காசி விஸ்வநாதரை தரிசிக்க வெகுதுாரத்தில் இருந்து பண்டிதர் ஒருவர் பாத யாத்திரையாக வந்தார். கங்கையில் குளிப்பதற்கு சிறிது துாரம் இருக்கும் முன் அவர் அணிந்திருந்த செருப்பு அறுந்தது. அந்த இடத்தில் வசித்து வந்த செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் அதை சரி செய்ய சொன்னார். அவரிடம் ‘‘ நான் வெகுதுாரத்தில் இருந்து வருகிறேன். நீயோ புனிதமான இவ்விடத்தில் அருகில் இருந்தும் தினமும் கங்கையில் நீராடி விஸ்வநாதரை வழிபாடு செய்யலாமே’’ என கேட்டார். அதற்கு அவர் ‘‘ஐயா நான் ஏழை. அன்றாடம் வேலை செய்வதற்கே நேரம் சரியாக இருக்கிறது’’ என சொன்னார். அதை குளத்தில் இருக்கும் தாமரையின் மகிமை அங்குள்ள தவளைக்கு எப்படி தெரியும் என நினைத்துக் கொண்டார் பண்டிதர். சரி செய்த செருப்புக்கு கூலியாக பணத்தை கொடுத்தார். வாங்க மறுத்த அவர் ‘‘ உங்கள் வழிபாடுகளை எல்லாம் முடித்த பின் கங்கையம்மனிடம் இந்த தாம்பூலத்தை கொடுங்கள்’’ என சொன்னார். அதன்படியே அதை கங்கையம்மனிடம் அர்ப்பணித்தார் பண்டிதர். அப்போது நதியில் இருந்து ஒரு கை தோன்றி தாம்பூலத்தை வாங்கி கொண்டு ஒரு தங்க வளையலை தொழிலாளிக்கு பரிசாக பண்டிதரிடம் கொடுத்தது. இது அவருக்கு தெரியவா போகிறது என நினைத்தவாறு தனது வீட்டிற்கு எடுத்து சென்றார். பேராசை கொண்ட அவரது மனைவி ஒரு வளையலை வைத்து என்ன செய்வது இதை விற்றால் பணம் கிடைக்கும் என நினைத்து நகைக்கடைக்கு சென்றாள். கடைக்காரரோ ‘‘ஜோடியாக இருந்தால் தான் வளையலை வாங்கிக் கொள்வேன். இல்லாவிடில் இது திருட்டு வளையல்’’ என காவலரிடம் புகார் செய்வேன்’’ என சொன்னார். பயந்த அவள் பண்டிதரிடம் விபரத்தை சொல்ல வேறு வழியின்றி செருப்புத் தைக்கும் தொழிலாளியிடம் வந்தார் பண்டிதர். அனைத்தையும் அறிந்த அவர் தன்னிடம் வைத்திருக்கும் மற்றொரு வளையலையும் எடுத்து கொடுத்தார். படித்த கர்வம் எல்லாம் கரைந்து திருந்திய பண்டிதராக அங்கிருந்து புறப்பட்டார்.