|
வானவர்கோன் பழிதொலைத்த விளையாட்டும் கரிசாப மாய்த்த வாறும் மீனவர்கோன் காடெறிந்து புரங்கண்ட பெருஞ்சிறப்பும் மீன நோக்கி ஆனதடா தகையழல்வாய் அவதரித்துப் பாராண்ட வருளும் ஈசன் தானவளை மணஞ்செய்து முடிதரித்து மண்காத்த தகமைப்பாடும் (பரஞ்சோதி முனிவரின் ’’திருவிளையாடற் புராணம்)
இந்திரனின் பழியைத் தீர்த்த திருவிளையாடலும், வெள்ளை யானையின் சாபத்தைத் தீர்த்த தன்மையும், பாண்டியன் காட்டை அழித்து மதுரை நகரம் நிர்மாணித்த சிறப்பும், கயல் விழியாள் தடாதகை பிராட்டியார் வேள்வித் தீயில் அவதாரம் செய்து, இந்த பூமியை ஆட்சி செய்த கருணையும், சிவபெருமான் அவளை திருமணம் செய்து, முடி சூடிக்கொண்டு பார் ஆண்ட பெருமையும் காண்போம்.
மணவூரை தலைநகராகக் கொண்டு நீதி வழுவாமல் ஆட்சி புரிந்து வந்தான் குலசேகரப் பாண்டியன். அருகிலுள்ள கடம்பவனத்தில் எழுந்தளியிருந்த சோமசுந்தர பெருமானின் ஆணைப்படி, காட்டை அழித்து, சிற்ப, வாஸ்து, சாஸ்திர முறைப்படி பெருமானுக்கு ஒரு கோயில், மண்டபங்கள் அமைத்தான். அந்த கோயிலை நடுநாயகமாக வைத்து வீதிகள், அம்பலங்கள், பாடசாலைகள், தேரோடும் வீதிகள், சத்திரங்கள் முதலியவை அமைத்து மாபெரும் நகரமாக நிர்மாணிக்கப்பட்டது. நகரத்தை உருவாக்கிய பின் பாண்டிய மன்னன் அதை புனிதப்படுத்த சாந்தி செய்ய விரும்பினான். அவனது எண்ணத்தை அறிந்த சிவபெருமான், தன் சடாமுடியிலிருந்த சந்திர கலையின் அமுதத்தை சிறிது எடுத்து நகரின் மீது தெளித்தார். நகர் முழுவதும் துாய்மையாகிவிட்டது. சிவபெருமான் அருளிய மதுரமான அமுதத்தால் புனிதமான அந்நகரம், ‘மதுராபுரி’ என வழங்கலாயிற்று.
சிவாகம விதிப்படி ஆறுகால பூஜைகள் முறைப்படி நடைபெற சாத்திரங்கள் நன்கு அறிந்த சிவாச்சாரியார்களை அழைத்து குடியேற்றினான் குலசேகர பாண்டியன். மதுரையில் வேதநெறி, தர்மநெறி, சிவநெறிகள் தழைத்தோங்கின. நீதி வழுவாமல் ஆட்சி செய்த குலசேகர பாண்டியன், தன் மகன் மலையத்துவஜனிடம் அரசை ஒப்படைத்துவிட்டு, சிவலோகப் பிராப்தி அடைந்தான். மலையத்துவஜ பாண்டியனின் ஆட்சியில் மக்களுக்கு குறை என்பதே இல்லை. ஆனால் அவனுக்கு ஒரு குறை இருந்தது. சோழ நாட்டு அரசன் சூரசேனனின் மகள் காஞ்சனமாலையை மணம் புரிந்து இல்வாழ்க்கை நடத்தி வந்த மன்னனுக்கு புத்திரப்பேறு வாய்க்கவில்லை. தனக்கு பிறகு நாட்டை ஆள வம்சமில்லாமல் போய்விடுமோ என விசனப்பட்டுக் கொண்டிருந்த அரசனை அறவோர் அணுகி, நுாறு அஸ்வமேத யாகம் செய்யும்படி அறிவுறுத்தினர். அதை தலைமேல் ஏற்று மலையத்துவஜன், உடனே அசுவமேத யாகம் செய்ய ஏற்பாடுகளை மேற்கொண்டான். யாகசாலை அமைக்கப்பட்டது. யாகம் செய்வதில் நிபுணர்களான அந்தணர்களை அழைத்து வந்து அவர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுத்தான். பலநாட்டு அரசர்கள், கல்வி கேள்விகளில் சிறந்த புலவர்கள், கலை நாட்டிய விற்பன்னர்கள், பல துறைகளில் வல்ல பண்டிதர்கள் அனைவருக்கும் அழைப்புகள் விடுத்தான். வருபவர்களுக்கு தகுதிக்கேற்ப தங்குமிடம், உணவு, ஆடை ஆபரணங்கள் முதலியவை குறைவில்லாமல் வழங்க ஏற்பாடுகள் செய்தான். நாட்டு மக்கள் அனைவருக்கும் ஏராளமான பொருட்களை வாரி வழங்கினான். வருவோர்க்கெல்லாம் எந்நேரமும் அறுசுவை உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பாண்டிய நாட்டு மக்கள், மன்னவன் செய்யும் யாகத்தில் மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர். யாகம் ஆரம்பமாகியது. எந்த இடைஞ்சலும் இல்லாமல் தொண்ணுற்றொம்பது யாகங்கள் முடித்து விட்டான். இன்னும் ஒன்றுதான் பாக்கி. இப்படி இருக்கையில், தேவர்களுக்கு அரசனான தேவேந்திரன் மனக் கலக்கம் அடைந்தான். ஏனெனில் மலையத்துவஜன் நுாறு யாகங்களை வெற்றிகரமாக நடத்திவிட்டால், அவனுக்கு இந்திர பதவி கிடைத்துவிடும். தன் பதவிக்கு ஆபத்து வராமல் தடுக்க என்ன செய்வது என்று யோசித்து, இந்திரன் மலையத்துவஜனைக் காண மதுரைக்கு வந்தான். இந்திரனே வந்ததால் பெரு மகிழ்ச்சி அடைந்த மலையத்துவஜன், அவனை முறைப்படி வரவேற்று யாகசாலையில் தக்க இருக்கையில் அமர்த்தி என்ன வேண்டும் என்று கைகூப்பி வேண்டி கேட்டான். இந்திரன், ‘‘மன்னவனே! உன்னுடைய யாகம் சிறப்பாக நடப்பது மகிழ்ச்சி. உனக்கு வேண்டியது மக்கட்பேறுதானே? அதற்கு நீ புத்திர காமேட்டி யாகம் செய்தால் போதும். இத்துடன் அசுவமேத யாகத்தை நிறுத்திவிட்டு, உடனே புத்திரகாமேட்டி யாகம் செய். உனக்கு மக்கட்பேறு உண்டாகும்’’ என்றான். மலையத்துவஜன் மகிழ்ச்சியுடன், ‘‘தேவேந்திரா! உன் ஆணைக்கு மாற்று எது? நான் இதுவரை தொண்ணுற்று ஒன்பது அசுவமேதங்கள் முடித்து விட்டேன். அதோடு நிறுத்திவிட்டு, தாங்கள் சொன்னபடி உடனே புத்திரகாமேட்டி யாகம் தொடங்குகிறேன்’’ என்றான். ‘‘உன் எண்ணம் பூர்த்தி அடையும்’’ என்று இந்திரன் மன்னனை வாழ்த்திவிட்டு விடை பெற்றான். இந்திரன் சொன்னபடி புத்திரகாமேட்டி யாகம் ஆரம்பித்தான் மலையத்துவஜன். வேள்விச் சாலையிலிருந்து எழுந்த புகை எல்லாத்திசைகளிலும் பரவி ஒரு போர்வை போல் மறைக்க, குடத்திலுள்ள நெய், பொரி, சமித்துகளால் ஆகுதி செய்தான் மலையத்துவஜன். அக்னி குண்டம் நன்றாக கொழுந்து விட்டு எரிந்தது. அப்பொழுது மன்னனின் வலதுதோள் துடித்தது. மனைவி காஞ்சனமாலையின் தனங்களில் பால் சொரிந்தது. அவள் இடக்கண் துடித்தது. இந்த உலகம் மட்டுமல்ல ஏழு உலகில் உள்ளவர்களும் மகிழ்ச்சி அடைய, பொறாமை முதலிய பாவங்கள் ஒழிய, அறம் களி கூர, தேவ துந்துபிகள் அனைத்து திசைகளிலும் ஒலிக்க, மைதீட்டிய கண்களை உடைய அரம்பையர் ஆட, தீந்தமிழ் வழங்கும் பாண்டிய நாடு சிறந்தோங்க, தீக்கடவுள் நோற்ற பயனை அடையும்படி, வேள்விக்குண்டத்தில் அப்பொழுது அலர்ந்த தாமரை மலரை ஏந்தி ஒரு கொடி முளைத்து மேலே எழுவது போல இனிய அமுதம் மார்பின் வழியாக ஒழுகுவது போல் முத்து மாலை ஒளிவிட, பவள மாலை சாயல் வீச, சிறிய இடையை மெல்லிய சிறுதுகில் சூழ்ந்திருக்க, மேகலை ஒலிக்க, புன்னகை வீசும் முத்துப்பற்கள் வெளிப்பட, அகிலத்தையே காக்கும் அன்னை, மூன்று முலைகளுடன், மூன்று வயது குழந்தையாக தோன்றினாள். இம்மை மறுமை இன்பங்களை அருளும் ஜகன்மாதா உமாமகேஸ்வரி குழந்தை வடிவாக சிறிய மெல்லிய திருவடிகளில் சிலம்பும் சதங்கையும் சேர்ந்து ஒலிக்க, புன்னகை வதனத்துடன், அசைந்து அசைந்து தளர் நடையாக சென்று, பாண்டிய அரசி காஞ்சனமாலை முற்பிறவியிலும், இப்பிறவியிலும் செய்த ஏராளமான புண்ணிய காரியங்களின் பலனாக, அவள் மடிமீது சென்று அமர்ந்தாள். எந்தப் பெண்ணுக்குமே கிடைக்க முடியாத பாக்கியம். கர்ப்பகால அவஸ்தைகள் எதுவுமே இல்லாமல் பெற்ற மாபெரும் நிதியை வாரியெடுத்து மார்போடு அணைத்து, உச்சி மோந்து, முத்தமிட்டாள். வேதங்களுக்கெல்லாம் பொருளாகி, அவைகளை தாண்டி நிற்கின்ற ஒப்பற்ற தலைவியான பராசக்தியை தன் திருமகளாய் பெற மலையத்துவஜ பாண்டியன் முற்பிறவியில் செய்த தவம் என்னவோ? ஞானமே திருவுருவாகிய உமையவள், யாவர்க்கும் புலனாகும்படி ஒரு பெண்மகவாய் அவதரித்துள்ள அருளையும், தன் மனைவியின் பெற்றுள்ள பெரும் பேற்றையும் உணராமல், பாண்டிய மன்னன் மனத்தின்கண் துயருற்றான். ஏன்? பிள்ளையில்லாமல் வருந்தி, அறிய தவத்தையும் யாகத்தையும் செய்தும் ஒரு பெண்மகவுதான் கிட்ட வேண்டுமா? அப்படி வந்துற்ற பெண்ணும் இயற்கைக்கு மாறாக பார்த்தவர் பரிகசிக்கும்படி மூன்றுதனங்களுடன் இருக்க நான் செய்த தவறு என்னவோ? என்று வருத்தத்தில் இருக்கும்பொழுது, ‘‘மன்னவா! நீ உன்னுடைய திருமகளுக்கு, ஒரு புதல்வனுக்கு செய்வது போலவே சடங்குகள் அனைத்தையும் வேதம் சொன்ன முறையில் செய்து, தடாதகை என்ற பெயர் சூட்டி தக்க காலத்தில் மகுடம் சூட்டுவாய். அவளுக்கு தக்க கணவன் வரும் நேரத்தில், அவளுடைய மூன்றாவது தனம் மறைந்துவிடும். ஆகையால் மனம் வருந்த வேண்டாம்’’ என்று ஆகாயத்திலிருந்து ஒரு திருவாக்கு எழுந்தது. அசரீரி வாக்கைக் கேட்ட மன்னன் கவலை நீங்கி மகிழ்ச்சியடைந்தான். கண்களில் நீர் சுரக்க, கடவுளைத் துதித்து, வேள்வியை முடித்துக்கொண்டு, இதயக் களிப்புடன், அரண்மனையை அடைந்தான். மனத்தின் கண் மகிழ்ச்சி தோன்ற மணி மண்டபம் புகுந்து, அரியணையில் அமர்ந்தான். மகள் கிடைத்த மகிழ்ச்சியை நாடெங்கும் கொண்டாட ஆணை பிறப்பித்தான். தான தருமங்கள் செய்தான். சோமசுந்தர பெருமான் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடக்க உத்தரவிட்டான். சிறை கைதிகள் அனைவரையும் விடுதலை செய்தான். ஏழாண்டுகளுக்கு மக்கள் வரி செலுத்த வேண்டியதில்லை என முரசறிவித்தான். சிற்றரசர்கள் எவரும் கப்பம் கட்ட வேண்டியதில்லை என்றும் ஆணை பிறப்பித்தான். தான் படையெடுத்து வெற்றி கொண்டு சிறை பிடித்து வந்த அரசர்கள் அனைவரையும் விடுதலை செய்து, அவர்களுக்கு யானைகள், குதிரைகள், தேர்கள், மற்றும் பெரும் பொருள்களும், கொடுத்து அவர்கள் நாட்டையும் அவர்களுக்கே கொடுத்து அனுப்பி வைத்தான்.
|
|
|
|