|
‘‘நாளைக்கு எனக்கு சிசுபாலனுடன் திருமணம் என்று நிச்சயத்திருக்கிறார்கள். தாங்கள் உடனே இங்கு வந்து சிசுபாலனிடம் போரிட்டு வென்று என்னை கடத்திச் சென்று மணம் செய்து கொள்ளவேண்டும். இது சாத்தியமில்லை என்று தாங்கள் கருதினால், நான் நகரத்திற்கு வெளியில் உள்ள எங்கள் குலதெய்வம் கோயிலுக்கு கவுரி பூஜை செய்ய நாளை செல்வேன். பூஜை முடிந்து திரும்பும் போது தாங்கள் கோயிலுக்கு வெளியில் காத்திருந்து, என்னை அபகரித்து சென்று விடுங்கள்’’ இது என்ன அக்கிரமம்? ஒரு பெண் ஒரு வாலிபனுக்கு கடிதம் எழுதி என்னை இந்த இடத்தில் வந்து கடத்திச் செல் என்று எழுதுகிறாள். இவள் எப்படிப்பட்டவளாய் இருப்பாள்? எத்தனை பேருக்கு இதைப் போல் எழுதியிருக்கிறாளோ என்று பகவான் சந்தேகப்படுவானோ என்று அஞ்சினாள் ருக்மிணி. இந்த சந்தேகத்தை போக்க கடைசியாக, ‘‘கண்ணா! தங்கள் திருவடியை தரிசிக்க தேவர்கள் எல்லாம் தவமிருக்கிறார்கள். அந்த திருவடி நான் அடைய முடியாது போனால் ‘கிருஷ்ண கிருஷ்ண’ என்று சொல்லிக்கொண்டே உயிரை விட்டுவிடுவேன். எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் நீயே என் கணவன். உன்னை அடைந்தே தீருவேன்’’. இதைக் கேட்ட கிருஷ்ணன் புன்முறுவல் செய்தான். ‘‘ருக்மிணி என்னை நினைத்து உருகுவது போலவே நானும் அவளையே நினைத்து தவிக்கிறேன். அவள் அண்ணன் ருக்மி தங்கையின் விருப்பத்திற்கு மாறாக நடப்பதால், இந்த திருமணத்திற்கு இடைஞ்சல்கள் வரலாம் என்று எனக்குத் தெரியும். பரவாயில்லை. நான் உடனே புறப்படுகிறேன். எவர் எதிர்த்தாலும் வெற்றி பெற்று ருக்மிணியை துவாரகைக்கு கொண்டு வருவேன்’’ என்று சொல்லிவிட்டு, ‘‘தாருகா! உடனே தேரைப்பூட்டு’’ என்று உத்தரவிட்டான். தேர்ப்பாகன் நான்கு உயர்ந்த ஜாதி குதிரைகள் பூட்டிய தேரை கொண்டுவந்து நிறுத்தினான். கண்ணனும் தாமதிக்காமல் தயாராகி துாது வந்த அந்தணரையும் உடன் ஏற்றிக் கொண்டு, ‘விரைவாக ஓட்டு’ என்று உத்தரவிட்டான். நகரமே ருக்மிணி, சிசுபாலன் திருமணத்திற்காக விழாக் கோலம் பூண்டிருந்தது. எங்கும் தோரணங்களும், வண்ண வண்ண கொடிகளும் பறந்து கொண்டிருந்தன. மக்கள் தங்களை நன்றாக அலங்கரித்துக் கொண்டு திருமணத்தில் கலந்து கொள்ள அரண்மனையை நோக்கி வந்து கொண்டிருந்தனர். ருக்மிணி நீராடி உயர்ந்த ஆடை ஆபரணங்கள் பூண்டு அலங்காரமாக, அழகாக தயாராக நின்றாள். வந்தவர்கள் அனைவரையும் மன்னர் பீஷ்மகன் சிறப்பாக உபசரித்து வரவேற்றார். அதுபோல் சேதி நாட்டு மன்னர் தமகோஷன், மகன் சிசுபாலனுக்கு செய்யவேண்டிய சடங்குகளை செய்து முடித்து திருமண மண்டபத்திற்கு செல்ல வெளியில் வந்தான். சிசுபாலனுடன், அவன் நண்பர்கள் சால்வன், ஜராசந்தன், தந்தவக்கிரன், விதுாரதன் போன்றவர்கள் உடன் புறப்பட்டார்கள். ஒருவேளை கிருஷ்ணன் வந்து ஏதாவது வம்பு செய்தால், அவனை சமாளித்து விரட்டியடித்து விட்டு, ருக்மிணியை சிசுபாலனுக்கே மணம் முடித்து விடவேண்டும் என்ற ஏற்பாட்டுடனே அனைத்து மன்னர்களும் தங்கள் பரிவாரங்களுடனேயே வந்திருந்தார்கள். இதைக் கேள்விப்பட்ட பலராமன், தன் படைகளை திரட்டிக்கொண்டு, கிருஷ்ணனை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தான். இது இப்படி இருக்கையில், ‘நேரம் நெருங்கி கொண்டிருக்கிறதே, இன்னும் கண்ணனிடம் அனுப்பிய துாதுவர் வரவில்லையே’ என்று ருக்மிணி கவலை பட்டுக்கொண்டிருந்தாள். வழியில் ஏதாவது பிரச்னையா அல்லது கிருஷ்ணனுக்கு என்னை திருமணம் செய்ய விருப்பமில்லையோ என்று பலவாறாக எண்ணி குழம்பினாள். இப்படி நினைத்து கண்ணீர் விட்டுக்கொண்டு தன் குலதெய்வம் கவுரியையே தியானம் செய்து கொண்டிருந்தாள். அந்த சமயம் அவளுடைய இடது கண் துடித்தது. நல்ல சகுனம். அவள் அனுப்பிய அந்தணரும் அங்கே வந்து சேர்ந்தார். அவருடைய மலர்ந்த முகத்தை கண்டதுமே ‘காரியம் வெற்றி’ என்று புரிந்து கொண்டு அவரை வணங்கி எழுந்தாள். அவளை அழைத்துப் போக பகவான் வந்திருக்கிறார் என்று குறிப்பாலேயே உணர்த்தி கண்ணனின் வாக்குறுதியையும் சொன்னார். அதற்குள் கிருஷ்ணனும், பலராமனும் தன்னுடைய நாட்டிற்கு வந்திருப்பதை பீஷ்மகன் அறிந்ததும், அவர்கள் தன் மகளுடைய திருமணத்தைக் காணவே வந்திருக்கிறார்கள் என்று எண்ணி, அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று ஆடை ஆபரணங்கள் வழங்கி முறைப்படி உபசரித்தான். அவர்களும், உடன் வந்தவர்களும் தங்க வசதியான விடுதி ஒன்றை ஏற்பாடு செய்தான். கிருஷ்ணன் வந்திருப்பதை அறிந்து நகர மக்கள் அவனை தரிசிப்பதற்காக வந்து கொண்டே இருந்தார்கள். அப்பொழுது மணப்பெண் ருக்மிணி, குலவழக்கப்படி கவுரி பூஜை செய்ய ஊருக்கு வெளியே இருந்த கோயிலுக்கு மேள தாளங்களுடன், வாத்திய கோஷங்களுடன், புறப்பட்டாள். தோழிகள் உடன் சென்றனர். புஷ்பங்கள், சந்தனம், ஆபரணங்கள், பழங்கள் முதலிவற்றை எடுத்துக்கொண்டு சேடிகளும் சென்றார்கள். பல போர் வீரர்கள் பாதுகாப்புக்கு சென்றனர். புஷ்கரணியில் கை, கால்கள் சுத்தம் செய்துகொண்டு அனைவரும் கோயிலுக்குள் நுழைந்தனர். ‘‘தேவி! என்னை கண்ணனுடன் சேர்த்து வையம்மா!’’ என்று மனமுருக ருக்மிணி வேண்டிக் கொண்டாள். பிறகு முறைப்படி பூஜை முடித்து, அங்கிருந்த சுமங்கலிகளுக்கு தான தருமங்கள் செய்து அவர்களுடைய ஆசியையும் பெற்றாள். அதன் பிறகு வைர வைடூரியம் இழைத்த மோதிரங்கள் அணிந்த தன் அழகான கரத்தால் தோழியைப் பற்றிக்கொண்டு அன்னமென நடந்து கோயிலை விட்டு வெளியே வந்தாள். மெல்லிய இடை, அன்ன நடை, பவளம் போன்ற உதடுகள், கன்னங்களில், காதில் அணிந்த குண்டலங்களின் சாயல் வீச, மெல்லிய புன்னகையுடன் வந்த ருக்மிணியைக் கண்டு அங்கிருந்த கூட்டமே மோகத்தில் மூழ்கியது. அவளைக் கண்ட அங்கிருந்த மன்னர்கள், அந்த அழகில் திக்கு முக்காடிப்போனார்கள். ருக்மிணி, கண்ணன் எங்காவது தென்படுகிறானா என்று சுற்றிலும் தன் பார்வையும் செலுத்தினாள். என்ன ஆனந்தம்! கண்ணனைக் கண்டு விட்டாள். அதே சமயம், அவளே எதிர்பார்க்காமல் கண்ணன் வேகமாய் வந்து, கையைக் கொடுத்து அப்படியே அவளை துாக்கி தேரின் மேல் ஏற்றி வைத்துக் கொண்டு, ஒரே நொடியில், அனைவரும் திகைத்து நிற்க, அங்கிருந்து விரைவாக சென்றுவிட்டான். பலராமன் யாதவப் படைகளுடன் அவனுக்கு பின்னே சென்றார். சிசுபாலனுடன் வந்திருந்த மன்னர்களெல்லாம் சுதாரித்துக் கொண்டு, தேர்களில் ஏறி கண்ணனை பின்தொடர்ந்து வேகமாய் சென்றார்கள். கண்ணனுடன் வந்திருந்த யாதவப் படை வீரர்கள், அவர்களை வழிமறித்து தாக்கினார்கள். ருக்மிணி பயந்து போய் கண்ணனைப் பார்த்தாள். கண்ணன் அவளை லேசாக தட்டிக் கொடுத்து, ‘‘பயப்படாதே! அவர்களால் ஒன்றும் செய்யமுடியாது’’. சொன்னபடியே யாதவ படையை எதிர்த்து நிற்க முடியாமல், மன்னர்களின் படை பின்வாங்கிவிட்டது. அனைவரும் அரண்மனை வந்து, சிசுபாலனுக்கு ஆறுதல் சொன்னார்கள். அவ்வளவுதான். சிசுபாலன் மனத்தை தேற்றிக்கொண்டு, தன் தேசத்திற்கு திரும்பிவிட்டான். ஆனால் ருக்மிக்கு அவமானத்தை பொறுக்க முடியவில்லை. ஒரு படையுடன் கிருஷ்ணனை துரத்திக்கொண்டு சென்று, அவனை நெருங்கி, ‘‘ஏய் கிருஷ்ணா! நில் ஓடாதே’’ என்று கூவினான். திரும்பிய கிருஷ்ணன் மீது பாணங்களை எய்தான். கிருஷ்ணன் தன் பாணங்களால், ருக்மியின், தேர், குதிரைகள், வில் அனைத்தையும் அழித்தான். மிகவும் கோபத்துடன் ருக்மி தன் வாளை உருவிக்கொண்டு கண்ணன் மீது பாய்ந்தான். கிருஷ்ணன் அதையும் பொடிபொடியாக்கினான். பிறகு தான் ஒரு வாளை எடுத்துக்கொண்டு ருக்மி மீது பாய்ந்தான். தடுத்தாள் ருக்மிணி. என்ன இருந்தாலும் அண்ணனாயிற்றே! ‘‘கண்ணா! வேண்டாம். அவனை விட்டுவிடு’’ என்றாள் புது மனைவி. இந்தப் பக்கம், மைத்துனன். வாளை உரையிலிட்டான் கிருஷ்ணன். ருக்மியின், தலையை மழித்து அவனை தேரோடு கட்டி வைத்தான் கிருஷ்ணன். அதற்குள் யாதவப்படை, ருக்மியின் படையினரை அழித்து விட்டது. அப்பொழுது பலராமன் அங்கே வந்து ருக்மியின் கட்டை அவிழ்த்து விட்டு, ‘‘இவன் நம் உறவினன். இவனை ஒன்றும் செய்யக்கூடாது’’ என்று சொல்லி அவனை அனுப்பிவைத்தான். பிறகு ருக்மிணியைப் பார்த்து, ‘‘உன் அண்ணனுக்கு ஏற்பட்ட கதியைப் பார்த்து நீ எங்கள் மீது கோபப்படாதே. அந்த நிலைக்கு காரணம் அவனேதான்’’ என்று அவளுக்கு ஆறுதல் சொன்னான். ருக்மி தனக்கு ஏற்பட்ட அவமானத்தை பொறுக்க முடியாமல், நாட்டுக்கு திரும்பாமல், தான் இருந்த இடத்திலேயே ஒரு நகரை (போஜகடம் என்று பெயர்) உருவாக்கி அங்கேயே தங்கிவிட்டான். கிருஷ்ணன் ருக்மிணியை துவாரகைக்கு அழைத்துச் சென்று உற்றார் உறவினர் முன்னிலையில் முறைப்படி திருமணம் செய்துகொண்டான். துவாரகையில் ஒவ்வொருவரும் அந்த திருமணத்தை தன் வீட்டு விழாவாகவே கொண்டாடினர். மணமக்களுக்கு ஏராளமான பரிசுகள் வழங்கினர். ருக்மிணியை கண்ணன் கடத்தி வந்த விதத்தைப் பற்றி பேசி பேசி மகிழ்ந்தனர். இந்த கதையை படிப்பவர்களும், கேட்பவர்களும், அனைத்து நன்மைகளையும் பெற்று வாழ்வார்கள். ருக்மிணி கல்யாணம் முடிவுற்றது. சுபம்
|
|
|
|