|
பணிச்சுமை, குடும்பத்தினர் பற்றிய அக்கறை என எப்போதும் பதட்டமுடன் இருப்பாள் பவித்ரா. அடிக்கடி எரிச்சலுடன் கத்துவாள். ஆனால் சில நாட்களாக அவள் அமைதியுடன் காணப்பட்டாள். ஒருநாள் அவரது கணவர், ‘‘ நண்பர்களோடு சேர்ந்து மது அருந்த போகிறேன்’’ என்றார். அமைதியுடன் தலையாட்டினாள். மகன் தயங்கியபடி, ‘‘அம்மா நான் எல்லா பாடங்களிலும் பெயிலாகி விட்டேன்’’ என்றான். அதற்கு பொறுமையுடன், ‘‘ஒழுங்காக படித்து பாஸ் பண்ண வழியைப் பார். இல்லாவிட்டால் மறுபடியும் இதே வகுப்பில் படிக்க வேண்டியதுதான்’’ என்றாள். மகள் தலைதெறிக்க ஓடி வந்து, ‘‘அம்மா என் கார் விபத்துக்குள்ளாக்கி விட்டது’’ என்றாள். ‘‘ஒர்க் ஷாப்புக்கு கொண்டு போய் சரி செய்’’ என்று சொல்லி பணம் கொடுத்தாள். அவளின் அமைதியை கண்ட அவர்கள் குழப்பம் அடைந்தனர். அருகில் அழைத்து உட்கார வைத்தாள். ‘‘சில உண்மைகளைப் புரிந்து கொள்வதற்கு நீண்டகாலம் எடுத்துக் கொண்டேன். அவரவர் வாழ்க்கைக்கு அவரவர் தான் பொறுப்பு என்பது தானே உண்மை. என்னுடைய கோபம், பதட்டம், பயம், மனஅழுத்தம் எதுவும் உங்கள் பிரச்னைகளை தீர்க்கப் போவதில்லை. ஆனால் அவை என் உடல்நலத்தைக் கெடுக்கும். அத்துடன் பிரச்னைகளை அதிகப்படுத்தும். தேவைப்பட்டால் இனி உங்களுக்கு அறிவுரைகளை நான் தருவேன். உங்களுக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்வேன். ஆனால் உங்கள் வாழ்க்கையை என்னால் வாழ முடியாது. ஏனெனில் என்னைச் சார்ந்து நீங்கள் இந்த பிறவியை எடுக்கவில்லை. இது உங்களுக்கு கிடைத்துள்ள வாழ்க்கை. உங்கள் பிரச்னைகளுக்கு நீங்களே பொறுப்பு. உங்கள் பிரச்னைகளை களைந்து மகிழ்ச்சியைத் தேடுமளவுக்கு எல்லா அறிவையும் கடவுள் உங்களுக்கு கொடுத்திருக்கிறார். ஆகவே நான் அமைதியாகி விட்டேன்’’ அவர்கள் மூவரும் வாயடைத்துப் போய் நின்றனர். அவரவர் செயல்பாட்டுக்கு அவரவரே பொறுப்பு என்பதை உணர்ந்தால் அமைதியைத் தேடி எங்கும் அலைய வேண்டாம். நாம் இருக்கும் இடமே அமைதிப்பூங்காவாக மாறும்.
|
|
|
|