|
சமயக்குரவர் என்பவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர். இவர்கள் பாடிய திருமுறைகளே தேவாரம், திருவாசகம். ஆனால் காலப்போக்கில் இவை மறைந்தன. பிறகு இருவரது முயற்சியால் அது மீண்டும் கிடைத்தது. அன்றைய சோழ நாட்டை ஆட்சி செய்தவர் ராஜராஜ சோழன். இவர் சிறந்த ஆட்சியாளர். பெரும் சிவபக்தர். அவரைப் பார்க்க சிவனடியார்கள் பலர் வருவர். அவர்கள் தங்களுக்குத் தெரிந்த பதிகங்களைப் பற்றி பக்திச் சுவை சொட்டச் சொட்ட கூறுவர். இதைக் கேட்டவர் அடியார்கள் பாடிய திருமுறைகள் மீது அளவிலா அன்பு கொண்டார். இவை இருக்கும் இடம் எங்கே? என தேட ஆரம்பித்தார். அப்போது திருநாரையூரில் வாழும் நம்பியாண்டார் நம்பி என்பவருக்கு பொள்ளாப்பிள்ளையாரின் அருள் கிடைத்த செய்தி மன்னருக்கு தெரிந்தது. உடனே திருநாரையூர் சென்று நம்பியாண்டர் நம்பியிடம், திருமுறை எங்கு உள்ளது என பிள்ளையாரிடம் கேட்கும்படி தெரிவித்தார். அவரும் சைவத் திருமுறைகள் இருக்கும் இடத்தைக் காட்டியருளுமாறு பொள்ளாப் பிள்ளையாரிடம் வேண்டினார். ‘‘அன்பனே! சிதம்பரத்தில் உள்ள நடராஜப்பெருமான் கோயிலில், தேவார ஆசிரியர்கள் மூவருடைய திருக்கைகளின் அடையாளம் பொறிக்கப்பட்ட அறையில் திருமுறைகள் உள்ளன’’ என திருவாய் மலர்ந்தார். உடனே நம்பியாண்டார் நம்பியுடன் நடராஜர் கோயிலுக்கு சென்றார் ராஜராஜன். அங்குள்ள தில்லைவாழ் அந்தணர்களிடம் தெரிவித்தார். அவர்களோ, ‘தேவார ஆசிரியர் மூவரும் வந்தால்தான் அறையை திறக்க முடியும்’ என்றனர். உடனே மன்னர், மூவர்களின் சிலைகளை வடித்து அவர்கள் முன் நிறுத்தி, அறையை திறக்க வைத்தார். ஓலைச்சுவடிகள் புற்றால் மூடியிருந்தது. பிறகு கிடைத்த ஓலைகளை நம்பிகளிடம் ஒப்படைத்தவர், அவற்றைத் தொகுத்துத் தரும்படி வேண்டினார். இப்படி திருமுறைகளை தொகுத்து சைவத்துக்கு தொண்டாற்றியவர்கள் நம்பியாண்டார் நம்பியும் ராஜராஜ சோழனும். இதனால் இவர் ‘திருமுறை கண்ட ராஜராஜசோழன்’ என போற்றப்பட்டார்.
|
|
|
|