Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » நடிகையின் அடாவடி
 
பக்தி கதைகள்
நடிகையின் அடாவடி


திடுதிப்பென்று என் அறைக்குள் நுழைந்த அந்தத் தம்பதியின் முகங்களில் சோகம் கப்பியிருந்தது.
‘‘எங்களுக்கு ஒரே பொண்ணு. பேரு சத்யா. டிவில நடிக்கறா. சினிமாவுல சின்னச் சின்ன வேஷத்துல நடிச்சிருக்கா. பல்வலின்னு டாக்டர்கிட்டப் போனா. ஈறுல ஒரு பகுதி கொஞ்சம் வித்தியாசமா இருக்றத டாக்டர் பாத்திருக்காரு.. இப்போ அது புற்று நோயா இருக்கலாம்னு சந்தேகப்படறாங்க. அப்படி இருந்தா என் பொண்ணு முகத்துல ஒரு பகுதிய ஆப்பரேஷன் பண்ணி எடுத்துருவாங்களாம்யா. அவ அழகு...’’
நடிகையின் தந்தை அழத் தொடங்கினார்.
‘‘பச்சைப்புடவைக்காரிகிட்ட பிரார்த்தனை பண்ணிக்கறேன்யா.’’
கணவனும் மனவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.
‘‘பொண்ணு போட்டோவக் காட்டினா... கோபப்படக்கூடாதுங்கய்யா...’’
காட்டினார்கள். அழகாகத்தான் இருந்தாள். ஆனால் அடுத்த நொடி ஆயிரம் தேள்கள் கொட்டியது போன்ற ஒரு வலி. புகைப்படத்தை அவர்கள் மீது வீசி எறிந்தேன்.
‘‘இந்தச் சண்டாளியா உங்க பொண்ணு? இவளுக்குப் பச்சைப்புடவைக்காரி கொடுத்த தண்டனை ரொம்பக் குறைச்சல்’’
குரலை உயர்த்தினேன். கருப்புப்பூனைப் படை ஆட்கள்போல் இருந்த இரண்டு சபாரி சூட் ஆசாமிகள் கதவைத் திறந்து என்னை முறைத்துப் பார்த்தார்கள்.
‘‘உங்க வாய் வலிக்கறவரைக்கும் எங்களத் திட்டுங்கய்யா. உங்க கையாலேயே எங்க ரெண்டு பேரையும் அடிச்சே கொன்னுருங்கய்யா. ஆனா ஒரே ஒரு தரம் எங்களோட வந்து பொண்ணப் பாத்துட்டுப் போயிருங்கய்யா. உங்க கால்ல விழுந்து...’’
‘‘நிறுத்துய்யா. உன் பொண்ணு என்ன செஞ்சான்னு மறந்து போச்சா? ஏதோ ஒரு படத்துல அம்மன் வேஷம் போட்டா. நல்ல விஷயம். ஆனா அதே வேஷத்தோட பசங்களோட ஆபாச நடனம் ஆடினதும், கையில மதுக்கோப்பையையும் சிகரட்டையும் வச்சிக்கிட்டு கேமராவுக்குப் போஸ் கொடுத்ததும்... அதப் பாத்துட்டு நான் ரெண்டு நாள் சாப்பிடலய்யா. ஒரு வாரம் துாங்கலய்யா. அத நெனச்சா இன்னும் மனசு பதறுது. என் கண் முன்னால நிக்காமப் போயிருங்க. ஆமா சொல்லிட்டேன்.’’
ஒரு நிமிடம் என்னையே முறைத்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்கள். பின் தொய்வான நடையுடன் வெளியே சென்றார்கள்.
அவர்கள் போன அடுத்த நிமிடம் ஒரு பெண் புயலைப் போல் உள்ளே நுழைந்தாள்.
‘‘யாரு நீங்க? அப்பாயிண்ட்மெண்ட் இருக்கா?’’
‘‘பெற்ற தாயிடம் இப்படியா பேசுவார்கள்?’’
‘‘தாயே’’ என்று அலறியபடி கீழே விழுந்தேன்.
’’கந்துவட்டிக்காரன், நம்பிக்கைத் துரோகம் செய்வதவனுக்கெல்லாம் பிரார்த்தனை செய்தாய். நடிகை அப்படி என்ன பெரிய தவறு செய்தாள் என்று அவளது பெற்றோரைத் துரத்திவிட்டாய்?’’
‘‘நீங்களே இப்படி பேசினால்.. அம்மன் வேஷம் போட்டுகொண்டு... ஆபாச நடனம் ஆடியது... மது... சிகரெட்...’’
‘‘எல்லாம் எனக்குத் தெரியும். அவை எல்லாம்  தீமை என்னும் நோயின் அறிகுறிகள் என்று உன் மரமண்டைக்கு ஏன் புரியவில்லை?’’
‘‘நான் என்ன செய்ய வேண்டும் எனச் சொல்லுங்கள்.’’
‘‘அவர்கள் கீழேதான் இருக்கிறார்கள். உடனே அவர்களுடன் சென்னைக்குப் போ. நடிகையைப் பார். மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்.’’
அன்னை மறைந்துவிட்டாள். கீழே ஓடினேன்.
‘‘வாங்க போகலாம்’’  என்றபடி  இன்னோவா காரில் ஏறிக்கொண்டேன். சென்னையை அடைந்தபோது மாலையாகிவிட்டது.
மருத்துவமனையில் கிழிந்த நாராகப் படுத்துக்கிடந்த நடிகையைப் பார்த்தேன். பயங்கர வேதனையில் துடித்தாள். வாயில் வலி. அதுபோக தாங்க முடியாத தலைவலி என்றும் சொன்னாள். சத்யாவின் கைகளை இறுகப்பற்றியபடி பச்சைப்புடவைக்காரியை தியானித்தேன்.
நடிகைக்கு அப்போதும் திமிர் குறையவில்லை.
‘‘இப்பவும் நான்தான் ஜெயிச்சேன். நீங்க பச்சைப்புடவைக்காரிய அன்பரசி, கருணைக்கடல்னு வார்த்தைக்கு வார்த்தை சொல்வீங்களே? இப்போ என்னாச்சு? லேசா கேலி செஞ்சதுக்கே எனக்குப் புற்று நோயக் கொடுக்கறவ எப்படி கருணைக்கடலா இருக்கமுடியும்?
‘‘எங்கம்மாவ நான் கேலி செஞ்சிருந்தா எனக்கு நிச்சயமா ஆட்கொல்லி நோயத் தந்திருக்கமாட்டா. எங்கம்மா அளவுக்குக்கூட கருணையில்லாத பச்சைப்புடவைக்காரி மனுஷியாக்கூட இருக்கமுடியாதே, அப்புறம் எப்படி தாயா, தெய்வமா இருக்கமுடியும்?’’
பலத்தை எல்லாம் திரட்டி அவள் கன்னத்தில் அறைந்தேன்.
‘‘அறிவு இருக்கா உனக்கு? உங்கம்மாவ எப்படி வேணும்னாலும் கேலி பண்ணு. உங்கம்மா மாதிரி வேஷம் போட்டுக்கிட்டு சிகரெட் பிடி, தண்ணியடி இல்ல ஆபாசமான டேன்ஸ் ஆடு. அது உனக்கும் உங்கம்மாவுக்கும் மட்டும் உள்ள வெவகாரம்.
ஆனா பச்சைப்புடவைக்காரி எங்களுக்கெல்லாம் பெத்த தாய்க்குமேலடி. உனக்கு அவ கண்மூடித்தனமான நம்பிக்கை. எனக்கும் இன்னும் லட்சோப லட்சம் பேருக்கும் அவ கண் கண்ட தெய்வம்டி. நீ அடிச்ச கூத்தப் பாத்துட்டு எத்தனை பேரு எத்தனை நாளாச் சரியா சாப்பிடல, சரியாத் துாங்கலன்னு உனக்குத் தெரியுமாடி?
‘‘பச்சைப்புட்வைக்காரி தன்னைக் கேலி செஞ்சதக்கூட பொறுத்துக்கிட்டா. ஆனா அவளோட அடியவர்கள் பட்ட மரண வேதனைதான் உனக்கு இந்த வியாதியா  வந்திருக்கு. இப்பவும் சொல்றேண்டி. என் பச்சைப்புடவைக்காரி அன்பரசிதான். கருணைக்கடல்தான்.  எங்கேயோ மதுரையில இருந்த என்னை உன்னைப் பாக்க உடனே அனுப்பிவச்சாளேடி அந்தக் கருணை யாருக்கு வரும்? நீ எக்கேடோ கெடுன்னு விடாம என்கிட்ட சண்டையிட்டு உன்னைப் போய்ப் பாக்கச் சொன்னாளே அந்தத் தெய்வத்தோட அன்ப புரிஞ்சிக்க முடியலேன்னா உன்ன யாராலயும் காப்பாத்த முடியாதுடி. நல்லா இரு. நான் போறேன்’’
கிளம்பிய என்னை அவள் கையைப் பிடித்து நிறுத்தினாள். மிகுந்த சிரமத்துடன் என்னைப் பார்த்துக் கைகூப்பினாள்.
‘‘நெஜமாவா சொல்றீங்க?’’
‘‘ஆமாம், உன்கிட்ட பொய் சொல்றதுக்காகத்தான் ஊர்ல ஆயிரம் வேலைய விட்டுட்டு இந்த வேகாத வெயில்ல உங்கப்பா அம்மாகூடக் கார்ல சென்னை வந்தேனாக்கும்!’’
சில நிமிடங்கள் அழுதாள். நான் மௌனமாக இருந்தேன்.
‘‘இனிமே இந்த மாதிரி யார் மனசயும் புண்படுத்தமாட்டேன்னு உங்க கையில அடிச்சிச் சத்தியம் செஞ்சி தரேன். நான் செஞ்ச பாவத்துக்கு மன்னிப்பே கிடையாதா? மீனாட்சிக்குப் புடவை சாத்தவா? இல்ல, விரதம் இருந்து அவ கோவிலுக்குப் பொகவா?’’
‘‘உன்னுடைய அநாகரிகமான செயலால பாதிக்கப்பட்டவங்க பச்சைப்புடவைக்காரியின் அடியவர்கள். அவங்களுக்கு என்ன செய்யப் போற?’’
‘‘என்ன செய்யணும்?’’
‘‘செஞ்ச தப்ப உணர்ந்து மனசார மன்னிப்பு கேளு. பத்திரிகைகள்லயும் சமூக வலை தளங்கள்லயும் பகிரங்கமா மன்னிப்பு கேக்கணும். அப்பத்தான் காயம் பட்ட நெஞ்சங்களுக்கு கொஞ்சமாவது ஆறுதல் கெடைக்கும்’’
‘‘செய்யறேன். என்னுடைய வலி, நோய், ஏன் என் சாவப் பத்திக்கூட நான் கவலப்படல. பச்சைப்புடவைக்காரி என்னை ஏத்துப்பாளா? நான் செஞ்ச தப்ப மன்னிப்பாளா?’’
‘‘அவ உன்னைக் கைவிடவே இல்லையேம்மா. அதனாலதான உன்னப் பாக்க என்ன அனுப்பிவச்சா. நான் உன் மூஞ்சில முழிக்கமாட்டேன்னு அடம் பிடிச்சப்போ நீ போய்த்தான் ஆகணும்னு கண்டிப்பாச் சொன்னாளே!’’
சத்யாவைச் சில நிமிடங்கள் அழவிட்டு விட்டு நான் வெளியேறினேன்.
மருத்துவமனை வாசலில் ஒரு பெண் என்னை இடைமறித்தாள்.
‘‘நன்றாகப் பேசிவிட்டாயே!’’
‘‘நீங்கள் பேசினீர்கள். நான் வாயசைத்தேன்.’’
‘‘உனக்கு என்ன வேண்டும்? இன்று நான் கொடுக்கும் மனநிலையில் இருக்கிறேன்’’
‘‘என்று நீங்கள் இல்லை? எனக்கு இரண்டு வரங்கள் வேண்டும்.’’
‘‘கேள்’’
‘‘உங்கள் இருப்புநிலையை மறுத்தவளையும், உங்களை அசிங்கமாகச்  சித்தரித்தவளையும் அன்பால் அணைத்தீர்களே...நான் எந்த நரகத்தில் எப்படி உழன்றாலும் உங்களுடைய இந்த அன்பை உணரும் பேறு வேண்டும்.’’
‘‘இரண்டாவது?’’
‘‘சத்யா தவறுதலான வழிக்காட்டுதலால் இப்படிச் செய்துவிட்டாள். அவள் நோயில்லாமல் வலியில்லாமல் வாழ வேண்டும், தாயே!’’
சிரித்தபடி காற்றோடு கலந்தாள் என்னைக் கொத்தடிமையாகக் கொண்டவள்.  


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar