Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » நம்பினார் கெடுவதில்லை
 
பக்தி கதைகள்
நம்பினார் கெடுவதில்லை


சென்னையில் ஒரு கூட்டத்தில் இளம் எழுத்தாளன் மாறனைச் சந்தித்தேன். அவன் எழுத்தைப் போலவே ஆளும் அழகாக இருந்தான். என்னை அவனுக்கு அறிமுகப்படுத்தியவுடன் பொரிந்து தள்ளினான்.
‘‘என்ன சார் இன்னும் பச்சைப்புடவைக்காரியப் பத்தித்தான் எழுதறீங்களா? இல்ல சிகப்புப்புடவைக்காரி, மஞ்சப்புடவைக்காரின்னு கலர மாத்திட்டீங்களா?’’
காயப்பட்டாலும் சன்னமாகச் சிரித்து வைத்தேன்.
‘‘நீங்க வயசுல பெரியவங்க. மனுஷன மீறி எந்த சக்தியும் கெடையாது சார். கடவுள், சாமி பூதம் எல்லாம் யாரோ காசு பண்றதுக்காக கிளப்பிவிட்ட புரளி. ஆன்மிகத்த விட்டுட்டு நாவல், சிறுகதைன்னு எழுதுங்க. உங்ககிட்ட நல்ல எழுத்துத் திறமை இருக்கு. சாமி, பூதம்னு திறமையப் பாழாக்காதீங்க’’
‘‘என் எழுத்து நீங்கள் போட்ட பிச்சை, தாயே. அதை உங்களுக்காக மட்டும்தான் பயன்படுத்துவேன்’’ என பச்சைப்புடவைக்காரியிடம் மானசீகமாக உறுதிமொழி எடுத்துக்கொண்டேன்.
‘‘மாறன், உங்களைவிட ஒரு பெரிய சக்தி உலகத்துல இருக்கா இல்லையா?’’
‘‘நிச்சயமா இருக்கு’’
ஏன் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறான்?
‘‘ஒரு சக்தி இல்ல, சார். ரெண்டு சக்திய நம்பறேன். ஒண்ணு என் தலைவர்’’
யாரோ ஒரு பெரிய அரசியல்வாதியின் பெயரைச் சொன்னான்.
‘‘இரண்டாவது?’’
‘‘என் மனைவி எழில். பெயருக்கேத்த தேவதை. பெரிய குணவதி. இந்த இரண்டு சக்திகளையும் தாண்டி எந்தச் சக்தியும் கெடையாது. இல்லாத சக்திய நீங்க மகா சக்தி, பராசக்தின்னு சொல்றதுல எனக்கு உடன்பாடும் இல்ல’’
அவன்மீது வார்த்தை வெடிகளை வீசலாம் என யோசித்தபோது மாறனின் அலைபேசி ஒலித்தது. எடுத்துக்கொண்டு வெளியே போனான்.
ஓரிரு நிமிடத்தில் ஒரு பெண் தண்ணீருடன் வந்தாள்.
‘‘இதைக் குடி. கோபம் அடங்கும். அவனிடம் பேசாதே. பிரச்னையாகிவிடும்’’
‘‘உங்களை இல்லை என்கிறானே?’’
‘‘எதிர்த்தால் இன்னும் கேவலமாகப் பேசுவான். இன்னும் பெரிதாக அழுவாய். பேசாமல் விடு. சரியான நேரத்தில் சரியான இடத்தில் உன்னைப் பேச வைக்கிறேன்’’
அதற்குள் என்னை யாரோ அழைத்தார்கள். மாறனை மறந்தே போனேன்.
இரண்டு மாதம் கழித்து சென்னையில் இருக்கும் பிரபல மருத்துவமனையிலிருந்து என்னை அழைத்தார்கள்.
‘‘உடனே வரமுடியுமா? நேத்து தற்கொலைக்கு முயற்சி செஞ்ச ஒருத்தர ரொம்பக் கஷ்டப்பட்டுக் காப்பாத்திருக்கோம். அவரு உங்கள உடனே பாக்கணும்னு சொல்றாரு’’
‘‘யாரு?’’
‘‘எழுத்தாளர் மாறன்’’
முதலில் அதிர்ச்சி. பிறகு மனதில் கோபம் பொங்கியது. என் தாயைப் பழித்தவனை நான் ஏன் பார்க்க வேண்டும்? ஏதோ சொல்லி இணைப்பைத் துண்டித்தேன்.
மதியச் சாப்பாட்டுக்குக் கிளம்பும் போது ஒரு தபால்காரி வழிமறித்தாள்’’ ஞாயிறன்று தபால் உண்டா என்ன?’’
‘‘எனக்கு எல்லா நாளும் ஒன்றுதான்’’
பச்சைப்புடவைக்காரியின் காலில் விழுந்தேன்.
‘‘உடனே சென்னைக்குப் போ. மாறனை இன்று இரவிற்குள் சந்திக்கவேண்டும். மிகப் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறான். நான்தான் உன்னைக் கூப்பிடவைத்தேன்.  பிகு பண்ணிக்கொள்கிறாயே!’’
‘‘நான் போய்...’’
‘‘நீ போனால் அவனுக்கு உதவிய மாதிரியும் இருக்கும். அன்று அவன் கேட்ட கேள்விக்குப் பதில் சொன்னமாதிரியும் இருக்கும்’’
மருத்துவமனையில் துவண்டு கிடந்த மாறனை இரவு ஒன்பது மணிக்குப் பார்த்தேன். என் கையைப் பற்றிக்கொண்டு அழுதான். நடந்ததைச் சொன்னான்.
இரண்டு நாளுக்கு முன் மாறனும், அவன் மனைவி எழிலும் ஒரு உணவகத்திற்குச் சென்றிருந்தார்கள். மாறன் கை கழுவிக் கொண்டு வந்தபோது எழிலைக் காணவில்லை. அங்கும் இங்கும் தேடினான். அங்கேயிருப்பவர்களிடம் விசாரித்தான்.  எல்லோரும் தெரியாது என்று சொல்லி விட்டார்கள். அலைபேசியில் அவளை அழைத்தான். அது ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்தது.
பைத்தியக்காரனைப் போல் ஊர் முழுவதும் தேடிவிட்டு நள்ளிரவு வீட்டிற்கு வந்தான் மாறன். மறுநாள் காலை ஏழு மணிக்கே தன் தலைவரின் வீட்டுக்குப் போய்விட்டான். தலைவரின் காலில் விழுந்து கதறினான்.
‘‘கவலைப்படாத மாறா! போலீஸ்ல எனக்கு நிறைய ஆளு இருக்கு. அந்த ஓட்டல் பக்கத்துல இருக்கற சிசிடிவி கேமராவ பாத்துக் கண்டுபிடிச்சிரலாம். எஸ்.பி.,ய இங்க வரச் சொல்றேன்’’
ஒரு கம்பீரமான காவல்துறை அதிகாரி அங்கே வந்தார். மாறனிடம் துருவித் துருவி விசாரித்தார்.
தலைவர் வீட்டைவிட்டு வெளியே வந்தான் மாறன். வீட்டிற்குச் செல்ல மனமில்லை. தலைவரின் வீட்டிற்கு எதிரில் ஒரு மரத்திற்குப் பின்னால் நின்றபடி அழுது கொண்டிருந்தான். அவன் தோளை யாரோ தொட்டார்கள்.
‘‘நான் ராமு. தலைவர்கிட்ட டிரைவரா இருக்கேன். உங்க மனைவியத் தலைவர் கூட்டிக்கிட்டு வந்துட்டாரு. நீலாங்கரை வீட்டுல குடி வச்சிருக்காரு. நேத்து நான்தான் அவங்கள ஓட்டல்ல பிக்அப் பண்ணேன். விருப்பபட்டுத்தான் வந்தாங்க. தலைவருக்கும் உங்க மனைவிக்கும்...’’
மாறன் மயங்கி விழுந்தான். டிரைவர் ஓடிவிட்டான். பக்கத்தில் இருந்த கடைக்காரன் முதலுதவி செய்து அனுப்பி வைத்தான். தான் நம்பிய தலைவரும், மனைவியும்  துரோகம் செய்ததை மாறனால் தாங்க முடியவில்லை. அன்றிரவு பூச்சி மருந்தைச் சாப்பிட்டான். நல்ல வேளையாகப் பக்கத்து வீட்டுக்காரன் பார்த்துவிட்டு மருத்துவமனையில் சேர்த்து விட்டான்.
‘‘மாறன் நீ மலை மாதிரி நம்பின ரெண்டு பேரும் உன் தலைவரும், உன் மனைவியும் துரோகம் பண்ணாங்க. பச்சைப்புடவைக்காரிய நம்பவேயில்ல. ஆனா அவ உன்ன வாழ வைக்க என்னை அனுப்பிவைச்சா’’
‘‘அதுதான் எல்லாம் முடிஞ்சிபோச்சே! இனிமே யாருக்காக வாழணும்?’’
‘‘உன்கிட்ட அபூர்வமான எழுத்துத் திறமை இருக்கு. நீ நெறையச் சாதிக்கணும்’’
‘‘பச்சைப்புடவைக்காரியப் பத்தி எழுதச் சொல்றீங்களா?’’
‘‘அவசியம் இல்ல. அன்பப் பத்தி எழுது. உன் மனசுல என்ன எழுதணும்னு தோணுதோ எழுது. சாதிச்சிக்காட்டு. உன் சாதனைகளுக்கு முன்னால் உன் தலைவன், மனைவி எல்லாம் சாதாரணக் குப்பையாத் தெரிவாங்க’’
‘‘இனிமேலும் என்னால எழுத...’’
‘‘நிச்சயமா முடியும். எழுத்து உனக்குப் பச்சைப்புடவைக்காரி கொடுத்த வரம்’’
சிறிது நேரம் பேசிவிட்டுக் கிளம்பினேன், மருத்துவமனை வாசலில் நின்ற காருக்குள் இருந்த ஒரு பெண், ‘‘கபாலீஸ்வரர் கோயிலுக்கு எப்படி போகணும்?’’
‘‘போரூர்ல வந்து கேக்கறீங்க?’’
‘‘கேட்டா? சொல்ல முடியாதோ? ஏறுய்யா வண்டில’’
பச்சைப்புடவைக்காரி!
வண்டியில் ஏறினேன்.
‘‘மாறனுக்கு என்னாகும்?’’
‘‘இன்னும் ஒரு மாதம் அவன் துக்கத்தில் இருப்பான். அதன்பின் அவனது மூத்த சகோதரி அவனுடன் பார்க்க வருவாள். அவளது அன்பு அவனை வாழ வைக்கும். தான் தான் பெற்ற அனுபவத்தையே நாவலாக எழுதுவான். அது பெரியளவில் பேசப்படும். அதற்கு இலக்கிய விருதுகள் கிடைக்கும். அவன் அருமை தெரிந்த அவனுடைய வாசகி அவனைத் திருமணம் செய்வாள். நிறைவாக வாழ்வான். உனக்கு என்ன வேண்டும்? உனக்கும் இலக்கிய விருது வேண்டுமா?’’
‘‘என்னுடைய எழுத்தே நீங்கள் எனக்குத் தகுதி பார்க்காமல் அளித்த விருதுதானே! வேறு ஒன்று வேண்டும்.’’
‘‘கேள்’’
‘‘இந்தப் பிறவியிலோ இனிவரும் பிறவிகளிலோ என் கர்மவினை காரணமாக நான் உங்கள் கொத்தடிமை என்பதை மறந்து போகலாம். உங்கள் அன்பை உணராமல் மாறன் செய்தது போல் உங்களைப் பழித்துப் பேசலாம். அப்போது நீங்கள் எனக்குக் கொடிய துன்பத்தைக் கொடுத்தாலாவது நான் உங்கள் கொத்தடிமை என்பதை உணரச் செய்ய வேண்டும்’’
‘‘மாறனுக்கு அதைத் தானே செய்தேன்? உனக்குச் செய்ய மாட்டேனா என்ன?’’
எனக்கு அழுகை வந்தது. கண்களைத் துடைத்தபின் பார்த்தபோது பச்சைப்புடவைக்காரியும் இல்லை. அந்தக் காரும் இல்லை.
தொய்வாக நடக்கத் தொடங்கினேன்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar