Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கோதை அவதரித்த ஸ்ரீவில்லிபுத்துார் வரலாறு
 
பக்தி கதைகள்
கோதை அவதரித்த ஸ்ரீவில்லிபுத்துார் வரலாறு


அது ஒரு அரசு பள்ளி.  சில நுாற்றாண்டுகளுக்கு முன்பு மன்னர்களின் கோட்டையாக இருந்து, தற்போது அரசு பள்ளியாக அது உருமாறி இருந்தது. அந்தப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களிடம்  இந்த இடம் இதற்கு முன்பாக என்னவாக இருந்தது என்று தெரியுமா என அது பற்றி விசாரித்த போது  அந்த மாணவர்கள் திருதிருவென விழித்தனர். அவர்களுக்கு  பதில் தெரியவில்லை. பின்பு இங்கேதான் மன்னர்களும் அரசிகளும் ரத்தமும் சதையுமாக உலவினார்கள் என்ற வரலாற்றை சொன்னவுடன் அவர்கள் கண்கள் அகலத் திறந்தது. ராஜாக்கள் உலவிய அந்த இடத்திலா நாமெல்லாம் தற்போது அமர்ந்திருக்கிறோம் என அவர்களுக்குள் சிலிர்ப்பாகி அது முதல் உயிர்ப்பாக அந்த இடத்தை உணரத் தொடங்கினர். அவரவர் ஊரை யார் ஆட்சி செய்தார்கள் என்பது பற்றிய சிறு அறிதலும் புரிதலும் கூட இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல ஆள் இல்லை.   நம்மை யார் ஆட்சி செய்தார்கள், இந்த ஊரை எப்படி எல்லாம் வழி நடத்தினார்கள் என்ற வரலாறை தெரிந்து கொள்வது மிக முக்கியம். நமக்கே நமக்காக சின்னதும் பெரிதுமாக ஒரு வரலாறு இருக்கும் போது ஒவ்வொரு ஊருக்கும் ஒரு வரலாறு இருக்காதா என்ன?


                     சரி, ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்துாரின் வரலாறு எத்தனை சிறப்பானது என்பதை தெரிந்து வைத்திருக்கிறோமா? தமிழகத்தில் எத்தனையோ ஊர்கள் இருக்க ஆண்டாள் அவதரித்த இந்த கோயில் கோபுரம் தமிழக அரசின் சின்னமாக உருமாறியுள்ளது. இந்த கோயிலைக் கட்டியவர்கள் யார்? எப்படி இத்தனை சிறப்பு பெற்றது? போன்ற வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டாமா? அப்போதுதானே ஆண்டாளை பற்றிய கதையின் வேர் நமக்குத் தெரியவரும்.


                     மேற்கு மலைத்தொடரில் சித்தர் மலை என்னும் பழநி மலைக்குத் தெற்கிலும், குற்றால மலைக்குச் சற்றே வடக்கிலும் உள்ளது பரலிமலை. இதன் அடிவாரத்தில் மல்லி என்ற  வேடுவப்பெண் வசித்தாள். அவளுக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் வில்லி. இளையவன் கண்டன்.  வில்லி வேடுவர் தலைவனாக இருந்தான். இருவரும் இளம் வயதிலேயே தந்தையை இழந்தனர்.   இருவரும் பாசத்தில் ராம லட்சுமணரை போன்றிருந்தனர். தினமும் வேட்டைக்குச் செல்வார்கள்; வெவ்வேறு திசைக்குச் சென்று வேட்டையாடிய விலங்குகளை தோளில் சுமந்தபடி ஓரிடத்தில் கூடுவர். பின் இருவரும் சேர்ந்து வீடு திரும்புவர். அந்த காட்டில் கொடிய புலி ஒன்று நடமாடியது  வில்லிக்கும் கண்டனுக்கும் இது தெரிந்தே இருந்தது.

                   கொடிய புலி நடமாட்டம் இருப்பதால் கவனமுடன் வேட்டைக்குச் செல் என அண்ணன் ஒருநாள் தம்பியிடம் எச்சரித்தான். அதன்பின் இருவரும் வெவ்வேறு திசையில் வேட்டைக்கு சென்றனர். அண்ணன் வேட்டையாடி விட்டு வழக்கமாக கூடும் இடத்துக்கு வந்தான். அங்கே தம்பியை காணவில்லை. காத்திருந்தான், தேடினான், காடு முழுவதும் ஓடினான். காட்டு விலங்குகள் அதிருமாறு கூச்சலிட்டான். உடலும் மனமும் சோர்வாக, நிலைகுலைந்து ஒரு பாறையில் சாய்ந்தான். எதேச்சையாக திரும்பும் போது ஓரிடத்தில் புலியால் தாக்கப்பட்ட தம்பி மல்லாந்து கிடப்பது தெரிந்தது. தம்பியை கட்டிப்பிடித்து கதறினான். தம்பி இன்றி உலகில் தான் மட்டும் வாழ்வதா என நினைத்து பாறையில் தலையை பலமாக மோதிக் கொண்டான் .  


                     அப்பொழுது அங்கே  வந்த ஒரு பெரியவர் வில்லி வில்லி என அழைத்து ‘உன் துயரை நான் தீர்க்கிறேன்’ என்றார். அதற்கு வில்லி “ ஐயோ என் துயரை யாராலும் தீர்க்க முடியாது. என் தம்பி இறந்து விட்டான்’’ என நடந்ததை கூறினான் வில்லி. அவனை அழைத்துக்கொண்டு இறந்து கிடக்கும் கண்டன் அருகே சென்றார் பெரியவர். ‘‘கண்டா… கண்டா… எழுந்திரு” என்றார்.  என்ன ஆச்சரியம்! உயிரோடு எழுந்தான்.  அவனைக் கட்டி அணைத்துக் கொண்டான் வில்லி. ‘‘ஐயா, யார் நீங்கள்?” கடவுள் போல வந்திருக்கிறீர்கள். உயிருள்ளவரை இந்த உதவியை மறக்க மாட்டேன் என  பெரியவரின் காலில் விழுந்தான்.


                       அவனுடைய தோளைத் தொட்டு ‘‘எனக்கு நீ ஒரு கோயில் கட்ட வேண்டும்” என்றார். வில்லி அசந்து போய் பதில் பேச முடியாமல் நின்றான்.  ஐயா நாங்களோ வேடர்கள். கோயில் கட்ட அவ்வளவு பணத்துக்கு எங்கே போவேன்?”  என்றான்.


                            அந்த பெரியவர் இருவரையும் அழைத்துக் கொண்டு ஒரு குகையைக் காட்டினார். அங்கே நவரத்தினம், பொன்மணிகளும் குவியலாக இருப்பதைக் கண்டு மலைத்து நின்றனர். பெரியவரோ சிரித்தபடி நின்றிருந்தார். ஐயா தாங்கள் யார் என்று சொல்லக்கூடாதா என்று இருவரும் கேட்க பெரியவர், “ மதுராபுரி சிறையில் ஒருத்தி மகனாய் பிறந்து கோகுலத்தில் ஒருத்தி மகனாய் வளர்ந்த கண்ணன் நான்”  என்றார். இருவரும் காலில் விழுந்தனர். குகையில் கண்டெடுக்கப்பட்ட நவரத்தின குவியல் மூலம் இரண்டு ஆண்டுகளில் நகரமும் ராஜகோபுரத்துடன் கோயிலும் உருவாகின.  


                          அப்போதைய பாண்டிய மன்னர் குணசேகரன் திறப்பு விழாவுக்கு தன் பரிவாரங்களுடன் வந்தார். ‘‘மக்களே  இந்த கோயிலை நான் திறந்து வைப்பதை விட இதை நிர்மாணித்த வில்லி திறப்பது நமக்கு பெருமை என்றான் மன்னன். மக்களும் அதை ஆமோதித்தனர். ஆனால் பெரியவராக வந்த கண்ணன் வந்து இந்த கோயிலை திறக்க வேண்டும் என வேண்டினான் வில்லி. அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது. கோயிலில் இருந்து ஜோதி ரூபமாய் அந்த பெரியவர் வெளியே வந்தார். குணசேகர பாண்டியன், வில்லி, கண்டன், தாய் மல்லியை வாழ்த்தி விட்டு, “ இந்த நகரை அற்புதமாகவும் அந்த மையத்தில் கோயிலும் எழுப்பிய மல்லியின் மகனான வில்லியை பாராட்டுகிறேன். அது மட்டுமல்ல. அவனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்த பாண்டிய மன்னரை வாழ்த்துகிறேன். ‘இந்த  ஊருக்கு வில்லிபுத்துார் எனும் பெயரைச் சூட்டி வில்லியை கவுரவிக்கிறேன்’’ என ஆசியளித்தார் பெரியவர். இனி இந்த ஊர் வில்லிபுத்துார் என்றழைக்கப்படும் என பிரகடனம் செய்தார் மன்னர். பின்பு அந்த பெரியவர் கோயிலுக்குள்ளே சென்று அப்படியே மறைந்து போனார். 1300 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வு இது.


    இந்த ஆண்டாள் கோயில் 788 ல் கட்டப்பட்டது.  இங்குள்ள கல்வெட்டுகளில் ஒன்றான வீரபாண்டியன் கல்வெட்டில் இக்கோவில் ‘ஜலசய நாட்டுக் கிடந்தருளின பரமசுவாமி கோயில்’ என குறிக்கப்பட்டுள்ளது. சோழ மன்னர் முதலாம் குலோத்துங்கன் (1070 - 1120) ஆட்சியில் இந்த ஊர் விக்கிரம சோழ சதுர்வேதி மங்கலம் எனப்பட்டது. பிற்கால பாண்டியர் கல்வெட்டின்படி ‘வடபெருங்கோவில் பள்ளி கொண்டருளிய பெருமாள் கோயில்’ எனப்பட்டதாக தெரிகிறது. திருமலை நாயக்கர் (1623 - 1659) ராணி மங்கம்மாள் ஆட்சிக்காலத்தில் இந்த ஊர் மிகப் பிரபலமானது. இப்படி பெருமைமிக்க ஆண்டாள் கோயில் வரலாறை அறியும் போது அந்த கோயிலுடனான பந்தமும் பிணைப்பும் இன்னும் அதிகரிக்கும் என்பது உண்மை தானே!

    மதுரைக்கும் நெல்லைக்கும் நடுவில் ஸ்ரீவில்லிபுத்துார் கோட்டை இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சியில் இக்கோட்டையை நடுமண்டலம் என்றனர். மதுரையை கைப்பற்றிய கான்சாகிப் என்ற மருதநாயகம் ஆங்கிலேயருக்கு வரி கொடுக்க மறுத்த நெல்கட்டுச் சேவல் பாளையக்காரர் பூலித்தேவனை வெல்ல ஸ்ரீவில்லிபுத்துாரில் முகாமிட்டார். மே 6, 1756ல் நடந்த போரில் அவரை வெல்ல இயலாமல் ஸ்ரீவில்லிபுத்துார் கோட்டையை கைப்பற்றி தரைமட்டம் ஆக்கினார். இப்போது எந்த தடயமும் இல்லாத அந்த இடம் கோட்டை தலைவாசல் எனப்படுகிறது. அந்த இடம் முழுவதும் இப்போது வீடுகளாகி கோட்டை தெருவாசல் என்னும் தெருவாக மாறிவிட்டது. இப்படியாக ஆண்டாள் கோயில் வரலாறு நம்மை அசத்துகிறது.


    இப்படி ஆண்டாள் கோயிலில் அனைத்தும் பிரம்மாண்டம் தான். அதில் நம் மனதை ஈர்ப்பது நியாயம் தான். அந்த பெருமாளுக்கு கூடவா அப்படி! ஆம், ஒருசமயம் பெருமாளுக்கு ஸ்ரீவில்லிபுத்துார் செல்ல ஆர்வம் ஏற்பட்டது. ஏன் என பிராட்டி கேட்டதற்கு திருப்பாவையை கேட்க வேண்டும் என பதிலளித்தார். ஏன், எதற்காக? நான் அருளிய திருப்பாவை தான் எங்கும் ஒலிக்கிறதே என புருவத்தை உயர்த்தினாள், அவரை ஆண்ட ஆண்டாள். அதற்கு பெருமாளும், ‘‘எந்த பண்டத்தையும் அது உருவான இடத்தில் வாங்குவது விசேஷம் இல்லையா? அதுபோல திருப்பாவை பிறந்த இடத்தில் போய் கேட்க ஆவலாக உள்ளது. இருவரும் ஸ்ரீவில்லிபுத்துார் சென்று தித்திக்கும் திருப்பாவையை அனுபவிப்போம்” என்றார் பெருமாள். ஆண்டாள் அவதரித்த வில்லிபுத்துாருக்கும் ‘ஸ்ரீ’ என்ற அடைமொழி பின்னாளில் வந்து சேர்ந்தது. அவள் ரங்கனை கரம் பிடித்த ஸ்ரீரங்கத்திலும் ‘ஸ்ரீ’ உள்ளது.  ‘ஸ்ரீ’ என்றால் செல்வம் என்ற பொருளும் உண்டு. இந்தக் கோயிலில் ஏகப்பட்ட சிறப்பு அம்சங்கள் உள்ளன. அதை வரும் வாரங்களில் பார்ப்போம்.  அதுவரை ஆண்டாளை பற்றிக் கொண்டு தொடர்ந்து அவள் வழிநடப்போம்…  வாருங்கள்!                                                                                      


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar