|
இரண்யாட்சன், இரண்யன் என்ற அசுரர்கள் அதர்மத்தின் வடிவமாக இருந்தனர். இவர்களில் இரண்யாட்சனை முதலில் அழித்தார் பரம்பொருளான மஹாவிஷ்ணு. தனது சகோதரனை அழித்ததால் பழிக்குப் பழி வாங்க நினைத்தான் இரண்யன். தன்னை மேலும் வலிமைப்படுத்த பிரம்மாவை நோக்கி தவமிருந்தார். இதன் பலனாக, ‘இந்த மூவுலகையும் ஆளும் வல்லமை வேண்டும். இரவிலோ, பகலிலோ, தேவர்களாலோ, மனிதனாலோ, விலங்கினாலோ, பறவையாலோ, ஆயுதங்களாலோ, நீரிலோ, நிலத்திலோ, ஆகாயத்தாலோ எனக்கு மரணம் ஏற்படக்கூடாது. என் உடலில் இருந்து ஒரு சொட்டு ரத்தம் நிலத்தில் சிந்தினாலும், என்னை கொல்ல முயற்சிப்பவன் தலை சுக்குநுாறாக வெடித்துவிட வேண்டும்’ என்ற வரத்தைப் பெற்றான். பின்னர் தனது நகரத்திற்கு திரும்பியவன், ‘எல்லா உலகங்களுக்கும் நானே கடவுள்’ என அறிவித்தான். ஆணவத்துடன் அலைந்த அவன் அனைவரையும் துன்புறுத்தினான். இந்த நேரத்தில் தர்மத்தின் வடிவாக பிரகலாதன் தோன்றினான். இரண்யன் கயாது தம்பதிக்குப் பிறந்த அசுரகுல வாரிசு தான் இவன். உலகமெல்லாம் இரண்யனை வணங்க, இவனது மகன் பிரகலாதன் மட்டும் ‘ஓம் நமோ நாராயணாய’ என முழங்கினான். என்னதான் அசுர குலத்தின் பிறந்து இருந்தாலும் சாந்த குணத்தை பெற்று இருந்தான் பிரகலாதன். இதற்கு காரணம் என்ன தெரியுமா? பிரகலாதன் தன் தாயின் வயிற்றில் இருந்த காலம் அது. நாள்தோறும் நாரதர் வயிற்றில் இருந்த குழந்தைக்கு, ஈரேழு உலகத்துக்கும் தலைவர் மஹாவிஷ்ணு எனவும், ‘ஓம் நமோ நாராயணாய’ என்னும் எட்டெழுத்து மந்திரத்தையும் உபதேசித்திருந்தார். ஒருமுறை குழந்தையான பிரகலாதனுக்கு அசுரகுருவான சுக்ராச்சாரியார் பாடம் எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது அவர் ‘ஓம் இரண்யாய நமஹ’ என்று சொல்லும் போதெல்லாம், பிரகலாதன் ‘ஓம் நமோ நாராயணாய நமஹ’ என்று சொன்னான். இச்செய்தி இரண்யனை எட்டியது. ‘எனது சகோதரனை கொன்ற நாராயணனின் பெயரை யாரும் சொல்லக்கூடாது என கட்டளையிட்டுள்ளேன். என் மகனே எதிரியின் பெயரை சொல்கிறானே’ என கோபப்பட்டான் அசுரனான இரண்யன். அரண்மனைக்கு வரவழைக்கப்பட்ட தன் மகனிடம் இது குறித்து விசாரித்தான். அப்போதும் அவன், ‘‘பரம்பொருளான மஹாவிஷ்ணுவையே அனைவரும் வணங்க வேண்டும்’’ எனக் கூறினான். இதைக்கேட்டு கொந்தளித்தவன், ‘‘எங்கே அந்த விஷ்ணுவைக் காட்டு’’ என்றான். ‘‘அவர் துாணிலும் இருப்பார்; துரும்பிலும் இருப்பார்’’ என சொன்னான் பிரகலாதன். ‘‘இதோ பார். இந்த துாணிலுமா உன்னுடைய மஹாவிஷ்ணு இருக்கிறான்’’ என அருகில் உள்ள துாணைக் காட்டினான். ‘‘இதில் என்ன சந்தேகம். இருக்கிறார்’’ என கைகூப்பி நின்றான் பிரகலாதன். அவ்வளவுதான். கதாயுதத்தால் துாணைப் பிளந்தான் இரண்யன். அதில் இருந்து வெளிப்பட்டார் நரசிம்மர். அக்னி ஜூவாலை போன்ற கண்கள், அகன்ற வாய், கூரிய பற்கள், சிங்கத்தின் கர்ஜனையுடன் வந்தவர், அசுரனைத் துாக்கி மார்பைக் கிழித்து கர்ஜித்தார். இப்படி தன் பக்தனான பிரகலாதனுக்காக ஓடோடி வந்தவர்தான் நரசிம்மர். இப்படி நரசிம்மர் அவதரித்தது வளர்பிறை சதுர்த்தசி பிரதோஷ நேரமாகும். இதையே நாம் நரசிம்ம ஜெயந்தியாக கொண்டாடுகிறோம். இந்நாளில் இவருக்கு பானகம், சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டால் விருப்பம் நிறைவேறும்.
|
|
|
|