங்களை அழிப்பதால் திருவேங்கடம்.  

இங்கு ஒரு சம்பவத்தை நினைவுகூரலாம். ராமனுக்காக, சீதா பிராட்டி எங்கிருக்கிறாள் என்று தேடிக் கண்டுபிடிக்க கிஷ்கிந்தை அரசன் சுக்ரீவன் தன்னுடைய வானரப் படையை நான்கு திசைகளுக்கும் அனுப்புகிறான். அதில் தெற்கு நோக்கி சென்றவர்கள் அங்கதன், அனுமன், ஜாம்பவான் முதலியவர்கள். அவர்களிடம் சுக்ரீவன், ‘‘செல்லும் வழியில் காணக் கூடிய முக்கிய கோயில்கள், ஊர்கள், மக்கள், நதிகள், காடுகள் மலைகள் அனைத்தையும் விவரமாக சொல்கிறான். அப்படி சொல்லும் போது,“திருவேங்கடம் என்னும் ஒரு மலை குறுக்கிடும். அங்கு சென்று தேட வேண்டாம். ஏனெனில் அங்கு சென்றவுடன்  நீங்கள் இதுவரை செய்துள்ள பாபங்கள் அனைத்தும் அழிந்து உங்களுக்கு மோட்சம் கிடைத்து விடும்".   

கோடு உறு மால் வரை அதனைக் குறுகுதிரேல்
              உம் நெடிய கொடுமை நீங்கி
வீடு உறுதிர் ஆதலினால் விலங்குதிர் ........ என்கிறான் கம்பன்.
சுக்ரீவனுக்கு சீதை கிடைப்பதுதான் முக்கியமே ஒழிய, செல்லும் வானரங்களுக்கு மோட்சம் கிடைப்பது அல்ல.  

கச்யபர் ஒரு மாபெரும் தவ முனிவர். இவருடைய பெயரில் தான் காஷ்மீர் பிரதேசம் அமைந்துள்ளது. அவரது தலைமையில் கங்கை ஆற்றின் கரையில் ஒரு வேள்வி நடந்து கொண்டிருந்தது.  அப்போது அந்த வழியாக நாரதர் வந்தார்.  வேள்வியைப் பார்த்து மகிழ்ச்சி கொண்டார்.  கச்யபரிடம் ‘இந்த யாகத்தின் அவிர்பாகத்தை ஒரு சாத்வீகமான தேவதைக்கு படைப்பதுதான் சிறப்பு’  என்று சொன்னார்.  அதை ஏற்றுக் கொண்ட கச்யபர், ‘சாத்வீகமான தேவதை யார் என்று எப்படி கண்டறிவது’ என்று குழம்பினார்.

நல்ல வேளையாக அந்த சமயம் அங்கே  பிருகு முனிவர் வந்தார்.  அவரிடம் கச்யபர் சாத்வீகமான தேவதை யாரென்று கண்டறிந்து சொல்லுமாறு கேட்டுக்கொண்டார்.  அவர் வேண்டுகோளுக்கு இணங்கி இன்னும் நாலு நாளில் வந்து சொல்கிறேன் என்று சொல்லிப் புறப்பட்டார்.  

பிருகு சாத்வீகமான தேவதையைக் அறிய முதலில் சத்யலோகம் சென்றார்.  அங்கே ஆசனத்தில் பிரம்மன் அமர்ந்திருந்தார். அவரது காலடியில் தேவி சரஸ்வதி வீணையை வைத்துக் கொண்டு இனிமையாக வாசித்துக் கொண்டிருந்தார். இசையை தன்னை மறந்து ரசித்துக் கொண்டிருந்த பிரம்மன், பிருகு முனிவர் அங்கே வந்ததைக் கவனித்து வாய் திறந்து வாருங்கள் என்று கூட சொல்லாமல் கொஞ்சம் தள்ளியிருந்த ஒரு ஆசனத்தைக் காட்டி அமரும்படி சைகையாலேயே சொல்லிவிட்டு, மீண்டும் இசையில் லயித்தார்.

இந்த அலட்சியத்தையும் அவமானத்தையும் பிருகுவால் தாங்கி கொள்ள முடியவில்லை.  கோபத்துடன் அங்கிருந்து புறப்பட்டார்.  வழியில் எங்கும் தங்காமல் நேராக கைலாயத்திற்கு வந்தார்.  அங்கே பார்வதி நடனமாடிக் கொண்டிருந்தார்.  அருகிலிருந்த சிவனும் அவளுடன் சேர்ந்து ஆட ஆரம்பித்தார்.  அங்கே வந்த பிருகு முனிவர் சற்று தள்ளி நின்று கையைக் கூப்பி வணங்கினார்.  ஆனால் சிவபெருமான் முனிவரைக் கவனித்ததாக தெரியவில்லை. இருவரும் நடனத்திலேயே ஈடுபட்டிருந்தனர்.  என்ன அவமானம்! எவ்வளவு அலட்சியம்! பிருகுவுக்கு கோபம் தலைக்கேறியது, அங்கிருந்து புறப்பட்டார்.  

அடுத்து ஸ்ரீவைகுண்டம்.  நாராயணன் எப்படி நடந்து கொள்கிறார் என்று பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் வந்த பிருகுவுக்கு... இங்கேயும் ஏமாற்றம்தான் காத்திருந்தது.

பிரம்மாவும் சிவனும் இசையிலும், நடனத்திலுமாவது கவனத்தில் இருந்தார்கள்.  பரவாயில்லை. இங்கு நாராயணன் சுகமாக படுத்துக் கொண்டு ஒரு அரைத் துாக்கத்தில் இருந்தார்.  மகாலட்சுமி அவரது காலை மெதுவாக பிடித்துக் கொண்டிருந்தாள். பிருகு முனிவர் வந்ததை நாராயணன் கண்டுகொள்ளவில்லை.  மகாலட்சுமியாவது கணவரிடம் சொல்லியிருக்கலாம். அவளும் பொருட்படுத்தவில்லை.   

ஏற்கனவே கோபத்திலிருந்து பிருகு முனிவருக்கு, நாராயணின் அலட்சியம் மிகவும் பாதித்தது.  என்ன செய்கிறோம் என யோசிக்காமல் தன் காலால் நாராயணின் மார்பில் எட்டி உதைத்தார்.  உதைத்த காலை அப்படியே பரந்தாமன் பற்றிக் கொண்டார். ‘‘முனிவரே, என் மார்பு கொஞ்சம் கரடு முரடாக இருக்கும்.  பூப்போன்ற தங்கள் பாதம் அதன் மீது பட்டு  வேதனையைக் கொடுத்திருக்கும். மன்னிக்க வேண்டுகிறேன்’’ என்றார்.

"நான் வந்ததை பொருட்படுத்தாமல் நீ சயனத்தில் இருந்தாய், அதனால் இப்படி நேர்ந்தது’’

"நான் அப்படி இருந்ததால்தான் ஒரு தவசிரேஷ்டரின் திருப்பாதம் என்மீது படும் பாக்கியம் கிடைத்தது சுவாமி’’ என்றார் நாராயணன்.  

பகவானின் குணத்தைக் கண்ட மகரிஷி அப்படியே உருகிவிட்டார். சாத்வீகமான தேவதை என்று தீர்மானித்து, கச்யபரிடம் சொல்லப் புறப்பட்டார்.

ஆனால் இந்த சம்பவம் எதிர்மறை தாக்கத்தை உருவாக்கியதை நாராயணன் அப்போது உணரவில்லை. முனிவரின் கோபம் அடங்கி சாந்தமாகிக் கொண்டிருக்கையில், மறுபக்கத்தில் மகாலட்சுமியின் மனதில் கோபம் உருவாகிக் கொண்டிருந்தது.  ஏனெனில் பகவானின் மார்பே மகாலட்சுமியின் இருப்பிடம்.  நாராயணின் மார்பில்தான் மகாலட்சுமி உறைகிறாள். அதனால்தான் அவனுக்கு ஸ்ரீதரன் (திருமகளை தாங்குபவன்), ஸ்ரீநிவாசன் (திருமகள் வசிப்பிடமாக இருப்பவன்) என்ற பெயர்கள்.  முனிவர் அங்கே தான் உதைத்தார். அதை நாராயணன் கண்டிக்கவில்லை, மாறாக முனிவரை புகழ்ந்தான்.  அது மகாலட்சுமிக்கு கோபத்தையும் அவமானத்தையும் உண்டாக்கியது.  

நியாயமாக பார்த்தால்  நாராயணனும் முனிவரும் அவளிடம் மன்னிப்பு கேட்டு, சமாதானம் சொல்லியிருக்க வேண்டும்.  ஆனால் இருவரும் அவளை கண்டுகொள்ளவே இல்லை.

‘‘என்னை அலட்சியப்படுத்திய உங்களுடன் நான் இருக்கப் போவதில்லை. பூலோகம் செல்லப் போகிறேன்" என்று சொல்லி புறப்பட்டாள். சாதாரணமாக பெண்கள் கணவனிடம் கோபித்துக் கொண்டால், பிறந்த வீட்டுக்குத்தான் செல்வார்கள். ஆனால் திருமகள் பிறந்ததோ பாற்கடல்; கணவனும் அங்கேயேதான் வசிக்கிறான்.  அதனால்தான் அவள் பூலோகம் சென்று விட்டாள். வைகுண்டத்திலிருந்து புறப்பட்ட மகாலட்சுமி பூலோகத்தில் வந்து இறங்கிய இடம் கரவீரபுரம். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள இத்தலம் தற்போது கோலாப்பூர் என அழைக்கப்படுகிறது.    

திருமகள் சென்று விட்டதும், வைகுண்டமே வெறிச்சோடி விட்டது. லட்சுமியுடன், லட்சுமி நாராயணனாக இருக்கும் போதுதான் அவனுக்கு மதிப்பும், ஏற்றமும். இது வரை திருமகள், திருமாலை விட்டு பிரிந்து சென்றதே இல்லை.    

திருமகள் இல்லாமல் நாராயணனால் எந்த காரியமும் ஒழுங்காக செய்ய முடியாது.  என்ன செய்கிறோம் என்று கூட தெரியாமல் தடுமாறி போய்விடுவான். இந்த குழப்பம் அவனுடைய அவதாரங்களில் கூட பிரதிபலிக்கிறது.  
ராமாயணத்தில் ஒரு சம்பவம். ராமன் மறைந்திருந்து அம்பு விட்டு வாலியை வீழ்த்தி விடுகிறான். அப்போது ராமனிடம்,  

கோவியற் றரும முங்கள் குலத்துதித் தோர்கட் கெல்லாம்
ஓவியத் தெழுத வொண்ணா வுருவத்தா யுடைமை யன்றோ
ஆவியைச் சனகன் பெற்ற வன்னத்தை யமிழ்தின் வந்த
தேவியைப் பிரிந்த பின்னைத் திகைத்தனை போலுஞ் செய்கை

‘சீதையைப் பிரிந்த பின்பு நீ செய்யும் செயல்களில் தடுமாற்றம் அடைகிறாய் என நினைக்கிறேன்’ என்றான் வாலி.

அதனால் வைகுண்டத்தை விட்டு, நாராயணனும் மகாலட்சுமியைத் தேடிக் கொண்டு பூலோகத்துக்கு கிளம்பி விட்டான். பூலோகத்தில் எங்கு செல்வது என தேடிப் பார்த்தான் நாராயணன்.  ஏழுமலை சிகரங்கள் தென்பட்டன. பார்ப்பதற்கு ஆதிசேஷன் படுத்திருப்பது போலத் தெரிந்தது.

சரி இது நாம் வசிக்க, தவம் செய்ய சரியான இடம் என தீர்மானித்து அங்கே வந்து இறங்கினான். ஆனால் அந்த இடம்  ஆதிவராக மூர்த்தியின் ஆளுகையில் இருந்தது. ஏன் அப்படி ஏற்பட்டது என்பதைக் கொஞ்சம் பார்க்கலாம்.  

கிருத யுகத்தில் இரண்யாட்சன் என்னும் அரக்கன் பூமாதேவியை அபகரித்துக் கொண்டு  கடலுக்குள் சென்று மறைந்தான்.  பூமாதேவி காப்பாற்றும்படி அபயக்குரல் கொடுத்தாள். மகாவிஷ்ணுவும் வராக அவதாரமெடுத்து அந்த அரக்கனை வதம் செய்து மீட்க பூமாதேவி மகிழ்ச்சியடைந்தாள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar