|
நான், எனது என்றிருப்பவர்கள் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள். நாம், நமது என்றிருப்பவர்கள் சான்றோர்கள். நமக்கு குடும்பமே உலகம். சான்றோர்களுக்கு உலகமே குடும்பம். எனவே அத்தகைய சான்றோர்களின் கூட்டத்தில் இருந்தால் நலம் என்கிறார் அவ்வையார். பெற்றோர் ஒருவருக்கு விதிவசத்தால் நல்லவர்களாகக் கூட அமையாமல் போகலாம். ஆனால் சேரும் இடத்தைப் பொறுத்து அவன் சான்றோனாக ஆகலாம். ராமாயணத்தில் ஜனக மஹாராஜர் சபையில் விஸ்வாமித்ரர் ஸ்ரீராமரை அறிமுகம் செய்கிறார். அப்போது முதலில் தசரதச் சக்ரவர்த்தியின் புதல்வன் என்று சொன்னவுடன் ஜனகர் முகம் சற்று சுருங்குகிறது. காரணம், தசரதச் சக்ரவர்த்திக்கு சட்டப்படியே மூன்று மனைவிகள். அதைத் தவிர அறுபதாயிரம் மனைவிகள் என்ற கணக்கும் உண்டு. ஆகையால் என்ன தான் உலகை ஒரு குடைக்கீழ் ஆட்சி செய்தாலும், எதிர்க்க ஒருவரும் இல்லாமல் கூட, வீர, தீர, பராக்ரமசாலியாக இருந்தாலும் கூட தன் மகளை மணம் முடிக்கப் போகும் மன்னவன் தந்தை போல் இருந்துவிட்டால் என்ன செய்வது என யோசிக்கும் போதே குறிப்புணர்ந்த விஸ்வாமித்ரர், ஜனகரிடம் இவர் தசரதச் சக்ரவர்த்தியின் மைந்தராக இருந்தாலும், இவருக்கு உபநயன விதி முடித்து முறைப்படி வளர்த்தது வசிஷ்ட முனிவன் என்கிறார். காரணம், வசிஷ்ட முனிவர் ஏகபத்னி விரதர் அல்லவா? எனவே அவர் வழிப்படி ஸ்ரீராமனும் ஏகபத்னி விரதராகவே இருப்பார் எனச் சொன்னவுடன் ஜனகன் நிம்மதி அடைந்ததாக கம்பர் பாடுவார். அதன்படி ‘உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான் உள்ளத்தாலும் தொட மாட்டேன்’ என்று ஏக பத்னி விரதனாக வாழ்ந்தார் என்பதை வரலாறு அறியும். எனவே யாரிடம் சேர்கிறோமே அந்தக் குணம் தான் நமக்கும் வரும். ‘உன் நண்பனைச் சொல், நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன்’ என்பது ஒரு பிரபலமான ஆங்கிலப் பழமொழி. பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் அழகான கதை சொல்வார். ஒருவர் இரண்டு கிளிகள் வளர்த்து வந்தார். அவர் காசி யாத்திரை செல்ல வேண்டியிருந்தது. எனவே ஒரு கிளியைத் தனது தழிழாசிரியரிடமும், மற்றொன்றை தன் வீட்டின் அருகில் உள்ள வியாபாரியிடமும் கொடுத்து விட்டுச் சென்றார். ஆண்டுகள் சில உருண்டோடின. திரும்பி வந்து கிளிகளைக் கொடுத்தவர்களிடம் பெற்றுக் கொண்டு வீட்டிற்கு வந்தார். தமிழாசிரியரிடம் கொடுத்த கிளி, ‘‘ஐயா வாங்க!, வணக்கம், நலமா’’ என்று கேட்டது. வியாபாரியிடம் கொடுத்ததோ, ‘‘டோய் சோம்பேரி, போடா தண்டம், வெட்டிப் பயலே’’ என்று கூற ஆரம்பித்தது. அவர் வியப்புடன் இதனால் தான் சேரிடம் அறிந்து சேர் என்றார்களோ என்று கூறினார். ஆம், மழை நீர் கங்கையில் விழும் போது, புனிதம் மிக்க கங்கையாகவும், சாக்கடையில் விழும் போது, சாக்கடை நீராகவும், மாறுவதையே காண்கிறோம். தரமற்ற வார்த்தைகளை உபயோகிப்பதன் மூலமே அவனுடைய பின்புலம் நமக்குப் புலப்பட்டுவிடுகிறது. பேருந்திலோ, ரயில் பயணங்களிலோ பயணப்படும் போது தேவையின்றி அரசியல், சமூக நிகழ்வுகளை உரக்கப் பேசி அந்த இடத்தையே போர்க்களமாக மாற்றும் நபர்களைச் சந்திக்கிறோம். மாறாக யார் என்ன பேசினாலும், அமைதியாக அதனை மாற்றும் வல்லமை படைத்தவர்களையும் நாம் சந்திக்கிறோம் அல்லவா? பேருந்து பயணம், கூட்ட நெரிசல், உட்கார்ந்து இருந்த பெண் ஒருவர் பஸ்சில் ஏறியதில் இருந்து எல்லோரையும் வசை பாடிய படியே வந்தார். அருகில் ஒரு பெண் அமைதியாக நின்றிருந்தார். பஸ் ஒரு ஸ்டாப்பில் பிரேக் போடும் போது நின்றிருந்த பெண், வசை பாடும் பெண் மீது தெரியாமல் இடித்துவிட்டார். அவ்வளவு தான். பொரிந்து தள்ளி விட்டார். தள்ளி... இடித்த பெண்ணோ ஏதும் பதில் பேசாமல் புன்னகையுடன் இருந்தார். சுற்றியருந்தவர்கள் ஏம்மா! அந்தம்மா இந்தக் கத்து கத்துறா! பேசாமா இருக்கீங்க... என்றனர். அதற்கு அந்த அமைதிப் பெண்மணி சொன்னார். என் குருநாதர் காட்டிய வழி இது. நான் அடுத்த ஸ்டாப்பில் இறங்கப் போகிறேன். நான் ஏன் தேவையின்றி இந்தம்மாவுடன் சண்டையிட்டு என் மனத்தையும், அதனால் வரும் டென்ஷனால் உடம்பையும் கெடுத்துக் கொள்ள வேண்டும். நம் வாழ்வோ உலக ஓட்டத்தில் ஒரு சிறுபயணம். இதில் சண்டையிட்டு ஏன் சங்கப்பட வேண்டும். அந்தம்மாவுக்கும் என்ன சூழலோ, யார் மேல் கோபமோ அல்லது உடல் நலக் குறைவோ பரவாயில்லை. பொறுத்துக் கொள்வோம் என்றார். அனைவரும் வியந்தனர். சண்டை போட்ட பெண் வலிய வந்து மன்னிப்புக் கேட்டாள். அதற்குள் அடுத்த ஸ்டாப் வந்தது. புன்னகையுடன் விடைபெற்றார். ஆம், நல்லோர் இணக்கம் தருகின்ற பெரிய மனப்பக்குவம் இதுதான். ஆதிசங்கரர் ‘ஸத் ஸங்கத்தே நித்ஸங்கத்வம்’ என்கிறார் பஜ கோவிந்தத்தில். ‘கூடும் மெய்த்தொண்டர் குழாத்துடன் கூட்டி’ என்கிறார் அவ்வையார் விநாயகர் அகவலில். ‘அடியேன் அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரிவாய்’ என்கிறார் மாணிக்கவாசகர். மெய்ப்பொருள் நாயனார் என்ற அரசனை வெல்ல இயலாத அவரின் எதிரி முத்தநாதன் என்பவன் போலியாக சிவவேடம் தரித்து ஆன்மிக நுாலின் உள்ளே கத்தியை வைத்துக் கொண்டு மன்னரைச் சந்தித்து, ‘‘உங்களுக்கு ஒரு சிறந்த நுாலில் இருந்து பாடம் சொல்லித் தருகிறேன். அதனால் நாம் இருவரும் தனித்து இருக்க வேண்டும்’’ என்கிறான். மன்னவரும் அவன் வேடத்தை நம்பி சம்மதிக்கிறார். மெய்க்காப்பாளன் தத்தன் என்பவன் மட்டும் சந்தேகத்துடன் வெளியில் நிற்கிறான். முத்தநாதன் தான் திட்டமிட்டவாறே சிறிது நேரம் பாடம் சொல்லிவிட்டுக் கத்தியைக் கொண்டு நிராயுதபாணியான மன்னரைச் சாய்க்கின்றான். மெய்க்காப்பாளன் தத்தன் பாய்ந்து வந்து முத்தநாதனைக் கொல்லப் பார்க்கிறான். மெய்பொருள் நாயனாரோ அந்தச் சூழலிலும், ‘சிவவேடம் அணிந்த இவரை ஒன்றும் செய்யாதே! பத்திரமாக ஊர் எல்லையில் விட்டு விட்டுத் திரும்பி வா’ என்கிறார். ஊர் எல்லையில் விட்டு வந்த செய்தி அறிந்தவுடன் உயிர் துறக்கிறார். உயர்ந்தோர் கொள்கையின் பொருட்டு உயிரே போனாலும் கவலை கொள்ளமாட்டார்கள். அத்தகைய பல சான்றோர்களால் தான் இந்த தேசம் விடுதலை பெற்றது என இந்தப் பரம்பரை அறிய வேண்டும். ஒரு பசுக்கூட்டம். அதில் கண் தெரியாத ஒரு கன்றுக்குட்டி. ஆனால் அந்தக் கண் தெரியாத கன்றுக் குட்டியும் தினசரி மேய்ச்சலுக்குப் போய் வந்துவிடும். எப்படி? இரண்டு பசு மாடுகளுக்கு இடையே உரசி உரசிக் கொண்டு சென்று திரும்பி விடும். அப்படித் தான் நல்லவர்களோடு, சான்றோர்களோடு இணைந்தால் நமக்கு ஒன்றும் தெரியாவிட்டாலும் நம்மை வழி நடத்திச் சென்றுவிடுவார்கள். உணர்ச்சி வசப்படாமல் அறிவார்ந்த செயல்பாடுகளைத் தருவது நமக்கு சான்றோர் இணக்கம் ஆகும். அன்பு, பழிநாணல், ஒப்புரவு, கண்ணோட்டம், மெய்மை ஆகிய பண்புகளும் தான் சான்றாண்மையைத் தாங்கி நிற்கும் துாண்கள் என்பார் திருவள்ளுவர். சான்றோர்களிடம் பழகினால் உணர்ச்சி வயப்படுதலைத் தவிர்த்து அறிவு வயப்பட்டு முடிவெடுக்கும் ஆற்றல் நமக்குக் கிட்டும். ஒருமுறை மூதறிஞர் ராஜாஜியும், அவரது நண்பர் ஒருவரும் ரயிலில் பயணம் செய்தார்கள். உயர் வகுப்புப் பெட்டி என்பதால் அவர்கள் இருவர் மட்டுமே இருந்தார்கள். ஜன்னல்கள் இயற்கையை ரசிப்பதற்காகத் திறந்திருந்தது. நண்பரோ வசதியானவர். ஒரு விலையுயர்ந்த கைக் கடிகாரம் கட்டியிருந்தார். பேச்சு உற்சாகத்தில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து கைகளை ஆட்டியபடி வந்த போது தவறுதலாக அவரின் விலையுயர்ந்த கைக்கடிகாரம் தவறிக் கீழே விழுந்துவிட்டது. நண்பர் துள்ளிக் குதிக்கிறார். ‘ஆ... ஆ... கடிகாரம் போச்சே என வண்டியை நிறுத்தச் சொல்லுங்கள்’ என்று தவிக்கிறார். ஆனால் ராஜாஜியோ அமைதியாக இருக்கிறார். இரண்டு விதத்தில் நண்பருக்குக் கோபம். ஒன்று தன்னோடு சேர்ந்து வண்டியை நிறுத்தும் முயற்சியில் இறங்கவில்லை. இரண்டாவது அமைதியாக, பதட்டப்படாமல் இருப்பது கொஞ்ச நேரத்திலேயே அடுத்த ஸ்டேஷன் வந்துவிட்டது. ராஜாஜி ரயிலைக் கொஞ்ச நேரம் நிறுத்தச் சொல்லிவிட்டு அங்கிருந்த பணியாளரை அழைத்து, ‘இங்கிருந்து இருபத்து இரண்டாவது கம்பத்தில் இவரது கடிகாரம் விழுந்துவிட்டது எடுத்து வாருங்கள்’ என்றார். பிறகு தான் நண்பருக்கு ராஜாஜி ஏன் அமைதியாக இருந்தார் எனப் புரிந்தது. உணர்ச்சி வசப்பட்டுக் கத்தாமல் கம்பங்களை எண்ணியதால் நேர விரயமின்றி, யாருக்கும் எந்த இடையூறுமின்றி கடிகாரத்தை மீட்க முடிந்தது. கர்ணன், செஞ்சோற்றுக்கடன் தீர்க்கச் சேராத இடம் சேர்ந்தான். அவனிடம் இருந்த கொஞ்ச நல்ல பண்புகள் கூட மழுங்கிப் போயின. கடைசியில் அதர்மம் காக்கப் போராடி மடிந்தான் என்பதை உலகறியும். கிராமப்புறங்களில் சொல்வார்கள் ‘பன்றியுடன் சேர்ந்த பசுங்கன்றும் பன்றி உண்பதை உண்ணும் சூழல் உருவாகிவிடும்’ என்று. எனவே நல்லோர் இணக்கம் எல்லாக் காலத்திலும் முக்கியம். இது சாதி, மத, இன தேசங்களுக்கு அப்பாற்பட்டது. நல்லவர்களுடன் நாம் மட்டுமல்லாமல் நம் பரம்பரையினருக்கு அதன் பெருமையைச் சொல்லித் தந்து பழக்க வேண்டும். அதுவே நாளும் நமக்குப் பெருமை சேர்க்கும்
|
|
|
|