|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » பக்தியால் உயிர் பெற்ற பசுவும் கன்றும் |
|
பக்தி கதைகள்
|
|
ஸந்த் ஞானேஸ்வரர் எழுதிய ‘ஸிம்ஹாசே துக்த’ என்று தொடங்கும் ‘அபங்’ பாடலின் பொருள். ‘கஷ்டப்பட்டு சிங்கத்தின் பாலைக் கறந்து வந்து பூனைக் குட்டிகளுக்குக் கொடுக்கலாமா? ஒப்பற்ற வித்தைகளை கற்றுக்கொண்டு அதன் மூலம் தன் தலையைத் தானே வெட்டி கொள்ளலாமா? ஒரு தீபத்தைக் கொண்டு பல தீபங்களை ஏற்றாமல் அதை ஊதி அணைத்து விடலாமா? பரிசக்கல்லை வைத்து சுவர் எழுப்பி விட்டு கருங்கல்லை கையில் வைத்துக் கொண்டு திரியலாமா? அமிர்தத்தை பலவந்தமாக கொட்டிவிட்டு கஞ்சியை சேமித்து வைக்கலாமா? அதுபோல விலைமதிப்பில்லாத இந்த தேகத்தை பக்தியில் ஈடுபடுத்தாமல் ஏன் வீணாக்குகிறீர்கள்?’
‘விட்டலின் பக்திமார்க்கத்தைப் பரப்புவதற்காக ஞானேஸ்வரரும் நாமதேவரும் யாத்திரைக்குக் கிளம்பிச் சென்றார்கள் என்று சொன்னீர்கள்’ என்று தொடங்கினாள் பத்மாசினி. அதற்கென்ன இப்போது என்பது போல் மனைவியைப் பார்த்தார் பத்மநாபன். ‘பண்டரிபுரத்தை விட்டுச் செல்வதற்கு நாமதேவருக்கு மனமில்லை என்பதை மீண்டும் மீண்டும் கூறினீர்கள். நாமதேவர் போன்ற ஞானிகளுக்கு எங்கெங்கும் பரம்பொருள் இருப்பதை அறிய முடியவில்லையா?’ எனக் கேட்டுவிட்டு அதிகப்பிரசங்கித்தனமாக கேட்டுவிட்டோமோ என்று தவித்தாள் பத்மாசனி. பத்மநாபன் பதிலளித்தார். ‘மனம் சரியில்லை என்றால் கோயிலுக்குச் செல்கிறோம் இல்லையா? அந்த அடிப்படைதான் இதற்கும் பொருந்தும். சூரியஒளி அனைத்திலும் பிரதிபலிக்கிறது என்றாலும் கண்ணாடி மீது படும்போது அதிகம் பிரதிபலிக்கிறது அல்லவா? பசுவின் உடல் முழுவதும் பால் இருந்தாலும் காம்பிலிருந்துதானே அதைப் பெற முடிகிறது? அதுபோல் கடவுள் எங்குமிருந்தாலும் கோயிலில் அவரது இருப்பை அதிகம் உணர்கிறோம். பண்டரிபுரத்தில் விட்டலனோடு உரையாடியவர்கள், விளையாடியவர்கள், உரிமை எடுத்துக் கொண்டவர்கள் சந்த் என்ற பிரிவில் அடங்கும் நாமதேவர் போன்றவர்கள். பண்டரிபுரத்தை விட்டு பிரிய மனமில்லாமல் இருந்ததைக் கண்டு அவர்கள் மனம் பக்குவம் அடையவில்லை என நினைக்க கூடாது. அந்த அளவு விட்டலன் மீது ஆழமான பிடிப்பு கொண்டிருந்தார்கள் என்றுதான் கொள்ள வேண்டும்’ என்ற கணவரின் விளக்கத்தில் சமாதானமடைந்தாள் பத்மாசினி. .................. ஒரு கட்டத்தில் பல இடங்களில் குறைந்த காலகட்டத்தில் விட்டல பக்தியைப் பரப்ப வேண்டும் என்பதற்காக ஞானேஸ்வரரும், நாமதேவரும் தனித்தனியாக தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். ஹரித்வார், பஞ்சாப் போன்ற பகுதிகளுக்கு நாமதேவர் சென்றார். அவர் பாடிய பல அபங்கங்கள் சீக்கியர்களின் மதப் பாடல்களில் கூறிய கருத்துகளுடன் ஒத்துப்போனதால் சீக்கியர்களும் நாமதேவரை விரும்பத் தொடங்கினர். சொல்லப்போனால் நாமதேவரின் சில அபங்கங்கள் சீக்கியர்களின் புனித நுாலான குருகிரந்த் சாகிபில் இடம் பெற்றுள்ளன. நாமதேவர் திருமணத்துக்காக விட்டலன் பொன்மழையைப் பொழிய வைத்தது, அவரது தாகத்தைத் தீர்க்க கிணற்றுநீர் தானாக மேலெழும்பி வந்தது போன்ற நிகழ்வுகளை ஊர்ஜனங்கள் மீண்டும் மீண்டும் பேசி அதிசயித்துப் போனார்கள். விட்டலனின் பெருமை ஊர் கடந்தது. விட்டல பக்தர்களின் சாதனைகள் பாதுஷாவின் காதுகளையும் எட்டியது. அவன் நேரே நாமதேவர் தங்கி இருந்த இடத்துக்கு வந்தான். அவரை அலட்சியமாகப் பார்த்தான். ஊர் மக்களையும் அங்கே வரவழைத்து விட்டு நாமதேவரை நோக்கி ஏளனமாக பேசத் தொடங்கினான். ‘ஏதோ விட்டலன் என்று ஒருவனைப் பற்றி நீங்கள் புகழ்ந்து கொண்டிருக்கிறீர்களாமே‘ என்றபடி கேலியாகச் சிரித்தான். அதற்கு மறுமொழியாக எதுவும் கூறாமல் நாமதேவர் உரத்த குரலில் விட்டலனைப் பற்றிய அபங்கங்களைப் பாடினார். இதனால் மன்னன் மேலும் உக்கிரம் அடைந்தான். அந்தக் கோபத்தில் மாபாதகம் செய்தான். ‘நீங்கள் வீட்டலனின் பரம பக்தர்களாமே. பல அதிசயங்களை நடத்தக்கூடியவராமே. இதோ உங்களுக்கு ஒரு சவால்’ என்றபடி அருகிலிருந்த ஒரு பசுவையும் அதன் கன்றையும் தன் வாளால் வெட்டினான். அவை துடிதுடித்து இறந்தன. நாமதேவர் மட்டுமல்ல அதைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். எதற்காக இப்படிச் செய்தான் அந்த மன்னன்? ‘இதோ ஒரு பசுவும் அதன் கன்றும் வெட்டப்பட்டு உயிரிழந்து கிடக்கின்றன. இவற்றை உயிர்ப்பிக்க முடியுமா? அப்படிச்செய்தால் உங்கள் பெருமையை நானும் ஏற்றுக்கொள்கிறேன்‘ என்றான். நாமதேவர் மவுனம் சாதித்தார். ‘முடியாது அல்லவா? அப்படியானால் உங்கள் விட்டலனால் இந்தப் பசுவை உயிர்ப்பிக்க முடியாது என்றாகிறது. அவன் சக்தி படைத்தவன் அல்ல என்பதும் நிரூபணமாகிறது’ என்றார். ‘உங்களால் உயிர்ப்பிக்க முடியுமா’, ‘உங்கள் பெருமை’ போன்ற வார்த்தைகள் நாமதேவரை பாதிக்கவில்லை. ஆனால் ‘விட்டலனால் முடியுமா? அவன் சக்தி படைத்தவனா?’ என்ற கேள்விகள் அவரை ஆவேசம் கொள்ள வைத்தன. ‘மன்னா, இன்னும் நான்கு நாட்களுக்குள் இந்த பசுவும் கன்றும் உயிர் பெறும்’ என்றார் ஆக்ரோஷமாக. சாலை ஓரமாக அந்த பசுவைக் கிடத்திவிட்டு தனது பிரதிநிதிகளை அங்கே நிற்க வைத்துவிட்டு பாதுஷா கிளம்பிச் சென்றான். நாமதேவர் தொடர்ந்து விட்டல நாமத்தை ஜெபித்துக் கொண்டிருந்தார். நான்காம் நாளும் வந்தது. அப்போதுதான் நாமதேவருக்கு கிலி பிடித்தது. இன்றைக்குள் இந்த பசுவும் கன்றும் உயிர் பெற வேண்டுமே! இல்லை என்றால் பாதுஷாவின் ஏளனத்துக்கு உள்ளாக நேருமே என தவித்தார். ‘விட்டலா, நீ எங்களைப் போன்ற பக்தர்களுடன் சரிசமமாக பழகுபவன் என்பது எங்களுக்கு தெரியும். நீ சர்வ சக்தி படைத்தவன் என்பதும் நாங்கள் அறிந்ததுதான். ஆனால் இதை பாதுஷா ஒப்புக்கொள்ள வேண்டும் என்றால் நீ இந்த பசுவையும் கன்றையும் உயிர்ப்பிக்க வேண்டும். உனது பரம பக்தர்கள் நாங்கள். எங்களை நண்பர்களாகவே பாவிப்பதாக நீ பலமுறை கூறி இருக்கிறாய். அப்படி இருக்க இந்தப் பசுவையும் கன்றையும் இன்னமும் நீ உயிர்ப்பிக்காதது ஏன்? ருக்மணியின் சேவையில் மகிழ்ந்து கொண்டிருந்தாயா? வேறு பக்தர்களின் கீர்த்தனங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாயா? என்னை ஏன் மறந்தாய்? பதில் தேவை விட்டலா‘ என்று உரத்த குரலில் முறையிட்டார். அவர் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. அடுத்த கணம் புண்டரிகன் தோன்றி, ‘நாமதேவா, தவறு என்னுடையதல்ல. நீ உடனடியாக இந்த பசுவையும், கன்றையும் உயிர்ப்பிக்க வேண்டும் எனக் கேட்டிருந்தால் அது அப்படியே நடந்திருக்கும். நீ ஏன் நான்கு நாட்கள் அவகாசம் கேட்டாய்? அதனால்தான் நானும் என் அருளை தாமதப்படுத்தினேன்’ என்று கூறி மறைந்தார். நாமதேவர் திகைத்து நின்றார். அடுத்த கணம் சடலமாகக் கிடந்த பசுவும் கன்றும் உயிர் பெற்றன. பாசம் பொங்க தன் கன்றை நக்கிக் கொடுத்தது பசு. இரண்டுமாக அங்கிருந்த கோயிலை நோக்கி நகர்ந்தன. பார்த்துக்கொண்டிருந்த மக்கள் கன்னங்களில் போட்டுக் கொண்டனர். கைகளை தலைக்கு மேலே துாக்கி நாம தேவரை நமஸ்கரித்தன. இந்த நிகழ்வுக்கு சாட்சியாக இப்போதும் கூட டில்லியிலுள்ள லோதி சாலை நாம தேவர் மடத்தில் பசு, கன்று உருவங்கள் உள்ளன. பாதுஷாவின் பிரதிநிதிகள் வெகுவேகமாகச் செயல்பட்டார்கள். நடைபெற்ற அதிசயம் பாதுஷாவின் காதுகளை எட்டியது. அவன் திகைத்தான். அதிர்ச்சியடைந்தான். பின்னர் உண்மையை ஒருவாறு ஏற்றுக் கொண்டான். வேகமாக அந்தப் பகுதியை அடைந்தான். ‘என்னை மன்னித்து விடுங்கள். விட்டலன் சர்வ சக்தி படைத்தவன் என்பதையும் நீங்கள் அவரது மகத்தான அடியவர் என்பதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்’ என்றபடி நாமதேவருக்கு உரிய மரியாதை செய்து அனுப்பிவைத்தான். இவ்வளவு பெருமை வாய்ந்த நாம தேவரையும் ஒரு கட்டத்தில் வேறு விதத்தில் வழிநடத்தி அவர் அதுவரை அறிந்திராத ஞானத்தைப் புகட்டினான் விட்டலன்.
|
|
|
|
|