|
இலக்கியப் பரப்பில் எண்ணற்ற இலக்கியங்கள் தோன்றினாலும் தனித்தன்மை மிக்கதாய் மதிக்கப்படுவது ஆண்டாளினுடைய திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும். பெண்மையின் உணர்வுகள், எண்ணங்கள், மனத்தவிப்பு, ஆற்றாமையை அழகாக இவள் வெளிப்படுத்தி இருப்பாள். கண்ணன் மீதான காதல் உணர்வை இலக்கியச் சுவையோடு பாடிய பெருமை நாச்சியாரையே சேரும். ஒரு இளம் பெண்ணின் பருவ உணர்வுகளை இவ்வளவு தத்ரூபமாய் ஒரு ஆண் சொல்லிவிட வாய்ப்பில்லை. நாச்சியார் திருமொழியில் இடம்பெறும் சில பாசுரங்களை பார்ப்போம். காதலைத் தருபவன் மன்மதன் என்றும் காம உணர்வை உருவாக்குபவன் காமன் என்றும் சொல்வர். நாச்சியார் திருமொழியின் முதல் 10 பாடல்களில் கண்ணன் மீது காதலை ஏற்படுத்திய காமனை வழிபடும் போதெல்லாம் தன்னுடைய காதல் நிலையையும் சொல்லி விடுகிறாள். எத்தனையோ காதல் பாடல்கள் உள்ளன. இவற்றையெல்லாம் மீறிய காதல் தவிப்பை நாச்சியார் பாடல்களில் காணலாம். ஒருநாள் ஆண்டாள் மிகுந்த வருத்தம், கோபத்தில் இருந்தாள். காரணம் இல்லாமல் இல்லை. சிறு வயதிலேயே திருமணம் நிச்சயிக்கப்படும் அந்த காலத்தில் ஆண்டாளின் காதல் பிடிவாதத்தால் அவளுக்கு யாருடனும் நிச்சயம் ஏற்படவில்லை. அதிலும் அவள் பருவப் பெண்ணானவுடன் குடும்பத்தில் பெரிய பிரச்னை ஆயிற்று. காலாகாலத்தில் செய்ய வேண்டிய கடமையை செய்ய முடிய வில்லையே என்று அஞ்சிய உறவுகள் அவளை வற்புறுத்தின. எங்கே தனக்கு ஏதும் நடந்து விடுமோ என வருந்துகிறாள். ‘வானிடை வாழும் வானவருக்கு’ என்ற பாதி பாடலைப் பாடும் போதே விம்மி கண்ணீர் விடுகிறாள். ‘‘கண்ணனுக்கு தந்த நெஞ்சம் இன்னொருவனுக்கு இல்லை. அப்படி ஒரு நிலை வந்தால் வாழ்வே இல்லை” எனக் கதறுகிறாள்.
ஆண்டாளின் நிலை அறிந்த அவள் தோழி அங்கே வருகிறாள். வந்தவள் மன்மதனின் முன்பு விழுந்திருக்கும் ஆண்டாளை எழுப்புகிறாள். கலைந்த கேசமும் கரைந்த கண்களுடன் தோழியின் கை பிடித்தவாறு அழுகிறாள் ஆண்டாள். ”தோழியே... தேவர்களுக்காக முனிவர்கள் யாகம் செய்வதை நீ பார்த்திருக்கிறாயா? அதில் அவர்கள் அளிக்கும் அவிர்பாகம் என்னும் உணவு மிக மேலானது. அந்த புனித பொருளை எடுத்துச் செல்லும் போது, காட்டில் வாழும் நரி முகர்ந்து பார்த்தாலோ நாவால் யாராவது மாசுபடுத்தினாலோ கடவுளுக்கு அர்ப்பணிக்க முடியுமா... யாகத்தீயில் இட முடியுமா? முடியாது. அது தகாது. அப்படி கண்ணனுக்கென வளர்ந்த இந்த உடலையும் அவன் குடி கொண்ட நெஞ்சத்தையும் இன்னொருவருக்கு தாரை வார்ப்பது என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை. அப்படி ஒரு நிலை வந்தால் இறந்தே விடுவேன்” என கதறுகிறாள். அதற்கு அவள் தோழி, ”அடி கோதை உனக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை. கண்ணன் உன்னை ஊரறிய வந்து மணப்பான் என இன்னமும் நம்புகிறாயா? இதெல்லாம் நடக்குமா?” என்கிறாள். ”யாகத்தில் இடப்பெறும் பொருள்களெல்லாம் கடவுளை அடைவதை நீ காண்கிறாயா? இல்லை தானே! அது ஒரு நம்பிக்கை. அது பின்னாளில் பலன் கொடுக்கும் என நம்புகிறோம் இல்லையா? கண்ணன் மீது நான் கொண்ட காதல் அந்த யாகத்தைப் போல துாய்மையானது. அந்த புனிதமான நெருப்பிற்கு நானே என்னை கொடுப்பேன். அதுவும் என்னில் மாசு இல்லாமல் புனிதமாய் கொடுப்பேன்” எனக் கதறுகிறாள்.
இப்போது ஆண்டாள் கண்ணனிடமே கேட்கத் தொடங்கி விட்டாள். “ ஏ கண்ணா… நானும் என் தோழிகளும் சேர்ந்து மணலில் சிற்றில்கள் (மணல் வீடுகள்) செய்கிறோம். அதை எப்படி செய்தோம் தெரியுமா? ஆற்று மணலை அள்ளி வந்து கைகளாலேயே சலித்து மென்மையாக்கி, தண்ணீர் சேர்த்து பதமாக்கி ஒவ்வொரு பகுதியாக பார்த்து பார்த்து பொறுமையாக கட்டினோம். அந்த வீடுகளை எல்லாம் நீ இப்படி கலைக்கின்றாய். முதலையிடம் சிக்கி தவித்த யானைக்காக பறந்தோடி வந்தாயே. சிறுமியாகிய எங்களிடம் மட்டும் ஏன் அன்பு இல்லை? நீ என்னதான் அநியாயம் செய்தாலும் ஏனோ உன் மீது கோபம் வரவில்லை. மாறாக காதலே பெருகுகிறது. உள்ளம் உருகுகிறது. உன் அழகிய வண்ணம் பிரகாசிக்க, செவ்விதழ்கள் கனிந்து நெளிய, மயில்தோகை அசைந்தாட, கண்களில் குறும்பு கூத்தாட எங்களை நோக்கி நீ புரியும் பேரழகான புன்முறுவலில் ஏதோ மாயம் இருக்கிறது. அது கட்டிப்போட்டு விடுகிறது” என்கிறாள். அந்த காலத்தில் கூடல் இழைப்பது வழக்கம். அதாவது தரையில் வட்டம் வரைந்தால் நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கை. அப்படி கூடல் இழைக்கப் போன நாச்சியார், “ கண்ணன் என்னை கை பற்றுவான் என்றால், அவன் என்னை நெஞ்சோடு அணைப்பான் என்றால், கூடுவாய் என எதிர்பார்ப்போடு கூடல் இழைக்கின்றாள். ஆக எப்போதும் கண்ணனின் நினைவு தான் போலும் அவளுக்கு.
கண்ணனையே நினைத்து அவன் நினைப்பாலேயே வாழும் கோதை உணவின்றி மெலிந்து வளையல்கள் கைகளை விட்டு கழன்று விழும்படி வாடி விடுகிறாள். இது அவளின் காதலின் ஆழத்தை காட்டுகிறது. ‘‘பொதுவாக குயில்கள் கூவினால் அதைக் கேட்டு நான் ரசிப்பேன். ஆனால் குயிலே உன்னுடைய இசையை, உன் குரலை என்னால் கேட்டு இன்புற முடியவில்லை. காரணம் கண்ணன் என் நெஞ்சுக்குள் தீயாய் உள்ளே சுழன்று தகிக்கிறான்.அதனால் உன் இசையை என்னால் ரசிக்க இயலவில்லை. அதனால் உன் குரலும் எனக்கு கசக்கிறது. அது மட்டுமா… கண்ணா உன்னை நினைத்து காதலால் என் எலும்புகள் உருகுகின்றன கண்ணா! வேல் போன்ற என் கண்கள் துாக்கம் இன்றி பஞ்சடைந்து விட்டதாக தோழிகள் சொல்கிறார்கள். துன்பம் என்னும் கடலில் மூழ்கி தவிக்கும் என்னை கரை சேர்க்க தோணியாய் எப்போது வருவாய் கண்ணா… எதிர்பார்த்து காத்திருக்கிறேன். அங்கே யார் யாரோ வருகிறார்கள், உன்னை மட்டும் காணவில்லையே ஏன்... உன்னை நினைத்து நினைத்து உள்ளம் பாழ்பட்டு விட்டது. உடல் நலிந்து உயிர் கசிகிறது. முத்து போல் ஒளிரும் என்று என் புன்னகையை சொல்வார்கள். அந்த புன்னகை போன இடம் தெரியவில்லை. என்னை இந்நிலைக்கு ஆளாக்கிய கண்ணனை வரச் சொல்லிக் கூவுவாய் குயிலே“ என்று குயிலைப் பணிக்கிறாள்.
அத்துடனா நிற்கிறாள்! ‘‘கண்ணா… எல்லோரையும் சதா பயமுறுத்தும் அந்த படமெடுக்கும் பாம்பின் மீது தினமும் படுத்து உறங்குபவனே… என் முகத்தை ஏன் வந்து பார்க்காமல் இருக்கிறாய்? குழந்தை முதல் பெரியவர் வரைக்கும் பாம்பை கண்டால் தான் பயம். அந்த பாம்பை விடவா என் முகம் உன்னை அதிகம் பயமுறுத்தும்? அதை நீ நம்புகிறாயா? என் மீது ஏன் இப்படி பாராமுகமாய் இருக்கிறாய்? உன்னைக் காணாது போனால் எந்த பயனும் இல்லாமல் கிளர்ச்சியுற்றுக் கிடக்கும் என் மார்பகங்களை பிடுங்கி எடுத்து அவற்றை உன் மார்பில் எரிந்தாலாவது என் கவலை தீருமா தெரியவில்லையே?! என்று பாடும் இடங்களில் காதல் தவிப்பின் உச்சத்தை தொட்டு விடுகிறாள் கோதை. அவளின் காதல் தவிப்பு நம் மனதையும் நோகச் செய்கிறது.
இப்படியெல்லாம் மெய்யுருகி பாடும் இப்பாடல்கள் மூலம் நாச்சியார் ஒரு பெண் தான் என ஆணித்தரமாகச் சொல்ல முடியும். ஒரு பெண்ணின் மனப்பதிவு எத்தனை நுட்பமானது. ஆண்களுக்கு இப்படிப்பட்ட எண்ணம், சிந்தனைகள் ஏற்படுவது அபூர்வம். பெரியாழ்வாரின் கற்பனை படைப்பு ஆண்டாள் என்றால் ஒரு மகள் தன்னை உடையேன் உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன் செங்கண்மால் தான் கொண்டு போனான்” என்று அவர் பாடியிருக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காதல்லவா? மேலும் இவர்கள் இருவரது பாடல் நடைகளும் வேறுபட்டுள்ளன.
ஆண்டாளுடைய பாசுரங்களில் இளமை மணம் வீசுகிறது. காதலின் புதுமை பொலிகின்றது. பள்ளத்தில் பாயும் வெள்ளம் போல உணர்ச்சி பெருக்கில் பொங்கி நுரைத்து விழுகின்றது. பெரியாழ்வாரின் பாசுரங்களிலோ முதிர்ந்த அனுபவமும், அபூர்வ எளிமையும், சோகம் கலந்த அன்பு முதிர்ச்சியும் வெளியாகின்றன. ஆண்டாளின் பாடல்களோ காதல் பெருங்கடலின் அலைகள், சுழிகள், நீரோட்டங்கள் ஆகும். இதன் மூலம் பெரியாழ்வாரின் கற்பனை படைப்பு ஆண்டாள் இல்லை என இதன் மூலம் உணர முடிகிறது. இந்த மண்ணுலகில் வாழ்ந்து மறைந்த பெண் ஆழ்வார் என்பது தெரிகிறது. ஆண்டாளைப் போலவே துாய நெஞ்சத்துடன் நாமும் கண்ணனிடம் பக்தி கொள்வோம்… வாருங்கள்! |
|
|
|