|
பழங்காலத்தில் கள்ளகுறிச்சி மாவட்டம் திருக்கோவிலுாரை தலைமையாகக் கொண்டு சேதி நாடு என்ற சிற்றரசு இருந்தது. இச்சிற்றரசை மலையமான் என்ற குலத்தினர் ஆண்டு வந்தனர். இவர்கள் சிவபெருமானை வழிவழியாக வழிபட்டு வந்தனர். இக்குலத்தில் உதித்தவர்தான் மெய்ப்பொருள் நாயனார். மன்னராக இருந்தாலும் பெரும் சிவபக்தராக இருந்து அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரானவர். திருநீறு பூசி, ருத்திராட்சம் அணிந்த சிவனடியார்களே உண்மையான மெய்ப்பொருள் என்று எண்ணிய சிவநேயச்செல்வர். இப்படி பக்தியோடு வாழ்ந்து வந்தவருக்கு ஒரு சோதனை ஏற்பட்டது. இவருடன் பலமுறை போரிட்டு தோற்ற, முத்தநாதன் என்ற அரசன் இவரது அரண்மனைக்கு வந்தான். அதுவும் திருநீறு பூசி, ருத்திராட்சங்களை அணிந்து சிவனடியாராக பொய் வேடமிட்டு வந்தான். கையில் ஓலைச்சுவடியும், அதில் பிறர் அறியாதவாறு வாள் ஒன்றையும் மறைத்து வைத்திருந்தான். அரசர் உறங்கும் நேரம் என்பதால், தத்தன் என்னும் மெய்க்காப்பாளன் அவனை உள்ளே அனுமதிக்கவில்லை. இருந்தாலும் தடையை மீறி, ‘சிவாயநம’ என்று கூறிக்கொண்டே உள்ளே சென்றான். பதறியடித்து கண்விழித்த அரசர்அடியாரைக் கண்டதும் வணங்கினார். ‘‘சிவபெருமான் அருளிய ஆகமநுால் என்னிடம் உள்ளது. அதை உமக்குக்கூறி மோட்ச பதவியை அளிக்கவே நான் வந்துள்ளேன். நீங்கள் மட்டும் உள்ளே இருந்தால் நல்லது’’ என்றார் அடியார். இதைக் கேட்ட அரசரது முகம் சூரியனைக் கண்ட தாமரை போல பூரித்தது. அனைவரும் வெளியே சென்றனர். பின் பணிவுடன் அரசர், ‘இவ்டியேனுக்கு அருள் செய்தல் வேண்டும்’ என்று அடியாரை வணங்கினார். அப்போது அடியார் வேடத்தில் இருந்த முத்தநாதன் தான் நினைத்தபடியே செய்தான். ரத்த வெள்ளத்தில் மிதந்த அந்நிலையிலும் அவர், ‘‘மெய்த்தவ வேடமே மெய்ப்பொருள்’’ என்று கூறி தொழுதார். சத்தம் கேட்டு வந்த மெய்க்காப்பாளன், அவனைக் கொல்ல வாளை உருவினான். அப்போது அரசர், ‘‘தத்தா! இவர் நம்மைச் சேர்ந்தவர். இவ்வடியாருக்கு எந்த துன்பமும் நேராவண்ணம் நம் எல்லை வரைக் கொண்டுபோய் சேர்ப்பது உன் கடமை. இதுவே என் ஆணை’’ என்றார். இச்செய்தி நாடெங்கும் பரவியது. சிறிது நேரத்திற்குள் அரசரின் ஆணையை நிறைவேற்றி அரண்மனைக்கு திரும்பினான் தத்தன். அவனைப் பார்த்ததும் உயிர் துடித்துக்கொண்டிருந்த அரசர், “நீ எனக்கு பேருதவி செய்துள்ளாய்’’ என்று கூறி தலையைச் சாய்த்தார். அப்போது அங்கு பேரொளி பிறந்தது. ரிஷப வாகனத்தில் பார்வதியுடன் எழுந்தருளிய சிவபெருமான், அவரை உயிர்ப்பிக்கச் செய்தார்.
|
|
|
|