Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஆன்மிகமும் அறிவியலும்
 
பக்தி கதைகள்
ஆன்மிகமும் அறிவியலும்


பெண்மையின் குலவிளக்காக நின்றொளிரும் பிராட்டி, ஸ்ரீவில்லிபுத்துாரில் பிறந்த சுடர்க்கொடி, போற்றுதலுக்குரிய பாவையாம் ஆண்டாள் நாச்சியாரின் அற்புதங்கள் சொல்லித் தீராதவை.
பெரியாழ்வார் கண்டெடுத்து வளர்த்த பெண்பிள்ளையாம் ஆண்டாள், இப்பூவுலகில் எந்த பெண்பாற் புலவரும் பாடாத அதிஉன்னத பாடல்களைப் பாடியவர். ஆண்டாள் ஒரு அற்புதம் மட்டுமல்ல அளப்பரிய ஆச்சரியங்களை தன்னுள் பொதிந்து வைத்திருந்த ஆற்றல்மிக்க பெண். தமிழில் பெண்கவிஞர்கள் மிகக் குறைவு. அவ்வையார், காரைக்கால் அம்மையார், ஆண்டாள் ஆகிய மூன்று கவிஞர்கள் தமிழ் கூறும் நல்லுலகில் பரவலாக நம் கவனத்தை பெற்றவர்கள். அவ்வையாரும், காரைக்கால் அம்மையாரும் இளவயதிலேயே முதுமை பருவத்தை விரும்பி ஏற்று தனித்த அடையாளத்தை ஏற்படுத்தினார்கள். ஆனால் ஆண்டாள் நாச்சியார் பூலோகத்தில் உலவும் அத்தனை பெண்களின் அம்சமாய் பெண் இயல்புகளோடு ஒரு உதாரண நங்கையாக மனதில் உலா வருபவர். அவளின் அருமை பெருமைகளை உலகம் நன்கறியும்.
                     சங்க இலக்கியங்களில் காணப்படும் சொற்செறிவு பக்தி இலக்கியங்களில் இருப்பதில்லை. அது போல பக்தி இலக்கியங்களில் காணப்படும் உருக்கமும் நெகிழ்வும் சங்கப்பாடல்களில் குறைவு. ஆனால் ஆண்டாளின் பாசுரங்களில் இவை மூன்றுமே காணப்படுகிறது. இதுதான் ஆண்டாளின் அற்புதமாக போற்றப்படுகிறது.
                   ஆண்டாளின் திருப்பாவை 30 பாசுரங்களைக் கொண்டது,  நாச்சியார் திருமொழி 143 பாசுரங்களைக் கொண்டது. வேதங்களிலும் உபநிடதங்களிலும் கூறப்படும் கருத்துகளில் தெளிவு பெற்ற ஆண்டாள் தன் படைப்புகளில் அவற்றை ஆங்காங்கே தெளித்தவாறே சென்றுள்ளார்.  திருப்பாவை பாசுரங்களில் அழகும்,  துாய்மையும்,  ஆழ்ந்த பக்தியும்,  குறைகாணா குறுகுறுப்பும் இருக்கும்.  நாச்சியார் திருமொழியிலோ கவிச்செறிவும் கற்பனைவளமும் வெள்ளமென பாயும்.
               தமிழ் இலக்கியத்தில் தன்னிகரற்று விளங்கும் பாவைப்பாட்டு திருப்பாவையே. இதற்கு மூவாயிரப்படி, ஆறாயிரப்படி, நாலாயிரப்படி, ஈராயிரப்படி என்று நான்கு பெரிய வியாக்கியானங்களும், இரண்டு உள்ளுறை கூறும் உரைகளும் ஓர் அரும்பதமும் உண்டு. வடமொழியிலும் இதற்கு ஓர் உரையும் உண்டு.

    திருப்பாவைக்கு முதன் முதலில் உரை கண்டவர் பெரியவாச்சான் பிள்ளை. இவரது காலம் 1167 - 1262 என்றும் 1228 முதல் 1325 வரையிலுமாக இருவேறு காலங்களை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆண்டாளின் அற்புதங்களை வாசகர்களின் நெஞ்சில்  உலவ விடவும் அவளின் வியத்தகு பெருமைகளை உணர்ந்து வாழவும் எல்லாம் வல்ல பரம்பொருள் வாய்ப்பு நல்கியிருப்பதை பெரும் பேறாக கருதுகிறேன்.
இத்தொடர் ஆண்டாள் பற்றிய ஆராய்ச்சி அல்ல. நான் கேட்டு ரசித்த, பார்த்து பிரமித்த உணர்வுகளை எழுத்தாக வரைய விரும்பிய விழைவு.
ஆண்டாள் எழுதிய பாசுரங்களை வரிக்கு வரி விளக்கம் கொடுப்பதல்ல இத்தொடரின் நோக்கம்.
அவள் மண் சார்ந்து, மரபு சார்ந்து, அறிவியல் ஆய்ந்து, வரலாறில் நுழைந்து, நீர் மேலாண்மையில் தெளிந்து, தமிழுள் அகழ்ந்து, வானியல் சாஸ்திரத்தில் ஒளிர்ந்து, நதிகளாய் வளைந்து, புள் இனங்களாய் திரிந்து மலர்களாய் மலர்ந்து மணம் பரப்பிய காதலும் கண்ட கனவுகளும் அவள் அறிந்த கண்ணன் வரலாறும், கவித்திறனுடன் இணைந்த நேர்மறை எண்ணங்களும் பக்திநெறி கமழும் சரணாகதி தத்துவமும் பெண்மையின் உயர் அடையாளங்களாக ஆண்டாளை நிலைநிறுத்துகின்றன. அதை ஒவ்வொன்றாக இத்தொடரில் பார்ப்போம். இனி வாரந்தோறும் சூடிக் கொடுத்த சுடர்கொடியின் அற்புதங்களை படித்து சுவைப்போம். முதலில் மார்கழிக்கு வருவோம்.

         மாதங்களில் சிறந்தது மார்கழி என்கிறது ஆன்மிகம். மார்கழியில் தான் அதிக சக்தி கொண்ட பிராணவாயு அடுக்கு பூமிக்கு மிக அருகே வரும் என்கிறது அறிவியல்.  ஆன்மிகமும் அறிவியலும் எதிரெதிர் துருவங்கள் என்பது போலான தோற்றத்தை நமக்கு ஏற்படுத்தினாலும் எண்ணற்ற தளங்களில் இரண்டும் ஒரே கருத்துக்களை தாங்கி ஒத்துப்போகிறது. ரயில் தண்டவாளங்கள் போல அதனதன் தன்மைகளையும்  கருத்துருக்களையும் பிரதிபலித்தபடி சேர்ந்தே பயணிக்கின்றன. இந்த மாதத்தின் அபரிமிதமான சக்தியை பெறவே மார்கழி அதிகாலையில் எழுந்து கோலம் போடுவது, கோயில்களுக்குச் சென்று வழிபடுவது,  தெருக்களில் பஜனைப் பாடல்களைப் பாடுவது  போன்ற நடைமுறைகள் ஏற்படுத்தப்பட்டன.
  சூரியனின் கதிர்வீச்சிலிருந்து  நம் பூமியை காப்பது ஓசோன் படலம். இது பூமியின் வளிமண்டலத்தில் உள்ளது. ஓசோன் அடுக்கு என்பது 1913 ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டு இயற்பியல் விஞ்ஞானிகள் சார்லஸ் பாப்ரி,  ஹென்றி பியூஷன் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது.
  பொதுவாக ஓசோன் படலத்தில் ஏற்படும் துளை, செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அதிகமாக இருக்கிறது என்பதும் டிசம்பர் மாதத்தில் ஓசோனில் ஏற்பட்ட அந்த துளை கிட்டத்தட்ட மறைந்து விடுகிறது என்பதும் நிரூபணமாகி இருக்கிறது. ஆன்மிகமும் அறிவியலும் சிறப்பித்துச் சொல்லும் மார்கழியை ஆண்டாள் தொடர்புபடுத்தி நோன்பு நோற்பவர்களுக்கு பெரும்பயன் வாய்க்க வழி கூறுகிறார். இந்த அறிவியல் அதிசயத்தை ஆண்டாள் அறிந்திருந்த காரணத்தால் தான் ‘மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்’ என்று சிறுமியர்களை நோன்பிருக்க அழைக்கிறாள்.
நாமெல்லாம் மார்கழி என்றால் இழுத்துப் போர்த்தி இன்னும் சற்று நேரம் துாங்குவோம்.   ஆனால் ஆண்டாளை பாருங்கள்.  ஒரு பெண் தானும் எழுந்து பிறரையும் நேரத்திற்கு எழுப்ப விடாமுயற்சி செய்வதோடு அந்த பெருமாளை எப்படி தியானிப்பது என வழிவகைகளையும் சொல்லி நாம் அனைவரும் மேலான நிலையை அடைய முனைகிறாள்.
 எப்படி ஒரு நல்லெண்ணம் இருந்தால் இது சாத்தியம் பாருங்கள். இன்றைய காலகட்டத்தில் கடவுள் ஒரு வரம் அளிக்கிறார் என்றால் தனக்கு மட்டும் வேண்டும் என தன்னந்தனியே சென்று பெறுவதுதான் வழக்கம். ஆனால் ஆச்சரியமாக ஆண்டாளிடம் அந்த சுயநலமே இல்லை. தன் வயது ஒத்த அனைவரையும் அருள் பெற வேண்டி விரும்பி அழைக்கிறாள். இது ஆண்டாளின் பெருஞ்சிறப்பு. அவளின் சிறப்புக்களை மென்மேலும் பார்ப்போம்!
.........
தொடர்புக்கு: arninpavi@gmail.com
.............


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar