|
தேவலோகத்தில் வாழும் கந்தர்வர்களுக்கு, அவர்கள் விரும்பிய உருவத்திற்கு மாற்றிக் கொள்ளும் சக்தி உண்டு. தேவையான போது மட்டும் அதை பயன்படுத்தலாம். ஆனால் தேவலோக பாடகனான தனு என்னும் கந்தர்வன் தன் உருவத்தைப் பயங்கரமானதாக மாற்றி தேவர்கள், முனிவர்களை துன்புறுத்தி மகிழ்ந்தான்.
ஒருநாள் முனிவரான ஸ்துாலசிரஸ் முன்னால் தனு போய் நிற்க, பயங்கரமான அரக்கன் ஒருவன் நிற்கிறானே என அவர் பயந்தோடினார். தனுவும் அவரை விரட்டிச் சென்றான்.
சிறிது நேரம் விளையாட்டு காட்டிய பின் இயல்பு நிலைக்கு மாறி ஏளனமாகச் சிரித்தான். கோபமடைந்த முனிவர், ‘உன் திறமையை தவறாகப் பயன்படுத்திய உன்னை சும்மா விட மாட்டேன். விரும்பிய உருவத்தை இனி நீ பெற முடியாது. அழகை இழந்து, பார்ப்பவர் சிரிக்கும்படி பெரிய உடலுடன் அரக்கனாக போ’ என சாபமிட்டார்.
அதன் பின் பிரம்மாவை நோக்கித் தவமிருந்தான். காட்சியளித்த பிரம்மாவிடம் சாப விமோசனமும், நீண்ட வாழ்நாளும் தரும்படி வேண்டினான். சாபத்தை நீக்க முடியாது என மறுத்தார் பிரம்மா. நீண்ட வாழ்நாளை வரமாக அளித்தார். நீண்ட வாழ்நாளை வரமாகப் பெற்ற அவன், அரக்க உடல் இருப்பதால் அதற்கேற்ப உடல்பலமும் இருக்கும் என நினைத்தான். அதனால் தேவலோக அதிபதியான இந்திரனுடன் போர் புரிய விரும்பினான். இதையறிந்த இந்திரன் வெகுண்டான். வஜ்ஜிராயுதத்தால் தனுவின் அசுரத் தலையை வளைத்து அவனது மார்புக்குள் அழுத்தினான். அதனால் ஏற்பட்ட வலி தாளாமல் கதறினான்.
தவறை உணர்ந்து விடுவிக்குமாறு கெஞ்சினான். மார்பு வழியே உள்ளே சென்ற தலையால் அவதிப்பட்ட அவன், தான் எப்படி உயிர் வாழ்வது என மன்றாடினான்.
இரக்கப்பட்ட இந்திரன் அவனது மார்பில் ஒரு கண்ணும், வயிற்றுப் பகுதியில் ஒரு வாயும், அதில் பற்களும் உண்டாக வழி செய்தான். இதனால் தலை, கழுத்து இல்லாமல் கைகளுடன் மார்பில் ஒரு கண், வயிற்றில் வாய், பற்கள், கீழ்ப்பகுதி உடலுடன் விகாரமாக இருந்தான்.
விகார தோற்றத்தை எண்ணி வருந்திய நிலையில் இந்திரன், “ உன்னை நான் மன்னித்தாலும் இந்த தோற்றம் நீண்ட காலம் இருக்க வேண்டும் என்பது விதி. மகாவிஷ்ணு ராமராக அவதரிக்கப் போகிறார். அப்போது இயல்பான கந்தர்வ வடிவத்தை அடைவாய். அதுவரை கபந்தன் என்னும் பெயரில் அரக்கனாக வாழ்வாய்’’ என்றான்.
தண்டகாரண்ய வனத்தில் சிக்கும் உயிர்களைக் கொன்று வாழத் தொடங்கினான் தனு. தந்தை தசரதனுக்குக் கொடுத்த வாக்குப்படி ராமர், சீதை, லட்சுமணர் மூவரும் காட்டில் வாழ்ந்த போது சீதையை கடத்திச் சென்றான் ராவணன்.
தேடி அலைந்த ராமன், லட்சுமணன் இருவரும் தண்டகாரண்யம் என்னும் பகுதிக்குள் நுழைந்தனர். அங்கு தலை, கழுத்து இல்லாமல் மார்பில் சிவந்த நிலையில் ஒரு கண்ணும், வயிற்றுப் பகுதியில் நீண்ட பற்கள், வாயும் கொண்ட விகாரமாக இருந்த கபந்தனிடம் சிக்கினர்.
அவனது கோர வடிவம் கண்ட அவர்கள் அவன் ஒரு அரக்கன் என முடிவு கட்டினர். ராம லட்சுமணரைக் கண்டு சிரித்தபடி, ‘இருவரும் இப்போது எனக்கு உணவாகப் போகிறீர்கள்’ என்றான் கபந்தன். ‘‘உன்னைக் கொல்ல எமக்கு விருப்பம் இல்லை. உனக்குத் தலை, கழுத்தெல்லாம் இல்லையே, நீ இப்படி இருப்பதற்கு என்ன காரணம்?” என இரக்கமுடன் கேட்டார் ராமர்.
ராமர் பேசியதைக் கண்ட அரக்கன் ஆச்சரியப்பட்டு, “நீங்கள் இருவரும் யார்? காட்டிற்குள் ஏன் வந்தீர்கள்?” எனக் கேட்டான். “நாங்கள் தசரத சக்கரவர்த்தியின் பிள்ளைகள். என் பெயர் ராமன்.இவன் என் சகோதரன் லட்சுமணன். தந்தைக்கு கொடுத்த வாக்குறுதிபடி பதினான்கு ஆண்டுகள் காட்டில் வாழ வந்தோம். என் மனைவி சீதையும் உடன் வந்தாள். அவளை ராவணன் கவர்ந்து போய் விட்டான். தேடிச் செல்லும் வழியில் உன்னிடம் சிக்கினோம்” என்றார். அதனைக் கேட்ட கபந்தன் ஆச்சரியம் கொண்டான். சாப விமோசனம் பெற யாருக்காக காத்திருந்தானோ, அந்த ராமரையே துன்புறுத்தி விட்டேனே’ என வருந்தினான்.
‘‘ஆயிரம் ஆண்டுக்கும் மேலாக தங்களுக்காக காத்திருக்கிறேன். சாப விமோசனம் தாருங்கள்” என வேண்டினான். ராமரும் உதவ சம்மதித்தார்.
அதன் பிறகு லட்சுமணன், அரக்கன் கபந்தனைக் கொன்று அவனது உடலை எரியூட்ட ஏற்பாடு செய்தான். ராமர் உடலை எரியூட்டநெருப்பில் இட்டார். எரிந்த உடலில் இருந்து அழகிய கந்தர்வன் எழுந்து ராமரை வணங்கினான்.
பின்னர் அவன், “சாப விமோசனம் அளித்த தங்களுக்கு உதவ விரும்புகிறேன். உங்கள் மனைவியைப் பிரிந்து நீங்கள் துன்புற்றது போல, மனைவி, நாட்டையும் இழந்து வாழும் வானரர்களின் அரசன் சுக்ரீவன் என்பவன் சில வானரங்களுடன் ரிச்யமுகம் என்னும் மலைப்பகுதியில் இருக்கிறான். அவனை நண்பனாக்கிக் கொண்டால், அவனும், அவனுடன் இருக்கும் அனுமனும் சீதையைத் தேடுவதில் உதவியாக இருப்பர்” என்று இருவரையும் வணங்கி விடைபெற்றுத் தேவலோகத்திற்குச் சென்றான்.
ராமனும். லட்சுமணனும் கபந்தன் சொன்ன ரிச்யமுகம் மலைப்பகுதியை நோக்கிச் செல்லத் தொடங்கினர்.
|
|
|
|