Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » யட்சன் நடத்திய நாடகம்
 
பக்தி கதைகள்
யட்சன் நடத்திய நாடகம்


யட்சனின் கேள்விகளுக்கு தர்மனிடம் துளியும் தளராத பதில்கள்! கேள்விகளும் தொடர்ந்தபடியே இருந்தன. அதில் பல கேள்விகள் விசித்திரமானவை மட்டுமல்ல மிகவும் நுட்பமானவை.
‘‘எந்த மனிதன் மூச்சு விட்டுக் கொண்டிருக்கும் போதும் உயிரில்லாமல் இருக்கிறான்?’’ என்பது அதில் ஒன்று.
‘‘தேவதைகள், அதிதிகள், வேலைக்காரர்கள், பித்ருக்கள், ரிஷிகள் ஆகிய ஐவருக்கும் கொடுக்க வேண்டிய அவிர் பாகத்தை கொடுக்காதவன் மூச்சிருந்தும் இறந்தவனே’’ என்று சரியான பதிலை தர்மனும் கூறினான். கேள்விகள் அதன் பின்னும் தொடர்ந்தன.
‘‘பூமியைக் காட்டிலும் கனமானது எது’’
‘‘தாய்’’
‘‘ஆகாயத்தை விட பெரியது எது’’
‘‘தந்தை’’
‘‘காற்றை விட விரைவானது எது’’
‘‘மனம்’’
‘‘புல்லைக் காட்டிலும் அதிகமானது எது’’
‘‘கவலை’’
‘‘எது துாங்கும் போதும் கண்களை மூடாமல் இருக்கிறது’’
‘‘மீன்’’
‘‘எது பிறந்தும் அசைவற்று இருக்கும்’’
‘‘முட்டை’’
‘‘எதற்கு இதயம் இல்லை’’
‘‘கல்லுக்கு’’
‘‘எது வேகத்தால் அதிகரிக்கிறது’’
‘‘நதி’’
‘‘தேசாந்திரிக்கு யார் உற்ற தோழன்’’
‘‘வித்தை’’
‘‘வீட்டில் இருப்பவனுக்கு யார் தோழன்’’
‘‘மனைவி’’
‘‘நோயாளிக்கு யார் தோழன்’’
‘‘மருத்துவன்’’
‘‘இந்த உலகம் எப்படி இருக்கிறது’’
‘‘காற்றால் நிரம்பி இருக்கிறது’’
‘‘சாகப் போகிறவனுக்கு யார் தோழன்’’
‘‘தானம்’’
‘‘எவன் ஒருவனாக சஞ்சரிக்கிறான்’’
‘‘சூரியன்’’
‘‘பிறந்து மறைந்து பின் பிறப்பவன் எவன்’’
‘‘சந்திரன்’’
‘‘எது பெரிய பாத்திரம்’’
‘‘பூமி’’
இப்படி கேள்விகள் யட்சனிடம் தொடர்ந்து கொண்டே இருக்க சளைக்காமல் தர்மனும் சரியான பதில்களைக் கூறிக் கொண்டே வந்தான்.
இறுதியாக ‘‘எது தினமும் நடக்கிற நிகழ்ச்சி’’ என்ற கேள்வியை கேட்டான் யட்சன். அப்படி கேட்டதோடு நில்லாமல் இதுவரை கேட்ட கேள்களுக்கு சரியான பதில்களைக் கூறினாய். ஆனால் இதற்கு் சரியான பதில் கூறுவது என்பது முடியாத செயல். இதற்கான விடையை அந்த பரமாத்மாவால் மட்டுமே கூற முடியும்’’ என்று அவன் கூறிட மறுநொடியே தர்மன் தங்களை வழிநடத்தும் கிருஷ்ணனைத்தான் நினைத்தான். அடுத்த நொடியே தர்மன் மனதில் சரியான விடை உதிக்கத் தொடங்கியது. அதைக் கூறவும் தொடங்கினான். ‘‘இந்த பூமி ஒரு பெரிய பாண்டம். ஆகாயம் அதன் மூடி. அந்த பாண்டத்தில் தாவர ஜங்கமங்களை போட்டு இரவு பகலாகிற விறகைக் கொண்டு சூரியனாகிய அக்னியை மூட்டி மாதங்களும், வாரங்களும், நாட்களுமான காலக்கரண்டிகளால் கிண்டிக் கிளறி நடக்கும் சமையலே தினமும் நடக்கிற நிகழ்ச்சி’’ என்ற அந்த பதில் யட்சனை திகைப்பில் ஆழ்த்தியது.
‘‘தர்மராஜனே... உண்மையில் நீயே நிகரில்லாத அறிஞன். விவேகியும் கூட! உனக்கும் உன் சகோதரர்களுக்கும் தான் எவ்வளவு வேற்றுமை? சரீர பலம், புத்தி பலம், அழகு, கணிதம், கால ஞானம் இவைகளை எல்லாம் விட உயர்ந்தது உனது சகல ஞானம். இப்போது வேண்டுமளவுக்கு நீ நீர் பருகலாம். எடுத்தும் செல்லலாம். இந்த நீர் உனக்கு விஷமாகாது’’ என்றான் யட்சன்.
‘‘இல்லை... நீரை பருகப் போவதில்லை. உன்னை திருப்திப்படுத்தவே கேள்விகளுக்கு பதில் கூறினேன். நான் தாகம் தீர்த்துக் கொண்டு உயிர் வாழ்வதற்காக அல்ல’’ நான் அப்படியே வடக்கிருந்து மூச்சையடக்கி உயிர் விடுவதே சிறந்தது. என் தம்பிகள் இல்லாத உலகில் வாழ்வது சரியாகாது’’ என்றபடியே தர்மன் மடுக்கரை பாறை மீது அமர்ந்தான்.
‘‘உன் தம்பிகளை எண்ணிய நீ மனைவியாகிய திரவுபதியை மறக்கலாமா’’ என யட்சன் விடாமல் கேட்டான்.
‘‘எங்கள் நிலையை அறிந்தால் அவள் எங்களின் சிதையில் தீப்பாய்ந்து எங்களைத் தொடர்வாள்’’
‘‘இது என்ன பேதமை. வாழத்தானே பிறந்தாய். சாகவா பிறந்தாய்’’
‘‘இப்படி ஒரு கேள்வி கேட்கும் உன்னால் அல்லவா எங்களுக்கு இந்த நிலை... இந்த கேள்வியை கேட்க உனக்கு தகுதியும் இல்லை. உன் மனதில் ஈரமும் இல்லை’’ என தர்மன் பதிலளிக்க யட்சன் அதிர்ந்தான்.
‘‘உன்னை நான் பரிசோதித்தேன். தவறாக கருதாதே. இங்கே எனக்கான கடமையை செய்தேன். ஆயினும் உன் கருத்து சரியே. உனக்காக என் விசேஷ சக்தியை பயன்படுத்தி இறந்த நால்வரில் ஒருவரை உயிர்ப்பிக்கிறேன். யாரை உயிர்ப்பிக்கலாம்’’ எனக் கேட்டான். அப்படியானால் நகுலனை உயிர்ப்பிக்கலாம் என்றான் தர்மன்.
‘‘விசித்திரம்... வினோதம்... வில் வித்தையில் விண்ணைத் தொட்ட அர்ஜூனன், தோள்வலிமையால் யானைகளை வீசி எறியும் பீமன், காலக்கணக்கில் புலியான சகாதேவன் என மூவர் இருக்க சிறப்பே இல்லாத நகுலனை உயிர்ப்பிக்க சொல்கிறாயே ஏன்’’ எனக் கேட்டான் யட்சன்.
‘‘என் தந்தைக்கு குந்தி, மாத்ரி என இரண்டு மனைவியர். அதில் நாங்கள் குந்தியின் மக்கள்.  மாத்ரி தேவிக்கோ நகுலன் ஒருவனே பிறந்தான். என் தாய்க்கு நானிருக்கிறேன். மாத்ரி தேவிக்கு நகுலனால் தான் ஈடு செய்ய முடியும். இங்கே உணர்வே பெரிது. ஏனைய வலிமகைளோ, கணக்குகளோ பெரிதில்லை’’ என்ற தர்மனின் பதில் யட்சனைக் குளிர்வித்தது.
‘‘தர்மா... எந்த ஒரு கேள்விக்கும்  சளைக்காமல் பதிலளிக்கிறாய். அதற்கான கர்வமும் இல்லை. உன் மனம் சமநிலை உடையது. தர்மத்தால் ஆனது. உன் மனதை வருத்துபவர்கள் யாராக இருந்தாலும் நரகத்தை அடைவர். நானும் விதிவிலக்கல்ல. எனவே உன் சகோதரர் அனைவரையும் என் விசேஷ சக்தியால் உயிர்ப்பிக்கிறேன்’’ என யட்சன் சொன்னதும் இறந்து போன நால்வரும் உயிர் பெற்றனர். துாங்கி எழுந்தது போல காட்சியளித்தனர். யட்சனும் புன்னகைத்தான். ஆனால் தர்மனோ, ‘‘யட்சனே... உண்மையைச் சொல். யார் நீ’’ என்று கேட்டான்.
‘‘இது என்ன கேள்வி தர்மா... நான் யட்சன்’’
‘‘இல்லை. யட்சர்களின் சக்தியை நான் அறிவேன். உயிரினங்களில் ஆகாயம் நோக்கி வளர்வதாலும், ஆறாம் அறிவை உடையதாலும் வல்ல பிறப்பாளர்களாக திகழ்பவர்கள் யட்சர், கந்தர்வர், கின்னரர், கிம்புருடர், நாகர், தேவர், மாந்தர் என்ற எழுவருக்கும் உயிர்ப்பிக்கும் வல்லமை கிடையாது. அது முப்பெரும் தெய்வங்கள், எமதர்மன், பஞ்சபூதாதையருக்கு மட்டுமே உண்டு. அடுத்து பித்ருக்கள் நினைத்தால் ஒருவர் பிழைக்கலாம். அவ்வகையில் எங்களை உயிர்ப்பிக்க நீ யட்ச வடிவிலான தர்மராஜனே’’ என்று தர்மன் கூறினான். அங்கே யட்சன் மறைந்து தர்ம தேவன் தோன்றினான்.
‘‘உன் கேள்வி சரியே! குந்திக்கு நீ பிறக்க காரணமான தர்மதேவன் நானே. உன் தகப்பன். உன்னையும், மற்ற பிள்ளைகளையும் காண வந்தேன். வந்த இடத்தில் உன் புகழ் காலத்தால் விளங்கிட யட்சனாக தோன்றி நாடகம் நடத்தினேன். என் மகன் என்பதை எல்லா விதத்திலும் நிரூபித்து விட்டாய். இதற்காக மகிழ்ந்து நான் வரங்கள் தர சித்தமாக இருக்கிறேன். என்ன வேண்டுமோ கேள்’’ என்றான். யட்சனாக இருந்து மாறிய தர்மதேவன்.
தர்மனும் மற்ற நால்வரும் தர்மராஜனை மகிழ்வோடு வணங்கினர். தர்மனும் வரங்களைக் கேட்க தயாரானான். அது அற்பமாகவோ. வெறும் ஆசைக்குரியதாகவோ இருந்து விடாமல் இனி வரும் காலத்தில் தங்களுக்கு எல்லா வகையிலும் கைகொடுப்பதாக இருக்க வேண்டும் என்று விரும்பியவன் அதற்கேற்ப தயாரானான். அந்த வரங்கள்...


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar