|
சீதை யாரால் கவர்ந்து செல்லப்பட்டாள் என்பது தெரிந்து விட்டது. அவளை
கடத்தப்பட்ட சீதையை மீட்பதற்காக ராவணனுடன் போராடிய ஜடாயுவின் இறக்கையை வீழ்த்தினான் ராவணன். தன் உயிர் பிரியும் முன்பாக சீதை கடத்தப்பட்ட தகவலை ராமனிடம் அவர் தெரிவித்தார். ராமனும், லட்சுமணனும் அதைக் கேட்டு வருந்தினர். சீதையைக் காப்பாற்ற ஜடாயு செய்த முயற்சிகள் வீணாகியதோடு அவரும் உயிரும் பறி போனதே என வருந்தியதோடு தந்தைக்கு இணையாக கருதி அருவருக்கு நீத்தார் கடனை ராம, லட்சுமணர் செய்தனர். கனத்த மனதுடன் சீதையைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். வழியில் மானும், மயிலும், யானையும் தத்தம் துணையுடன் வருவதைக் கண்டு ராமன் ஏங்கினான். அண்ணனை ஆறுதல்படுத்தி அழைத்துச் சென்றான் லட்சுமணன். நீண்டதுாரம் நடந்த அவர்கள் சோலை ஒன்றை அடைந்தனர். அப்போது ராமனுக்கு தாகம் ஏற்பட்டது. சோலையே ஆனாலும் நீர்நிலை ஏதும் அங்கு தென்படவில்லை. லட்சுமணன் எங்காவது போய் தண்ணீர் கொண்டு வருவதாகச் சொல்லி புறப்பட்டான். சூரியன் மறைந்து மாலை பொழுதானது. எதிர்பாராமல் வழியில் ஒரு பெண்ணை சந்தித்தான். அயோமுகி என்னும் அவள், லட்சுமணனைக் கண்டு காமவயப்பட்டாள். வேட்கையைத் தணிக்க அரக்க உணர்வுடன் நெருங்கினாள். அவளின் கோர தோற்றம், வெறியான பார்வை, உலக்கை போன்ற கைகளைப் பார்த்த லட்சுமணன், ‘சந்தேகமேயில்லை, இவள் தாடகை, சூர்ப்பனகை வழி வந்தவள்’ என முடிவெடுத்தான். ராமனின் தம்பி என்ற பண்புடன் பேசி அவளிடம் இருந்து விலக முயற்சித்தான். ‘யாரம்மா நீ? என் வழியை விட்டு விலகிச் செல். என் அண்ணன் ராமனின் தாகம் தீர்க்க நீர் தேடிச் செல்கிறேன்’ என தெரிவித்தான். ‘அப்படியா’ என்ற அயோமுகி, ‘சரி நமக்குள் ஒரு ஒப்பந்தம் செய்வோம். நீ என் தாகத்தைத் தீர்த்து வை. நான் உன் அண்ணனின் தாகத்தைத் தீர்க்க தண்ணீர் கிடைக்கச் செய்கிறேன்’ என்று மோகமாகக் கேட்டாள். திடுக்கிட்ட லட்சுமணன் சுதாரித்துக் கொண்டான். ‘இதோ பார், அனாவசியமாக என் பாதையில் குறுக்கிடாதே. அநாகரிகமாகப் பேசுகிறாய். என்னை உன்னால் பலவந்தப்படுத்த முடியாது’ என சத்தமாகச் சொன்னான். இவனை இங்கே சம்மதிக்க வைப்பதை விட தன் இருப்பிடமான குகைக்கு அழைத்துச் சென்றால் எப்படியாவது சரிகட்டலாம் எனக் கருதினாள். ‘மோகனை’ என்னும் மந்திரத்தை உச்சரித்தாள். லட்சுமணன் மயங்கினான். அவனைத் துாக்கிக் கொண்டு வான்வழியாக பறந்தாள் அயோமுகி. இங்கே ராமன் தவித்துக் கொண்டிருந்தான். தாகத்தால் மட்டுமல்ல, தம்பியின் நீண்ட நேரப் பிரிவாலும்தான். ஏற்கனவே மானைத் துரத்திச் சென்று மனைவியை பறி கொடுத்தாயிற்று. இப்போது தண்ணீர் தேடிச் சென்ற தம்பியையும் இழக்க நேருமோ என்ற வேதனைப்பட்டான். தம்பி கொடுத்த தெம்பால்தானே சீதையை மீட்க முடியும் என்ற எண்ணமும் வலுப்பட்டது! இப்போது சோதனையாக அந்த பக்கபலத்தையும் இழந்திடுவேனோ என நொந்தான். லட்சுமணன் செய்த சேவைகளை மதிப்பிட முடியுமா? கண் துஞ்சாமல், சொந்த சுகம் நாடாமல், எனக்குப் பணிவிடை செய்வதே பிறவிப்பயன் என்று செயல்பட்ட அவனுக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்? அடுத்த பிறவியிலாவது அவனுக்குத் தம்பியாகப் பிறந்து வாழ்நாள் முழுவதும் தொண்டாற்ற வேண்டும்… அதுசரி, இப்போது அவன் வராவிட்டால்? சீதை, லட்சுமணன் இருவரும் இல்லாமல் நான் தனியே அயோத்திக்குத் திரும்ப முடியுமா? அதுதான் எவ்வளவு பெரிய அவமானம்! அதைவிட இங்கேயே வாளால் குத்திக் கொண்டு உயிர் விடுவதுதான் சரி என்று யோசிக்க ஆரம்பித்தான் ராமன். ‘அறப்பால் உளதேல் அவன் முன்னவன் ஆய்ப் பிறப்பான் உறில் வந்து பிறக்க எனா மறப்பால் வடி வாள் கொடு மன் உயிரைத் துறப்பான் உறுகின்ற தொடர்ச்சி யின்வாய் - கம்பர் அதே சமயம் அயோமுகியின் குகையில் கண்விழித்த லட்சுமணன் தான் கடத்தப்பட்டிருப்பதைப் புரிந்து கொண்டான். அவளோ காம வேட்கையுடன் நின்றிருந்தாள். ‘என் விருப்பத்துக்கு இணங்கிவிடு. இல்லாவிடில் உன்னை நான் முழுமையாகப் புசிக்க வேண்டியிருக்கும்’ என மிரட்டினாள். நயமாகச் சொல்லி கேட்காதவளை, தனக்கு அந்த எண்ணமே இல்லை என்று விளக்கியும் புரிந்து கொள்ளாதவளை இனியும் பொறுப்பது தகாது எனத் தீர்மானித்தான் லட்சுமணன். வாளால் அவளின் காது, மூக்கை வெட்டினான். ஏற்கனவே சூர்ப்பனகையிடம் ஏற்பட்ட அதே அனுபவம்! பெண் என்று கருணை காட்டாமல் அரக்கத்தனம் மிகுந்த ஒருத்தியைத் தாக்குகிறோம் என்று மேற்கொண்ட சமாதானம் அது. நாலாபுறமும் அதிர அலறினாள் அயோமுகி. அவளது கூக்குரல் பல காததுாரம் கேட்டது. அதை ராமனும் கேட்டான். ஆற்றாமையால் தன்னை மாய்த்துக் கொள்ள குறுவாளை கழுத்தருகே கொண்டு சென்ற அவன் அந்த தீனக்குரல் கேட்டுத் தயங்கினான். சூழலை அவனால் ஊகிக்க முடிந்தது. தன் தாகம் தீர தண்ணீர் தேடிச் சென்ற தம்பி ஏதோ சதியில் சிக்கிவிட்டான். ஆனால் இப்போது கேட்ட குரல் தம்பியுடையது இல்லை என்பதால் அவனால் மரண நிலைக்குப் போகும் யாரோ ஒரு கெடுமதியாளனுடையது. ஆகவே தற்கொலை எண்ணத்தை கைவிடுவோம் என்று ஆறுதலும் கொண்டான். உடனே ராமன் அக்னி அஸ்திரத்தை ஏவினான். அது ஒளியுடன் புறப்பட்டு லட்சுமணனின் இருப்பிடத்தைக் காட்டியது. தம்பியைக் கண்ட ராமன் மகிழ்ந்தான். அந்த ஒளியில் அண்ணனைக் கண்டு கொண்ட லட்சுமணனும், ‘அண்ணா... கவலைப்படாதீர்கள். பாதுகாப்பாகத்தான் இருக்கிறேன். உடனே வருகிறேன்’ என்று உரத்துக் குரல் கொடுத்தான். நிம்மதிப் பெருமூச்சு விட்டான் ராமன். தம்பி வந்ததும் தழுவிக் கொண்டான். லட்சுமணன் நடந்ததை விவரித்தான். ராமனும் விரக்தியில் உயிர் போக்க முயன்றதை தெரிவித்தான். பதறிப் போன லட்சுமணன். ‘அண்ணா, என்ன செயல் செய்யத் துணிந்தீர்கள்? உங்களை விட்டு நான் பிரிவேனா? அண்ணியாரைத் தேடும் தலையாயப் பணியை விட்டு விலகுவேனா? ஏன் நம்பிக்கை இழக்கிறீர்கள்? நிச்சயம் ராவணனிடமிருந்து அண்ணியாரை மீட்டு அயோத்தி மீள்வோம்’ என்று உற்சாகமளித்தான். நெகிழ்ந்தான் ராமன். தம்பியின் தன்னம்பிக்கை வார்த்தைகள் பலம் சேர்த்தன. கூடவே, ‘நல்ல வேளை! அயோமுகியைக் கொல்லாமல் உறுப்புச் சிதைவு மட்டும் செய்தாயே இது மனுநீதிச் செயலே’ என்று பாராட்டினான் ராமன். தாடகையைக் கொன்றது குருநாதர் விஸ்வாமித்திரரின் ஆணைப்படிதான். அந்தச் சூழ்நிலையில் அதுவும், இந்தச் சூழ்நிலையில் இதுவும் நியாயமானது தான் என தெளிவுபடுத்தினான். இருவரும் வருணனை வேண்டி மந்திரம் ஓதினர். கங்கை ஊற்றாகப் பீறிட்டு அவர்களின் தாகத்தைத் தணித்தது.
|
|
|
|