Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ருக்மிணி கல்யாணம்
 
பக்தி கதைகள்
ருக்மிணி கல்யாணம்


குண்டினபுரத்தை தலைநகராக கொண்ட விதர்ப்ப நாட்டின் அரசன் பீஷ்மகன்.  இவனுடைய ஆட்சி சிறப்பானது.  மக்களின் மகிழ்ச்சி மட்டுமே குறிக்கோளாக கொண்டு நீதி தவறாது ஆட்சி செய்து வந்த பீஷ்மகனுக்கு சந்தான பாக்கியமும் குறைவில்லாமல் அமைந்திருந்தது.  அவனுக்கு ருக்மி, ருக்மரதன், ருக்மாபாகு, ருக்மகேசி, ருக்மாலி என்று ஐந்து பிள்ளைகள்.  ஆறாவதாக ஒரு செல்லப் பெண்.  பெயர் ருக்மிணி.  
ஆறு பிள்ளைகளுக்கு பின் பிறந்த ருக்மிணி மீது பீஷ்மகனுக்கு மிகவும் பிரியம்.  எப்பொழுதும் அவளை தன் மடிமீதே வைத்திருப்பான்.  எங்கு போனாலும் அவளை தோளிலேயே துாக்கிக்கொண்டு சுற்றிக் கொண்டிருப்பான்.
அவளுக்கு நிறைய கதைகள் சொல்லுவான். பெரும்பாலும் அவைகள் பால கிருஷ்ணனின் லீலைகளாகத்தான் இருக்கும். அவன் வெண்ணெய் திருடியது, காளிங்க நர்த்தனம் ஆடியது, மலையைக் குடையாக பிடித்தது, பூதகியை கொன்றது, கோபிகைகளுடன் விளையாடியது, குழலுாதி அனைவரையும் வசீகரித்தது, இப்படி கிருஷ்ணனின் பல லீலைகளை சொல்லுவார்.  தவிர பீஷ்மகனை காண வரும் பல அறிஞர்கள் சொல்லும் கண்ணனைப் பற்றிய பல மங்களமான செய்திகள் அனைத்தையும் ருக்மிணி மன ஈடுபாட்டுடன் கேட்டு, உள்ளம் பரவசப்பட்டு, பிறகு அதுவே கண்ணன் மீது காதலாக உருமாறி நாளுக்கு நாள் வலுப்பட்டுக் கொண்டே வந்தது. எப்பொழுதும் கண்ணனின் அழகிய உருவத்தையே மனதில் தியானித்து, அவன் கல்யாண குணங்களையே மனதிற்குள் ரசித்து, மகிழ்ந்து கொண்டிருப்பாள். தனக்கு கண்ணனுடன்தான் திருமணம்.  மணந்தால் அவனையே மணப்பது என்ற எண்ணம் ஆழமாக அவள் உள்ளத்தில் பதிந்து விட்டது. சாட்சாத் நாராயணனே கிருஷ்ணன் என்று உணர்ந்து, சாதாரண ஒரு சிறிய நாட்டின் அரசகுமாரியான தனக்கு அவனை மணக்க தகுதி இருக்கிறதா என்று மனதிற்குள் விவாதித்து, இருக்கிறது என்ற முடிவுக்கு அவள் வந்துவிட்டாள்.  

சிசுபாலன்:
சேதி நாட்டின் இளவரசன் சிசுபாலன்.  தந்தை தமகோஷன்.  தாய் ச்ருதச்ரவை.  இவள் கண்ணனுக்கு அத்தை. சிசுபாலன் நான்கு கைகள், மூன்று கண்களோடு, கழுதை கத்துவதைப் போல அழுது கொண்டு பிறந்தான். இப்படிப்பட்ட கோளாறுகளுடன் அவன் பிறந்தது ஊருக்கே கேடு என்று ஜோசிய விற்பன்னர்கள் கூறி, அவனை துாக்கி வெளியில் எறிந்துவிடுவது நல்லது என்று சொன்னார்கள்.  வேறு வழியின்றி அந்த குழந்தையை எங்காவது ஊருக்கு வெளியில் கொண்டு விட்டுவிட சொல்லி வேலைக்காரர்களிடம் சிசுபாலனின் தாய் கொடுத்தாள். அந்த நேரத்தில், ‘‘குழந்தை உங்களிடமே இருக்கட்டும். யார் கையில் கொடுத்தால் அதிகப்படியாக இருக்கும் அங்கங்கள் மறைகிறதோ, அவனால் அதற்கு முடிவு என்று தெரிந்து கொள்ளுங்கள்’’ என்று அசரீரி வாக்கு கேட்டது.  
அசரீரி மரணம் என்றா சொல்ல வேண்டும்.  அவனால்தான் அவனுக்கு அனைத்து நன்மைகளும் ஏற்படும் என்று சொல்லியிருக்கக் கூடாதா? இருந்தாலும் தாய் தந்தையருக்கு ஒரு நப்பாசை.  யாரால் மரணம் சம்பவிக்கும் என்று தெரிந்து கொண்டால், அவனை கெஞ்சி கேட்டு சிசுபாலனை உயிரோடு விட்டு வைக்க வேண்டிக் கொள்ளலாம். அதனால் குழந்தையை தாங்களே வளர்ப்பது என்ற தீர்மானத்திற்கு வந்தார்கள்.  வீட்டுக்கு வருபவர்களிடமெல்லாம் குழந்தையை கொடுத்து ஏதாவது மாறுதல் தெரிகிறதா என்று பார்ப்பது வழக்கமாகிவிட்டது.  
இப்படி இருக்கையில் ஒரு நாள் கிருஷ்ணன் வந்தார்.  "என்ன அத்தை எனக்கு மருமகன் பிறந்தானா?"
"வா! கண்ணா! இந்தா உன் மருமகன்" என்று சொல்லிக் கொண்டே குழந்தையை கிருஷ்ணன் கையில் ச்ருதச்ரவை கொடுத்தாள்.  என்ன அதிசயம்!  குழந்தையின் தேவையற்ற அங்கங்கள் மறைந்து விட்டன!
தாய்க்கு ஒரு நிம்மதி.  
‘‘கிருஷ்ணன் நம் மருமகன்தானே! பார்த்துக்கொள்ளலாம்’’ என்று தீர்மானித்துக் கொண்டாள்.  
சிசுபாலன் நற்குணம் இல்லாதவன்.  முரட்டு சுபாவம், பிடிவாதம் கொண்டவன். கிருஷ்ணனை தன் எதிரியாக நினைப்பவன். ருக்மிணியின் மூத்த சகோதரன் ருக்மியின் நெருங்கிய நண்பன்.  ஒருநாள் பேசிக் கொண்டிருக்கும் போது ‘‘என் தங்கை ருக்மிணியை உனக்கு திருமணம் செய்து கொடுக்க எண்ணியிருக்கிறேன்’’ என்று சொன்னான்.  அழகியான ருக்மிணி தனக்கு கிடைக்கப் போவதை எண்ணி சிசுபாலன் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டான்.
ருக்மிணி வளர்ந்து பெரியவளானாள்.  
கிருஷ்ணனிடம் ருக்மிணி கொண்டிருக்கும் பிரியத்தை உணர்ந்த பீஷ்மகன், அவளை கிருஷ்ணனுக்கே கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்துகொண்டான். ஆனால், கிருஷ்ணன் மாடு மேய்த்தவன், சிறு வயதில் வெண்ணையை திருடியவன், அவனுக்கு போய் நம் ராஜகுமாரி ருக்மிணியை கொடுப்பதா என்று கோபமாக பேசி தடை போட்டான் அண்ணன் ருக்மி. ருக்மிணியை தன் நெருங்கிய நண்பன் சிசுபாலனுக்கு தருவதாக ஏற்கனவே வாக்களித்து விட்டதாகவும், அதை சிசுபாலன் ஏற்றுக்கொண்டு விட்டதாகவும் சொல்லி, தான் வாக்களித்தபடி ருக்மிணியின் திருமணம் சிசுபாலனுடன்தான் நடக்க வேண்டும் என்று தீர்மானமாக சொல்லிவிட்டான்.  அவன் கொஞ்சம் முரட்டுப் பேர்வழி. தந்தை பீஷ்மகனுக்கு அவனை எதிர்த்து பேசும் துணிவில்லை.  வேறு வழியில்லாமல் மகன் முடிவுக்கு அரை குறையாக சம்மதித்தான்.  
தவித்தாள் ருக்மிணி.  ஆனால், தந்தையைவிட கொஞ்சம் தைரியசாலி.  என்ன செய்யலாம் என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்தாள்.
ருக்மிணி கிருஷ்ணனை ஒருதடவை கூட நேரில் பார்த்ததில்லை, பேசியதில்லை.  ஆனாலும் தன் மனதளவில் கிருஷ்ணனைத் தவிர வேறு எவருக்கும் மாலையிடுவதில்லை என்ற வைராக்கியம் வேரூன்றி இருந்தது.  அந்த லட்சியத்தை அடைய அவள் செய்த காரியம் மிகவும் சாதுர்யமானது, கொஞ்சம் புரட்சிகரமானதும் கூட.  
தாமதம் செய்யாமல் காரியத்தில் இறங்கினாள்.  தன் எண்ணங்களை ஒரு ஓலையில் வடித்தாள். தன்மீது அக்கறையும் பிரியமும் கொண்ட கொஞ்சம் வயது முதிர்ந்த ஒரு அந்தணரை அழைத்து, அந்த ஓலையை அவரிடம் கொடுத்து உடனே துவாரகைக்கு சென்று கிருஷ்ண பரமாத்மாவிடம் சேர்ப்பிக்கச் சொல்லி, வழிச்செலவுக்கு கொடுத்து, அனுப்பினாள். அவளுடைய செயலில் இருந்த அவசரமும் பரபரப்பும்  நன்றாக புரிந்துகொண்ட பெரியவர், வீணாக நேரம் கடத்தாமல் உடனே கிளம்பினார்.  
ஒரு காரியம் சீக்கிரம் நிறைவேற வேண்டுமென்றால், நல்ல மிடுக்கான இளமையான ஒருவனை தேர்ந்தெடுத்து அனுப்புவது நல்ல வழி முறை.  ஆனால் ருக்மிணி ஒரு வயோதிகரை தேர்ந்து எடுத்து அனுப்புவானேன்? கடிதம் சீக்கிரம் போய்ச் சேர வேண்டும் என்பது மட்டும் முக்கியமல்ல, வெற்றிகரமாகவும் முடியவேண்டும்.  அதற்கு பெரியவர்களின் ஆசி முக்கியம். தவிர கிருஷ்ணன் பெரியவர்களை மதிப்பவன். ஒரு இளைஞனை அனுப்புவதை விட, ஒரு பெரியவரை அனுப்பினால் கிருஷ்ணன் அவரை தாமதிக்க வைக்காமல், அவர் சொல்வதை கேட்டு வேண்டியதை உடனே செய்வான் என்று ருக்மிணிக்குத் தெரியும்.  
அதன்படியே துவாரகையை அடைந்த பெரியவரை கண்ணன் வணங்கி, அவரது களைப்பு நீங்க அனைத்து உபசாரங்களையும் செய்தான். அவர் குளித்து, உணவருந்தி, சற்று படுத்து ஓய்வெடுத்தபின், கண்ணன் அவரை அணுகி, "பெரியோர் வந்தால் ஏதாவது காரணம் இருக்கும். என்ன காரியமாக வந்திருக்கிறீர்கள்? என்னிடம் சொல்லலாம் என்றால் சொல்லுங்கள். எது வேண்டுமானாலும் செய்ய காத்திருக்கிறேன்" என்று சொன்னான். பெரியவருக்கு கொஞ்சம் நடுக்கம்.  ஏனென்றால் வந்த காரியம் அப்படி!  
தாய் தந்தையருக்கு தெரியாமல், ஒரு கன்னிப் பெண் ஒரு வாலிபனுக்கு எழுதிய கடிதத்தை கொண்டு வந்திருக்கிறார்.  இந்த வயதில் அவர் அதை செய்வது எவ்வளவு தப்பான காரியம்! வேதமறிந்த ஒரு பெரிய மகான் இப்படிப்பட்ட காரியம் செய்யலாமா என்று கண்ணன் கேட்டு விட்டால், எவ்வளவு அவமானம்?  
பேசிக் கொண்டிருக்கும் போதே அவரது அங்கவஸ்திரம் கொஞ்சம் கலைந்தது, அவர் கொண்டு வந்த ஓலை கீழே விழுந்தது.  
‘‘இதென்ன ஸ்வாமி?’’
‘‘ருக்மிணி அனுப்பிய ஓலை. அதை தங்களிடம் சேர்ப்பிக்க ருக்மிணி அனுப்பி நான் வந்துள்ளேன். அதை படித்து செய்யவேண்டியதை சற்று துரிதமாக செய்ய வேண்டுகிறேன்’’  
‘‘அப்படியா! அதை தாங்களே படித்து சொன்னால், எனக்கு மகிழ்ச்சியாய் இருக்கும்’’
எம்பெருமான் கேட்டதும் பெரியவர் படிக்க ஆரம்பித்தார்.  
‘‘மூவுலகங்களிலும் அழகு மிக்கவனே!  அழகு பெரும் செல்வம். உன்னுடைய தோற்றத்தைப் பற்றியும் உன்னுடைய மேலான குணங்களையும் பலமுறை பலர் சொல்லி, உன்னையே அடைய வேண்டும் என்று நாள் முழுவதும் ஏங்கி கொண்டிருக்கிறேன்.  இதைச் சொல்ல நான் வெட்கப்படவில்லை. முகுந்தா! இதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.  உயர்ந்த குடியில் பிறந்து அனைத்து நற்குணங்களும் அமையப் பெற்ற உன்னை எந்த கன்னிகைதான் விரும்பாமலிருப்பாள்?. ஆகையால் உன்னையே நான் கணவராக வரித்துள்ளேன்.  நான் உன்னுடைய சொத்து. விரைவில் வந்து என்னை ஏற்று மணம் புரிய வேண்டுகிறேன்.  சிங்கத்தின் உணவை நரிக்கு வைப்பதா?   சிசுபாலன் போன்றவர்கள் என்னை தொடுவதா? கண்ணா! நான்  உன்னையே நினைத்து, நாள்தோறும் உன்னையே பூஜித்து வருவது சத்தியமானால், சிசுபாலன் போன்றவர்கள் விலகி நீயே வந்து என்னை மாலை சூட்டி ஏற்றுக்கொள்வாய் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar