|
சுதீவர் என்னும் முனிவர் காட்டில் தவமிருந்தார். அந்த வழியாக இரு காட்டுவாசிகள் வந்த போது திடீரென ஒருவர் மயங்கி விழவே, மற்றொருவர் முனிவரை எழுப்பி உதவி கேட்டார். தவம் கலைந்ததால் கோபித்த முனிவர், எழுப்பியவரை சாம்பலாகும்படி சபிக்க அவரும் எரிந்து சாம்பலானார். மயக்கம் தெளிந்து எழுந்த முதலாமவர் தன் நண்பனின் நிலை கண்டு வருந்தினார். இதற்குள் முனிவரின் கோபம் தணிய அவரிடம் விமோசனம் அளிக்குமாறு வேண்டினார். சபிக்கத்தான் தெரியுமே தவிர மீட்கத் தெரியாது’’ என்று சொல்லி நடந்தார். அதன் பின் முனிவர் தன் குருநாதரை சந்தித்து நடந்ததைச் சொல்லி வருந்தினார். ‘‘விஷ்ணு புரத்தில் மாதவன் என்றொரு புண்ணியசாலி இருக்கிறார். இல்லறத் துறவியான அவரிடம் சென்றால் உனக்குத் தீர்வு கிடைக்கும்’’ என்றார். விஷ்ணுபுரத்தை அடைந்த அவர், ‘‘என் குருநாதர் சுசாந்தரால் எவந்ததாகச் சொல்லி நடந்ததை விவரித்தார். இறுதியாக இந்தளவு புண்ணியத்தை தாங்கள் எப்படி அடைந்தீர்கள்?’’ எனக் கேட்டார். ‘‘அதிகாலையில் கண் விழித்து தினசரி கடமையைச் செய்யத் தொடங்குவேன். முடிந்த உதவியை யார் கேட்டாலும் மறுக்க மாட்டேன். எண்ணம், சொல், செயல்களால் எப்போதும் துாய்மையாக வாழ்கிறேன்’’ என்றார் மாதவன். ‘‘பூஜை, தவத்தில் எல்லாம் மனிதனுக்கு அவசியம் இல்லையா...’’ எனக் கேட்டார் முனிவர். ‘‘நல்லெண்ணத்துடன் பிறருக்கு உதவுவதும் கடவுளுக்குச் செய்யும் பூஜையே’’ என்றார் மாதவன். ‘‘அப்படியானால்... தவம் செய்வதை வீணான வேலை என்கிறீர்களா?’’ என்று சொல்லி எழுந்த முனிவர், ‘‘ தவ வாழ்வு வேண்டாம் என இளக்காரமாக கருதும் உங்களுக்கு கண் பார்வை ஒழியட்டும்’’ என சாபமிட்டார். ஆனால் அது பலிக்கவில்லை. செய்வதறியாமல் திகைத்தார் முனிவர். ‘‘பலருக்கும் சாபம் கொடுத்ததால் தவசக்தியை இழந்து விட்டீர்கள். அதனால் என் புண்ணியத்தின் ஒரு பகுதியை இப்போது தருகிறேன். அதன் மூலம் மீண்டும் தவசக்தியை அடைவீர்கள்’’ என சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார் மாதவன். வெட்கிப் போன முனிவர் தலை கவிழ்ந்தபடி புறப்பட்டார். குருநாதர் சுசாந்தரிடம் நடந்ததைச் சொல்லி அழுதார். ‘‘ நல்லெண்ணமும், உதவும் குணமும் கொண்டவர்கள் தவம் செய்யும் முனிவர்களை விட சிறந்தவர்கள். அவர்களுக்கு ஒருபோதும் பலம் குறையாது. மேலும் மேலும் புண்ணியமே சேரும்’’ என விளக்கினார் சுசாந்தர். உண்மையை உணர்ந்த முனிவர், ‘இனி எப்போதும் கோபப்பட மாட்டேன்’ என உறுதி எடுத்தார்.
|
|
|
|