|
விருதுநகர் மாவட்டம் சேத்துார் பகுதியை ஆட்சி செய்தவர் சேவகப்பாண்டியன். இவர் தேவதானம் சிவபெருமான் கோயிலுக்கு திருப்பணிக்காக நிதியுதவி செய்தார். திருப்பணிக்கு தேவையான பாறை எங்குள்ளது என்று பார்த்து வர ஸ்தபதியிடம் கட்டளையிட்டார். மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியில் தேவையான பாறை உள்ளது. அதனை பெயர்த்து வந்தால் திருப்பணி நிறைவேறும் என்றார் ஸ்தபதி.
வலுவான பாறையை பெயர்த்து வருவது சுலபமல்ல என்பதால் அரசவையில் பலரும் பல யோசனைகளை சொன்னார்கள். சேவகப்பாண்டியன் திருப்தி அடைய வில்லை. முடிவாக ஆஸ்தானப்புலவரான சங்குக்கவிராயரை அழைத்து பொறுப்பை ஒப்படைத்தார். சரஸ்வதி தேவியை தியானம் செய்தார் கவிராயர். வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாக வாக்கிலிருந்து பாடல்கள் மழையாக பொழிந்தன. மலையும் நகரத் தொடங்கியது. நிலை சாயொணாத தவசே புரிந்து நிறையமுத கலை சார் தவம்பெற்ற தென்சேறை நாதனைக்கண்டவளே உலைசார் உளி வைத்து கற்பணி செய்ய உனதருளால் மலை சாய வேண்டும் தவம் பெற்ற நாயகி மாதங்கியே. என்று பாடியதும் மிகப்பெரிய பாறை நகர்ந்து திருப்பணி செய்யும் இடத்திற்கு வந்தது. மகிழ்ந்த சேவகபாண்டியன், ‘உமக்கு என்ன பரிசு வேண்டும்’ எனக் கேட்க கவிராயரோ திருப்பணி நிறைவேறினால் போதும் என்றார். இதன்பின் ‘மலை சாயப்பாடிய சங்குப்புலவர்’ என கவிராயருக்கு பட்டம் அளித்து கவுரவித்தார் மன்னர்.
|
|
|
|