Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஆண்டாளும் அழகு தமிழும்
 
பக்தி கதைகள்
ஆண்டாளும் அழகு தமிழும்


  வைணவர்கள் மட்டுமின்றி அனைவரும் ஆண்டாளை நேசித்ததற்கு காரணம் அவளின் அழகுத்தமிழ். பக்தியின் மேன்மை, கற்பனை, இலக்கியச்செறிவு என திருப்பாவை பாசுரங்கள் ஈடுஇணை இல்லாதவை.
‘திருப்பாவையை பற்றி பேசும் எனக்கு தகுதி இல்லை’ என மண்ணில் உயர்ந்தவரான ராமானுஜரே கூறியிருக்கிறார் என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம் என்னும் கேள்வி  மனதில் எழுகிறது. மலைப்பு தோன்றுகிறது. மகாகவி பாரதியாரோ சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாம் ஆண்டாளின் பாசுரங்களைக் குறிப்பிடும் போது ‘அமுதனைய சொற்கள்’ எனக் குறிப்பிடுகிறார்.
 கவிஞர் சுரதா என்ன சொல்கிறார் தெரியுமா? ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் நந்தவனத்தில், கோதை கண்டெடுக்கப்பட்ட புண்ணிய பூமியில் சிறிது மண்ணை எடுத்து பத்திரப்படுத்தி அவர் இப்படிச் சொல்கிறார்.  “கோலமிடும் கையால் காலம் தாண்டும் கவிகள்” எழுதிய ஆண்டாள் பிறந்த இந்த மண் போற்றத்தக்கது; புகழ்மிக்கது.  ‘நான் நாத்திகனாக இருந்தாலும் செந்தமிழில் தேனினும் இனிய கவிதைகள்  தீட்டிய ஆண்டாள் என் அன்புக்குரியவள்’ என்கிறார்.
 அறிவுடையார் நட்பு வளர்பிறை போன்றது என்பார்கள். ஒரு பெண் அறிவாற்றலோடு இருந்தால் அவளைச் சார்ந்த சமுதாயமே பயன் பெறும் என்பதற்கு ஆண்டாளே உதாரணம். திருப்பாவை பாடல்களைப் பாடுவது அமிர்தத்தை சுவைப்பது போல ஆனந்தம் தருவது. இனிமை அளிப்பது. ஆண்டாளுக்கு வார்த்தைகள் அருவி போல் எண்ணங்களில் கொட்டியிருக்கிறது! அப்படி ஒரு சொற்களஞ்சிய ஞானம் அவளுக்கு!
   ஆண்டாள் எத்தனை விதமாக கண்ணனை அழைத்திருக்கிறாள் தெரியுமா? அடடா! அவளுக்குத் தான் அவன் மீது எத்தனை பக்தி! எத்தனை ஈடுபாடு! அப்படி இருந்ததால் தான் வார்த்தைகள் மேளம் கொட்டி தாளம் இசைத்திருக்கிறது.
   ‘ஓங்கி உலகளந்த உத்தமன்’  என்னும் மூன்று வார்த்தைகளில் என்ன ஒரு அற்புதமான உருவகம் பாருங்கள். மற்றொரு இடத்தில் ‘மாயன் மணிவண்ணன்’  என அவன் பெயரை கூறுகிறாள். இந்த இரு பெயர்கள் மூலம் அவன் தோற்றுவித்த பொருள்களை எல்லாம் நாம் உணரும் வகையில் உள்ளுறை பொருளாக சுருங்கக் கூறி விளங்க வைக்கிறாள்.
  சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்பது இலக்கியச் செறிவு உடையவர்களால் மட்டுமே முடியும் ஒரு அற்புதக்கலை. அவ்வையார் அருளிய ஆத்திசூடியும், திருவள்ளுவர் அருளிய திருக்குறளும் இப்படி சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது தானே!  மாணவர்களுக்கு ‘நோட்ஸ் அண்ட் சம்மரி’ என்ற கேள்வியை ஆங்கில பாடத் தேர்வில் கேட்பார்கள். வார்த்தைகளை கண்டறியும் பயிற்சி இருந்தால் மட்டுமே சரியான பதிலளிக்க முடியும். அப்படி சொற்களை தேர்வு செய்வதிலும் அதை வைத்து ஆட்சி செய்வதிலும் ஆண்டாளுக்கு நிகர் அவளே தான்.  
 அந்த மலர்ச்சியுடன் கடந்து வந்தால் ‘வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்’ என பசுக்களை அடையாளப்படுத்துகிறார். பசுவுக்கு ‘வள்ளல்’ என்ற பட்டத்தை அளிக்கும் அவளின் சிறப்பை எண்ணும் போது உடல் சிலிர்க்கிறது. பசுவானது மானிடர்களுக்கு தன் பாலை வாரி வழங்குகிறது.  தன்னலம் கருதாமல் பிறர் நலம் பேணும் பசுவை ‘வள்ளல்’ என்கிறாள்.  மாயன், மன்னு வடமதுரை மைந்தன், மாலே மணிவண்ணா, கோல விளக்கே, கொடியே,  விதானமே,  ஆலிலையில் துயில் கொள்ளும் ஐயா, கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா, குறையொன்றும் இல்லாத கோவிந்தா,  வங்கக் கடல் கடைந்த மாதவா,  கேசவா, உலகை அளந்தாயே,  தென்னிலங்கை கோமானை வென்றாயே, அம்பரமே, தண்ணீரே, சோறே,  அறஞ்செய்யும் எம்பெருமான்,  நந்தகோபாலா என்று எத்தனை விதமாக கண்ணனை அழைத்திருக்கிறாள். அடேயப்பா! இது எத்தனை சொல்லாட்சி!  வார்த்தைகள் எப்படி எல்லாம் வசப்பட்டு வந்து விழுந்திருக்கிறது நாச்சியார் இடத்தில்!
 சுவையும் மணமும் துாக்கலாக இருக்கும் உணவை எப்படி ரசித்து உண்போமோ அப்படி ஒரு மதிப்பு கூட்டப்பட்ட மனநிலை வாய்க்கிறது அவளின் பாசுரங்களை பாடும் போது, ஆண்டாள் நம் மனதிற்குள்ளும் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருக்கிறாள்.
அவளின் அழகு தமிழை ‘படி’களின்வழி பெற்ற அருமையான விளக்கங்களின் மூலம்  அள்ளி பருகியுள்ளோம்.
தமிழிலும், வைணவத்திலும் தேர்ந்த அறிஞர்கள் ஓராயிரப்படி தொடங்கி வெவ்வேறு வடிவில் பாசுரங்களுக்கு விளக்கம் அளித்துள்ளனர். இவற்றில் பெரியவாச்சான் பிள்ளை அருளிய 3000 படி, அழகிய மணவாளர் அருளிய 6000படி என இரு விளக்கங்களும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அது சரி! இது என்ன படி என்ற சந்தேகம் மனதில் உருள்கிறது. நமக்கெல்லாம் படியளக்கும் பெருமாள் என்னும் அடிப்படையில்  அளவைப்பெயர் தான் நினைவுக்கு வரும். ஆனால் இடத்துக்கு இடம் பலவும் இப்படித் தான் வேறுபடுகிறது.
வடதமிழக பகுதிகளில் பூக்களை முழத்தில் அளந்து தான் கொடுப்பார்கள். மூன்று முழம் வேண்டும் என்றால் பூக்காரர் பூச்சரத்தை தம் இரண்டு விரலில் பிடித்துக்கொண்டு தன் முழங்கை அளவு ஒன்று என கணக்கிட்டுக் கொடுப்பார். ஆனால் மதுரையைச் சுற்றுப்புற ஊர்களில் பூச்சரத்தில் கட்டி வைத்துள்ள மதுரை மல்லிகையை எண்ணித் தருகிறார்கள். வெளியூர்களிலிருந்து மதுரை வருபவர்களுக்கு இது புதுமையாக இருக்கும்.
   மதுரையில் விற்கும் மல்லிகைச்சரம் எண்ணுவதற்கு கச்சிதமான அளவில் இருப்பதால் எண்ணுவதற்கு ஏற்றதாக உள்ளது. அதுபோல ‘படி’ என்பது எழுத்துக்களின் கச்சிதமான எண்ணிக்கை.  
அதாவது படி என்றால் 32 எழுத்துக்கள் கொண்டது என்பது பொருள். அதாவது
32 * 3000 = 96,000 எழுத்துக்கள் 32 * 6000 = 192000 எழுத்துக்கள். மூவாயிரப்படி, ஆறாயிரப்படி என்பது விளக்கங்களின் மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கையில் அமைந்த காரணப் பெயர்கள்.
ஒரு நுாலை அலங்கரிக்கும் பத்து அழகுகள் பற்றி ‘நன்னுால்’ வகுத்திருக்கும் இலக்கணம் என்ன தெரியுமா?
கூற வந்த பொருளை சுருக்கமாகவும், தெளிவாகவும், படிப்பவர்களுக்கு இனிமை தரும் படியும், சந்த இன்பம் இருக்குமாறும், நல்ல சொற்களும் ஆழ்ந்த கருத்தும், கூறும் கருத்துக்கள் காரண காரிய முறைப்படி தொகுத்தும், உயர்ந்தோர் கருத்தோடு மாறுபடாமல், சிறந்த பொருளைத் தரும் நுாலாகவும் ஆங்காங்கே எடுத்துக்காட்டுகளும் ஆகிய பத்தும் ஒரு நுாலுக்கு இருக்க வேண்டிய அழகுகள் என பவணந்தி முனிவர் கூறுகிறார். தெய்வத்தன்மை பெற்ற ஆண்டாள் இந்த இலக்கணப்படியே திருப்பாவை பாடி நம் மனதில் நீங்கா இடம் பிடித்தாள்.
 தமிழின் ஐம்பெரும் காப்பியங்கள் நமக்கு தெரியும் தானே? சிலப்பதிகாரம், மணிமேகலை தொடங்கி ஒவ்வொன்றாக நினைவுக்கு வருகிறதா?  தெலுங்கிலும் இப்படி ஐந்து பெரும் காப்பியங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றான ’ஆமுக்த மால்யதா’ என்பது முழுக்க முழுக்க ஆண்டாளைப் பற்றியது. இது பலருக்கும் தெரியாத ஒரு சங்கதி. அட! இது எத்தனை சிறப்பான செய்தி!
  மொழிகளைக் கடந்து மக்களின் மனதில் நிற்கிறாள் அவள். ஆமுக்தமால்யதா எப்படி தோன்றியது? இந்த காவியம் உருவான வரலாறு சுவாரஸ்யமானது.
                     முதலில் ஆமுக்தமால்யதா என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம். ‘சூடிக் கொடுத்தவள்’  என்பது பொருள். ஸ்ரீவில்லிபுத்துாரிலும் திருச்சியிலும் பூஜையின் போது ’ஆமுக்தமால்யதா தாயை நமஹ’ என்ற சொற்றொடரை கேட்கலாம்.  
கிருஷ்ண தேவராயர் படையெடுத்துச் செல்லும் வழியில் விஜயவாடாவுக்கு   அருகிலுள்ள ஸ்ரீகாகுளம் கோயிலில் ஒரு ஏகாதசி நாளில் விரதமிருந்து சுவாமியை தரிசித்துவிட்டு தன் கூடாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கிறார். இருட்டான அந்த அறையில் தெய்வ ஒளி படர்கிறது. மன்னர் பரவசம் அடைந்தார். ஆம், அந்த பரந்தாமனின் தரிசனம் பெற்றார். ஆனால் பாருங்கள் சுவாமியின் முகத்தில் மகிழ்ச்சி இல்லை. தோள்களிலே மாலை இல்லை.  கடவுளுக்கே வருத்தமா என ஆச்சரியப்பட்ட மன்னர் கேட்கிறார். அதற்கு பரந்தாமன், “மன்னா! என் தோள்கள் மணம் வீசும் மாலைகள் இன்றி வாடுகின்றன. அன்று பெரியாழ்வாரின் மகளான கோதை அணிந்த மாலைகளே எனக்குப் பிடித்தவை. அந்தக் கோதையை பாடி அப்பாமாலைகளை திருமலையில் எனக்கு சாற்று. மகிழ்வேன்.புகழ் அடைவாய்’’ என்று சொல்லி மறைந்தார்.
  மன்னராக சமுதாய பணிகள் இருந்தாலும் அவற்றை ஒதுக்கி விட்டு சூடிக் கொடுத்தவள் என்ற சொல்லைக் கொண்டே காவியம் எழுத தொடங்கினார். ஸ்ரீவில்லிபுத்துார் கோயிலுக்கு ஒரு லட்சம் தங்க காசுகளை காணிக்கையாக்கினார். அவர் அளித்த நவரத்தினங்கள் கணக்குக்குள் அடங்காதவை. அது மட்டுமல்ல ஆண்டாள் சன்னதியில் உள்ள கல்மண்டபம் அவர் சமர்ப்பித்தது தான். அது இப்போது தங்கத்தகடுகளால் வேயப்பட்டுள்ளது.  
இந்தியா முழுவதும் திருப்பாவை சாற்றுமுறை செய்யும் வழக்கம் உள்ளது. மொழி தெரியாதவர்களும் அது வேதத்தின் பாகம் என்பதாக உணர்ந்து பாடி போற்றுகிறார்கள்.  திருப்பதியில் மார்கழியில் திருப்பாவையே சுப்ரபாதம் ஆக பாடப்படுகிறது. ஆண்டாள் தன் திருப்பாவையைச் ‘சங்கத்தமிழ் மாலை’ என்கிறார். பூமாலை சூடியதால் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்றும், பாசுரங்களைப் பாடிக் கொடுத்ததால் பாவையாகவும் பெருமை கண்டார்.
அவளின் தமிழை அள்ளிப் பருகியபடி தொடர்ந்து பயணிப்போம்… வாருங்கள்!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar