|
ஒரு சிறுவன் தனது உண்டியலில் உள்ள பணத்தை எடுத்துக்கொண்டு, மருந்து கடைக்கு விரைந்தான். கடைக்கார் மற்றொருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். சிறுவனை பார்த்தவுடன், ‘‘உனக்கு என்ன வேண்டும் தம்பி’’ என கேட்டார். ‘‘நான் அதிசயத்தை வாங்க விரும்புகிறேன். அது எவ்வளவு’’ என்று கேட்டான் சிறுவன். ‘‘தம்பி! நீ சொல்வது புரியவில்லை. சற்று விளக்கமாகச் சொல்’’ என்றார். ‘‘என் அக்காவிற்கு உடல்நலம் சரியில்லை. அவளைக் குணப்படுத்த அதிசயம் வேண்டும். அதைக்கொடுங்கள்’’ என அடம்பிடித்தான். சிறுவன் சொல்வதை அறியமுடியாமல் விழி பிதுங்கி நின்றார் கடைக்காரர். அப்போது அருகில் இருந்தவர், ‘‘தம்பி! உன் அக்காவிற்கு என்னாச்சு’’ என கேட்டார். ‘‘சார். அருகில் உள்ள மருத்துவமனையில்தான் அக்காவை சேர்த்துள்ளோம். நேற்று நான் துாங்கும்போது, எனது அப்பாவும் அம்மாவும் பேசிக்கொண்டிருந்தனர். அக்காவின் தலைக்குள் ஏதோ வளர்ந்துள்ளது. அதை உடனடியாக வெட்டி எடுக்க ஆப்ரேஷன் செய்தாக வேண்டும். நம்மிடம் பணம் இல்லை. ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால்தான் இவளை காப்பாற்ற முடியும் என சொல்லிக் கொண்டிருந்தனர்’’ என சொல்லியபடியே அழுதான் சிறுவன். பாவம்! இந்தக் குழந்தை அதிசயம் என்பது ஒரு மருந்து என, தவறாக புரிந்து கொண்டுள்ளது என்பது அப்போதுதான் அவர்கள் இருவருக்குமே புரிந்தது. ‘‘தம்பி. அழாதே. உன்னிடம் எவ்வளவு உள்ளது’’ எனக்கேட்டார் அந்த மனிதர். ‘‘100 ரூபாய் உள்ளது’’ என அழுதுகொண்டே சொன்னான். ‘‘பரவாயில்லையே. அதுதான் நீ கேட்ட அதிசயத்தின் விலை. சரி. நீ அக்காவிடம் செல். நான் ஆப்ரேஷனுக்கு வேண்டியதை பார்த்துக்கொள்கிறேன்’’ என்றார். அவனும் தன் அக்காவை காப்பாற்றிய மகிழ்ச்சியில் சென்றான். சிறிது நேரத்தில் ஆப்ரேஷனுக்கு உண்டான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தது. அதைப்பார்த்த பெற்றோருக்கு ஒன்றும் புரியவில்லை. வெற்றிகரமாக ஆப்ரேஷனும் முடிந்தது. பின் சிறுவனின் தந்தை, ‘பணமே இல்லாமல் இது எப்படி நிகழ்ந்தது’ என மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டார். அதற்கு அவர்கள், ‘‘சார். நேற்று உங்களது மகன் அருகில் இருந்த மருந்து கடைக்கு சென்றுள்ளான். அப்போது மருத்துவமனையின் இயக்குநரை பார்த்து பேசியுள்ளான். அவர்தான் இந்த ஏற்பாடுகளை செய்துள்ளார்’’ என்று தெரிவித்தனர். உடனே இயக்குநர் அறைக்கு ஓடியவர், அவரது காலில் விழுந்து வணங்கினார். ‘‘ரொம்ப நன்றி சார். உங்களின் உதவியை எனது உயிருள்ள வரை மறக்கவே மாட்டேன்’’ என அழுதார் தந்தை. அதற்கு அவர், ‘‘சார். நீங்கள்தானே அந்த சிறுவனின் தந்தை. இந்த நன்றியை அவனுக்கு சொல்லுங்கள். அவனது நம்பிக்கைதான் உங்கள் மகளை காப்பாற்றியது. அந்தக் குழந்தை ஏதுமறியாமல், ‘அதிசயம் குணப்படுத்தும்’ என்று நம்பியது. தனது அக்காவை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று துடித்த அந்த நல்ல மனம்தான் என்னை ஈர்த்தது’’ என்றார். பார்த்தீர்களா... அந்தக் குழந்தை ‘அக்காவை காப்பாற்ற முடியும்’ என்று நம்பியது. அதனால் நம்பிக்கை வீண் போகவில்லை. நம்புங்கள். நல்லதே நடக்கும்.
|
|
|
|