|
குருேஷத்திர போர்க்களத்தில் கடவுளான கண்ணனுக்கும், மாவீரனான அர்ஜூனனுக்கும் இடையே நடந்த உரையாடலே பகவத்கீதை. இதில் 700 ஸ்லோகங்கள் உள்ளன. போர் துவங்குவதற்கு சற்று முன்பு வரை அர்ஜூனன் மனம் கவலையில் தவித்தது. நண்பர்கள், உறவினர் என பலரையும் போரில் கொல்ல நேரிடுமே... எப்படி பார்த்தாலும் போர் நல்லதல்ல என்ற மனநிலையில் இருந்தார். அர்ஜூனின் இந்த தவிப்பு மனநிலையின் வெளிப்பாடே. ‘நானே அனைத்தும் நிகழ்த்துபவன்’ என்ற அகங்காரம் அவருக்கு இருந்தது. இந்த அகங்காரமே நம்மை ‘தனித்துவமானவர்’ என அடையாளம் காட்டுகிறது. ஆனால் எதார்த்தம் வேறு. ‘ஈகோ’வையும் அகங்காரம் போன்றே நாம் நினைத்தாலும் அகங்காரத்தின் எத்தனையோ உருமாற்றங்களில் ஒன்றே ‘ஈகோ’. கிருஷ்ணருக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நடந்த உரையாடல் அனைத்தும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இந்த அகங்காரத்தை பற்றியதே. இதில் இருந்து விடுபட பல வழிகளை சொல்கிறார் கிருஷ்ணர்.
குருேஷத்திர போரை நம் வாழ்வோடு உருவகப்படுத்தினால் அர்ஜூனன் போன்றே நாமும் இருக்கிறோம். குடும்பம், உறவினர்கள், பணிபுரியும் இடம், பணம் சம்பாதிப்பது அனைத்திலும் நாம் அப்படித்தான் இருக்கிறோம். அகங்காரத்தை புரிந்து கொள்ளும் வரை நம் வாழ்வில் இவை எல்லாம் இயல்பே. நாம் எப்படி இருக்கிறோமோ அதை கீதை சொல்கிறது. ஆனால் நிச்சயமாக நமக்கு என்ன தெரியும் அல்லது நாம் என்ன செய்கிறோம் என்பது பற்றி அல்ல. நாம் சைக்கிள் ஓட்ட அல்லது நீச்சலடிக்க ஏதாவது தத்துவ வழிமுறைகள் படிக்க வேண்டுமா என்ன... இல்லையே! நாமே தான் முயற்சி செய்து பழக வேண்டும். அதே போல வாழ்க்கையை நாம் நேருக்கு நேர் சந்திக்க எந்த தத்துவமும் உதவாது. ஆனால் நமது இலக்கான அகங்காரமற்ற உள்மனதை அடைந்திட கீதை சொல்லும் கருத்துக்கள் உதவுகின்றன. அர்ஜூனனுக்கு கண்ணன் உபதேசம் தந்த காலம் மாறிவிட்டது. பல நுாற்றாண்டுகளில் விஞ்ஞானத்தில் எத்தனையோ மாற்றங்கள் வந்து விட்டன. ஆனால் உண்மையில் மனிதன் பரிணாம மாற்றம் அடையவில்லை. மனதின் தடுமாற்றம் மாறவில்லை. மனிதன் என்ற மரம் வெளிப்புறத்தில் வளர்ந்து, வளர்ந்து காட்சியளித்தாலும், உள்மனம் என்னும் வேர்கள் அப்படியே தான் இருக்கின்றன. –தொடரும் |
|
|
|