|
முன்னால் விஸ்வாமித்திரர் நடந்து செல்ல, ராமனும் லட்சுமணனும் அவரைப் பின் தொடர்ந்தனர். மூவரும் சரயு நதிக்கரையை அடைந்தார்கள். முனிவர் ராமனைப் பார்த்து, ‘‘ராமா! நான் உனக்கு ‘பலா, அதிபலா’ என்ற மந்திரங்களை உபதேசிக்கிறேன். இதன் பலனாக பசி, தாகம், களைப்பு, காய்ச்சல் எதுவும் ஏற்படாது. உறங்கி கொண்டிருக்கும் பொழுதோ அல்லது கவனக் குறைவாக இருக்கும் பொழுதோ உன்னை யாரும் தாக்க முடியாது. எல்லை இல்லாத புகழ் உன்னை வந்து சேரும்’ என்றார். உடனே ராமனும் லட்சுமணனும் சரயு நதியில் தங்களை துாய்மைப்படுத்திக்கொண்டு முனிவரிடம் இரண்டு மந்திரங்களையும் ஏற்றுக் கொண்டனர். நம் துரதிர்ஷ்டம்! இந்த மந்திரங்கள் ராமனோடு போய்விட்டது. இப்பொழுது இல்லை. இரவுப் பொழுதை சரயு நதி கரையிலேயே கழித்தார்கள். பொழுது புலர்ந்தது. விஸ்வாமித்திரர் பார்க்கிறார். தாயின் அரவணைப்பில் அம்ச துாளிகா மஞ்சத்தில் படுத்திருக்க வேண்டிய ராமன், சரயு நதிக்கரையில் மண் தரையில் படுத்திருக்கிறான். பிறகு ராமனை எழுப்புகிறார். ராமன் லட்சுமணன் விஸ்வாமித்திரர் மூவரும் புறப்படுகிறார்கள். வழியில் தாடகை வதம் முடிந்ததும் அந்த வனத்திலே அன்று இரவை கழிக்கிறார்கள். மறுநாள் காலை நீராடி ஜப தபங்களை முடித்த பின் முனிவர் ராமனை அழைத்து, ‘‘ராமா! உனக்கு மங்களம் உண்டாகட்டும். நான் இப்பொழுது மிக மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். மிக்க மன நிறைவுடன், நான் என்னுடைய தவ ஆற்றலால் பெற்றுள்ள பலவகையான அஸ்திரங்களை உனக்கு கொடுக்க விரும்புகிறேன். அவைகளை பெற உன்னைவிட தகுதியானவர்கள் எவருமில்லை. அந்த அஸ்திரங்களை கொண்டு தேவ, கந்தர்வ, அசுரர் கூட்டத்தினரை எதிர்த்து எளிதில் வெற்றி கொள்ளலாம். பெற்றுக்கொள்’’ என்று கூறி மகா சக்திமிக்க அஸ்திரங்களை அழைக்கும் முறை, எய்யும் முறை, திருப்பி அனுப்பும் முறை, அனைத்தும் ராமனுக்கு உபதேசித்தார். ராமன் அந்த உபதேசங்களை முறைப்படி பெற்றுக்கொண்டான். உடனே அந்தந்த அஸ்திரங்களை உரிய தேவதைகள் எதிரே வந்து ராமனைத் தொழுது, ‘‘ராகவா! நாங்கள் அனைவரும் தங்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள். தங்கள் பணியாளர்கள். என்ன ஆணையிடுகிறீர்களோ அவ்வாறே செய்து முடிப்போம்’’ என்றனர். ராமனும் மனம் மகிழ்ந்து அவர்களை கையால் தொட்டு அங்கீகரித்து, ‘‘நான் மனதால் நினைக்கும்பொழுது வாருங்கள்’’ என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தான். பிறகு அனைவரும் விஸ்வாமித்திரரின் இருப்பிடமான சித்தாசிரமத்துக்கு சென்றார்கள். அங்கே அவர் யாக தீக்ஷை ஏற்றார். யாகம் ஆரம்பமாகி ஆறு நாட்கள் நடந்தன. ஆறாவது கடைசி நாளில் தான் மாரீசன், சுபாகு போன்ற அரக்கர்கள் வந்து வேள்வியை அழிக்க முயன்றார்கள். ராமனும் லட்சுமணனும் போர் செய்து அவர்களை அழித்தார்கள். சுபாகு மாண்டான். ராமன், மாரீசனை பல யோஜனைகளுக்கு அப்பால் உள்ள கடலில் தன்னுடைய அம்பால் கொண்டு சென்று தள்ளினான். வேள்வி இடையூறின்றி முடிந்தது. விஸ்வாமித்திரர் மகிழ்ச்சியுடன் ராம லட்சுமணர்களை பாராட்டி புகழ்ந்தார். மறுநாள் காலையில் நீராடி, நியமங்களை முடித்து ராமனும், லட்சுமணனும் முனிவரிடம் வந்து, ‘‘இனி எங்கள் பணி என்ன’’ என்று வணக்கத்துடன் வினவினார்கள். அதைக் கேட்ட முனிவர், ‘‘ராமா, எப்பொழுதும் அறவழியையே பின்பற்றி நடக்கும் விதேக நாட்டு மன்னன் ஜனகன் ஒரு யாகம் செய்கிறான். இப்பொழுது அந்த யாகத்தை காண நாம் அவன் தலைநகர் மிதிலைக்கு செல்லலாம். இன்னொரு முக்கிய விஷயம். அங்கே மிதிலையில் ஜனக மன்னனிடம் ஒரு வில் உள்ளது. நிகரற்ற பலமும், அற்புத ஒளியும், கொண்ட அந்த வில்லை பார்க்கலாம். அந்த வில்லை எவராலும் நாணேற்ற முடியவில்லை. பேராற்றல் படைத்த பல அரச குமாரர்கள் முயன்று இதுவரை தோல்வி தான் அடைந்துள்ளனர். நீ அந்த வில்லைக் காணலாம்’’ என்று சொன்னார். அந்த வில்லை நாணேற்றும் வீரனுக்குத்தான் இணையில்லாத அழகியாகிய தன் மகள் சீதாதேவியை மணமுடித்து தருவேன் என்ற ஜனகனின் நிபந்தனையை முனிவர் சொல்லாமல் விட்டுவிட்டார். ராமன் மகிழ்ச்சியுடன் புறப்பட ஆயத்தமானான். சற்று அந்த வில்லின் வரலாறையும் சீதாதேவியின் பிறப்பு வளர்ப்பும் தெரிந்துகொண்டு மேலே செல்லலாம். சீதை: மிதிலாபுரியை தலைநகராகக் கொண்டு விதேக நாட்டை ஆண்டு வந்தவன் ஜனகன். பெரிய தத்துவஞானி. மெத்தப் படித்தவர். அரசனாக இருந்தாலும் ஒரு பற்றற்ற மனநிலை உள்ளவர். இவர் ஒரு சமயம் யாகம் செய்ய பூமியை உழுதார். அப்போது ஏர்க்காலில் எதோ தட்டுப்பட்டது. பார்த்தால் ஒரு பெட்டி. பெட்டியை திறந்தால் ஒரு அழகிய பெண் குழந்தை. மிகவும் மனமகிழ்ந்த ஜனகன் அந்தக் குழந்தைக்கு சீதை என்று பெயர் சூட்டி அரண்மனையில் அரசகுமாரியைப் போல் வளர்த்து வந்தான். சீதைக்கு மணமுடிக்கும் வயது வந்தது. மிகுந்த வனப்புடன் எங்கும் காண முடியாத, உவமைக்கு எட்டாத அழகு படைத்தவள் சீதை. இவளை அடைய பல அரசகுமாரர்கள் போட்டி. ஆனால், சீதையை மணக்க ஜனகன் ஒரு நிபந்தனை வைத்திருந்தான். அவனிடம் ஒரு பலம் பொருந்திய, மிகவும் சக்தி வாய்ந்த, முன்பு சிவபெருமான் வைத்திருந்த, வில் ஒன்று இருந்தது. அந்த வில்லைக் கையாளுவது மிகவும் கடினம். கிட்டத்தட்ட முடியாத காரியம். இந்த வில்லை வளைத்து நாணேற்றுபவனுக்குத்தான் சீதையை மணமுடித்து தருவேன் என்று ஜனகன் அறிவித்து இருந்தான். நிறைய ராஜகுமாரர்கள் வந்து, முயன்று தோல்வியுற்று சென்றார்கள். ஆகையால் சீதை இதுவரை திருமணமாகாமல் இருந்தாள். ஆனால் வயது அப்படி ஒன்றும் அதிகமில்லை. ஜனகரின் புதல்வியாதலால் ஜானகி என்றும், விதேகநாட்டின் அரசகுமாரி யாதலால் வைதேகி என்று சீதைக்கு பெயர்கள் உண்டு. ஜனகரின் இந்த நிபந்தனை அவ்வளவு புத்திசாலித்தனமென்று தோன்றவில்லை. யாராலும் எளிதில் நிறைவேற்ற முடியாத நிபந்தனை. எவ்வளவு நாள் காத்திருப்பது? யாரும் வெற்றி பெற முடியாவிட்டால், சீதையின் கதி? தகுதியற்ற ஒருவன் வெற்றி பெற்று விட்டால் என்ன செய்வது?
இப்படிப்பட்ட வில் ஜனகனிடம் வந்து சேர்ந்த விபரம் பார்ப்போம்.
சிவதனுசு: தேவர்கள் கேட்டுக்கொண்டபடி விஸ்வகர்மா என்ற தேவ தச்சன், மகத்தான பலமுடைய இரண்டு வில்களை தயார் செய்தான். தேவர்கள் ஒரு வில்லை சிவபெருமானிடமும், மற்றொன்றை திருமாலிடமும் தந்தனர். ஒருசமயம் சிவன் விஷ்ணு இவர்கள் பலத்தை பார்ப்பதற்காக அவ்விருவரையும் யுத்தம் செய்யும்படி தேவர்கள் துாண்டினர். அந்த யுத்தத்தில் திருமாலின் ஹூங்கார ஓசையினால் சிவபெருமானது வில்லின் சக்தி குறைந்தது. சிவபெருமான் இந்த வில்லைக் கொண்டு தட்ச யாக சம்ஹாரம், திரிபுர சம்ஹாரம், செய்து முடிவில் அந்த வில்லை ஜனகரின் முன்னோரான தேவராதனிடம் கொடுத்தார். பிறகு அது ஜனகனிடம் வந்தது. விஷ்ணு தமது வில்லை பரசுராமனின் பாட்டனான ரிசீக முனிவரிடம் கொடுக்க அவ்வில் பரசுராமரை அடைந்தது.
இனி மேலே செல்லலாம். மிதிலை நோக்கி செல்கையில் வழியில் ராமன் மூலம் அகல்யை சாப விமோசனம். ராமன், முனிவருடனும் தம்பியுடனும் மிதிலைக்குள் நுழைகிறான். அங்கே மாளிகைகளில் பறந்து கொண்டிருக்கிற கொடிகள் ராமனைக் கண்டதும் ‘‘வாவா! தாமரை மலரைப் பிரிந்து மிதிலை செய்த தவத்தினால் இங்கு வந்து திருமகள் அவதரித்திருக்கிறாள்’’ என்று தன் வருங்கால மாப்பிள்ளையை அழைத்தன. மிதிலை வீதிகள் எப்படி இருந்தன? இசையோடு பொருந்திய இனிய சொற்களைப் பேசும் பெண்கள், ஊடற்காலத்தில் எறிந்த பூமாலைகள், தம்மீது வண்டுகள் மொய்த்திருக்க, தேன்சிந்திக் கொண்டு வீழ்ந்து கிடந்த அழகிய வீதிகள். வழியிலே ஒரு ஆடல்அரங்கு! அங்கு இவர்கள் கண்டது என்ன? மழலைச் சொல்லைப் போல் இனிய பாடல். கைவிரல்களால் தடவி வாசிக்கப்படும் மகரயாழ், மத்தளம் ஆகியவை ஒன்றை ஒன்று தழுவி ஒலிக்க, அபிநயம் செய்யும் கையின் வழியே கண்கள் செல்ல அக்கண்களின் வழியே மனம் செல்ல, உண்டோ- இல்லையோ என்று எண்ணத்தக்க இடையை பெற்ற மங்கையர்கள் நடனமாடும் நடனசாலைகளை கண்டனர். பெண்கள் கூரிய நகங்கள் உள்ள தளிர் போன்ற தம் செங்கை விரல்கள் வருந்தும்படி வீணையின் முறுக்காணிகளை பிடித்து திருகி, தேன்ஒழுக்குப் போன்ற நரம்புகளை இறுக்கி, நரம்புகளை வருடும் கைவிரல்களுடன் மனதையும் ஒன்றுபடுத்தி, வெண்ணிறமான புன்னகை வெளிப்பட செவிக்கு விருந்தாக வழங்கிய தெளிவான பாடல் என்னும் இனிய தேனை காதுகளால் பருகியவாறு மூவரும் இன்பமாக சென்றார்கள்.
இன்னும் என்னென்ன காண்கிறார்கள் மிதிலையில்? பளிங்குக் கிண்ணத்தில் ஊற்றப்பட்ட தெளிந்த மதுவை அருந்திய மங்கையர்களின் மிழற்றல்கள், வேல் போன்ற விழிகளையுடைய பெண்கள் சூதாடும் இடங்கள், அதேபோல் இளைஞர்கள் சூதாடும் இடங்கள். சாயலால் மயிலையும், உருவத்தால் கொடியையும் ஒத்த மகளிர் பச்சைக்கிளிகளுடன், பாகுபோன்ற இனியசொற்கள் பலவற்றை பேசிக்கொண்டு வானத்திலே உள்ள தேவமாதர் தம் வடிவத்தின் வனப்புக்கு தோற்று நாணும்படி, சோலையில் மலர் கொய்து கொண்டிருக்கும் மகளிரைக் கண்டனர். அம்மகளிரின் நடைக்கு அன்னங்கள் தோற்றுப் போயின. அதைக் கண்டு வண்டுகள் ஆரவாரம் செய்தன.
|
|
|
|