|
தவத்தில் ஈடுபட்ட ருரு என்னும் அசுரன் தான் விரும்பினால் தனது மாயத் தோற்றத்தைத் தேவையான எண்ணிக்கையில் உருவாக்கிக் கொள்ள பிரம்மாவிடம் வரம் பெற்றான். அதனால் ஆணவம் கொண்ட அவன் மூவுலகங்களிலும் ஆயிரக்கணக்கான மாயத் தோற்றங்களை உருவாக்கி அங்கிருப்போரை எல்லாம் அழிக்க ஆரம்பித்தான்.
அவனது கொடுமையை தாங்க முடியாமல் அவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். வரத்தின் பலத்தால் தற்போது அழிக்க முடியாது. சிலகாலம் பொறுத்திருங்கள். பேராசையால் அவன் தானாக அழிவைத் தேடிக் கொள்வான் என தெரிவித்தார்.
இந்நிலையில் ஒருநாள் பொதியமலைக்குச் சென்ற அசுரன் அங்கு பார்வதியைக் கண்டான். அன்னையின் அழகில் மயங்கி எப்படியாவது தன் மனைவியாக்க வேண்டும் என துடித்தான். அதற்காக பிரம்மாவை வேண்டி தவம் மேற்கொண்டான். காட்சியளித்த பிரம்மாவிடம் தன் மனைவியாக பார்வதி வர வேண்டும் என்றும் சிவன் தன்னைக் கொல்லக் கூடாது என்றும், தன் தலை துண்டிக்கப்பட்டாலும் மீண்டும் உயிர் பெற வேண்டும் என்றும் எதிரிகள் அனைவரும் பலவீனமாக இருக்க வேண்டும் என்றும் நான்கு வரங்கள் கேட்டான்.
உனது எண்ணத்தை மாற்றிக் கொள்ளாவிட்டால் விரைவில் அழிவாய். பார்வதியை அடைய விரும்பினால் சிவபெருமானை நோக்கி தவம் செய் என்று தெரிவித்து மற்ற மூன்று வரங்களைக் கொடுத்தார். அவனும் அங்கிருந்து மலையம் என்கிற மலைப்பகுதிக்குச் சென்று தவம் செய்யத் தொடங்கினான். தவத்தைக் கடுமையாக்க எண்ணி ஒரு நிலையில் சுவாசிக்காமல் மூச்சை அடக்கி தவமிருந்தான். தவவலிமையால் மூவுலகங்களும் தகித்தன. உயிர்கள் எல்லாம் துன்புற்றன.
தவக்கனல் கைலாயத்தை சென்றடைந்தது. அதைத் தாங்க முடியாதவர் போல சிவனும் அங்கிருந்து வெளியேற வேண்டும் என அங்கலாய்த்தார். அதைக் கண்ட பார்வதி, ‘இந்த வெப்பம் ஏன் ஏற்படுகிறது என தங்களுக்குத் தெரியாதா? அதை தடை செய்யக் கூடாதா? இங்கிருந்து நாம் ஏன் வெளியேற வேண்டும்?’’ எனக் கேட்டாள்.
‘‘ருரு என்னும் அசுரன் கடுந்தவம் செய்கிறான். அதிலிருந்து தப்பவே இங்கிருந்து செல்ல நினைக்கிறேன்’’ என்றார். “தவமிருக்கும் பக்தனுக்கு வரமளிக்க வேண்டியதுதானே... அதை விட்டு, இங்கிருந்து செல்ல வேண்டும் எனச் சொல்லலாமா’’ என்றாள் பார்வதி.
“அசுரனான அவன் உன்னை மனைவியாக்கிக் கொள்ள வேண்டும் என தவம் செய்கிறான். ஏற்கனவே அவனுக்கு என்னால் இறப்பு ஏற்படக்கூடாது என பிரம்மாவிடம் வரம் பெற்றுள்ளான். அவனை என்னால் ஒன்றும் செய்ய முடியாது. அவனை அழிக்க நீ செல்வதுதான் சரி” என்றார் சிவன்.
அதைக் கேட்டு கோபமடைந்த பார்வதி, “உலகையே காப்பாற்றும் தங்களின் மனைவியான என்னை மனைவியாக்க துடிக்கும் அசுரனை அழிக்கிறேன்’’ என சபதமிட்டு புறப்பட்டாள்.
பூலோகம் வந்த அவள், மதம் பிடித்த யானை ஒன்று வயலில் பயிர்கள் அழிப்பதைக் கண்டாள். அதைக் கொன்று அதன் தோலை இடுப்பில் சுற்றிக் கொண்டாள். அதன் பின் ஓரிடத்தில் சிங்கம் ஒன்று பசுவைக் கொல்ல முயற்சிப்பதைக் கண்டாள். சிங்கத்தைக் கொன்று அதன் தோலை உரித்து மேலாடையாக அணிந்தாள்.
சிங்கத்தின் ரத்தத்தை உடல் முழுக்கப் பூசிக் கொண்டாள். பெரிய வயிறு, கோரைப் பற்கள், கருப்பு நிறம் என தன்னை கொடூரமாக மாற்றினாள். அசுரனான ருரு தவம் செய்யும் இடம் நோக்கி நடந்தாள்.
அசுரனுக்கு முன் எக்காளமாகச் சிரித்தாள். அதைக் கேட்டு விழித்த அசுரன் இடையூறு செய்யாமல் விலகிச் செல்லும்படி வேண்டினான். ‘‘அசுரனே... சிவனின் மனைவியான பார்வதி வந்திருக்கிறேன். என்னைத் திருமணம் செய்ய விரும்புவதாக அறிந்தேன். தவத்தைக் கலைத்து விட்டு சண்டைக்கு வா’’ என அழைத்தாள். கோபத்துடன் எழுந்த ருரு, ‘‘ நான் விரும்பும் பார்வதி உன் போல கொடுசூரி இல்லை. அவளின் பேரழகு என்னுள் நீங்காமல் நிறைந்திருக்கிறது. என் தவத்தைக் கலைத்த உன்னைக் கொல்வது தான் என் முதல்பணி’’ என கதாயுதம் ஒன்றை வீசினான்.
அதனைத் தடுத்ததோடு அங்கிருந்த பெரிய பாறையைப் பெயர்த்தெடுத்து அசுரனின் மீது வீசினாள். அதை அவன் நொறுக்கி எறிந்தான். அதன் பிறகு வாளால் அவன் தாக்க கோபமடைந்த பார்வதியும் கடுமையாகத் தாக்கினாள்.
ஒரு கட்டத்தில் சமாளிக்க முடியாத ருரு தன் வரபலத்தால் ஆயிரக்கணக்கான மாயத் தோற்றங்களை உருவாக்கினான். அவர்களைக் கண்ட பார்வதியும் பெரிதாக சிரித்தாள். அவளது சிரிப்பில் இருந்து ஆயிரக்கணக்கான யோகினிகள் தோன்றி மாயத் தோற்றங்களை அழிக்கத் தொடங்கினர்.
இந்நிலையில் பார்வதியிடம் இருந்து தப்பிக்க தேவர் உலகம், பூவுலகம், பாதாள உலகம் என மூன்று உலகங்களுக்கும் மாறி மாறி ஓடினான். மூன்று உலகத்தையும் எட்டும் விதத்தில் தன் உருவத்தைப் பெரிதாக்கி சண்டிகாதேவியாக காட்சியளித்தாள் பார்வதி.
அன்னையின் கண்களிலிருந்து அசுரனால் தப்ப முடியவில்லை. அசுரனின் தலையைத் துண்டித்து ஒரு கையில் வைத்துக் கொண்டாள். அதிலிருந்து வடிந்த ரத்தம் பூமியில் விழாதபடி பல சண்டிகைகளைத் தோற்றுவித்து குடிக்கச் செய்தாள்.
தன் கூரிய நகங்களால் அசுரனின் உடலைக் கீறி தோலை பிரித்தெடுத்து மற்றொரு கையில் வைத்துக் கொண்டாள். அவனது உடலை கால்களால் உதைத்து பாதாள உலகிற்கு அனுப்பினாள்.
அசுரனின் முடிவைக் கண்டு தேவர்கள் மகிழ்ந்தனர். அவர்களைக் கண்ட சண்டிகா தேவியிடம் கோபம் குறையத் தொடங்கியது. அதற்கேற்ப அவளின் பெரிய உருவமும் குறையத் தொடங்கியது.
சண்டிகா தேவியாகவே அங்கிருந்து கைலாயம் சென்றாள். தான் உடுத்திய யானை, சிங்கத்தோல்களை சிவனிடம் கொடுத்தாள். சிங்கத் தோலை இடுப்பிலும், யானைத் தோலை மார்பிலும் சிவன் அணிந்து கொண்டார்.
அதன் பின் சண்டிகா தேவி தன் கையில் இருந்த அசுரன் ருருவின் தோலை தன்னுடம்பில் போர்த்திக் கொண்டாள். அதைக் கண்ட பிரம்மா, விஷ்ணு, இந்திரன், தேவர்கள், முனிவர்கள் அனைவரும் அன்னையை வணங்கினர். கரிய நிறத்தில் பயங்கரமாக இருந்த சண்டிகா தேவியிடம், அன்பு தவழும் பார்வதியாக காட்சி அன்புக் கட்டளையிட்டனர்.
வேண்டுதலை ஏற்று அழகிய பார்வதியாக மாறினாள். அவளைக் கண்டு மகிழ்ந்தார் சிவபெருமான். அனைவரும் தெய்வத் தம்பதியரை வாழ்த்திப் பாடி மகிழ்ந்தனர்.
|
|
|
|