|
கிராமம் ஒன்றிற்கு வயதான துறவி ஒருவர் வந்தார். இளைஞர்கள் சிலர் அவரிடம் ஆசி பெற வந்தனர். அதில் ஒருவன், ‘‘சுவாமி தங்களின் குருநாதர் யார்? எனக் கேட்டான். ‘‘எனக்கு ஆயிரக்கணக்கான குருநாதர்கள் உண்டு. அவர்களை எல்லாம் சொல்ல ஒருநாள் போதாது. முத்துக்கள் போல நல்வழி காட்டிய மூவரைப் பற்றி மட்டும் சொல்கிறேன். என் முதல் குருநாதர் திருடன்.
பாலைவனம் வழியாக போய்க் கொண்டிருந்த நான், வழி தவறி ஒரு கிராமத்திற்குள் நுழைந்தேன். நள்ளிரவில் ஊரே உறங்கி விட்டது. அந்த சமயம் ஆள் இல்லாத ஒரு வீட்டின் வாசலில் ஒருவன் நின்றிருந்தான். அவனிடம், ‘‘ வழிதவறி இங்கு வந்து விட்டேன். இன்றிரவு மட்டும் உன்னுடன் தங்கலாமா’’ எனக் கேட்டேன்.
அதற்கு, ‘‘ஒரு திருடனுடன் தங்க முடியும் எனக் கருதினால் நீங்கள் என்னுடன் தங்கலாம்’’ என்றான்.
அன்று ஒருநாள் மட்டுமல்ல... அவனுடன் ஒரு மாதம் தங்கியிருந்தேன். தினமும் இரவில், ‘‘ நான் திருடச் செல்கிறேன். நீங்கள் நிம்மதியாக துாங்குங்கள்’’ என்று சொல்லி புறப்படுவான்.
மறுநாள் காலையில், ‘‘ ஏதாவது பொருள் உனக்குக் கிடைத்ததா?’’ எனக் கேட்பேன். அதற்கு ‘‘ போதுமான அளவு கிடைக்கவில்லை. ஆனாலும் என் முயற்சியைக் கைவிட மாட்டேன்’’ என்பான். ஒருபோதும் நம்பிக்கை இழந்ததில்லை. அந்த காலகட்டத்தில் நான் தியானம் பழகிக் கொண்டிருந்தேன். ஆனால் முன்னேற்றம் ஏற்படவில்லை. அதனால் நம்பிக்கை இழந்தேன். திருடனுடைய விடாமுயற்சி தான் எனக்கு துாண்டுகோலாக இருந்தது.
என்னுடைய இரண்டாவது குருநாதர் ஒரு நாய். அதனுடன் கிடைத்த அனுபவத்தையும் சொல்கிறேன். ஒருநாள் மதியம் மிக தாகமாக இருந்தது. நீரோடையைத் தேடிச் சென்றேன். ஒரு நாயும் என்னைப் பின்தொடர்ந்தது. அதற்கும் தாகம் போலிருக்கிறது. ஓடை நீரைப் பார்த்தது. அதன் நிழல் பிரதிபலித்தது. அதைக் கண்டதும் வெகுண்டது. தன் சொந்த உருவத்தைக் கண்டு குரைத்தது. திரும்பி பின்னோக்கி ஓடியது. ஆனாலும் தாகம் எடுக்கவே மறுபடியும் திரும்பி வந்தது. ஓரிரு முறை முயற்சித்தபின் கடைசியாக நீருக்குள் குதித்தது. தாகம் தீர நக்கி குடித்தது.
இதை பார்த்ததும் ஒரு உண்மை புரிந்தது. ஒரு செயலில் ஈடுபடும் முன் பயம் குறுக்கிட்டாலும் அதில் துணிவுடன் இறங்க வேண்டும் என்பது தான்.
மூன்றாவது குருநாதர் யார் என்றால் ஒரு சிறுகுழந்தை. கையில் எரியும் தீபம் ஒன்றுடன் குழந்தை ஒன்றைக் கண்டேன். நான் வேடிக்கையாக கேட்டேன். ‘‘ பாப்பா இந்த தீபத்தை நீயா ஏற்றினாய்’’ ஆமாம் என அதுவும் தலையசைத்தது. ‘‘சரி... இந்த தீபத்திற்கு வெளிச்சம் எங்கிருந்து வந்தது என உன்னால் காட்ட முடியுமா’’ எனக் கேட்டேன்.
அதற்கு சிரித்த குழந்தை, தீபத்தை அணைத்து விட்டு, ‘‘இப்போது வெளிச்சம் எங்கு போனது என உங்களால் காட்ட முடியுமா’’ எனக் கேட்டது. ஒரு நொடியில் என் ஆணவம் அழிந்தது.
நான் படித்ததெல்லாம் அதன் முன்னே சுக்கு நுாறாகி போனது. என் முட்டாள்தனத்தை உணர்ந்தேன்’’ என்றார் துறவி. சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் நமக்கு குருநாதர்கள் தான். உலகில் யாரும் தாழ்ந்தவர்கள் அல்ல. மற்றவர்களிடம் உள்ள நல்லதைக் கற்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு இருந்தால் போதும்.
|
|
|
|