|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » தாகம் தீர்த்த கீதங்கள் |
|
பக்தி கதைகள்
|
|
ஸந்த் துக்காராம் எழுதிய ‘காயே துஜே வேசெ மஜ’ என்று தொடங்கும் ‘அபங்’ பாடலின் பொருள். ‘விட்டலா, நீ எனக்கு தரிசனம் அளித்து ஓரிரு வார்த்தை பேசினால் உனக்கு என்ன நஷ்டம்? உன் உருவத்தைக் காண்பித்தால் நான் உன்னைத் திருடிக் கொண்டா போய்விடுவேன்? அதற்காக பயந்து ஒளிந்திருக்கிறாயா? உன்னுடைய வைகுண்டம் எனக்கு வேண்டாம். அதைப் பறித்துக் கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன்? உன்னுடைய நுால் இழை கூட வேண்டாம். ஆனால் உன்னை தரிசிக்க வேண்டும் என மிக மிக ஆசை கொள்கிறேன்’
நாமதேவரும் ஞானேஸ்வரரும் இணைந்து பக்தி மார்க்கத்தை வட இந்தியாவில் பரப்ப பயணம் மேற்கொண்டார்கள் என்பதை பத்மநாபன் குறிப்பிட்டதும் மயில்வாகனன் ஒரு கேள்வி கேட்டான். ‘அப்பா நாமதேவர் பற்றி சொல்லிக்கிட்டு வர்றீங்க. இப்போ ஞானேஸ்வரர்னு இன்னொருத்தரைக் குறிப்பிடறீங்க. அவருடைய கதையை இதுவரை சொல்லலையே’ என்றான். ‘ஞானேஸ்வரர் கல்விக்கடல். ஞானத்தின் உச்சம். முதலில் நாமதேவர், ஞானேஸ்வரர் பயணம் குறித்து சொல்லிட்டு அப்புறமா ஞானேஸ்வரர் மகிமை பற்றி சொல்கிறேன்’ என்றார் பத்மநாபன். ‘இப்படி ஒரே நேரத்தில் விட்டலனின் பல பக்தர்களும் சேர்ந்து இருப்பது சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது’ என்றாள் பத்மாசனி. ‘விட்டலனின் பரம பக்தையான ஜனாபாய் விவரிக்கும் ஒரு காட்சி பற்றி உங்களுக்குக் கூறுகிறேன். ‘ஒருமுறை சந்திரபாகா நதிக்கரையில் அமர்ந்திருந்த போது ஞானேஸ்வரர் பிரசாதமான பொரியை கொடுத்தார். நாமதேவர் கீர்த்தனையை பாடத் தொடங்க, விட்டலன் முன்னால் வந்து ஆடத் தொடங்கினான். நான் (அதாவது ஜனாபாய்) ஞானேஸ்வரிடம் பாடும்படி கேட்டேன். அவரும் பாடினார். சந்தங்களுக்கு ஏற்ப விட்டலன் ஆடினான். அவன் தன்னை மறந்து வேகமாக ஆட ஒரு கட்டத்தில் அவனது பீதாம்பரம் அவிழ்ந்தது. ‘தேவா ஜாக்கிரதையாக இருங்கள்’ என்றனர். கூடியிருந்த சாதுக்கள் பகவானின் மணிக்கட்டைப் பிடித்துக் கொண்டனர். தன் நிலைக்கு வந்த பாண்டுரங்கன் ‘எனக்கு என்ன ஆயிற்று என்று கேட்டார்’. இப்படி கீர்த்தனத்தின் மகிமை அனைத்தையும் விட உத்தமமானது. அது எளிய பக்தர்களுக்காக ஏற்பட்ட சுலபமான பக்தி மார்க்கம்‘. இதை விவரித்தபோது பத்மநாபனின் முகத்தில் அப்படி ஒரு பரவசம்! ................... நாம தேவரும், ஞானேஸ்வரரும் பக்திப் பயணத்தை மேற்கொள்ள தொடங்கினர். நாமதேவரின் முகத்தில் தொடர்ந்து ஒரு வாட்டம் தென்பட்டது. அவ்வப்போது கண்களில் இருந்து நீர் பெருகியது. ஞானேஸ்வரர் இது குறித்துக் கேட்டபோது ‘பண்டரிபுரத்தை விட்டுச் செல்வது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. என் விட்டலனைப் பிரிந்து நான் ஒருநாள் கூட இருந்ததில்லை. இன்னும் பல நாட்கள் அவனை விட்டுப் பிரிந்திருக்க வேண்டும் என்பதை நினைக்கும் போது மனம் நடுங்குகிறது’ என்றார். அவரை சமாதானப்படுத்தும் விதத்தில் ஞானேஸ்வரர், ‘விட்டலனின் தலம் பண்டரிபுரமாக இருந்தாலும் அவன் பிரபஞ்சம் எங்கும் இருப்பவன் அல்லவா? அவன் இல்லாத இடம் என்று ஒன்று உண்டா? நம்முடன் அவன் அருவமாக பயணித்துக் கொண்டுதான் இருக்கிறான்’ ஆனால் இந்த வார்த்தைகளால் நாமதேவர் சமாதானம் அடைந்ததாக தெரியவில்லை. ‘ஐயா, நீங்கள் ஞானி. மெத்தப் படித்தவர். கடவுளை எங்கும் உங்களால் காண முடிகிறது. ஆனால் நான் சாதாரணமானவன். என்னைப் பொறுத்தவரை விட்டலன்தான் எல்லாமே. பண்டரிபுரம்தான் எனது ஒரே ஊர்’ என்றார் துக்கத்துடன். ‘அப்படியானால் பண்டரிபுரத்துக்கு திரும்பி சென்று விட வேண்டும் என்கிறீர்களா?’ என்று கேட்டார் ஞானேஸ்வரர். ‘அதுவும் முடியாது. என்னை உங்களோடு செல்லுமாறு விட்டலன் ஆணையிட்டு இருக்கிறாரே. தவிர விட்டலனின் நெருங்கிய நண்பரான உங்களைப் பிரிந்து செல்வதும் தவறல்லவா?’ விட்டலன் மீது நாமதேவர் கொண்டிருந்த பேரன்பு ஞானேஸ்வரரை வியக்க வைத்தது. அந்த வியப்பைப் பல மடங்காக்கியது அன்றிரவு நடந்த ஒரு நிகழ்வு. விழித்திருக்கிறோமா உறங்கி விட்டோமா என்பதைத் தீர்மானிக்க முடியாத நிலையில் ஞானேஸ்வரர் இருந்தபோது, விட்டலனின் உருவம் அவர் அருகே வந்தது. ‘ஞானேஸ்வரா, என் பக்தன் நாமதேவனை பொறுப்பாகவும் அன்பாகவும் கவனித்துக் கொள். அவன் நலன் உன் கையில். உண்மையில் அவனைப் பிரிந்து இருப்பது எனக்கே கஷ்டமாகத்தான் இருக்கிறது’ என்று கூறி மறைந்தது. மறுநாள் காலையில் நாமதேவர் கண் விழித்த போது எதிரே கைகூப்பிய நிலையில் ஞானேஸ்வர் இருந்ததைப் பார்த்துப் பதறி விட்டார். ‘ஐயா நீங்கள் என்னை வணங்குவதா?! அது பெரும் தவறு’ என்றபடி அவரை நமஸ்கரித்தார். விட்டலன் தன்னிடம் இரவில் கூறியதை ஞானேஸ்வரர் பகிர்ந்து கொண்ட போது நாமதேவருக்கு மயிர்க்கூச்செறிந்தது. அவர் உடல் நடுங்கியது. கண்கள் செருகின. ‘விட்டலா, என் மீது உனக்கு இவ்வளவு அன்பா? நான் உனக்கு பதிலுக்கு என்ன செய்யப் போகிறேன்? இனி ஞானேஸ்வரரோடு சேர்ந்து உன் புகழைப் பரப்புவதுதான் என் முக்கியப் பணி’ என்று உறுதி செய்து கொண்டார். பயணம் தொடர்ந்தது. ஒருமுறை சுற்றிலும் வீடுகளே இல்லாத பாலைவனம் போன்ற ஒரு பகுதியை இருவரும் கடக்க நேரிட்டது. அப்போது இருவருக்கும் கடும்தாகம் எடுத்தது. அந்த நிலையிலும் விட்டல நாமத்தை விடாமல் கூறிக் கொண்டே அவர்கள் நடந்து கொண்டிருந்தனர். சற்று தொலைவில் ஒரு கிணறு காணப்பட்டது. ஆவலுடன் இருவரும் அந்தக் கிணறை நெருங்கினார்கள். அந்த கிணற்றில் தண்ணீர் வெகு ஆழத்தில் இருந்தது. ராட்டினமும் இல்லை, வாளியும் இல்லை, கயிறும் இல்லை. ஆக கண்ணுக்கு எட்டியது தொண்டைக்கு எட்டாத நிலை! இந்த நிலையில் ஞானேஸ்வரர் ஒரு முடிவெடுத்தார். அவரிடம் ஒரு தனி மந்திர சக்தி இருந்தது. அதன் மூலம் தன் உடலில் இருந்து ஒரு பகுதியை கிணற்றுக்குள் இறக்கி நீரைப் பருகினார். இதன் மூலம் தாகம் தணிந்தது. அடுத்து அவர் நாமதேவரைப் பார்த்து ‘அன்பரே, உங்களுக்கும் இந்த மந்திர சக்தியை சொல்லித் தருகிறேன். தாகத்தைத் தணித்துக் கொள்ளலாம்’ என்றார். ஆனால் நாமதேவர் இதற்கு உடன்படவில்லை. ‘மந்திர சக்தியால் தாகத்தைத் தணிக்க விரும்பவில்லை. விட்டலனுக்கு விருப்பம் இருந்தால் என் தாகத்தைத் தணிக்கட்டும்’ என விட்டலன் குறித்த கீதங்களைப் பாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த அதிசயம் நடந்தது. கிணற்று நீர் தானாகவே மேலே வந்தது. நாமதேவர் தன் கைகளால் நீரை எடுத்து அருந்தினார். அவரது உடல் தாகம் தணிந்தது. விட்டல தாகம் மேலும் அதிகமானது. காசி, துவாரகா போன்ற தலங்களுக்கு சென்று விட்டலன் பெருமைகளை அவர்கள் மக்களிடையே பரப்பினர். இந்தத் தகவல் டில்லி பாதுஷாவை எட்டியது. மாற்றுமத நம்பிக்கைகள் பரவுவதை ஏற்காமல் ஒரு சவாலை அவர்களுக்கு முன்வைத்தான்
|
|
|
|
|