|
அனுமனை இழுத்துச் சென்று ராவணன் முன் நிறுத்தினார்கள். ராவணனைப் பார்த்து பரிதாபமாக வியந்து, ‘அடடா… இத்தனை கம்பீரமானவனின் மனசுக்குள் காமக் கசடுதான் எத்தனை மண்டியிருக்கிறது! இவனுடைய மதிப்பு வாய்ந்த சிம்மாசனம், பதவி, அந்தஸ்து எல்லாம், விகாரமாகத் தோன்றிய சிறு கரும்புள்ளிக்குள் மறைந்து விட்டனவே! தன்னெதிரே நின்றிருந்த அனுமனை அலட்சியமாகப் பார்த்தான் ராவணன். கூடவே ‘அற்பக் குரங்கு. இதற்குதான் எத்தனை திமிர்’ என்ற கோபமும் பொங்கியது. தன் உயர்ந்த சிம்மாசனத்தில் இருந்து கீழ்நோக்கி அனுமனைப் பார்த்து, ‘யார் நீ? என்ன ஆணவமிருந்தால் என் செல்வங்களை நாசமாக்குவாய்’ என்று கேட்டான். அனுமன் பணிவாக, ‘ஸ்ரீராமனின் துாதுவன் நான். அன்னை சீதையின் இருப்பிடத்தைத் தெரிந்து கொள்ளவும், அவரை உடனே விடுவித்து ஸ்ரீராமனிடம் சேர்க்குமாறு உனக்கு அறிவுறுத்தவும் வந்திருக்கிறேன்’ என்றான். அவையில் இருந்த அனைவரும் ராவண விசுவாசம் காரணமாக அனுமனின் வருகையை எதிர்த்தார்கள் என்றாலும், அவர்களில் ஒருவனான விபீஷணன் துாதுவனாக வந்தவனை உரிய முறையில் உபசரிக்க வேண்டும் என்ற ராஜாங்க நாகரிகம் அறிந்தவனாக இருந்தான். அவனுக்கு உரிய ஆசனம் தந்து மரியாதை செய்ய வேண்டும் என்று ராவணனிடம் தெரிவித்தான். ஏற்கனவே தான் சீதையைக் கடத்தியது அதர்மமானது என்று தனக்கு விபீஷணன் அறிவுறுத்தியதால் அவன் மீது கடுங்கோபம் கொண்டிருந்தான் ராவணன். இப்போது இந்தக் குரங்குக்கு மனித மரியாதை தர வேண்டும் என யோசனை தெரிவித்தது அவனை மேலும் உக்கிரம் கொள்ள வைத்தது. ‘மரியாதையா, இந்த குரங்கிற்கா? முதலில் இவனை தான் செய்த தவறுகளுக்கெல்லாம் மன்னிப்பு கேட்டு என்னை அடிபணியச் சொல். பிறகு இவனை விடுவிப்பதா, சிரச்சேதம் செய்வதா என்பதைப் பற்றி யோசிக்கலாம்’ என்று ஆணவத்துடன் பேசினான். அனுமன் பொறுமை இழந்தான். ராவணன் தன்னை நிந்தித்தாலும், அது ராமனை அவமானப்படுத்துவதாகவே கருதினான். ஆகவே இந்த அரக்கனுக்கு ராம பராக்கிரமத்தை உணர்த்த வேண்டும். உடனே தன் வாலை நீட்டி, வட்டச் சுழல் அடுக்காக உயர்த்தி, ராவணனின் நிலைக்கும் மேலே போய், பிறகு அந்த வால் சிம்மாசனத்தின் உச்சியில் எம்பிப் போய் அமர்ந்து கேலியாக சிரித்தான். அவையோர் அனைவரும் மருட்சியுடன் அந்த விஸ்வரூபத்தைப் பார்க்க, ‘இது போன்ற மாயாஜாலங்களை நான் நிறையப் பார்த்திருக்கிறேன், நிகழ்த்தியும் இருக்கிறேன், இதற்கெல்லாம் நான் மசிந்து விடுவேன் என நினைக்காதே’ என்று கறுவினான் ராவணன். பிறகு தன் சேவகர்களிடம் ‘இவனை என் கண் முன்னாலேயே வெட்டிக் கொல்லுங்கள்‘ என உத்தரவிட்டான். அதுகேட்டுப் பதறினான் விபீஷணன். ‘‘அண்ணா, என்ன காரியம் செய்கிறீர்கள். இவன் துாதுவனாக வந்தவன். ராஜாங்க மரபுப்படி ஒரு துாதுவனைக் கொல்வது தகாது’ என்று நியாயம் பேசினான். ‘ஒரு துாதுவன் செய்யும் வேலையையா இந்த குரங்கு செய்திருக்கிறது? அனுமதியின்றி என் நகருக்குள் பிரவேசித்ததே தவறு. அப்படி வந்ததோடு, நான் சிறை வைத்திருக்கும் சீதையை சந்தித்தது மாபெரும் தவறு. எல்லாவற்றிற்கும் மேலாக, நம் வனங்களையும், நுாற்றுக்கணக்கான வீரர்களையும் அழித்து நிர்மூலமாக்கியிருக்கிறது. இதனிடம் போய் தர்மம், நியாயம் பார்த்துக் கொண்டிருப்பது பேடித்தனம்’ என்று கர்ஜித்தான் ராவணன். விபீஷணன் சற்று சிந்தித்தான். ஏற்கனவே ராமன் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தவன் அவன். அதனாலேயே ராவணன் சீதையைக் கவர்ந்து வந்தபோது அதை தனி ஒருவனாகவே, முழுமையாக எதிர்த்தான். ஆனால் சீதை விஷயத்தில் தன்னையே எதிரியாகப் பார்க்கும் அண்ணனிடமிருந்து அவளை எப்படியாவது விடுவித்து ராமனிடம் சேர்த்துவிட வேண்டும் என ஆதங்கம் கொண்டான். அதனாலேயே தன் மகள் திரிசடையை சீதைக்குக் காவலாக ராவணன் நியமித்த போது பெரிதும் மகிழ்ந்தான். தன்னைப் போலவே சீதை மீது அனுதாபம் மிகக் கொண்டிருக்கும் தன் மகள், சீதையின் மனஉறுதியை வளர்க்க துணைநிற்க வேண்டும் என யோசனை சொல்லியிருந்தான். இப்போது அனுமன் கொல்லப்படுவானால், சீதை இருக்குமிடத்தை ராமனுக்கு யார் போய்ச் சொல்வார்கள்? ஆகவே எப்படியாவது அனுமனைத் தப்புவிக்க வேண்டும். இவன் போய் ராமனிடம் சொல்லி, சீதையை மீட்கும் வழிமுறைகளை வகுக்க வேண்டும் என தீர்மானித்துக் கொண்டான். ஆகவே ராவணனிடம், ‘‘அண்ணா, உங்கள் வாதத்தில் அர்த்தம் இருக்கிறது. ஆனால் அனுமனை அனுப்பியவர் யார் என அறிவதுவதுதான் இப்போதைய ராஜதந்திரம். அதனால் இவனைக் கொல்லாமல், ஏதோ ஒருவகையில் தண்டித்து அனுப்பினால் இவன் தன் அனுபவத்தை ராமன் முதலான தன்னைச் சார்ந்தவரிடம் போய்ச் சொல்ல, அவர்களும் நம்மை எதிர்க்க வருவார்களானால் அப்போது அவர்களை நம்மால் எளிதாகத் தாக்கி அழிக்கவும் முடியும்’ என்று யோசனை சொன்னான். ராவணனுக்கு அதுவும் சரியாகப் பட்டது. அனுமனைக் காயப்படுத்தி அனுப்பிவிட்டால், அதைக் கண்டு அவனை அனுப்பி வைத்த ராமனும் ஏனையோரும் அவமானப்படுவார்கள், நம்மைப் பழி வாங்க வருவார்கள். அப்போது அவர்களின் படை பலத்தை இலகுவாக அனுமானிக்க முடியும், சுலபமாக வீழ்த்தவும் முடியும் என்று கணக்குப் போட்டான். தன் வீரர்களிடம் கட்டளையிட்டான். ‘குரங்குக்கு பலமே அதன் வாலில்தான் என்பார்கள். அந்த வலுவில்தான் இது இத்தனை உயரத்தில் உட்கார்ந்து கொண்டு என்னை அவமதித்துக் கொண்டிருக்கிறது. ஆகவே இதன் வாலில் எண்ணெய்ப் பந்தம் கட்டித் தீ வைத்து, நம் நகரம் பூராவும் இழுத்துச் செல்லுங்கள். நம் மக்கள் பார்த்து ஆனந்தம் கொள்ளட்டும்.‘ இப்படி ஒரு யோசனையை சமயோசிதமாகச் சொன்ன விபீஷணனுக்குக் கனிவுப் பார்வையால் நன்றி தெரிவித்தான் அனுமன். கிழித்துக் கடிக்கும் முரட்டுப் பற்களைப் போல இந்த அரக்கர் கூட்டம் ஆர்ப்பரிக்க அவற்றின் நடுவே மென்மையாக அமைந்திருக்கும் நாக்கைப் போன்றவன் இந்த விபீஷணன். நாவால் தீயதையும் பேசி தீவினைகளையும் உண்டாக்க முடியும்தான் என்றாலும், இந்த விபீஷணன் தர்மத்தைப் பேசுகிறான். என் வலிமை தெரிந்தோ தெரியாமலோ நான் தப்பித்துச் செல்ல உபாயம் சொல்லியிருக்கிறான். இவன் விதிவசமாக இந்தக் கூட்டத்தில் சிக்கியிருக்கிறான், இவன் ராமனுடன் இருக்க வேண்டியவன்…. ராவணனின் கட்டளைப்படி அனுமன் வாலுக்குத் தீ வைக்கப்பட்டது. பழிக்குப் பழி என்ற குரோதத்துடன் அவனை நகரெங்கும் இழுத்துச் சென்றனர் அரக்கர்கள். இதுவும் அனுமனுக்கு வசதியாகப் போய்விட்டது. இந்தப் பகல் வேளையில் எல்லா இடங்களையும் கவனிக்கலாம். ராவணனின் கோட்டை கொத்தளங்கள், ஆயுத சாலை மற்றும் கிடங்குகள், அரச குடும்ப மாளிகைகள், நகரின் விஸ்தீரணம், ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருக்கும் காவல் வீரர்கள், குதிரை, யானைப் படைகள் என எல்லாவற்றையும் கவனித்து மனசுக்குள் குறித்துக் கொண்டான். ராமன் இலங்கை மீது படையெடுப்பானானால் அவனுக்கு இந்தத் தகவல்கள் உதவக் கூடும். அதேசமயம் வாலில் வைக்கப்பட்டிருந்த தீயால் வெப்பம் உண்டாகாமல் குளுமையைத் தான் உணர்வதை அறிந்தான். தான் அனுபவிக்கும் தண்டனையை அறிந்திருக்கக்கூடிய அன்னை சீதை, அக்னி பகவானிடம், எனக்கு எந்த உபாதையும் நேரிடக் கூடாது என்று வேண்டிக் கொண்டிருப்பாரோ என்று அனுமன் ஊகித்துக் கொண்டான். அதோடு தான் மூச்சிழையாக ஜபிக்கும் ‘ராம’ ஜபத்தின் விளைவாகவும் இருக்கும் என்றும் ஆத்மார்த்தமாக நம்பினான். ஒரு கட்டத்தில், அநேகமாக எல்லா விவரங்களையும் சேகரித்துக் கொண்ட நிறைவில், தன் விளையாட்டை ஆரம்பித்தான் அனுமன். அரக்கர் பிடியிலிருந்து பளிச்சென்று பிரிந்து பறந்தான். வாலில் வைக்கப்பட்ட தீயால் நகர் முழுவதும் தீக்கிரையாக்கினான். சட்டென்று அசோகவனம் நினைவுக்கு வர, அக்னி தேவனை பிரார்த்தித்து அந்தப் பகுதியை மட்டும் ஆக்கிரமிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டான். அதேபோல இலங்கை நகரமே அந்தப் பகல் நேரத்திலும் தீ நாக்குகளால் செம்பிழம்புப் பிரகாசமாக ஒளிர்ந்து, உடனேயே கறுத்துக் கரியாகிப் படர்ந்தது. இனி தனக்கு எதிர்ப்பு இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட அனுமன், அசோகவனம் சென்று சீதையிடம் விடைபெற்றுக் கொண்டான். அங்கிருந்து வந்த மார்க்கத்திலேயே திரும்பச் சென்று ராமனை அடைந்தான். ராமனிடம் பேருவகையுடன் ‘கண்டேன் கற்பினுக்கு அணியை’ என்றான்.
|
|
|
|