|
இப்படி திருமண சடங்குகள் அனைத்தும் மங்களகரமாக நிறைவேறியதும், எம்பெருமானான சோமசுந்தரர் நான்முகன், திருமால், மன்னர்கள், மகரிஷிகள், தேவர்கள் அனைவரையும் ‘அமுது செய்ய வருக’ என்று திருவாய் மலர்ந்தருளினார். அந்த சமயம் வியாக்ரபாத மகரிஷியும், பதஞ்சலி மகரிஷியும்,‘‘பெருமானே! பொன்னம்பலத்தில் தாங்கள் ஆடிய திருநடனத்தை கண்ட பின்பே நாங்கள் உணவு அருந்துவதாக ஒரு நியமம்’’ என்றனர். பரமேஸ்வரன்,‘‘அதே நடனத்தை இங்கே மதுரையம்பதியில் ஆடிக்காட்டுவோம்’’ என்று அருள்செய்தார். உடனே நந்திகேசர் மத்தளம் கொட்ட, திருமால் இடக்கை முழக்க, தும்புருவும் நாரதரும் இசை பாட, சரஸ்வதி தேவி வீணை இசைக்க, பிரம்மன் யாழினைத் தடவி சாம கீதம் பாட, வெள்ளியம்பலத்தில் தேவர்கள் பூமழை பொழிய, ஒரு புறம் ஒதுங்கி நிற்கும் கயல் போன்ற கண்களை உடைய உமாதேவியின் பால்வைத்த பார்வையுடன், கங்கையாற்றின் ஒலியும், கொன்றை மாலையில் உள்ள வண்டுகளின் ஓசையும், மங்களமான மத்தள ஒலியும், வேத மறை ஒலியும், சிவந்த கைகளில் அசைகின்ற தீயின் ஒலியும், திருவடியில் உள்ள சிலம்பின் ஒலியும், எங்கும் பரவி, அடியார்கள் செவிகளில் அமுதத்தை பொழிய சோமசுந்தரேஸ்வரர் தன் திருவடி துாக்கி ஆடியருளியதை பதஞ்சலி, வியாக்ரபாதர் இருவரும் தலைமேல் கைகூப்பி தரிசித்து, வீழ்ந்து வணங்கினார்கள். அங்கிருந்த ஏனைய முனிவர்களும், கந்தர்வர்களும், தேவர்களும், மவுன நிலையிலுள்ள யோகிகளும், திருமணம் காண வந்த மற்ற மக்களும் அந்த திருக்கூத்தை காணும் பாக்கியத்தைப் பெற்றார்கள். பிறகு சுந்தரேசர் இரு முனிவர்களையும் நோக்கி, உங்களுக்கு வேறு ஏதாவது விருப்பம் உண்டா?’’ என்று வினவ, ‘‘பெருமானே! இந்த தெய்வத் திருநடனம் எப்பொழுதும் இந்த வெள்ளியம்பலத்துள்ளே நிலைத்து இருக்க அருள்புரிந்திடுக’’ என்று வேண்டினர். பெருமானும் ‘‘செந்தமிழுக்கு இருப்பிடமான இந்த பாண்டி நாடு செய்த தவம் கருதி, நீங்கள் வேண்டிய வரத்தை அளித்தோம்’’ என்று திருவாய் மலர்ந்தருளினார். மார்கழி திருவாதிரை அன்று பொற்றாமரையில் நீராடி ஐந்தெழுத்து மந்திரத்தை நுாற்றெட்டு தடவை மனப்பூர்வமாக உச்சரிப்பவர்க்கு அனைத்து நன்மைகளும் வந்து கூடும். அதன் பிறகு, திருமணத்திற்கு வந்திருந்த தேவர்கள், அரசர்கள், முனிவர்கள் அனைவருக்கும் பொன்னாலான தட்டுகளில் சுவை மிக்க உணவு அன்னை தடாதகை மேற்பார்வையில் பரிமாறி உண்பித்து, பிறகு அனைவருக்கும் உயர்ந்த ஆடைகள், அணிகலன்கள், வெற்றிலை, பாக்கு, தாம்பூலம், முதலிய அனைத்தையும் கொடுத்து வழி அனுப்பிய பிறகு, சற்று ஆசுவாசமாக ஆசனத்தில் தேவி அமர்ந்திருந்தாள். அந்த சமயம், மடைப்பள்ளியிலிருந்து சமையல் செய்தவர்கள் வந்து தேவியை வணங்கி, ‘‘இவ்வளவு பேர்கள் உணவருந்திய பிறகும், நாம் செய்து வைத்த உணவில் ஆயிரத்தில் ஒரு பங்குதான் செல்வழிந்துள்ளது. இன்னும் பட்சணங்களும், சமைத்து வைக்கப்பட்ட உணவுகளும் அப்படியே உள்ளன என்று சொன்னார்கள். இதைக் கேட்ட தடாதகை அன்னை, உடனே சிவபெருமானிடம் சென்று,‘‘ஐயனே! முப்பது முக்கோடி தேவகணங்களுடன் தேவரீர் இங்கு எழுந்தருளுவதை எண்ணி, ஏராளமாக இன்னமுதை சமைத்து ஏற்பாடுகள் செய்து வைத்திருந்தோம். வந்திருந்த அனைவருக்கும் மனமார, உணவு படைத்த பிறகும் மிகுந்திருக்கும் உணவு மலைபோல் குவிந்து கிடக்கிறது. என்ன செய்வதென்று தெரியவில்லை. இதைக் கேட்ட சோமசுந்தர பெருமான், ஒரு திருவிளையாடல் புரியலாம் என்று எண்ணி, ‘‘அப்படியா! எனக்கு திருக்குடை ஏந்தி வரும் குண்டோதரன் இதோ இருக்கிறான். அவன் இன்னும் உணவருந்தவில்லை என நினைக்கிறேன். அவனை அழைத்துப்போய் சாப்பிடச் சொல். அவன் உண்டபிறகு மற்றவர்களை அனுப்பி வைக்கிறேன்’’ என்றார். பிராட்டியார் பெருமானை வணங்கி, குண்டோதரனை அழைத்துக் கொண்டு உணவு பரிமாறும் மண்டபத்தில் அமரச் செய்து, பரிசாரகர்களை அழைத்து அவனுக்கு உணவிடச் சொன்னாள். கடும் பசியிலிருந்த குண்டோதரனும் ஆவலுடன் இலை முன் அமர்ந்தான். காய்கறிகள் பரிமாறப்பட்டன. குண்டோதரனுக்கு பசியான பசி. அன்னம் வருவதற்குள் காய்கறிகளை தின்று விட்டான். அன்னம் வந்தது. அடுத்த பதார்த்தம் வருவதற்கு முன்பே அந்த அன்னத்தை சாப்பிட்டுவிட்டான். அடுத்த தட்டு அன்னம் வந்தது. அதுவும் வந்த அடுத்த நொடியே மறைந்து விட்டது. இப்படியே தட்டு தட்டாக அன்னம் வர குண்டோதரன் அதை கண்மூடி திறப்பதற்குள் சாப்பிட்டுவிடுகிறான். சமையலறையில் குவிந்திருந்த அன்னம் முழுவதும் காலி. பிறகு இருந்த பதார்த்தங்களை பரிமாறினார்கள். அவைகள் முழுவதையும் சாப்பிட்டு தீர்த்தான் அவன். சமைத்து வைத்திருந்த பொருட்கள் அனைத்தையும் சாப்பிட்டுவிட்டு, இன்னும் பசி தீராமல் மேலும் தவித்துக் கொண்டிருந்தான் குண்டோதரன். சமையல்காரர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. மூட்டை மூட்டையாய் கிடந்த பழ வகைகளை கொண்டு வந்து குண்டோதரன் முன் வைத்தனர். கண் மூடி கண் திறப்பதற்குள் அவன் அனைத்தையும் சாப்பிட்டு விட்டான். கட்டுக் கட்டாக கரும்பு, குவிந்து கிடந்த தேங்காய், அனைத்தையும் சாப்பிட்டான். என்ன செய்வதென தெரியாத பரிசாரகர்கள் அடுத்து ஒரு அண்டாவில் பால் கொண்டு வைத்தார்கள். அது போதவில்லை அவனுக்கு. பசி அடங்கவில்லை. உள்ளேயிருந்த பால், தயிர், தேன், நெய், வெண்ணெய், பச்சைக் காய்கறிகள் அனைத்தும் காலி. ஒரு வழியாய் பசி தீர்ந்த குண்டோதரனுக்கு, அளவில்லாத தாகம் எடுத்தது. நீர் நிலைகளைத் தேடிச் சென்று அங்கிருந்த கிணறு, ஓடைகள், குளங்களில் இருந்த நீர் அனைத்தையும் அருந்தியும், அவனுடைய தாகம் தீரவில்லை. சிவபெருமான் திருவடிகளில் வீழ்ந்தான். உடனே பெருமான் தனது திருமுடியில் உள்ள கங்காதேவியை நோக்கி, ‘‘இந்த மதுரை நகரின் வெளிப்பக்கமாக ஒரு நதியாக வருவாயாக’’ என்று ஆணையிட்டார். உடனே கங்காதேவி,‘‘ஆணையை ஏற்கிறேன் பிரபு. ஒரு வேண்டுகோள், முன்பு பகீரதனுக்காக நான் நதியாக வந்த பொழுது,‘என்னில் மூழ்குபவர்களின் பாவங்களும் குற்றங்களும் அழிந்து விடும்’ என்று ஒரு வரம் அளித்தீர்கள். அதுபோலவே இப்பொழுது நான் ஒரு ஆறாக வருகிறேன். என்னில் மூழ்குபவர்கள் பாவங்கள் அழிந்து, தங்களிடம் பக்தியும், கல்வியும், ஞானமும் பெறும்படி அருள் புரியவேண்டும்’’. சிவனும்,‘‘அப்படியே ஆகட்டும்’’ என்றருளினார். நதி உருவம் கொண்டு கங்கை ஒரு ஆறாக அங்கே பாய்ந்து பொங்கி பெருகி ஆரவாரத்துடன் வந்தாள். சிவபெருமான் அதைக்கண்டு குண்டோதரனை அந்த நதியிடம் விட்டு,‘‘வேண்டிய அளவு நீர் அருந்தி உன் தாகத்தை தீர்த்துக் கொள்’’ என்று உத்தரவிட்டார். குண்டோதரனும் அந்த நதி நீரை வேண்டுமளவு அருந்தி, மகிழ்ச்சியுடன் பெருமானின் காலில் வீழ்ந்து அவர் மீது ஒரு பதிகம் பாடினான். தனக்கு குடை பிடிக்கிறவன் பாடிய பாடலை கேட்டு மகிழ்ந்த சிவபெருமான், குண்டோதரனை பூத கணங்களுக்கு தலைவனாக நியமனம் செய்தருளினார். அதன்பின் சோமசுந்தரர், தடாதகை தேவியோடு பாண்டிய நாட்டை ஆண்டு கொண்டிருந்தார். குண்டோதரனின் தாகம் தீர்க்க வந்த அந்த ஆறு வையை என வழங்கலாயிற்று. சிவபெருமானின் செஞ்சடையிலிருந்து வந்தததால், சிவகங்கை என்றும், சிவஞான தீர்த்தம் என்றும் பெயர் பெற்றது. வேகமாக வந்ததால் வேகவதி என்றும், மதுரையம்பதியை சுற்றி மாலை போல வந்ததால் கிருதமாலை என்றும் பெயருண்டு. இவ்வாறாக மதுரையம்பதியை சர்வேஸ்வரனான சொக்கநாதர் மீனாட்சியம்மையுடன் இருந்து செங்கோல் செலுத்தி, மக்கள் மீது அருள்பரிபாலித்து, காக்கிறார். மீனாட்சி திருக்கல்யாணத்தை கேட்பவர்களும் படிப்பவர்களும் நல்ல உடல்நலம், , குன்றாத செல்வம்ல உயர்ந்த ஞானம் பெற்று சுகமாக வாழ்வர். மங்களம் மங்களம் மங்களம்
|
|
|
|