|
நம் துன்பங்கள் அனைத்தையும் தீர்த்து கடவுளிடம் கொண்டு சேர்க்கவல்ல, வேதம் அனைத்திற்கும் வித்தான திருப்பாவை, பெரியாழ்வாரின் மகளாய் விளங்கிய கோதை அருளியது. அப்படிப்பட்ட கோதை எழுதிய திருப்பாவை உலகப்புகழ் பெற்றவை என்பது நாம் அறிந்தது தான். அது ஏன்… கோதையை இப்படி கொண்டாடுகிறோம்?
ஆழ்வார்கள் மொத்தம் 12 பேர். அவர்களில் ஆண்டாள் மட்டுமே பெண்ணாகப் பிறந்தார். ஆனால் மீதமுள்ள 11 ஆழ்வார்கள் என்ன சாதித்தார்களோ எதை பூமியில நிலை நிறுத்தினார்களோ அதையெல்லாம் விஞ்சி நின்றவள் ஆண்டாள்.
அவள் பிறந்த கதையே சுவாரஸ்யம் தான். பெரியாழ்வாருக்கும் அவரது மனைவிக்கும் வெகுநாட்களாக குழந்தை இல்லை. மணம் வீசும் மலர்த்தோட்டத்தில் ஆடி மாதம் வளர்பிறை பூர நட்சத்திர நாளில் துளசிச்செடியருகே கண்டெடுக்கப்பட்டவள் கோதை. பூதேவி நாச்சியாரின் அம்சம் தான் கோதை. பூதேவி நாச்சியார் நமக்கெல்லாம் என்ன சொல்ல வேண்டும் என நினைத்தாளோ அதை ஆண்டாளாக இந்த மண்ணில் பிறந்து தமிழில் சொல்லி விட்டு போயிருக்கிறாள்.
பெரியாழ்வார் ஆண்டாளை வெறுமனே பாலும், நெய்யும் சேர்த்து ஊற்றி வளர்க்கவில்லை. அனுதினமும் கண்ணனின் பெருமைமிகு பெயர்களை, பெருமாளின் திவ்யதேசங்களின் பெருமைகளைச் சொல்லி வளர்த்தார். நம் வீட்டுப் பிள்ளைகள் சரிவர பேசுவதற்கே ஐந்து வயதாகும் போது கோதையின் எண்ணம் அவ்வயதில் திருப்பாவை எழுதும் அளவு ஞானம் பெற்றிருந்தது. இதற்கு முக்கிய காரணம் பெரியாழ்வார் அவளுக்குச் சொல்லிய எம்பெருமானின் வாழ்க்கை வரலாறு. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்று சொல்வார்கள். ஆண்டாள் 16 அடிகள் எல்லாம் இல்லை. ஒரே பாய்ச்சலில் உயரப் பறந்திருக்கிறாள்.
இளம் வயதிலிருந்தே கண்ணன் மீது அளவுகடந்த அன்பு கொண்டிருந்தாள் கோதை. அவள் பருவ வயதை அடைந்த போது, வடதேசத்தில் இருந்து உபன்யாசகர் ஒருவர் பெரியாழ்வாரின் வீட்டுக்கு வந்தார். பெருமாள் மீது பக்தி கொண்ட ஆண்டாளைப் பார்த்து பூரித்த அவர், கண்ணனை அடையும் வழி பற்றி ஆண்டாளுக்குச் சொல்லத் தொடங்கினார். வடக்கே மதுராவில் ஆயர்பாடியில் வசித்த கோபிகையர் அனைவரும் கண்ணனையே அடைய வேண்டும் என விரும்பினர். அதற்காக காத்யாயினி தேவிக்காக பாவை நோன்பு நோற்றனர். அதன் பலனாக கண்ணனையே அடைந்தனர் என உபன்யாசகர் தெரிவித்தார். அதைக் கேட்டு வியந்த ஆண்டாள் தானும் அவ்வாறே கண்ணனை அடைய பாவைநோன்பு நோற்க வேண்டும் என முடிவு செய்தாள். பருவ வயதை அடையும் சமயம் ‘‘மனிதருடன் திருமணம் என்பது நடக்காத காரியம். மணந்தால் மாதவனையே மணப்பேன்” என உள்ளத்தில் அன்பு சுரந்தது. ஆனால் கோபிகையர் வாழ்ந்து கண்ணனை அடைந்தது துவாபர யுகம். ஆனால் நாமோ கலியுகத்தில் வாழ்கிறோம். இது சாத்தியமா என்றெல்லாம் குழம்பவில்லை அவள். அரங்கன் கிடைப்பானா மாட்டானா என சந்தேகம் கொள்ளவில்லை. துாய அன்புடன் இருந்த கோதை, தீர்மானமாக தன்னை இடைப்பெண்ணாக நினைத்துக் கொண்டு வாழ்ந்தாள். நாம் எதுவாக இருக்க ஆசைப்படுகிறோமோ அதுவாகவே ஆகிறோம் என்னும் கூற்று அவளுக்கு பொருந்தும்.
ஒரு கதை ஒன்று சொல்ல கேட்டிருக்கிறேன். முற்காலத்தில் கடும் வறட்சி நிலவிய ஒரு ஊரில், ஆட்சி செய்த மன்னன் மழை வேண்டி ஒரு மிகப்பெரும் யாகம் நடத்த உத்தரவிட்டானாம். அனைத்து மக்களும் யாகம் நடக்கும் சமயத்தில் பங்கேற்க வேண்டும் என்பது உத்தரவு. மக்கள் திரளாக பங்கேற்றனர். ஒரு சிறுமி மட்டும் கையில் குடையுடன் வந்து சேர்ந்தாளாம். எதற்கு என்று வினவியதற்கு ‘‘யாகம் நடத்துகிறோம். அதனால் நிச்சயம் மழை வரும். வீட்டுக்குச் செல்லும்போது நனையாமல் இருக்க குடை கொண்டு வந்தேன்” என்றாளாம். அந்த சிறுமியின் உறுதிக்கு மனமிரங்கி வருண பகவான் அன்று அந்த பூமியை நனைத்ததாக அந்தக் கதை முடியும். இங்கே கோதையும் தான் மனதில் எடுத்துக் கொண்ட உறுதித்தன்மையிலிருந்து கொஞ்சமும் பின்வாங்கவில்லை.
ஸ்ரீவில்லிப்புத்துாரையே கோகுலமாக நிலைநிறுத்திக்கொண்டு, வடபத்ரசாயி கோயிலையே நந்தகோபனின் மாளிகையாக ஏற்றுக் கொண்டு தானும் நோன்பு இருக்க முடிவு செய்தாள். பின் நோன்பிருக்க தேர்வு செய்த மாதம் தான் மார்கழி. திருப்பாவையில் ஆண்டாள் தன்னையே ஒரு இடையர் பெண்ணாக நினைத்து பாடியது 29 பாசுரங்கள். கடைசி ஒரு பாசுரத்தை பெரியாழ்வாரின் மகளாக இருந்து பாடியதாக சொல்வார்கள்.
உளவியல் ரீதியாக பார்த்தோமேயானால் கண்ணனின் கதைகளை கேட்டு கேட்டு தன்னையும் கோபிகையாக மனதளவில் மாற்றிக் கொண்டாள். கண்ணனை அடைய வேண்டும் என முயற்சி மேற்கொண்டாள். அந்த நிலையிலேயே வாழத் தொடங்கி தன்னை முழுதும் அர்ப்பணித்தும் கொண்டாள். இப்படி கண்ணனின் லீலைகளையும் வாழ்க்கை வரலாறையும் கேட்டுக் கேட்டு வளர்ந்த ஆண்டாளின் மனதில் பக்தி நிரம்பி வழிந்தது. ஒரு ஏரி நிரம்பி விட்டால் என்ன செய்வார்கள்? அதனுடைய மதகுகளை திறந்து விடுவார்கள் இல்லையா? அதுபோல் கண்ணனின் கதைகளை உள்வாங்கி உள்வாங்கி கழுத்துவரை நிறைந்திருந்த கண்ணனின் வரலாறை பாசுரங்களாக எழுத்து வடிவுக்கு கொண்டுவந்தாள்.
கண்ணன் எப்படிப்பட்ட வரலாற்றை கொண்டவன்? கடவுளாகிய திருமால் இந்த பூமியில் பத்து அவதாரங்களை எடுத்தார். புல்லாங்குழல் ஊதி, வெண்ணெய் திருடி, குறும்புகள் செய்து, மாடு மேய்த்து, நண்பர்களுடன் விளையாடி, அசுரர்களை வதம் செய்து, கோவர்த்தன மலையை குடையாக பிடித்து, காளிங்கனை அடக்கி, கூத்தாடியாய் குடமாடி, பாற்கடலில் துாங்கி, பெரு மழையில் இருந்து மக்களைக் காத்து, மகாபலியிடம் இருந்து மூவுலகைப் பெற்று, ராஜதந்திரனாக, துாது செல்பவனாக, மல்யுத்தம் புரிபவனாக, ரதம் ஓட்டுபவனாக, திரவுபதிக்கு சேலை தந்த ஆபத்பாந்தவனாக, குசேலனின் வறுமையை போக்கிய தர்மவத்சலனாக, பீஷ்மருக்கு முக்தி தந்தவனாக, சிகாமணியாக பல பரிமாணங்களை காட்டும் அவன் வரலாறு கேட்க கேட்க மெய் சிலிர்க்கும்.
இப்படி அனுதினமும் கேட்ட பெருமாளின் வரலாறு ஆண்டாளின் நெஞ்சத்துள் தேங்கிக் கிடக்க தான் எழுதிய திருப்பாவையில் அவருடைய வரலாற்றுப் பெருமைகளை இடையிடையே கோர்த்து மாலையாக்கி உள்ளாள்.
ஆம், ‘‘ஆயர் குலத்தினில் தோன்றிய அணிவிளக்கை” என்றும் ‘‘சீர்மல்கும் ஆயர்பாடி” என்றும் ‘‘குற்றமொன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே’’ என்றும் கண்ணணின் ஆயர்குலத் தோன்றலை குறிப்பிடுகிறார் ஆண்டாள். திருப்பாவை 25ம் பாசுரத்திலே “ஒருத்தி மகளாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர தான் தீங்கு நினைத்த கம்சன் வயிற்றில் நெருப்பென நின்ற நெடுமாலே” என்று அன்று அவன் வரலாற்றை வெளிப்படுத்துகிறாள்.
அத்தோடு நின்றாளா, பறவை வடிவம் கொண்டு வந்த அரக்கனாகிய பகாசுரனின் வாய்பிளந்து அழித்ததை திருப்பாவையின் 13ம் பாசுரத்தில் ‘‘புள்ளின் வாய்க்கீண்டானை” எனத் தெரிவிக்கிறாள். சக்கர வடிவில் வந்த சகடாசுரனை காலாலே உதைத்து அழித்தவன் அவன் என்னும் கதையை 6ம் பாசுரத்தில் ‘‘கள்ளச்சகடம் கலக்கழியக் காலோச்சி” என்கிறாள். சிறுகன்றாக உருவெடுத்து வந்த வத்ராசுரனை எறிதடியாகக் கொண்டு விளாவின் வடிவாக நின்ற அசுரன் மீது எறிந்தான் என்பதை 24ம் பாசுரத்தில் ‘‘கன்று குணிலா எறிந்தாய்! கழல் போற்றி” என்கிறாள். மேலும் ராமாவதாரத்தில் தன்னை போரிட்டு எதிர்த்த ராவணனை அழித்ததை 24ம் பாசுரத்தில் ‘‘சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி” என அவன் வீரச் செயல்களை விளங்கச் சொல்கிறாள்.
நமக்கு ஒருவரை பிடித்து விட்டால் அவர் செய்த செயல்கள் சிறியவை என்றாலும் பிறரிடம் பெருமையாக சொல்லிச் சொல்லி ஆனந்தம் கொள்வோம் தானே. இங்கு ஆண்டாளின் மனம் கவர்ந்தவனோ அளப்பரிய செயல்கள் செய்தவன். அவன் பெருமைகளை சாதாரணமாகவா சொல்வாள்? தன் மனம் கவர்ந்த நாயகனின் வீரதீர பராக்கிரமங்களை ஆண்டாள் தன் பாசுரங்களில் உயர்நிலைகளில் உட்புகுத்தி அவன் பெருமை கதைகளை நமக்கெல்லாம் சொல்லிச் சொல்லி மகிழ்கிறாள். அவன் வரலாறை பாசுரத்தில் பாடுவது தான் அவளுக்கு எத்தனை ஆனந்தத்தை கொடுக்கிறது!
வாமன அவதாரம் எடுத்து ஓர் அடியால் விண்ணையும் மற்றொரு அடியால் மண்ணையும் அளந்து முடித்து மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலைமீது தன் திருப்பாதத்தை வைத்து மகாபலிக்கு முக்தி அளித்ததை ‘‘ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி” என்றும் ‘‘அன்றிவ் வுலகம் அளந்தாய்! அடிபோற்றி” என்றும் வெளிக்காட்டியுள்ளாள்.
இப்படித்தான், அந்த எம்பெருமானின் ஒவ்வொரு அருஞ் செயலையும் பெரியாழ்வார் வழி கேட்டறிந்த ஆண்டாள், அவன் பெருமைகளை உலகிற்கு எடுத்துச் சொல்லும் விதத்தில் திருப்பாவைக்குள் அழகாக பொருத்தியிருக்கிறாள். பெருமாளின் வரலாறை கேட்க கேட்க ஆண்டாளுக்கு இனித்தது போல திருப்பாவையில் அவள் பாசுரவழி படிக்க படிக்க நமக்கும் அவன் மீதான பற்றுதல் அதிகமாகிறது.
இத்துடன் விட்டாளா?! இன்னும் இன்னும் வரலாற்றை அறிவித்துக் கொண்டும் விவரித்துக் கொண்டும் செல்கிறாள். எம்பெருமானைப் பற்றி உலக மக்கள் காலத்துக்கும் பெருமைப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இதுவே ஆண்டாளின் அவாவாக இருந்தது. உலகிலுள்ளோர் கண்ணனை வணங்குவதையே விருப்பமாக கொண்டதைக் கண்டு வெகுண்ட இந்திரன் பெருமழை பொழிவித்து உயிர்களை துன்புறுத்தினான். அப்போது கண்ணன் என்ன செய்தான்? கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து மக்களைக் காத்தான். இதை 24ம் பாசுரத்தில் ‘‘குன்று குடையா எடுத்தாய்! குணம் போற்றி” என்று பாடுகிறாள்.
“மாயனை மன்னு வடமதுரை மைந்தனை” எனும் 5ம் பாசுரத்தில் யமுனை நதிக்கரையில் உள்ள வடமதுரையில் வசுதேவருக்கு மகனாகப் பிறந்து தேவகியின் வயிற்றையும் மனதையும் நினைத்தவன் என்றும் ‘‘கந்தம் கமழும் குழலி” ‘‘கொத்தலர் புங்குழல் நப்பின்னை” என்றும் பாசுர வரிகளில் கண்ணனின் மனைவி நப்பின்னை என்பதையும் வெளிக்காட்டுகிறார்.
இதுமட்டுமா கண்ணன் என்பவன் கரிய மேனியுடையவன் என்பதோடு பாற்கடலில் துயின்றவன், மேன்மை பொருந்திய சங்கு சக்கரம் தரித்தவன், சாரங்க வில்லை உடையவன் என்பது போன்ற பெருமானின் பல அவதார நிகழ்வுகள் திருப்பாவைப் பாடலில் பரவலாக பெருமையுடன் காணப்படுகிறது.
இப்படியாக பெரியாழ்வார் தனக்குச் சொன்ன திருமாலின் வரலாறை தமிழ் மணக்கும் மலர்ச் சொற்களால் திருப்பாவையில் உட்புகுத்தி அனைவர் உள்ளத்திலும் நறுமணம் தவழச் செய்தவர் ஆண்டாள். தொடர்ந்து பயணிப்போம்… வாருங்கள்!
|
|
|
|