|
யட்சர்களும், ராட்சஸர்களும் தன்னை சுற்றி வளைத்து தாக்குவதை உணர்ந்த பீமன், தன் தனுராயுதத்தால் பதில் கூறலானான். பீமன் என்றாலே கதாயுதமும், அதைக் கொண்டு அவன் புஜபல பராக்ரமத்துடன் போரிடுவதும் தான் நினைவுக்கு வரும். ஆனால் வனவாசத்தில் மரவுரி தரித்த போது அந்த தோற்றத்திற்கு கதாயுதம் பொருத்தமாக இல்லை. அதோடு வனத்தில் யாரோடு போராடப் போகிறோம் என்ற கேள்வி எழுந்ததால் பாண்டவர்கள் ஆயுதங்களை ஒரு வன்னி மரத்தின் பொந்துக்குள் வைத்ததோடு அந்த மரத்தை அண்டி வாழ்ந்து வரும் பிரம்ம ராட்சஸன் ஒருவனிடம் பாதுகாக்கும்படி வேண்ட அவனும் சம்மதித்தான். அதன்பின் நிராயுதபாணிகளாய் வனவாசம் மேற்கொண்டனர். ஆயினும் சில சமயங்களில் விலங்குகளை எதிர்கொண்ட போது தனுராயுதம் தேவைப்பட்டது. அதனால் அதை ஆலவிழுது, மூங்கிலால் உருவாக்கினர். விஷத்தன்மையுள்ள காலமரக் குச்சிகளைக் கொண்டு அம்புகள் உருவாக்கினர். வனவாழ்வு பாண்டவருக்கு பல பாடங்களைக் கற்றுத் தந்தது. கொடிகளைக் கொண்டு தொட்டில் கட்டுதல், அம்பு தயாரித்தல், கருமருது மரத்தில் ஈட்டி செய்தல், பயணிக்கும் இடங்களில் தடயங்களை உருவாக்குதல், குடில் அமைத்தல், அதைச் சுற்றி அக்னி வளையக் குழிகளை அணையாது எரித்தல் போன்றவை இதில் அடக்கம். பாண்டவர் ஐவரும் இப்படி என்றால் திரவுபதி காட்டுப் பூக்களில் மாலை கட்டுதல், குழைத்த மண்ணில் பானை, கலயம் செய்தல், தேன் சேகரித்தல், பட்சிகளோடு உறவாடுதல் எனச் செயல்பட்டாள். இப்படி காலம் நெருக்கடியை உருவாக்கியதில் தான் பீமனும் தனுராயுதத்தை பயன்படுத்தக் கற்றுக் கொண்டான். அப்படி தன்வசமிருந்த வில்லில் அம்புகளைப் பூட்டி மின்னல் வேகத்தில் தன்னைச் சுற்றி வளைத்த யட்சர், ராட்சஸர்கள் மீது ஏவியதில் அவர்கள் மாய்ந்தனர். தொடர்ந்து மறைந்திருந்து தாக்கியவர்களையும் அவன் விட்டுவிட வில்லை. மரங்களின் மீது ஒளிந்திருந்து தாக்கப் பார்த்தவர்களை அந்த மரத்தையே பிடுங்கி எறிந்து நிலைகுலைய வைத்தான். ஒரு ஒற்றை மனிதனின் அந்த தீரம் யட்சர்களும் ராட்சஸர்களும் அதுவரையில் கண்டிராதவை! பீமன் மீது படும் அம்புகளும் துவண்டு விழுந்தன. அவை ஏற்படுத்திய காயங்களை அவன் பொருட்படுத்தவில்லை. மொத்தத்தில் அந்த வனப்பரப்பே பீமன் என்ற பராக்கிரமனால் நிலை குலைந்தது. மிருகங்கள் தெறித்து ஓடின. பறவைகள் கூச்சலிட்டன.
அந்த சப்தம் அரைகாத துாரத்தில் இருந்த குபேர பட்டினத்து மணிமான் மாளிகையிலும் எதிரொலித்தது. உப்பரிகையில் நின்று வனமிருக்கும் திசை நோக்கிப் பார்த்த மணிமான் ஏதோ விபரீதம் என்பதை உணர்ந்தான். அதற்கு தோதாக யட்ச வீரர்களில் சிலர் அவன் முன் ஓடி வந்து பணிந்து வணங்கினர். மூச்சிறைக்க, ‘‘ஓங்கி உயர்ந்த ஒரு மானிடன் நம் காவல் வீரர்களை கொன்று குவிக்கிறான். மரங்களைப் பிடுங்கி எறிந்து எங்களை வியக்க வைத்து விட்டான். அவனை நம் வீரர்களால் ஏதும் செய்ய முடியவில்லை’’ என்றனர். ‘‘ஒரு மானிடன் பற்றி இப்படி ஒரு புகழ்மாலையா? யட்ச ராட்சஸர்கள் பேசும் பேச்சா இது?’’ என மணிமான் சீறினான். ‘‘வீரத்தளபதியே... நேரில் பார்க்கும் போதுதான் இதை உணர்வீர்கள். உருவில்தான் அவன் மானிடன். நிச்சயம் பிறப்பில் அவனொரு அசகாயன்’’ என்றான் ஒரு வீரன். ‘‘யாராய் இருந்தால் என்ன? யட்சம் மாயத்தின் களம். ராட்சஸம் உச்சபலத்தின் களம். இந்த இருவகை சக்திகளின் முன் ஆயிரம் யானைகளாலும் ஏதும் செய்ய இயலாதே... இனி உங்களை நம்பி பலனில்லை. நானே களத்தில் இறங்குகிறேன்’’ என்ற மணிமான் கவச உடையும், சிறகுகள் கொண்ட பட்சி கிரீடமும் தரித்தவனாக பட்டத்து யானை மீதேறி அமர்ந்து அது பிளிறும்படி செலுத்தியவனாக வனம் புகத் தொடங்கினான். பிளிறலோடு மணிமானின் யானை வனப்பகுதிக்குள் நுழைந்த போது பீமன் ஓரிடத்தில் அமர்ந்தபடி தனக்கு ஏற்பட்ட காயங்களுக்கு பச்சிலைகளைப் பிழிந்து மருந்து இட்டுக் கொண்டிருந்தான். அவனைச் சுற்றி நுாற்றுக்கணக்கான குபேரப் பட்டினத்து வீரர்கள் இறந்து கிடந்தனர். மரங்களும் பெயர்ந்து கிடந்தன. அந்தக் காட்சி மணிமானின் கண்களில் ரத்தத்தையே வரவழைத்து விட்டது. அதனால் உண்டான கோபத்துடன் யானை மீதிருந்து கீழே குதித்து இறங்கியவன், அதே வேகத்துடன் பீமனோடு போரிடத் தொடங்கினான். பீமனுக்கும் வந்திருப்பவன் தான் மணிமான் என்பது தெரியவில்லை. ஆனால் மணிமானின் கவச உடையும், கிரீடமும், அவன் குபேரனால் விசேஷமாக அனுப்பப்பட்டவன் என்பதை மட்டும் உணர்த்தி விட்டது.
மணிமான் முதலில் நேரில் போரிட்டான். பின்பு மறைந்து போரிடலானான். ஆனாலும் பீமனின் பலத்தின் முன்னால் அவனால் நீடிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் மணிமானைப் பிடித்து தலைக்கு மேல் துாக்கிய பீமன், கிறுகிறு எனச் சுற்றி வீசி எறியவும் வெகு தொலைவில் இருக்கும் ஒரு மரத்தின் மீது விழுந்து அதன் கூரிய கிளை ஒன்று அவன் வயிற்றைக் குத்திக் கிழித்த நிலையில் உயிரை விட்டான்.
அப்போது மணிமான் எழுப்பிய உயிர்க்குரல் அரண்மனைக்குள் தன் மணிமண்டபத்தில் அமர்ந்திருந்த குபேரன் காதிலும் ஒலித்து அடங்கியது. குபேரனின் மந்திரிகளில் ஒருவரான குலீசர் என்பவர், ‘‘ஐயோ... இது நம் வீரத்தளபதி மணிமானின் குரல்’’ என்றார். சொன்னதோடு அங்கிருந்து வெளியேறி நடந்தவைகளை அறிந்து கொண்டு திரும்பி வந்து ‘‘மணிமான் மானுடன் ஒருவனால் கொல்லப்பட்டான்’’ என்று கூறவும் குபேரன் முகத்தில் பெரிய அதிர்ச்சி எதுவும் ஏற்படவில்லை. ‘‘நீங்கள் கூறுவது உண்மையா... அது மணிமான் தானா? இல்லை மணிமான் போல யாரோவா?’’ எனக் கேட்டான் குபேரன். ‘‘என்ன அரசே இப்படி கேட்கிறீர்கள். நம் மணிமான் தான் இறந்து கிடக்கிறான். கொன்றவன் ஒரு அல்ப மானிடன்’’ ‘‘அல்ப மானிடனா... அப்படி என்றால் மானுடர்களுக்கும் மேலான சக்தியை பிறப்பிலேயே பெற்ற யட்சர்களான நம்மை எப்படி வெல்ல முடியும்?’’ ‘‘அதுதான் புரியவில்லை. ஆனால் இந்த மானிடன் பார்க்க புஷ்டியாக மிக பலசாலியா உருக்கு போல இருக்கிறான். நல்ல உயரம்... நல்ல ஆகிருதி’’ ‘‘அவனைக் கைது செய்து விட்டீர்களா?’’ ‘‘அருகில் நெருங்க முடியவில்லை... அப்படியிருக்க எப்படி கைது செய்வது?’’ ‘‘நீங்கள் சொல்வதைக் கேட்க மகிழ்வாக உள்ளது. நான் இப்போதே அவனைக் காண விரும்புகிறேன்’’ என்ற குபேரனை ஆச்சரியமுடன் பார்த்தார் குலீசர்! ‘‘வீரத்தளபதியை இழந்ததால் கோபப்படுவான், கொந்தளிப்பான், பல லட்சம் வீரர்கள் கொண்ட தன் மந்திர சேனையை முடுக்கி விட்டு பீமனை அழித்து விட்டு மறுவேலை பார்ப்பான்’’ எனக் கருதிய குலீசருக்கு குபேரனின் பேச்சு ஆச்சரியம் தராமல் போகுமா என்ன? குபேரன் சொன்னதோடு நில்லாமல் பீமனை நேரில் காண புறப்படவும் செய்தான். பீமன் போரிட்டு மணிமானைக் கொன்ற ‘கந்தமாதன பர்வதம்’ என்ற மலைக்காடு நோக்கி, பிரம்மன் தனக்கென வழங்கி, சிலகாலம் ராவணனால் கவரப் பெற்று அவன் வசமிருந்து பின் தன்வசமான புஷ்பக விமானத்தில் ஏறிக் கொண்டு புறப்பட்ட குபேரன் செயலை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை.
குபேரன் புறப்பட்டது போலவே ஆர்ஷ்டிேஷணரின் ஆசிரமத்தில் இருந்து தர்மன் நகுலன் சகோதேவன் ஆகிய மூவரும் கூட பீமனுக்கு ஏதோ ஆபத்து என்பதை உணர்ந்து கந்தமாதன பர்வதம் நோக்கி புறப்பட்டனர். திரவுபதி அவர்களிடம் பீமனை தான்தான் ஒரு மலருக்காக அனுப்பியதைக் கூறியிருந்தாள். மலர் பறிக்கச் சென்றவன் உரிய காலத்தில் திரும்பி வரவில்லை. மாறாக அவர்களும் வான் மீது பட்சிகள் கூக்குரல்களோடு பறந்து செல்வதைக் கண்டார்கள். ஆர்ஷ்டிேஷணரும் தன் திவ்ய திருஷ்டியால் பீமன் குபேரனின் வனஎல்லைக்குள் நுழைந்து போரிட்டபடி இருப்பதை உணர்ந்து கூறினார். இதனால் தர்மன் தன் சகோதர்களுடன் பீமனுக்கு உதவிட தனுராயுதத்துடன் புறப்பட்டு விட்டிருந்தான்.
ஆக மொத்தத்தில் பீமனுக்கு வீரம் ஒருபுறம் குபேரனையும், மறுபுறத்தில் அவன் சகோதரர்களையும் வரவழைத்து விட்டிருந்தது. இந்த பின்விளைவைப் பற்றி துளியும் கவலையின்றி கந்தமாதன பர்வத மடு ஒன்றில் திரவுபதி விரும்பிய மலரை பறித்தபடி இருந்தான்.
|
|
|
|