|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » பிராயோபவேசம் |
|
பக்தி கதைகள்
|
|
சகுனியின் பேச்சு துரியோதனனை மிக சிந்திக்க வைத்தது. ‘‘மாமா... நீங்கள் சொல்வது உண்மையா?’’ என பற்கள் நரநரக்க கேட்டான். ‘‘என்ன சந்தேகம் துரியோதனா? தர்மனும் அவன் சகோதரர்களும் கந்தர்வர்களை கூட்டு சேர்த்துக் கொண்டு நம்மை கைது செய்வது போல் செய்து பின் மன்னித்து விடுவிப்பது போல நாடகமாடியுள்ளனர். அவர்கள் கந்தர்வர்களை நாடாமல் இருந்திருந்தால் நிச்சயம் நாம் வென்றிருப்போம்’’ ‘‘அப்படியானால் நாம் பெற்ற விடுதலை அவர்கள் நமக்கு போட்ட பிச்சை என்று சொல்லுங்கள்’’ ‘‘அப்படி நாம் கருத வேண்டும் என்பதே அவர்கள் எண்ணம்’’ ‘‘மாமா... இது கேவலத்திலும் கேவலம்’’ ‘‘ஆம்... எக்காரணம் கொண்டும் பாண்டவர்களிடம் சமாதானமாக போகக் கூடாது. அவர்கள் நம்முடனான பகையை தந்திரமாக தவிர்க்க செய்யும் முயற்சி இது’’ ‘‘புரிகிறது. அதே சமயம் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாகி விட்டதே மாமா’’ ‘‘ஆம்... பாண்டவர்கள் விஷயத்தில் இன்னமும் கடுமையாக நடக்க வேண்டும். வனவாசம் முடிந்து நிலையிலும் ஹஸ்தினாபுரம் திரும்பி விடக் கூடாது. அஞ்ஞாத வாசத்தின் போதே அவர்களை நாம் எப்பாடு பட்டாவது அழித்து விட வேண்டும்’’ என்றான் சகுனி. துரியோதனன் மனதிற்குள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விஷம் கலக்க முயன்றதை துரியோதனன் மனைவியான பானுமதி உணர்ந்தாள். சகுனி இல்லாத நேரத்தில் துரியோதனனிடம் அவள், ‘‘பிரபோ... சகுனி மாமா பேச்சைக் கேட்டு நீங்கள் பாண்டவர்களை தவறாக எடை போடாதீர்கள். உண்மையில் அவர்கள் பெருந்தன்மையுடன் நடந்துள்ளனர். நீங்கள் அவர்களை அழிக்க வந்தீர்கள். அவர்களோ நமக்கு வந்த அழிவை தடுத்து புதுவாழ்வை அளித்துள்ளனர். இனியும் அவர்களை பகைவராக கருதுவது சரியல்ல...’’ என்றாள்.
‘‘உண்மைதான் பானு நீ சொல்வது... பாண்டவர்களை என்னால் எந்த வகையிலும் வெல்ல முடியவில்லை. சண்டையிலும் அவர்களே வெல்கின்றனர். சமாதானத்திலும் அவர்களே வெல்கின்றனர்’’ ‘‘இது ஒருவகையில் நல்ல வெற்றி தானே? இதற்காக எதற்கு வருந்த வேண்டும்? அவர்களுக்கான நாட்டை இப்போதே கூட அழைத்து வழங்குங்கள். இதன் மூலம் தர்மனின் பெருந்தன்மையை நீங்கள் வென்றதாக ஆகி விடும். வரலாற்றிலும் உங்கள் பெயர் நிலைக்கும்’’ பானுமதியின் ஆலோசனையை துரியோதனன் சகுனியிடம் கூறி, ‘‘மாமா... தர்மனின் பெருந்தன்மைக்கு நான் பதில் பெருந்தன்மையை காட்டுவதே சரி. இல்லாவிட்டால் உலகம் என்னை கோழையாக பார்க்கும்’’ என்றான். சகுனியோ அதிர்ந்தான். ‘‘துரியோதனா... எதிரி மீது இரக்கம் காட்டுகிறாயே... தர்மன் பெருந்தன்மையை நடப்பது போல நடித்துள்ளான். கந்தர்வர்களோடு கூட்டு சேர்ந்து செய்த சதியை நீ பெருந்தன்மையாக கருதுவது பேதைத்தனம்’’ ‘‘மாமா நான் ஏதாவது செய்தே தீர வேண்டும். இல்லாவிட்டால் இந்த உலகம் என்னை கோழை என கருதும்’’ ‘‘இது கற்பனை. நீ எப்போதும் கோழையாக மாட்டாய். மகாவீரன்’’ ‘‘அப்படியானால் எனக்கு தோல்விகளே ஏற்பட்டிருக்கக் கூடாதே’’ ‘‘உன் தோல்விகளுக்கு பாண்டவரின் தந்திரம் தான் காரணம். நேருக்கு நேர் உன்னோடு மோத யாருக்கும் துணிவில்லை. உன் வரசித்தியையும் நீ மறந்து விடுகிறாய்’’ ‘‘நீங்கள் என்ன சொன்னாலும் சரி. என் மனம் தெளிவடைய மறுக்கிறது. பாண்டவரிடம் நான் ஏதாவது ஒருவிதத்தில் தோற்றுக் கொண்டே இருக்கிறேன்’’ ‘‘துரியோதனா நடந்ததை நினைத்து குழம்பாதே. அவசரப்பட்டு பாண்டவரை அழைத்து அவர்கள் நாட்டை அவர்களுக்கு தருகிறேன் என்ற தவறையும் செய்யாதே. அமைதியாக இரு’’ ‘‘ஆம்...இப்போது எனக்கு தேவை அமைதி தான்... நான் இந்த வனத்திலேயே தங்குகிறேன். நீங்கள் எல்லோரும் திரும்பிச் செல்லுங்கள்’’ ‘‘நாங்கள் மட்டும் செல்வதா... நாட்டை யார் ஆள்வது?’’ ‘‘என் சார்பில் என் தம்பி துச்சாதனன் அரசாளட்டும். நீங்களே அவனுக்கு முடிசூட்டி விடுங்கள்’’ ‘‘உனக்கு பைத்தியம் பிடித்து விட்டதா... தர்மனின் தந்திரச் செயலை பெருந்தன்மையாக கருதிக் கொண்டு இப்படி உன்னை தாழ்த்திக் கொள்வது சரியல்ல’’ என சகுனி எவ்வளவு கூறியும் துரியோதனன் சமாதானமாகவில்லை. துச்சாதனனை அழைத்து அரசுப் பொறுப்பை ஏற்கச் சொன்னான். ‘‘ஐயோ அண்ணா! உனக்கான சிம்மாசனத்தில் நானா? முடியவே முடியாது’’ என பதறினான். ஆனால் பானுமதி மகிழ்ந்தாள். ‘‘என் கணவருக்குள் நல்ல மாற்றம் நிகழத் தொடங்கி விட்டது. ஆட்சி அதிகாரத்தை விட மானம், மரியாதை தான் பெரிது என அவர் எண்ணுவதாலேயே இப்படி நடக்கிறார். தர்மனின் பெருந்தன்மை இப்படி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கவில்லை’’ என தன்னைச் சார்ந்தவர்களிடம் சொல்லி மகிழ்ந்தாள். துரியோதனனின் மனமாற்றத்துக்கு ஆளான செய்தி பாண்டவரை அடையவும் அவர்களிடமும் வியப்பு. ‘‘துரியோதனனா இப்படி மனம் மாறியிருக்கிறான். நம்ப முடியவில்லையே’’ என்றான் நகுலன். ‘‘துரியோதனன் சமாதானமாக தயாராகி விட்டான். ஆனால் சகுனி அதை கெடுத்து நம் மீது பகை நீடிப்பதை விரும்புகிறான்’’ என்றான் சகாதேவன். ‘‘கழுதை கூட குதிரையாகும்; அந்த குதிரைக்கு கொம்பும் முளைக்கும். ஆனால் துரியோதனன் மட்டும் நல்லவனாக மாட்டான். எல்லாமே நாடகம்’’ என்றான் பீமன். பீமனின் கருத்து துரியோதனனுக்கு தெரியவும் அவன் மனம் மேலும் சலனப்பட்டது. அடுத்த நொடியே வேகமாக ஒரு முடிவுக்கு வந்தான். துச்சாதனன், கர்ணன், விகர்ணன், சகுனி என்று தன்னைச் சார்ந்த சகலரையும் அழைத்த துரியோதனன், ‘‘என் அருமை பந்துக்களே! நான் இக்கட்டான தருணத்தில் இருக்கிறேன். என்னைச் சுற்றி நடப்பவையும் புதிராக உள்ளது. குறிப்பாக கந்தர்வர்களிடம் நாம் தோற்றது கேவலம். அதை விடக் கேவலம் அவர்கள் நம்மை மன்னித்து விடுதலை செய்தது. அதற்கு காரணம் பாண்டவர்கள் என்பதை அறிந்த போது நான் அப்போதே இறந்து விட்டேன். அவர்கள் மன்னித்து அதனால் விடுதலை பெற்று வாழ்வதை விட சாவது எவ்வளவோ மேல்’’ துரியோதனன் அப்படி ஒரு கேள்வி கேட்பான் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ‘‘நண்பா... வாழ்வில் வெற்றி தோல்வி சகஜம். அதையே நினைத்தபடி இருந்தால் வாழ முடியாது. கந்தர்வர்கள் வரையில் நமக்கேற்பட்டது ஒரு தோல்வியே அல்ல. அவர்கள் மாயவித்தை கற்றவர்கள். நாமோ புஜபலத்தை மட்டும் நம்புபவர்கள். அப்படி இருக்க நமக்கு ஏற்பட்டது எப்படி தோல்வியாகும்?’’ என கர்ணன் சமாதானம் கூறிப் பார்த்தான். ‘‘அதைக் கூட ஜீரணித்து விடுவேன். ஆனால் தர்மன் சொல்லி கந்தர்வன் நம்மை விடுவித்ததை தான் ஏற்க முடியவில்லை’’ என குமுறினான் துரியோதனன். ‘‘அதைத்தான் தந்திரம் என்கிறேன். உண்மையில் அவர்கள் தனித்து நம்மோடு மோதியிருந்தால் நாமே வெற்றி பெற்றிருப்போம். நீ இது புரியாமல் புலம்புகிறாய்’’ என்றான் சகுனி. ‘‘இல்லை. தர்மன் மன்னித்து அதன் காரணமாக நான் உயிர் வாழ்வதே கேவலம்’’ ‘‘அப்படி நினைக்காதே. இதை ஒரு வாய்ப்பாக கொண்டு பாண்டவர் மீதுள்ள பகையை நீக்கிக் கொள்’’ என்றார் விதுரர். அப்படி கூறவும் சகுனிக்கு கோபம் பீறிட்டது.‘‘விதுரா... வாயை மூடு. துரியோதனன் பாண்டவர்களோடு இணக்கமாக செல்வதற்கு தற்கொலை செய்து சாவது மேல்’’ என்றான். அடுத்த வினாடி துரியோதனனும் அதைப் பிடித்துக் கொண்டான். ‘‘சரியாகச் சொன்னீர்கள் மாமா. நான் சாவது தான் இப்போது மேலான செயல். அதுவே இதுநாள் வரையிலான என் பெருமையை நிலைக்க வைக்கும். இனியும் தாமதிக்கப் போவதில்லை. தீ வளர்த்து அதில் என்னையே ஆஹுதியாக அளித்திடும் ‘பிராயோபவேசத்தை’ நிகழ்த்தப் போகிறேன்’’ என்றான் துரியோதனன். எல்லோரிடமும் அதனால் பலத்த அதிர்ச்சி.
|
|
|
|
|