|
தன் கடன் அடியேனையும் தாங்குதல். என் கடன் பணி செய்து கிடப்பதே! என்பார் அப்பர் பெருமான். கடன் என்ற சொல்லுக்குக் கடமை என்றொரு பொருளும் உண்டு. எனவே நாம் இறைவனை வணங்குவது கடமையாகும். ஒரு டம்ளர் தண்ணி எடுத்துக் குடுத்தா தேங்க்ஸ் ங்குறோம். சற்று நகர்ந்து உட்கார்ந்தால் தேங்க்ஸ் ங்குறோம்... இப்படி சின்னச் சின்ன வியத்துக்கெல்லாம் நன்றி சொல்லத் தெரிந்த நமக்கு பஞ்ச பூதங்களையும் தந்து, நல்ல வாழ்க்கையும் தந்த இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டாமா? பிள்ளைக்குத் தந்தை ஒருவன். நம் எல்லோருக்கும் தந்தை இறைவன் என்பார் கவியரசர். இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்து, நம் எல்லோரையும் என்றால், ஈ, எறும்பு முதல் யானை வரை, புல் பூண்டு முதல் பெரிய ஆலமரம் வரை, கடல்கள், மலைகள், சமவெளிகள், ஆறுகள், நீர் நிலைகள் எல்லாம் இறைவனின் படைப்பே ஆகும். ஆனால் நாம் அவன் படைப்பிலேயே குறை காண்கின்றோம். பழைய காலப் புத்தகத்தில் ஓர் கதை உண்டு. வழிப்போக்கன் ஒருவன் நடந்தே காடு, மலைகளைக் கடந்து செல்கின்றான். பசியாறி ஒரு ஆலமரத்தின் கீழ் துண்டை விரித்துப் படுத்துக்கொள்கிறான். மேலே உள்ள ஆலமரத்தினைப் பார்த்து வியந்து போகின்றான். எத்தனை பெரிது. எத்தனை கிளைகள். எத்தனை விழுதுகள். நூற்றுக்கணக்கானோர்க்கு நிழல் தரும் குடை என அதன் பெருமைகளை மனதில் எண்ணியபடியே கண்களை மூடி அயர்ந்தான். சிறிது நேரம் கழித்து விழித்தான். இத்தனை பெரிய மரத்திற்கு ஏன் இத்தனை சிறிய பழங்களை இறைவன் படைத்தார். ஒரு சிறிய கொடி தரையில் படர்கிறது. அது தாங்க இயலாத அளவிற்குப் பெரிய பரங்கிக்காய், பூசணிக்காய் போன்றவற்றைப் படைத்த இறைவன் இத்தனை பிரம்மாண்டமான மரத்திற்கு இவ்வளவு சிறிய பழத்தைப் படைத்தது எவ்வகையில் பொருத்தம் என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே ஒரு பலத்த காற்று வீசியது. ஒரு ஆலம்பழம் வந்து அவன் நெற்றியில் விழுந்தது. உடனே தெளிவானான். ஆ... ஆ.... இறைவன் படைப்பினை விமரிசனம் செய்தேனே. இறைவன் எவ்வளவு கெட்டிக்காரன். இறைவன் எவ்வளவு கருணையாளன். இத்தகைய உயரத்தில் இருந்து பரங்கி அல்லது பூசணிக்காய் போன்று இருந்திருந்தால் இந்நேரம் தலை என்னவாகியிருக்கும் என்று அதிர்ந்தான். இறைவனின் படைப்புத்திறனை எண்ணி வியந்தவாறே எழுந்த நடந்தான். ஆம். இறைவன் மிகப் பெரியவன். அவனுடைய எந்தக் கணக்கும் நம்மால் புரிந்து கொள்ள இயலாது. இந்தப் பிரபஞ்சத்தின் கால வெள்ள ஓட்டத்தில் நாம் வாழும் காலம் என்பது மிகவும் குறுகியது. ஆயினும் அதிலும் நாம் தான் இந்தப் பிரபஞ்சத்தை ஆள்கின்றோம் என்ற இறுமாப்பில் நாம் செய்யும் அட்டகாசங்கள் தான் எவ்வளவு? பகவான் இராமகிருஷ்ணன் ஒரு செய்தி சொல்லுவார். ஒருமுறை கைலாயத்தில் திடீரென்று டப் என்று சப்தம் கேட்டது. தவம் செய்து கொண்டிருந்த முனிவர்கள் கேள்விக்குறியோடு ஈசனின் திருமுகத்தை நோக்கினார்கள். ஈசனும் புன்னகைத்தவாறே ஒன்றுமில்லை. ராவணன் பிறந்திருக்கின்றான் என்றார். அடுத்த நொடியே மீண்டும் டப் என்ற சப்தம் கேட்டது. ஈசனும் அவர்களை நோக்கி ராவணனை ராமன் சம்ஹாரம் பண்ணிவிட்டார் என்றார். முப்பத்து முக்கோடி ஆண்டுகள் வாழ்ந்த ராவணனின் வாழ்வே கைலாயத்தைப் பொறுத்தவரை ஒரு விநாடி என்றால் சராசரியான நம்மைப் போன்றவர்களின் வாழ்வெல்லாம் கணக்கிலேயே வராது. இது புரிவதற்கே பல பிறவிகள் எடுக்க வேண்டும். எந்த நன்றியை மறந்தவர்களுக்கும் உய்வு உண்டு. ஆனால் செய்த நன்றியை மறந்தவர்களுக்கு உய்வே கிடையாது என்பது வள்ளுவம். எனவே தான் இத்தனையும் தந்த இறைவனை ஒரு நாளைக்கு மூன்று வேளையாவது வணங்க வேண்டும் என்று சொல்லியிருக்கின்றார்கள். அதாவது சூரியன் உதிப்பதற்கு முன்னரும், சூரியன் உச்சி வேளையில் இருக்கும் போதும், சூரியன் மறைவதற்கு முன்பும் நாம் இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக வணங்கி மகிழ வேண்டும். இதனையே முன்னோர்கள் காணாமல் கொடு, கோணாமல் கொடு, கண்டு கொடு என்றார்கள். சூரியனைக் காணாமல், நடு உச்சியில் கோணாமல் நிற்கும் போது, மாலை மறைவதற்கு முன்பு சூரியனைப் பார்த்தும் நன்றி சொல்லிப் பழகிட வேண்டும். நமக்கு ஏதாவது தேவை என்றால், அவசரம் என்றால், நோய்வாய்ப்பட்டிருந்தால், தீர்க்க இயலாத பிரச்சனை என்றால் உடனே கோவிலுக்கு ஓடுகின்றோம். மற்ற நேரங்களில் செல்போனும் கையுமாக, டிவியும் நாமுமாக இருந்து விடுகின்றோம். தேவைக்கு வணங்குவதற்குப் பெயர் பக்தியில்லை. தெய்வத்தின் பேருண்மையை, பெருமையை உணர்ந்து வணங்குவதே பக்தி ஆகும். அப்படித்தான் ஆழ்வார்களும், நாயன்மார்களும் பக்தி செய்தார்கள். வழிபாடு என்பது இறைவனிடம் அதைத் தா, இதைத் தா என்று கேட்டுப் பெறுவது அல்ல. இறைவனுக்கு நாம் என்ன செய்ய இயலும் என்பதும், இறைவன் படைத்த இந்த உயிர்க்குலங்களுக்கு நாம் என்ன செய்ய இயலும் என்பதுமே பக்தியாகும். கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும் என்பார் கவியரசர். ஆம், ஆறே நாட்களின் இறைவனை தனது பேரன்பின் மூலமாக அடைந்த மாபெரும் பக்தர் கண்ணப்ப நாயனார். திருக்காளத்தி மலைமேல் அருள் பொழிந்த குடுமித் தேவர் என்னும் பெயருடைய சிவபெருமானைத் தனது நண்பருடன் சென்று தரிசனம் செய்கின்றார் திண்ணன். முன் நல்வினைப்பலன் மூண்டெழ தன்து நண்பரைப் போகச் சொல்லிவிட்டு வில்லோடும், அம்போடும் இரவு, பகல் பாராது காவல்புரிகின்றார். பகல் நேரத்தில் மலையைவிட்டு இறங்கி, அங்கே ஓடுகின்ற பொன்முகலி ஆற்றினிலே நீராடி, நீறாடி (திருநீறு அணிந்து) கண்ணில் படும் ஏதேனும் ஒரு விலங்கினை வேட்டையாடி, அதனை நெருப்பில் இட்டுச்சுட்டு, நன்றாக வெந்திருக்கின்றதா என்று சுவைத்துப் பார்த்து, அதில் தேனூற்றி ஒரு இலையில் வைத்துக்கொண்டு, பூக்களைப் பறித்து தனது குடுமியில் செருகிக் கொண்டு (அந்தக் காலத்தில் அனைவரும் குடுமி வைத்திருந்தார்கள்) வாயில் அபிஷேகத்திற்குத் தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு மலைமேல் ஏறி ஈசனினின் மேலே எச்சில் தண்ணீரை உமிழ்ந்து, மாமிசத்தைப் படைத்து, பூக்களைத் தூவி மனமுருகி வழிபாடு செய்வார். பிறகு சிவ சிந்தனையிலேயே மூழ்கி விடுவார். இவர் கீழே இறங்கிய நேரத்தில் வழக்கமாய் பூஜிக்கும் சிவகோசரியார் சென்று முறைப்படி பூஜிப்பார். இவர் படைத்த மாமிசங்களைக் கண்டு அஞ்சி, அப்புறப்படுத்தி, தூய்மை செய்து மீண்டும் வழிபடுவார். ஐந்து நாட்கள் தொடர்ந்து இதே நிலை இருக்க சிவகோசரியார் அச்சமுற்று இறைவனை வேண்டிட, இறைவனும் அசரீரியாக நாளை பூஜை முடிந்த பினனர் மறைந்து பொறுத்திருந்து பாருங்கள் என்றார். ஆறாம் நாள் காலை, திண்ணனார் தனது கடமைகளை முடித்து, மலைமேலே ஏறும் போதே தீய சகுணங்கள் தோன்றிட விரைவாக வந்தார். குடுமித் தேவரின் வலது கண்ணில் உதிரம் பெருகிறது. தவித்தார். ஓடினார். மயங்கினார். வீழ்ந்தார். பச்சிலைகளைக் கொணர்ந்து கண்களில் பிழிந்தார். உதிரம் நிற்கவில்லை. முன்பு யாரோ ஊனுக்கு ஊன் என்று சொன்னது நினைவிற்கு வந்தது. உடனே யோசிக்காமல் அம்பை எடுத்து தன் கண்ணைப் பெயர்த்து, ஈசனின் வலக்கண்ணில் அப்பினார். ஈசனின் திருவிழியில் உதிரம் நின்றது. இவரது கண்களில் உதிரம் பெருகிறது. கவலை கொள்ளவில்லை. ஆடினார். பாடினார். ஆனந்த வெள்ளத்தில் நீத்தினார். சிறிது நேரத்தில் ஈசனின் இடக்கண்ணில் உதிரம் பெருகிறது. கவலை கொள்ளவில்லை. அது தான் இன்னொரு கண் இருக்கின்றதே என்று ஆனந்தமானார். இன்னொரு கண்ணையும் எடுத்துவிட்டால் அடையாளம் தெரியாதே எனத் தனது செருப்புக் காலை எடுத்து ஈசனின் நெற்றியில் அடையாளப்படுத்தினார். அம்பினால் கண்ணைப் பெயர்க்கப் போனார். நில்லு கண்ணப்பா என்று ஈசன் மும்முறை மொழிந்து காட்சி தந்து அருளினார். கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் எனப் புகழ்வார் மாணிக்கவாசகர். தொண்டு செய்து நாள் ஆறில் கண் இடந்து அப்பவல்லேன் அல்லேன் என்று கதறுவார் பட்டினத்தடிகள். வழியிலே போட்டுத் தேய்ந்த பழஞ்செருப்பு ஈசனின் நெற்றியை அலங்கரித்தது. கடித்து ருசி பார்த்த எச்சில் மாமிசம், தேவாமிர்தம் போலிருந்தது. வாயிலிருந்த உமிழ்ந்த நீர் கங்கைக்கும் மேலானது. பக்தி என்ன தான் செய்யாது. கண்ணப்பன் பக்த சிரோன்மணியாக அல்லவா ஆகிவிட்டான் எனப்போற்றுவார் ஆதி சங்கரர். இப்போதும் குதர்க்கம் பேசுபவர்கள் கண்ணப்பன் போன்று நாமும் மாமிசம் படைக்கலாமே என்பர். படைக்கலாம். ஆனால், கண்ணப்பன் போன்று எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் தனது கண்ணையே பெயர்த்து அப்பினால் நாமும் அந்நிலைக்கு வரலாம். எனவே தான் பக்தி என்பதும் அன்பின் முதிர்ந்த நிலை. அது கொடுக்க முற்படுமே தவிர கேட்கவோ, எடுத்துக் கொள்ளவே முற்படாது. பகவத்கீதையை ஒரு அன்பர் பாராயணம் செய்து கொண்டிருந்தார். அதில் ஒரு ஸ்லோகத்தில் எனது பக்தர்களின் தேவையை நானே பூர்த்தி செய்கிறேன் என்று இருந்ததைப் படித்தார். இத்தனை பெரிய பிரபஞ்சத்தில் எல்லோருடைய தேவைகளையும் பூர்த்தி செய்ய இயலுமா? என்ன இது சுத்த பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது என்று எண்ணி அந்த ஸ்லோகம் தவறு என்றெண்ணிப் பெருக்கல் குறிபோட்டுவிட்டு எழுந்தார். குளித்து இறைவனை வணங்கி அவர் வாழ்வியல் தேவைக்காக யாசகம் பெறப் போனார். இவர் போனவுடன் ஒரு கூடை நிறைய அரிசி, பருப்பு, மளிகைச் சாமான்கள், காய்கறிகள் எனத் தூக்க முடியாமல் ஒரு சிறுவன் சுமந்து கொண்டு வந்து அவர்கள் வீட்டுத் திண்ணையில் இறக்கி அவர் மனைவியை அழைத்தான். அவளும் வெளியே வந்து யாரப்பா நீ? என்று கேட்டாள். நானும் உங்கள் கணவரிடம் பாடம் படிப்பவன் தான். எனது காணிக்கையாக இவற்றைப் படைக்க வந்தேன். ஏற்றுக் கொள்ளுங்கள் என்றான். அந்த அம்மாவோ நான் உன்னை இதுவரை பார்த்ததே இல்லையேயப்பா எனக்கூற, நிறைய பேர் படிக்க வருவதால் உங்களுக்கு என்னை அடையாளம் தெரிந்திருக்காது என்று கூறியபடியே சாமான்களை உள்ளே அடுக்கி வைத்தான். அவன் முதுகிலே பெருக்கல் குறி இருந்தது. இது, என்னப்பா என்றாள். இது என் ஆசிரியர் அடித்தது என்று சொல்லியவாறே ஓடிவிட்டான். அவள் கணவரும் பல இடங்களில் அலைந்து விட்டு வெறும் கையோடு வீடு திரும்பினார். வீட்டின் உள்ளே சாமான்களும், காய்கறிகளும் இருப்பதைக் கண்டு ஆச்சர்யமடைந்து மனைவியை அழைத்து யார் தந்தது எனக்கேட்டார். அந்தம்மாவும் தங்களின் மாணவன் என்று சொல்லிக் கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போனான் என்றாள். அடையாளம் ஏதேனும் சொல்லு என்றார். தாங்கள் அவனை அடித்தீர்களாமே! பெருக்கல் குறிபோன்று அவன் முதுகில் இருந்தது என்றாள். திடீரென்று ஞாபகம் வந்தது. ஓடிப்போய் பகவத்கீதை நூலை எடுத்துப் பார்த்தார். தவறு எனப் போட்டிருந்த இடத்தில் இப்போது அந்தக்குறி இல்லை இறைவா! நான் மறந்தாலும் நீ மறக்காமல் படி அளந்துவிட்டாயே எனக் கண்ணீர் பெருக்கினார். ஆம், தன் கடன் அடியேனையும் தாங்குதல் என்பதை இறைவன் ஒவ்வொரு நொடியும் மெய்ப்பித்துக் கொண்டிருக்கின்றோம். நமது கடமை அவனுக்கு நன்றி செலுத்தித் தொழுவதே ஆகும். இமைப் பொழுதும் மறவாமல் இறைவனுக்கு நன்றி செலுத்துவோம். நலம் பெறுவோம்
|
|
|
|