Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » நாகபாசமும் கருட வைத்தியமும்
 
பக்தி கதைகள்
நாகபாசமும் கருட வைத்தியமும்

ஒற்றர்கள் தெரிவித்த தகவல்கள் ராவணனைப் பேரிடியாகத் தாக்கின. அவற்றையும் மீறி ராமன் முன்னேறி வருகிறான் என்ற செய்தி அவனை கோபத்தால் கொதிக்க வைத்தன.
அதிர்ச்சியுடன் தன் அரண்மனை உச்சிக்குச் சென்று உப்பரிகையில் இருந்து பார்த்தான். கடற்கரையில் லட்சக்கணக்கான வானரங்கள் கைகளில் பாறைகளையும், பெரிய கட்டைகளையும் வைத்துக் கொண்டு ‘போர்’ புரியத் தயாராக இருந்தன. அவற்றைப் பார்த்ததும் ராவணனுக்கு சிரிப்புதான் வந்தது. இதுதான் இவர்களுடைய ஆயுதமா? ஆனால் அவற்றின் எண்ணிக்கையைப் பார்த்ததும் மயக்கமே வரும் போலிருந்தது அவனுக்கு.
சரி, இனி தாமதித்துப் பயனில்லை, நாமும் செயலில் இறங்க வேண்டியதுதான் என தீர்மானித்த அவன், தன் படைகளைத் தயார் நிலையில் இருக்கும்படி உத்தரவிட்டான்.
இங்கே கடைசி முயற்சியாக துாது அனுப்ப எண்ணிய ராமன், இனியாவது ராவணன் சீதையை விடுவிப்பானா என்று கேட்டு வரும்படி அங்கதனை அனுப்பினான். இது துாது நோக்கம் மட்டுமல்ல, ராவணனுக்கு தன் படை பலத்தில் ஒரு மாதிரியைக் காட்டுவதற்காகவும்தான்.
உடனே அங்கதன் விண்ணில் பாய்ந்து அரண்மனை வளாகத்துக்குள் இறங்கினான். எதிர்பார்த்தது போலவே அவனை அங்கே அரக்கர்கள் எதிர்த்தனர். ராவணனும் வெறுப்புற்று அங்கதனைக் கொல்ல உத்தரவிட்டான். ஆனால் அங்கதன் தன் இரு அக்குளிலும் அரக்கர் நால்வரை அப்படியே துாக்கிக் கொண்டு விண்ணில் தாவினான். அங்கிருந்தபடி அவர்களைக் கீழே எறிந்து அவர்கள் தரையில் மோதி இறக்குமாறு செய்தான். இதைக் கண்ட ராவணன் கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தான்.
ஆனால் உடனேயே அவனுள் மூண்டிருந்த சீதை மோகம், அவனது கண்ணை, அறிவை, மனதை எல்லாம் மறைத்தது. அக்கணமே அவனும் போருக்குத் தயாரானான்.
உடனே அரக்கர்களை அனுப்பி வைத்தான். ஆனால் பிரஜங்கன், ஜம்புமாலி, பிரதபனன், வஜ்ரமுஷ்டி, நிகும்பன், வித்யுன்மாலி என அடுத்தடுத்து பல அரக்கர்கள் வானர வீரர்களால் மாய்ந்தார்கள். ராமனும், லட்சுமணனும் தம் கணைகளை ஏவி பல அரக்கர்களின் வாழ்வுக்கு முடிவு கட்டினர்.  
ராவணனின் மகன் இந்திரஜித், அங்கதனுடன் போரிட்டான். ஒரு கட்டத்தில் தன் ஆயுதங்களை இழந்து தேரும் ஒடிந்து போய்விட்ட நிலையில் தொடர்ந்து போரிட முடியாத பலவீனத்தில் இந்திரஜித் தன் மாய சக்தியால் பளிச்சென்று போர்க்களத்திலிருந்து மறைந்து போனான். ‘அவனைக் கொல்ல முடியாமல் போயிற்றே’ என்று அங்கதன் ராமனிடம் வருத்தப்பட்டுக் கொண்டான். ராமனோ, ‘அவன் இப்போதைக்கு மறைந்து விட்டான். மீண்டும் வருவான், ஆனால் அவனது மாயையைப் புரிந்து கொண்டு அவனை வெல்ல வேண்டும்’ என அவனுக்கு அறிவுறுத்தினான்.
மாலை மயங்கி இரவு சூழ்ந்த போது அது இந்திரஜித்துக்கு வசதியாகப் போய்விட்டது. பகலிலேயே பிறர் கண்ணுக்குத் தெரியாமல் மறையும் வல்லமை படைத்தவன் அவன். இரவில் கேட்க வேண்டுமா? விண்ணிலிருந்தபடியே பல்லாயிரக் கணக்கான அம்புகளை வானரப் படைகள் மீது ஏவினான். அவற்றால் ராமன் படைகள் திக்கு முக்காடின. எங்கிருந்து தாக்குகிறான் என்றே தெரியாமல் தவித்தன. அவர்களுடைய திகைப்பையும், அவதியையும் ரசித்த இந்திரஜித் தன் நாகபாசத்தை வீச அது ராமன், லட்சுமணன் இருவரையும் கட்டிப் போட்டு விட்டது. இருவரும் மூர்ச்சையாகி விழ, அதைக் கண்டு பெரும் ஓலமிட்டனர் வானர வீரர்கள். சுக்ரீவன், அங்கதன், அனுமன் முதலானோர் தடுமாறினர். தலைவனே மூர்ச்சித்து விழுந்து விட்டபோது தங்களை யார் படை நடத்துவார்கள் என்ற குழப்பம் மேலிட்டது.
ஆனால் அங்கு வந்த விபீஷணன் அவர்களை ஆற்றுப்படுத்தினான். ‘கவலைப்படாதீர்கள், போர் என்று வந்தால் இதுபோன்ற பாதிப்புகளை எதிர்கொள்ளத்தான் வேண்டும். அதற்காக நம் நோக்கத்திலிருந்து பின்வாங்கக் கூடாது. ஆகவே நம் ராமனுக்கும், லட்சுமணனுக்கும் விரைவில் மூர்ச்சை தெளியும். அதுவரை நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து போர் புரியத்தான் வேண்டும்’ இவ்வாறு சொன்ன அவன் சிறிது நீரெடுத்து இருவர் முகத்திலும் தெளித்தான்.
கீழே நடக்கும் சம்பவங்களைப் பார்த்த இந்திரஜித் குதுாகலித்தான். தன் நாகபாசம் ராம, லட்சுமணரை மாய்த்துவிட்டது என உரத்துக் குரல் கொடுத்தான். இந்தச் செய்தி ராவணனை எட்டியது. உடனே சந்தோஷத்தால் வானுக்கும், பூமிக்கும் குதித்தான் அவன். அசோகவனத்தில் காவல் காத்த அரக்கியரிடம், ‘உடனே ஒரு புஷ்பக விமானத்தைத் தயார் செய்து அதில் சீதையை ஏற்றி, போர்க்களத்துக்கு அழைத்துச் செல்லுங்கள். அங்கே தன் கணவர் இறந்து கிடப்பதைப் பார்க்கும் அவள் மனம் மாறி என் பக்கம் வந்துவிடுவாள்’ என வெறியுடன் பிதற்றினான்.
அவ்வாறே யுத்த பூமிக்கு அரக்கியர் புடைசூழச் சென்ற சீதை அங்கே ராமனும், லட்சுமணனும் வீழ்ந்து கிடப்பதைப் பார்த்து பெருங்குரலெடுத்து அழுதாள். ‘இது எப்படி நடந்தது’ என்றெல்லாம் கேட்டு அரற்றினாள். அப்போது அருகே இருந்த திரிசடை, ‘சீதா, வீணாக சந்தேகப் படாதே. அவர்கள் இறந்தவர்கள் போலத் தெரியவில்லை. முகத்தில் பார் எத்தனை களை, புன்முறுவல்! இது ஏதோ மாய தந்திரம்தான், நிச்சயம் அவர்கள் உயிருடன் தான் இருக்கிறார்கள். விரைவில் ராவணாதியரை மொத்தமாக வீழ்த்திச் சாய்த்து உன்னை ராமன் மீட்டுச் செல்வான், அச்சம் கொள்ளாதே’ என்று ஆறுதல் சொன்னாள்.
அதேபோல தன் கணவனை உற்றுப் பார்த்த சீதை, ‘உன்னைவிட்டு என்னால் போய்விட முடியுமா?’ என்று அவன் கேட்பது போலவே உணர்ந்தாள். மனதில் சற்று தெம்பு வளர்ந்தது. ஆனாலும் அவர்களுக்கு வேறு மாதிரியாக துன்பம் ஏதும் நிகழ்ந்துவிடக் கூடாதே என்றும் கவலைப்பட்டாள். அசோகவனத்துக்குத் திரும்பிய பிறகு குலதெய்வமான ரங்கநாதரை வேண்டினாள்.  
இங்கே ராமன் மூர்ச்சை தெளிந்து எழுந்தான். பக்கத்தில் இன்னும் மயக்கத்திலேயே இருந்த லட்சுமணனைப் பார்த்து கண் கலங்கினான். ‘என்ன வேதனை இது! அனுமன், அங்கதன், ஜாம்பவான், சம்பாதி, மயிந்தன் போன்றோர் தம் உயிரையும் பொருட்டாக மதியாமல் எனக்காகப் போராடுகிறார்களே, இதெல்லாம் விழலுக்கு இறைத்த நீராகி விடுமோ? என் தம்பி லட்சுமணன் எப்போது கண் திறப்பான்..?’ என கண்ணீர் பெருக்கினான்.
நாகபாசத்தால் கட்டுண்டு பலத்த காயத்தால் நகரக்கூட முடியாமல் ராமனும், முற்றிலும் உணர்வே இல்லாமல் மூர்ச்சித்தபடி லட்சுமணனும் மூர்ச்சித்தும் கிடந்த நிலையில் வானில் ஒரு பேரொளி தோன்றியது. அது கருடனாக
பூமியில் இறங்கியது. கருட பார்வை பட்டவுடன் நாகபாசம் முற்றிலுமாகத் தளர்ந்து பாதிக்கப்பட்ட அனைவரும் புத்துயிரும், உற்சாகமும் பெற்றனர். ராமன் அப்படியே உருகிப் போனான். ‘அரக்கருக்கு மாய வித்தை என்றால் தனக்கு கடவுளின் உதவி’ என எண்ணிக் கொண்டான். கருடனுக்கு பணிவுடன் வணக்கம் தெரிவித்தான்.
ராமர் படையிலிருந்து குதுாகல கூக்குரல் எழுவதை அறிந்த ராவணன் திடுக்கிட்டான். இந்திரஜித் விடுத்த நாகபாசம், வெற்று பாணமாகத்  தளர்ந்துவிட்டதை உணர்ந்தான். உடனே துாமராக்கன் என்ற அரக்கனை பெரும் படையுடன் யுத்த களத்துக்கு அனுப்பி வைத்தான்.
துாமராக்கனின் படைகளை வானர வீரர்கள் எதிர்கொள்ள அவனுடன் அனுமன் நேருக்கு நேர் போரிட்டான். துாமராக்கனிடம் போர் ஆயுதங்கள், அனுமனிடமோ பெரும் பாறைகள், பருமனான மரங்கள்தான்! ஆனாலும், துாமராக்கனின் வாள் வீச்சு, கதாயுத பிரயோகம், அம்புக் கணைகள் எல்லாவற்றிலிருந்தும் தப்பிய அனுமன் வெறும் பாறைகளாலேயே அவனைத் தாக்கி, தலையை நசுக்கிக் கொன்றான்.
அடுத்து வந்த அரக்கனான வஜ்ஜிரதமிஷ்டிரதன் அங்கதனாலும், அகம்பனன் அனுமனாலும், பிரகஸ்தன் நீலனாலும் வீழ்த்தப்பட்டனர்.
பிரதான தளபதிகளை ஒவ்வொருவராக இழந்த ராவணன், வெகுண்டு தானே நேரே போரில் இறங்கத் தீர்மானித்தான். தேரில் ஏறி விரைந்தான். அவனைப் பார்த்த ராமனின் கைகள் பரபரத்தன. விரைத்து எழுந்து நின்றான். அவனைப் பார்த்த லட்சுமணன், ‘அண்ணா, நீங்கள் அமைதியாக இருங்கள், நான் போய் அவனுடன் போரிடுகிறேன்’ என்று முன்வந்தான். ஆனால் உடனிருந்த அனுமனோ, ‘நீங்கள் இருவரும் எனக்கு அனுமதி கொடுங்கள், நானே மாய்த்துவிடுவேன் இவனை’ என்று சொல்லி ராவணனின் தேர் நோக்கிச் செல்ல முயன்றான். ஆனால் ராமன் அவர்களை தடுத்தான். ‘ராவணனைக் கொல்ல வேண்டியவன் தானே’ எனக் குறிப்பால் உணர்த்தினான்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar