|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » பாதத்தில் பட்ட பரமனின் உருவம் |
|
பக்தி கதைகள்
|
|
ஸந்த் துகாராம் எழுதிய ‘ஸுக ரூப ஐஸா துஜா’ என்று தொடங்கும் ‘அபங்’ பாடலின் பொருள். என்னுடைய பாண்டுரங்கனை போல அழகிய வடிவம் கொண்ட தெய்வம் வேறு யாரும் இல்லை. அவனை அடைவதற்கு தீர்த்த யாத்திரை செல்ல வேண்டும் என்பதில்லை. மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. நிறைய முயற்சிகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கஷ்டம் கிடையாது. சந்திரபாகா நதியில் நீராடி விட்டு எப்போதும் அவன் குறித்த நாம சங்கீர்த்தனம், காலட்சேபங்களை கேட்டுக் கொண்டிருந்தாலே கூட போதும். மனம் அமைதி அடையும். அவனது பாதங்களை வணங்கும்போது கிடைக்கும் புண்ணியம் அலாதியானது. பண்டரிபுரத்தில் உள்ள சந்த்களோடு கிடைக்கும் நெருக்கம் மிக விசேஷமான லாபம் ஆகும். ............... ‘நாமதேவரின் பெயரில் பண்டரிபுரக் கோயிலில் ஒரு தனி வாயில் இருக்கிறது என்று கூறினீர்கள். அவரது சரிதத்தைக் கேட்ட பிறகு விட்டலன் கோயிலின் முக்கிய வாயிலுக்கு அவரது பெயர் வைக்கப்பட்டது என்னால் புரிந்து கொள்ள முடிகிறது’ என்று கூறினாள் பத்மாசினி. ‘பத்மா, அது நுழைவாயில் மட்டுமல்ல. ஒரு விதத்தில் நாமதேவரின் சமாதியும் கூட’ என்று கூறிய பத்மநாபன் அது குறித்தும் விவரித்தார். ‘80 வயது வரை வாழ்ந்த நாமதேவர் ஒருகட்டத்தில் தான் வாழ்ந்ததற்கான நோக்கம் நிறைவு பெற்று விட்டதாக நினைத்தார். இதை விட்டலனிடம் தெரிவித்தார். அதை ஏற்றுக் கொண்டு விட்டலன் ‘வரும் ஆஷாட (ஆடிமாத) பவுர்ணமி அன்று நீ முக்தி பெறுவாய்’ என்றார். ஜூலை 9, 1350 அன்று கோயிலின் முக்கிய வாசலின் முதல்படியில் நாமதேவர் அமர்ந்துகொண்டார். அப்போது அவர் குடும்பத்தைச் சேர்ந்த 13 நபர்களும் உடன் அமர்ந்திருந்தனர். அவர்கள் தாங்களும் சமாதி அடைவதாகக் கூறியது நெகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. ஒரே நேரத்தில் நாமதேவரின் குடும்பத்தினர் அனைவரும் முக்தி பெற்றனர்’ எனக் கூறியபோது பத்மநாபன் கண்களில் இருந்து கண்ணீர் கசிந்தது. இதைக் கூறிய பத்மநாபன் நாமதேவரின் சரிதத்தில் அவரைப் புடம் போட விட்டலன் நிகழ்த்திய ஒரு விளையாடலையும் குறிப்பிடத் தொடங்கினார். .............. தன் வாழ்வில் விட்டலன் நடத்திய லீலைகள் குறித்து நாமதேவர் மகிழ்ந்தார். பரவசப்பட்டார். ஒருகட்டத்தில் இது குறித்து அவருக்கு லேசான கர்வம் கூட வந்தது. விட்டலனுக்கு தான்தான் மிக அணுக்கமானவன் என்று அவருக்குத் தோன்றியது. அதே சமயம் இது போன்ற மாயைகள் தன்னை சூழ கூடாது என்பதை அவர் உணர்ந்து இருந்தாலும் அவ்வப்போது விட்டலனின் நட்பு என்பது அவருக்குள் ஒரு வித ‘தான்’ என்ற எண்ணத்தைத் துாவிச் சென்றது. இது குறித்து அவருக்குக் கலக்கம் ஏற்பட்டது. ‘கர்வம் அழிவுக்கு வழி வகுக்கும்’ என்பார்கள். எனக்கு அந்த கதி நேரக்கூடாது விட்டலா. என்னை சிறந்த வழி நடத்து’ என விட்டலனிடம் கேட்டுக் கொண்டார். ‘நீ ஒரு சரியான குருவை தேர்ந்தெடு. அவரிடம் பயிற்சி கொள். இந்த மாயை அகன்று விடும்’ என்றான் விட்டலன். ‘யார் அந்த குரு என்பதை நீயே எனக்கு கூறு’ எனக் கேட்டுக்கொண்டார் நாமதேவர். ‘அனுதா நாகநாத்’ என்ற இடத்துக்குச் செல். அங்கே விசோபா என்று ஒருவர் இருப்பார். அவரை குருவாக ஏற்றுக் கொள்’ என்றான் விட்டலன். உடனே அங்கு கிளம்பினார் நாமதேவர். அந்த ஊரை அடைந்தவுடன் அவருக்குக் களைப்பு ஏற்பட்டது. சற்று தூரத்தில் ஒரு சிவன் கோவில் தென்பட்டது. அதை தரிசித்து விட்டு சற்று அமர்ந்து களைப்பாறலாம் என்ற எண்ணத்தில் உள்ளே நுழைந்தார். கோயிலின் பிரகாரத்தில் வயதான ஒருவர் துாங்கிக் கொண்டிருந்தார். ‘கோயிலுக்குள் துாங்கிக் கொண்டிருக்கிறாரே, இவரை எழுப்பலாமா? அல்லது மூப்பின் காரணமாக அசதியில் உறங்குபவரை அப்படியே விட்டு விடலாமா?’ என யோசித்தபடி அந்த முதியவரை நோக்கி பார்வையைச் செலுத்திய நாமதேவர் அதிர்ச்சி அடைந்தார். காரணம் அந்த முதியவரது ஒரு பாதம் அங்கிருந்த ஒரு சிறிய சிவலிங்கத்தின்மீது படிந்திருந்தது. ‘ஐயா... எழுந்திருங்கள். உங்கள் பாதம் சிவலிங்கத்தின் மீது பட்டுக் கொண்டிருக்கிறது. உடனே பாதத்தை நகர்த்துங்கள்’ என்று உரக்கக் குரல் கொடுத்தார். அந்த முதியவர் லேசாகக் கண் விழித்தார். ‘எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது. என் காலை தள்ளி வைக்கக்கூட என்னிடம் சக்தி இல்லை. நீயே என் காலைச் சற்று நகர்த்தி வைத்து விட முடியுமா?’ காலை நகர்த்த முடியாத அளவுக்கா இவருக்கு உடல் நலக்குறைவு என்ற எண்ணம் தோன்றினாலும் அவரது காலைச் சற்று தள்ளி வைத்தார் நாமதேவர். அடுத்த கணம் அவருக்கு துாக்கி வாரிப்போட்டது. இப்போதும் அந்தக் கால் ஒரு சிவலிங்கத்தின்மீது பட்டுக் கொண்டிருந்தது. ‘ஒருவேளை தான்தான் தெரியாமல் எடுத்த இடத்திலேயே அவரது காலை மீண்டும் வைத்துவிட்டோமோ’ என்றெண்ணி மிகவும் ஜாக்கிரதையாக அந்தக் காலை வேறொரு இடத்தில் வைத்தார். ஒருமுறைக்கு இருமுறை சரி பார்த்து விட்டுத்தான் அவர் வைத்தார். ஆனால் இப்போது அந்த கால் இருந்த இடத்திலும் ஒரு சிவலிங்கம் காணப்பட்டது! நாமதேவருக்கு ஞானம் உண்டானது. ‘நான் எல்லா இடத்திலும் இருக்கிறேன்’ என்பதை கடவுள் தனக்கு உணர்த்துகிறார் என்பது புலப்பட்டது. அந்த முதியவரிடம் பேசிப் பார்த்தபோது அவர்தான் விசோபா என்பதை அறிந்ததும் அவரை நமஸ்கரித்தார். தன்னை சீடனாக ஏற்கும்படி அவரிடம் வேண்டினார். அதற்குப்பின் அவரது எண்ணங்களும் வாழ்க்கையும் மேலும் செம்மை அடைந்தன. நாம தேவர் நீண்ட காலம் வாழ்ந்தார். பல சந்த்களின் தொடர்பு அவருக்குக் கிடைத்தது. தான் எழுதிய எண்ணற்ற அபங்கங்களில் இவற்றையெல்லாம் தெளிவாகக் குறித்து வைத்தார். இதன் காரணமாக மகான்களின் பிறந்த நாள், முக்தி அடைந்த நாள் போன்ற விபரம் கிடைக்கப்பெற்றன. அப்படி நாம தேவரின் காலகட்டத்தில் வாழ்ந்த மற்றொரு விட்டல பக்தை ஜனாபாய். அன்று பண்டரிபுரம் கோலாகலமாக காணப்பட்டது. பக்தர்களால் நிரம்பி வழிந்தது. காரணம் அது கார்த்திகை மாத ஏகாதசி. வெளியூர்களில் இருந்தெல்லாம் பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வந்து சேர்ந்திருந்தனர். விட்டலனின் புகழைப் பாடியும் ஆடியும் பரவசப்பட்டுக் கொண்டிருந்தனர். அத்தனை குரல்களுக்கு நடுவே தனித்துக் கேட்டது ஒரு குரல்.அற்புதமான குரல்வளம். அழகான உச்சரிப்பு. சிறிதும் தவறாத ஸ்வரங்கள். இவ்வளவும் சிறப்புகளோடும் விட்டலன் குறித்த பாடல்களை பாடிக் கொண்டிருந்தது பத்து வயதுச் சிறுமி ஒருத்தி எனபதில் அங்கிருந்தவர்களின் கவனத்தை மிகவும் கவர்ந்தது. அவளை மேலும் மேலும் சில பாடல்களைப் பாடச் சொல்லி மக்கள் கேட்டுக் கொண்டனர். அவளும் சந்தோஷமாகப் பாடினாள். பிறர் பாராட்டுக்காக என இல்லாமல் விட்டலன் மீதுள்ள பக்தியால் அவள் பாடுகிறாள் என்பது அவள் முகத்திலேயே தெரிந்தது. இருள் கவியத் தொடங்கியது. அந்த சிறுமியின் தந்தை ‘வா, ஊருக்குக் கிளம்பலாம்‘ என்றார். அந்தச் சிறுமியோ அங்கிருந்து சிறிதும் நகர்வதாகத் தெரியவில்லை.
|
|
|
|
|