|
திருப்பரங்குன்றம் முருகன் சன்னதியில் அன்று கூட்டம் அதிகமாக இல்லை. அங்கும் இங்கும் ஒவ்வொருவராய் நின்று சிரமம் இல்லாமல் சாமி தரிசனம் செய்து கொண்டு இருந்தனர். காலையில் பாடக்கூடிய பாடலான ‘‘மங்கையர்கரசி வளவர் கோன் பாவை’’ என்ற பாடலை பூபாளராகத்தில் ஒரு குழந்தை பாடுவதை அங்கிருந்த அனைவரும் ரசித்துக் மெய் மறந்து கேட்டு கொண்டு இருந்தனர். கையில் தேங்காய் பழம் அர்ச்சனைச்சீட்டுடன் வந்த வள்ளி சன்னதி முன்பு நின்றாள். வாங்கோ வாங்கோ என வாய் நிறைய அழைத்து நலம் விசாரித்த அர்ச்சகரிடம் பேசுவதற்கு ஏதுவாய் இருந்தது நேரம். என்ன குழந்தாய் மாதம் மாதம் வரும் சஷ்டிக்கு வருவியே ஏன் இப்போதைக்குள் வரவே இல்லையே எனக்கேட்டார். ஆமாம் சாமி நிறைய வேலை இருந்தது என்றாள். வழக்கம் போல குழந்தைகள் பெயரில் தானே அர்ச்சனை எனக்கேட்டு தாம்பாளக் கூடையை வாங்கினார் வயதான அர்ச்சகர். சுவாமி ஒரு விண்ணப்பம் என்றாள். பிள்ளைகள் நல்ல தேர்வு எழுதணும் அது தானே என்று சொன்ன அவரிடம் ‘‘தேர்வு அறையில் ஆரோக்கியமாக இருக்கணும். வினாத்தாளை பார்த்தவுடன் டென்சன் ஆகக் கூடாது. தன்னம்பிக்கை, உற்சாகத்துடன் இருக்க வேண்டும்’’ என சொன்னாள் அவள். அப்படியே செய்றேன் குழந்தாய் என்றார். உன்னோடு பி்ள்ளைகள் பெயர் தான் எனக்கு தெரியுமே என்ற அர்ச்சகரிடம் சீதா, அருந்ததி, ராம், அபிஜித், அமலா, அனு என வரிசையாக அறுபத்து மூன்று பெயர்கள் எழுதிய பேப்பரை நீட்டினாள். என்ன குழந்தாய் என கரிசனத்தோடு கேட்ட அவர், அத்தனை பெயர்களையும் சொல்லி அர்ச்சனை செய்து விபூதிபிரசாதத்தையும் கொடுத்தார். குழந்தாய் பிள்ளைகள் அனைவரும் தேர்வு எழுதி சமுதாயத்தில் நல்ல நிலைக்கு வருவார்கள் என்றார் அந்த அர்ச்சகர். அப்போது மணிஓசை ஒலிப்பதை கேட்டாள். நல்ல சகுனம் தான் குழந்தாய் என்றார். சன்னதியை நோக்கி மீண்டும் வணங்கிய அவளுக்கு சுப்பிரமணிய சுவாமியின் சிரசில் இருந்து பூ ஒன்று கீழே விழுவதை பார்த்தாள் அந்த தனியார் பள்ளி ஆசிரியை வள்ளி. ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் வள்ளியை போல இருந்தால் நாட்டிலும் வீட்டிலும் எதிர்கால மாணவர்கள் சிறப்பார்கள் என அருகில் இருந்தவரிடமும், தரிசனத்திற்கு வருவோர்களிடமும் அர்ச்சகர் சொல்லியது பிரகாரத்தை நோக்கி மெல்ல நடக்க அவளது காதில் கேட்டது.
|
|
|
|