Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஆர்ஷ்டிஷேணர்
 
பக்தி கதைகள்
ஆர்ஷ்டிஷேணர்

மணிமானைப் பற்றி ஆர்ஷ்டிேஷணர் பேசிய பேச்சு பீமனை சற்று முகம் சிவக்க வைத்தது.
‘‘நீங்கள் சொன்னது போலவே தான் மஹாமுனி விருஷபர்வரும் கூறினார். அந்த மணிமான் என்ன அத்தனை பெரிய வீரனா... அவன் பெயரைக் கேட்கும் போதே அவனை என் காலடியில் போட்டு மிதிக்கத் தோன்றுகிறது’’ என பற்கள் நரநரக்கப் பேசினான் பீமன்.
‘‘பீமசேனா... உணர்ச்சிவசப்படாதே! அது அவன் நாடு... அவன் இடம்... அதைக் காக்கும் கடமையையும் குபேரன் அவனுக்கு விதித்திருக்கிறான். எனவே இப்போதே அவனை ஒரு பகைவனைப் போல கருதுவது தவறு’’ என ஆர்ஷ்டிேஷணரும் திருத்தினார். அப்படியே அவர்களைத் தன் ஆசிரமத்தில் தங்கச் சொல்லி, ‘‘ முதலில் இளைப்பாறுங்கள். காலத்தால் நடக்க வேண்டியவை தானாக நடந்திடும்’’ என்றார்.
பாண்டு புத்திரர்களும் அவர் கூறியது போலவே அதிதிகளாய் அங்கே தங்கினார்கள்.
‘‘அண்ணா... நாம் அதிக காலம் இங்கே தங்கத் தேவையில்லை. நம் இலக்கு கைலாசகிரி. அதை நோக்கி செல்வோம். வழியில் குபேரனின் பட்டினத்தை இயன்றால் காண்போம். இல்லாவிட்டால் பாதகமில்லை’’ என தன் கருத்தை அப்போது தர்மன் முன்வந்து கூறினான் நகுலன்.
‘‘ஆம் அண்ணா... நகுலன் கருத்தே என் கருத்தும். வேண்டுமானால் கைலாச பர்வதத்தில் நாம் சில காலம் தங்கலாம்’’ என்றான் சகாதேவன்.
திரவுபதி மட்டும் ஏதும் கூறாமல் இருந்தாள். அதைக் கண்ட பீமன், ‘‘என்ன யோசனை திரவுபதி... ஏன் மவுனமாக இருக்கிறாய்’’ எனக் கேட்டான்.
‘‘ஒன்றுமில்லை.  நம் அர்ச்சுன பிரபாவை எண்ணினேன். இந்திரலோகம் சென்ற அவர் திரும்பி வரும் வரை காத்திருந்து அவரோடும் சேர்ந்து நாம் கைலாச கிரிக்கு செல்வது தானே உத்தமம்? நீங்கள் அவரை மறந்து விட்டீர்களோ என எனக்கு தோன்றுகிறது’’ என்றாள்.
தர்மனை திரவுபதியின் சொற்கள் சற்று உரசின.
‘‘இல்லை திரவுபதி... நான் அர்ஜுனனை மறக்கவில்லை. நாம் யாருமே யாரையும் மறக்கவும் முடியாது. ஒரு உருவின் அங்கம் போன்றவர்களே நாமெல்லாம் நீ எங்கள் ஐவருக்குமான மூலசக்தி’’ என்றான் தர்மன்.  
‘‘அப்படியானால் அர்ஜுனன் வரும் வரை காத்திருந்து பின் நாம் இங்கிருந்து புறப்படுவோம்’’ என இறுதி முடிவைக் கூறினான் சகாதேவன்.
‘‘ஆம்... அதுவே சரி! அர்ஜுனன் வரட்டும். அவனுக்கான இந்திரலோக வாசம் விரைவில் முடியப் போகிறது. இந்திரனே அர்ஜுனனை நாம் இங்கு இருப்பதை அறிந்து நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பான். அப்படி அவனும் வந்து விட்டால் நம் கைலாச யாத்திரை என்பது இன்னும் வலிமை உடையது என்றாகி விடும்’’ என தர்மனும் தங்கள் விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.
...........
ஆர்ஷ்டிேஷணரின் ஆசிரமத்தில் பாண்டவர்களும் திரவுபதியும் அர்ஜுனன் வரவுக்காக காத்திருந்த வேளையில் ஒருநாள் ஒரு அதிசயம் ஒன்றை திரவுபதி கண்டாள். ஆகாயத்தில் ஒரு கருடபட்சி ஒரு பெரிய பாம்பை கால்களால் பற்றிக் கொண்டும், அலகுக்குள்ளே ஒரு அபூர்வ மலரைக் கவ்விக் கொண்டும் பறந்து கொண்டிருந்தது. அந்த  பாம்பு  சீற்றமுடன் அதனிடம் இருந்து தப்பிக்க முனைந்ததில் பெரும் போராட்டமே நடந்தது. அந்த பாம்பு கால்களில் இருந்து நழுவி வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்த திரவுபதியின் முன் விழுந்தது. கருடனும் கீழிறங்கி வந்து பாம்பைத் துாக்கப் பார்த்தது.
அதைக் கண்ட திரவுபதி, ‘‘பட்சியே... வேண்டாம்.  விட்டு விடு. பாவம் இந்த சர்ப்பம்’’ என குரல் கொடுத்தாள். பதில் கூற வேண்டி கருடன் வாயைத் திறக்கவும் அதன் வாயில் இருந்த மலர் கீழே விழுந்தது. கருடன் அதை உணராமல் பேசினான்.
‘‘தாயே... இந்த நாகன் மிகக் கொடியவன். குபேரனுடைய பட்டினத்தில் மடு ஒன்றில் வசிக்கிறான். அந்த மடுவுக்குள் நீர் அருந்த வரும் மாடுகள், பசுக்களை விழுங்க விடுகிறான். இதனால் கோவினங்கள் என்னிடம் முறையிட்டன. அதனால் இந்த நாகத்தை பாதாள லோகத்து மடு ஒன்றில் விடலாம் என பற்றிச் செல்கிறேன். இதைக் கொல்வது என் நோக்கமல்ல’’ என்றான்.
‘‘அப்படியே செய்’’ என திரவுபதி கூறவும் கருடன் நாகத்துடன் பறக்கத் தொடங்கினான்.
அவன் அலகில் இருந்து விழுந்த மலரை மறந்தும் போயிருந்தான். திரவுபதி அதைப் பார்த்து அருகில் சென்று கையில் எடுத்தாள். அது தங்க ரேகைகளோடு மனம் கவரும் வாசத்தோடு கண்களைக் கவர்ந்தது. அது எந்த வகை மலர் என்றும் தெரியவில்லை. ஒரு கோணத்தில் தாமரை போல இருந்தது. இன்னொரு கோணத்தில் நிலா மடந்தையாகவும் காட்சியளித்தது. வாசமோ மனதைக் கிறக்கியது. இந்த மலரை அனேகமாய் குபேரனின் பட்டினத்து மடுவில் இருந்து தான் கருடன் பறித்திருக்க வேண்டும் என யூகித்தபடியே திரவுபதி நின்றாள். அப்போது  கூடை நிறைய கனிகளைப் பறித்து பீமன் வந்து நின்றான். அவனும் திரவுபதி வைத்திருந்த மலரைக் கண்டான்.
‘‘திரவுபதி இந்த மலர் வினோதமாயுள்ளதே எப்படி கிடைத்தது?’’ எனக் கேட்டான். திரவுபதியும் நடந்ததைச் சொன்னாள். பீமன் முகத்தில் ஆச்சரியம் தென்பட்டது.  
‘‘மணாளரே! குபேர நாட்டு மலருக்கே இவ்வளவு சிறப்பு என்றால் அங்கு இன்னும் எவ்வளவு சிறப்புகள் இருக்கும்?’’ என துாண்டத் தொடங்கினாள் திரவுபதி.
‘‘ஆம் திரவுபதி... என் மனமும் குபேர பட்டினத்தை பார்க்கத் துடிக்கிறது’’ என்றான்.
‘‘நல்ல துடிப்பு. எனக்கும் இந்த மலர் போல பல மலர்கள் வேண்டும். எனவே நீங்கள் இந்த மலர்களைத் தேடிச் சென்று பறித்து வருவீர்களா’’ எனக் கேட்டாள்.
‘‘அர்ஜுனன் வரும் வரையில் எங்கும் செல்லக் கூடாதே... என்ன செய்வது?’’
‘‘உண்மை தான். அதற்கும் இந்த மலரைக் கொண்டு வரச் செல்வதற்கும் என்ன சம்பந்தம்? இந்தச் சாக்கில் குபேரப் பட்டினம் எப்படிப்பட்டது, அங்குள்ள காவல் எப்படிப்பட்டது என அறிந்து கொள்ள முடியுமே?’’
‘‘நீ கூறுவதும் சரிதான்... யாரும் அறியாதபடி அங்கு சென்று மலர்களைக் கொண்டு வருவதோடு, அந்த பட்டினத்தையும் ஆழம் பார்த்து விடுகிறேன். அது நாம் ஒன்றாகச் செல்லும் போது உதவியாக இருக்கும்’’ என்ற பீமன் பழக்கூடையை ஒப்படைத்து விட்டு திரவுபதியின் புன்னகை முகத்தை பார்த்தபடியே புறப்பட்டான்.
...........
 இரண்டு நாட்கள் தொடர்ந்து பயணித்ததில் இயற்கைக் காட்சிகளும் மாறி விட்டிருந்தன! வானம் பொன்னிறத்தில் மின்னியது. அதுவே குபேர பட்டின எல்லை வந்து விட்டதை உணர்த்தியது. குளிர்ந்த தட்ப வெப்பநிலைக்கு நடுவே, இனிய பழங்கள் மரங்களில் பழுத்திருந்தன. மந்தியினம் அவற்றை  நாங்கள் நிறைய உண்டு களித்து விட்டோம் என்பது போல அலட்சியமாக திரிந்தன. ஒரு மதர்த்த யானையின் எடையளவு உயரமும் அகலமுமாய் பசுக்கள் கண்ணில்பட்டன. அவைகளின் மடியில் இருந்து சுரக்கும் பாலானாது புல் தரை மீது பரவி நுரைத்துக் கிடந்தது தரைப்பரப்பு! மேலே பொன்வானம்! கீழே பால் தரை! நாசியிலோ அற்புத வாசம்... அடேயப்பா! பீமன் குபேர பட்டின இயற்கை எழிலைக் கண்டு வியந்த போது அவன் மார்பைக் குறி வைத்த ஒரு அம்பு எங்கிருந்தோ வந்தது. மின்னல் வேகத்தில் விலகப் பார்த்த பீமனின் விலாவில் அது தைத்து நின்றது!
அழகிய அந்த பிராந்தியத்தில் அழகுக்கெல்லாம் மேலாக ஆபத்து ஒளிந்திருப்பதை உணர்ந்து அந்த அம்பைப் பிடுங்கி எறிந்தவனாய் தன் தோள் மீதிருந்த வில்லை எடுத்து மறைந்திருந்து தாக்கும் அந்த எதிரியை சந்திக்கத் தயாரானான்.
அடுத்த வினாடியே அவனைச் சுற்றி தாவரப்புதர்களில் ஒரு சலசலப்பு. அதனுள் இருந்து எட்டடிக்கும் மேலான உயரத்தில் யட்சர்களும், அவர்களுக்கு இணையான ராட்சசர்களும்  சுற்றி வளைக்கத் தொடங்கினர். அவர்களின் கைகளில் விதம்விதமான ஆயுதங்கள்!
தொடரும்
..................


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar