Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » துறவியின் துன்பம்
 
பக்தி கதைகள்
துறவியின் துன்பம்


என் அறையில் நுழைந்தவள் காவி உடை அணிந்திருந்தாள். சாந்தமான, அழகான முகம். துாயதுறவி போலும்.
‘‘பெண் துறவிகளா சேர்ந்து ஒரு ஆசிரமம் நடத்தறோம். எங்களுடைய தலைமைத் துறவி தாங்க முடியாத துன்பத்துல இருக்காங்க. கடந்த இருபது வருஷமா அவங்ககிட்ட அன்பத் தவிர வேற எதையுமே பாத்ததில்ல.
முன்னால் இருந்த பச்சைப்புடவைக்காரியின் படத்தை வெறித்துப் பார்த்தேன். என்னைப் பார்த்து அந்தத் துறவியும் திரும்பிப் பார்த்தாள்.
“அம்பா – தலைமைத் துறவிய அப்படித்தான் கூப்பிடுவோம் - சந்நியாசம் வாங்கறதுக்கு முன்பு டாக்டரா இருந்தவங்கதான். இப்போ வயித்துல கேன்சர்ன்னு சொல்லிட்டாங்க. கடந்த அஞ்சு வருஷமா வயித்து வலில துடிச்சிக்கிட்டிருக்காங்க. இந்த நிலையிலும் பச்சைப்புடவைக்காரி படத்தப் பாத்து கண்ணீர் சிந்தறாங்களே தவிர தப்பா எதுவும் பேசினதுல்ல”
சரி, இதில் என் பங்கு...’’
“எனக்காகவும் எங்க ஆசிரமத்துல இருக்கறவங்களுக்காகவும் நீங்க அம்பாவ பாக்கணும்”
“ஏன் வேதனப்படறாங்கன்னு கண்டுபிடிச்சிச் சொல்வேன்னு எதிர்பாக்கறீங்களா?”
“சத்தியமா இல்லங்க. நீங்க பாத்துப் புரிஞ்சிக்கிட்டீங்கன்னா
போதும். நாங்க ஏதாவது பரிகாரம் செய்யணும்னு தோணிச்சின்னா சொல்லுங்க”
விவரங்களை வாங்கி விட்டு துறவியை  அனுப்பிவைத்தேன்.
ஒரு வாரம் கழித்து ஊருக்கு வெளியில் இருந்த ஆசிரமத்திற்குப் போனேன். என்னைச் சந்தித்த அந்தத் துறவி முகம் மலர வரவேற்றாள்.
“ரெண்டே நிமிஷம் அம்பாகிட்ட சொல்லிட்டு வர்றேன்”
அவள் போனதும் இன்னொரு பெண் வந்தாள். எழுந்து நின்றேன். அவள் துறவி இல்லை என்றாலும் அவளை விழுந்து வணங்கினேன். அவளைப் பார்த்துக் கைகூப்பியபோது கண்களில் நீர் வழிந்தது.
“இன்னும் அரை மணி நேரத்தில் இங்கு என்னவெல்லாமோ நடக்கப்போகிறது. அதனால்தான் நான் வந்திருக்கிறேன். நீ எதற்கும் கவலைப்படாதே”
பச்சைப்புடவைக்காரியை மீண்டும் வணங்கினேன்.
பத்து நிமிடங்களில் தலைமைத் துறவியின் அறையில் இருந்தோம். பச்சைப்புடவைக்காரியும் என்னுடன் இருந்தாள். கட்டிலை ஒட்டி
போடப்பட்டிருந்த சிறிய நாற்காலிகளில் அமர்ந்தோம்.
தலைமைத் துறவி என்னைப் பார்த்துக் கைகூப்ப முயற்சி செய்தாள். நான் அவள் கைகளைப் பற்றி அதைத் தடுத்தேன்.
“அம்பா, நீங்கள் துறவி. தூய்மையின் மொத்த வடிவம். நான் சம்சாரி. என்னை நீங்கள் வணங்கக்கூடாது. நான்தான் உங்களை வணங்க வேண்டும்.”
அம்பா புன்னகைத்தாள். என்னைப் பார்க்க வந்த துறவியைப் பார்த்தாள். அவள் உடனே வெளியேறிவிட்டாள்.  
அம்பா பேசத் தொடங்கினாள்.
“பதினஞ்சு வருஷமா டாக்டரா இருந்தேன். கைனகாலஜிஸ்ட். அப்பல்லாம் நான் நல்லவ இல்ல. என் புருஷன் பணம் பணம்னு பறப்பாரு. எனக்கும் அதே பரபரப்பு இருந்தது. சாதாரண பிரசவத்த சிசேரியனா மாத்திருவேன். அப்படி ஒரு பணத்தாசை. ஒரு தரம் நானும் என் கணவரும் ராத்திரி செகண்ட் ஷோ சினிமாவுக்குப் போக டிக்கெட் வாங்கியிருந்தோம். ரொம்ப நாளைக்கு அப்பறம் புருஷனோட சேர்த்து சினிமா பாக்கப் போறோங்கற சந்தோஷம். எட்டரை மணிக்கு ஒரு பிரசவ கேஸ் வந்தது. நான் பொறுமையாக் காத்திருந்து பிரசவம் பாத்திருந்தா அது நார்மல் டெலிவரியாகியிருக்கும். பத்துமணிக்குள்ள சினிமாவுக்குப் போகணும்ங்கற பரபரப்புல அந்தப் பொண்ணுக்கு அவசரம் அவசரமா சிசேரியன் பண்ணி குழந்தைய வெளிய எடுத்துட்டேன். முதல்ல எல்லாரும் சந்தோஷப்பட்டாங்க. ஆனா அடுத்த நாலு நாள்ல அந்தப் பொண்ணு வயித்துவலியால துடிதுடிச்சிச் செத்துப் போயிருச்சி.  நான் ஏதோ தப்பு பண்ணிருக்கேன்னு தெரிஞ்சிபோச்சு. நாலே நாள்ல அந்தக் குழந்தை தாய இழந்திருச்சி. நான் செஞ்சது நம்பிக்கைத் துரோகம்னு என் மனசாட்சி சொல்லிக்கிட்டே இருந்தது.
“அது நடந்து ஒரு மாசம் கழிச்சி என் புருஷனுக்கு ஒரு நர்ஸோட தொடர்பு இருக்கறதக் கண்டுபிடிச்சேன். எனக்கு வாழ்க்கையே வெறுத்துப் போச்சி. நான் சம்பாதிச்சத எல்லாம் எடுத்துக்கிட்டு இந்த ஊருக்கு வந்து சந்நியாசியாகிட்டேன். என்னோட பணத்தாசையாலயும் அவசர புத்தியாலயும் அந்தப் பொண்ணுக்கு வயித்து வலியையும் மரணத்தயும் கொடுத்துட்டேன். அந்தக் கர்மக்கணக்குதான் இப்போ எனக்கு வயித்துல கேன்சரா வந்திருக்கு. “பச்சைப்புடவைக்காரிகிட்ட எனக்காகப் பிரார்த்தனை செய்யுங்க. நான் செஞ்ச தப்புக்கு அவ இன்னும் அதிகமா வலியக் கொடுத்தாலும் தாங்கிக்கறேன். எந்தச் சமயத்துலயும் என்னை கைவிட்ரவேண்டாம்னு சொல்லுங்க. செய்வீங்களா?”
நான் ஏதோ சொல்ல வாயெடுப்பதற்குள் என் அருகில் இருந்த  பச்சைப்புடவைக்காரி அம்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு பேசினாள்.
“அம்பா, உங்களுக்கு வலிய கொடுக்கணும்னு பச்சைப்புடவைக்காரி ஒரு போதும் நெனச்சதில்ல அன்னிக்கு ஏதோ அவசரத்துல, ஆசையில ஒரு பலவீனமான தருணத்துல தப்பு செஞ்சிட்டீங்க. அதுக்குப் பதிலாத்தான் இந்த இருபது வருஷமா ஒரு உத்தம சந்நியாசினியா வாழ்ந்திட்டீங்களே.  இந்த வலி, வேதனை எல்லாமே இன்னும் சில நிமிஷங்களுக்குத்தான். இதுக்கப்பறம் உங்களுக்குப் பிறவியே கிடையாது. பச்சைப்புடவைக்காரியோட ஒன்றிடுவீங்க. நிம்மதியா ஓய்வெடுங்க. நான் இருக்கேன்ல?”
அன்பின் மிகுதியால் அலறாமல் இருக்க என் வாயைக் கையால் பொத்திக்கொண்டேன். என்ன நடக்கிறது இங்கே?
அம்பாவின் நெற்றியில் அழுத்தமாகக் கைவைத்தாள் பச்சைப்புடவைக்காரி. அவளையே பார்த்துக்கொண்டிருந்த அம்பா தன் கண்களை மூடினாள். இனிமேல் அந்தக் கண்கள் திறக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை.
ஒரு பெரிய விம்மலுடன் பச்சைப்புடவைக்காரியின் கால்களில் விழுந்தேன்.
“அவள் என்னுடன் இரண்டறக் கலந்துவிட்டாள். உனக்கு என்னப்பா வேண்டும்?”
“இந்தக் கருணையை என்னவென்று சொல்வது, தாயே? நீங்களே நேரில் வந்து முக்தி கொடுத்துவிட்டீர்களே! இந்தப் பேறு வேறு யாருக்குக் கிடைக்கும்?”
“தவறு செய்தாள், திருந்திவிட்டாள். அன்பு நெறியில் தூய துறவியாக வாழ்ந்தாள். அவள் அனுபவித்த வலிக்கும் வேதனைக்கும் ஒரு அர்த்தம் கிடைக்கட்டும் என்றுதான் நானே நேரில் வந்தேன். உனக்கு வேண்டியதைச் சொல்.”
எனக்குப் பேச்சே வரவில்லை.
“உனக்கும் இதுவே கடைசிப்பிறவியாக இருக்கும் வரத்தைத் தரட்டுமா? இந்தப் பிறவியின் முடிவில் என்னுடன் ஒன்றிவிடும் நிலையைத் தரட்டுமா?”
“வேண்டாம் தாயே!” – நான் கத்தினேன்.
“ஏனப்பா?”
“தவறு செய்துவிட்டு அதற்காக மனம் வருந்தியவளைக் கடைத்தேற்ற நீங்களே நேரில் வந்தீர்களே? இந்த அன்பு எதோடு சேர்த்தி, தாயே? உங்களுடைய அன்பை நினைத்து உருகி, உருகி அழுவதற்காக மட்டும் இன்னும் நூறு பிறவிகளை எனக்குக் கொடுங்கள். அதன்பின் உங்கள் அன்பை ஊர் உலகத்துக்கெல்லாம் சொல்லிப் புரிய வைப்பதற்காக இன்னும் முந்நூறு பிறவிகள் கொடுங்கள். அதன்பின் ஒன்றுவது, கடைசிப்பிறவி பற்றி யோசிக்கலாம்,  தாயே!”
“நீ கேட்டதற்கு மேலேயே தருகிறேன். உடனே வெளியே போ. நடந்ததைப் பக்குவமாகச் சொல்.”
நான் அவளை விழுந்து வணங்கி எழுவதற்குள் அவள் மறைந்துவிட்டாள்.
கண்களைத் துடைத்துக்கொண்டு வெளியே வந்தேன். என்னை அலுவலகத்தில் சந்தித்த பெண் துறவி ஓடி வந்தாள்.
“என்னாச்சு?”
“அம்பா மகா சமாதி அடைந்துவிட்டார்கள். உன்னதமான சாவு. பெரிய பெரிய மகான்களுக்கும் யோகிகளுக்கும் மட்டுமே கிடைக்கும் பேறு அம்பாவிற்குக் கிடைத்துவிட்டது. இதற்குமேல் என்னை எதுவும் கேட்காதீர்கள்.”
துறவியின் கண்களில் நீர் பெருகியது. சிறிது நேரம் மௌனம் நிலவியது.
“ஆமாம், உங்களோட வந்த உங்க உதவியாளர் எங்க?”
“என்னுடைய உதவியாளரா?”
“ஆமா. பச்சைப்புடவை கட்டிக்கிட்டு இருந்தாங்க. நீங்க வந்து ரெண்டு நிமிஷம் கழிச்சி உள்ள வந்தாங்க. அவங்களும் அம்பாவோட அறையில உங்களோடஇருந்தாங்களே! அவங்களப் பாத்தாலே மனசுல ஒரு நிம்மதி… “
நான் ஏன் திடீரென்று இப்படி அலறுகிறேன் என்று என்னை வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள் அந்தப் பெண் துறவி.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar