|
இந்திரன் அழைக்கவும் கந்தர்வனான சித்திரசேனனும் பிரசன்னமாகி வணங்கினான். ‘‘சித்திரசேனா... நான் உனக்கொரு பணியினை அளிக்க உள்ளேன். அதை நீ உன் கூட்டத்தவரோடு சேர்ந்து நிறைவேற்ற வேண்டும்’’ ‘‘உத்தரவிடு தேவேந்திரா! செய்யக் காத்திருக்கிறேன்’’ ‘‘பூலோகத்தின் துவைத வனத்தில் பாண்டவர்கள் வனவாசம் புரிந்து வருவதை அறிவாயல்லவா?’’ ‘‘நன்கறிவேன்’’ ‘‘அவர்கள் என் அன்புக்கும் கருணைக்கும் உரியவர்கள். விதிவசத்தால் வனவாசம் புரிந்து வருகின்றனர்’’ ‘‘அதையும் அறிவேன்’’ ‘‘அவர்களின் வனவாசத்துக்கு காரணமே சகுனியும், துரியோதனனும் தான். அவர்கள் வனவாசத்திலும் பாண்டவர்களை துன்புறுத்த திட்டமிட்டுள்ளனர்’’ ‘‘இது அடாத செயல்’’ ‘‘ஆம்... அந்த அடாத செயலை அவர்கள் செய்ய முடியாதபடி தடுத்து திரும்பி ஓடும்படி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் கைது செய்து கந்தர்வர்களாகிய உங்களின் அடிமைகளாக ஆக்க வேண்டும்’’ ‘‘அப்படியே செய்கிறேன்’’ ‘‘பாண்டவர் மீது துரியோதனாதியர்களின் ஒற்றைப் பாணம் கூட பட்டுவிடக் கூடாது. உனது கந்தர்வக் கூட்டம் அவர்களை அரண் போல் இருந்து காத்திட வேண்டும்’’ ‘‘உத்தரவு... ஆயினும் ஒரு கேள்வி’’ ‘‘கேள்’’ ‘‘துரியோதனாதியர்களை பாண்டவர்களால் எதிர்கொள்ள முடியாதா... அர்ஜுனனும் பீமனும் கூட போதுமே’’ ‘‘வனவாசம் வந்த இடத்திலும் அவர்கள் யுத்தம் புரிந்து தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டுமா? அதோடு படைக்கலங்களை அவர்கள் ஒரு வன்னி மரத்தில் அடைக்கலப்படுத்தி விட்டு சன்யாசி போலத் தான் வனவாசத்தில் உள்ளனர். தீர்த்தங்களில் நீராடியும், முனிகள், ரிஷிகளை வணங்கி ஆசிகள் பெற்றும் ஒரு பவித்ர வாழ்வு வாழ்ந்து வருகின்றனர். அதை துரியோதனன் ரத்தக்களரியாக்கப் பார்க்கிறான். அதை நாம் அனுமதிக்கக் கூடாது. பாண்டவர்கள் வரையில் அவர்களுக்கு பக்கத்துணையாக நாம் இருப்பதை காட்டியாக வேண்டும்’’ ‘‘இப்போது புரிகிறது. உமது விருப்பத்தை நிச்சயம் ஈடேற்றுவேன். கந்தர்வர்களின் மாயாபலம் எப்படிப்பட்டது என்பதையும் அந்த கவுரவப் பாவிகளுக்கு புரிய வைப்பேன்’’ ‘‘சரியாகச் சொன்னாய். வெற்றிக்கு என் நல்லாசிகள்’’ இந்திரன் வாழ்த்திட சித்திரசேனன் விடைபெற்றுக் கொண்டான்.
துரியோதனாதியர்களும் கோஷ யாத்திரை என்ற பெயரில் ரதங்களில் துவைத வனம் நோக்கி பயணமாயினர். துரியோதனனும் அவன் மனைவி பானுமதிக்கும் நான்கு குதிரைகள் பூட்டிய ரதம்! கர்ணனுக்கும் அவன் மனைவி சுபாவிற்கும் கூட அதே போல ரதம்! சகுனியும் அவன் புத்திரனும் ஒரு ரதத்தில்... விகர்ணன் துச்சாதனன் உள்ளிட்டோர் இன்னொரு ரதத்தில். துரோணரும், பீஷ்மரும், விதுரரும் நாங்கள் வரவில்லை. எங்களுக்கு சில பித்ரு காரியங்கள் உள்ளன எனக் கூறி விட்டனர். மற்றபடி ஆயிரத்திற்கும் குறையாத வீரர்கள், நுாற்றுக்கணக்கான சமையல் கலைஞர்கள், ஆடல் பாடல் கலைஞர்கள் என இன்பச் சுற்றுலாவுக்கு திட்டமிடுவது போல துரியோதனன் திட்டமிட்டாலும், மறைமுகமாய் பெரும் போர்க்கருவிகளுடன் கூடிய ஒரு படையையும் ஏற்பாடு செய்திருந்தான். முன்னதாக பாண்டவர்கள் துவைத வனத்தில் எங்கே தங்கியுள்ளனர் எனக் கண்டறிந்து அவர்கள் இருக்கும் இடத்தைச் சுற்றி வட்ட வடிவில் படை வீரர்கள் கூடாரங்கள் அமைத்து தங்கிட வேண்டும் என கட்டளையிட்டிருந்தான். அதற்கேற்ப எல்லோரும் சாரிசாரியாக வனம் புகுந்தனர். தங்களைக் குறி வைத்து துரியோதனன் இப்படி ஒரு இழிசெயலில் இறங்கியிருப்பதை பாண்டவர்கள் உணராமல் எப்போதும் போல அவரவர்களுக்கான கடமைகளில் ஈடுபட்டிருந்தனர். இப்படி ஒரு நிலையில்தான் கவுரவ சேனை வனப்பகுதியில் உள்ளே நுழைய முற்பட்ட போது மாயமாய் அம்புகள் அவர்களைத் தாக்கத் தொடங்கின! அது கந்தர்வர்களுக்கான நிலப்பரப்பும் கூட... இதை கவுரவாதியர்கள் துளியும் எதிர்பார்க்கவில்லை. பாண்டவர்களே தங்கள் வருகையறிந்து எதிர்ப்பதாக எண்ணினர். ஆனால் சஞ்சயன் என்ற துாரதிருஷ்டிக்காரன், ‘‘இது பாண்டவர் செயல் அல்ல. கந்தர்வர்கள் செயல்’’ என துரியோதனனிடம் கூறினான். அதைக் கேட்டு துரியோதனன் வியந்தான். அதிர்ந்தான். ‘‘கந்தர்வர்கள் எதற்காக நம்மோடு போர் புரிகின்றனர்?’’ எனக் கேட்டான். ‘‘இது அவர்களுக்கு உரிமைப்பட்ட இடம்! இவர்களை மீறிக் கொண்டு தான் நாம் பாண்டவர்களிடம் செல்ல முடியும். ஆனால் அது அவ்வளவு சுலபமல்ல’’ என்றான் சஞ்சயன்! அதைக் கேட்ட துரியோதனன் முகம் சிவந்தான். ‘‘பாண்டவர்கள் இப்போது பரதேசிகள்... இந்த பரதேசிகளுக்கு கந்தர்வர்கள் துணையா... இது கேவலம்’’ என்றான். ‘‘இப்படியெல்லாம் பேசுவதால் பயனில்லை. கந்தர்வர்களை வென்றாலே பாண்டவர்களை நாம் நெருங்கி எதையும் செய்ய முடியும்’’ ‘‘அப்படியானால் முதலில் அதைச் செய்வோம். அந்த கந்தர்வர்களும் நம்மைப் போல மனிதர்கள் தானே! இனத்தால் வேறுபட்டாலும் வீரத்தில் ஒன்று தானே!’’ ‘‘அப்படி இல்லை. கந்தர்வர்கள் மாயம் கற்றவர்கள். ஒன்றை பத்தாக்கி, பத்தை நுாறாக்கி, அதையும் ஆயிரம் ஆக்கும் ஆற்றல பெற்றவர்கள். அவர்களை விசேஷ சக்தியும், சித்தியும் பெற்றவர்களால் மட்டுமே எதிர்க்க முடியும்?’’ ‘‘அதையும் பார்க்கிறேன்’’ என்ற துரியோதனன் கர்ணனையும், சகுனியையும் பார்த்திட, அவர்கள் அப்போதே தங்கள் தனுராயுதத்தை கையில் எடுத்தனர். ‘‘பலே கர்ணா பலே... நான் எள் என்றால் நீ எண்ணெய்யாக மாறி விடுகிறாய்! மாமா நீங்களும் உங்கள் வயதை எண்ணாமல் எதிர்க்கத் துணிந்து விட்டது மகிழ்ச்சி தருகிறது’’ என கொக்கரித்த துரியோதனன் அவனும் தனுராயுதத்தை எடுத்து விட்டான். முன்னதாக தங்கள் பத்தினிகளை பாதுகாப்பாக கூடாரங்களில் காவலோடு வைத்து விட்டு வந்து கந்தர்வக் கோட்டப் பகுதிக்குள் நுழையத் தொடங்கினர். முன்போலவே அம்பு மழை எதிரில் இருந்து பொழியலாயிற்று. ஆனால் எவ்வளவு முயன்றும் கந்தர்வர்களின் அம்பு மழையை தடுக்கவோ அவர்களை வீழ்த்தவோ முடியவில்லை. ஒரு கட்டத்தில் அவர்கள் முன்னால் பிரசன்னமான சித்திரசேனன் முதற்காரியமாக கர்ணனை வலை கொண்டு வீசி ஒரு புலியைப் பிடிப்பது போலத் தான் அவனைப் பிடித்தான். அடுத்து சகுனியை அதன் பின் சகுனி புத்திரனை! அதற்கும் பின் துச்சாதனனை! என்று பிடித்தவன் துரியோதனனையும் வளைத்துப் பிடித்ததோடு அவன் மனைவி பானுமதி மற்றும் கர்ணன் மனைவி சுபாவையும் கூட கைது செய்து தன் முன்னே அவர்களை மண்டியிடும்படிச் செய்தான். துரியோதனனோ கொக்கரிக்கலானான். ‘‘ஏ கந்தர்வா... மானுடர்களோடு மானுடத் தன்மைகளோடு மோது. மாய சக்தியைக் காட்டாதே. இது வீரம் ஆகாது’’ என்றான். ‘‘மானுடன், மானுடத் தன்மை என்றெல்லாம் நீ பேசாதே. துரியோதனா! தீர்த்த யாத்திரைக்காகவும், யோக பயிற்சிகளுக்காகவும் தான் அரசர்கள் வனப்பிரவேசம் செய்வர். நீயோ பாண்டவர்களை அழிக்கத் திட்டமிட்டு வனப்பிரவேசம் செய்தாய். உனக்கு எங்களை குறை சொல்லும் யோக்யதை கிடையாது’’ என்றான் சித்திரசேனன். ‘‘கந்தர்வரே! எங்களுக்கு இப்படி ஒரு திட்டம் இருப்பதெல்லாம் தெரியாது. நாங்கள் தீர்த்த யாத்திரையாக கருதியே வந்தோம். எனவே எங்கள் பொருட்டு இவர்களை மன்னித்து விட்டு விடுங்கள். நாடு திரும்பி விடுகிறோம்’’ என்றாள் கர்ணனின் மனைவி சுபா. அதை துரியோதனன் மனைவி பானுமதியும் ஆமோதித்தாள். ‘‘அப்படியெல்லாம் விட்டு விட முடியாது. நாங்கள் இந்திரனுக்கு மட்டுமே கட்டுப்பட்டவர்கள்’’ என்றாள் சித்திரசேனன். இப்படி விவாதம் நடைபெறும் சமயம் சஞ்சயன் கந்தர்வர்களுக்கு தெரியாமல் பாண்டவர்கள் இருக்கும் குடிலை தேடிச் சென்று நின்றான். சஞ்சயனைக் காணவும் தர்மனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. ‘‘அடடே... சஞ்சயா... வா... வா...’’ ‘‘வந்தனம் தர்மப்பிரபு! நான் இப்போது உங்களைக் கண்டு செல்லும் அதிதியாக வரவில்லை. உதவி கேட்டு அகதியாக வந்துள்ளேன்’’ ‘‘என்ன நடந்தது சஞ்சயா.. நீ அகதியா?’’ ‘‘ஆம். நீங்கள் இங்கிருப்பதை பிராமணர் ஒருவர் வாயிலாக அறிந்த துரியோதனர் உங்கள் மீதுள்ள காழ்ப்பால் இந்த வனத்திலேயே உங்களை அழிக்கும் எண்ணத்துடன் பெரும் படையோடு வந்தார். ஆனால் உங்களைப் பாதுகாக்கும் பொருட்டு கந்தர்வப் படை ஒன்று தடுத்து நிறுத்தி அவர்களைக் கைதும் செய்து விட்டது’’ சஞ்சயன் சொன்னதைக் கேட்ட பீமன் மகிழ்ந்தவனாய், ‘‘நீ சொல்வது உண்மையா?’’ என்று கேட்டான். ‘‘வந்து பாருங்கள் உங்களுக்கே தெரியும்’’ ‘‘கந்தர்வர்களுக்கு ஏன் எங்கள் மீது இத்தனை கருணை’’ ‘‘அது இந்திரன் கட்டளை! அடுத்து அந்த வனப்பரப்பில் கந்தர்வர்களுக்கான பாகமும் உள்ளது. அதில் நுழைய எவருக்கும் அனுமதியில்லை. துரியோதனன் அங்கு நுழைந்து முகாமிட்டான். இப்படி பல காரணங்கள் இப்போது அவர்களை கந்தர்வ அடிமைகளாக்கி விட்டது’’ சஞ்சயன் இப்படி சொல்லவும் பீமன் மட்டுமல்ல அர்ஜுனன், நகுலன், சகாதேவன், திரவுபதி என சகலரும் மகிழ்ந்தனர். ஆனால் தர்மன் முகத்தில் மட்டும் பலத்த சலனம்!
|
|
|
|