|
இந்திரஜித் போர்க்களம் புகுந்தான். அவனை எதிர்கொள்ளத் தயாரான லட்சுமணனிடம், அவனைப் பற்றி விபீஷணன் கூறினான். ‘‘இந்திரஜித் ஒரு மாவீரன். பதினாயிரம் தேவர்கள் புடைசூழ வந்து இந்திரனையே வெற்றி பெற்று அவனைக் கயிறால் கட்டியிழுத்து வந்து இலங்கையில் சிறை வைத்தவன். அவ்வளவு ஏன், சீதையைத் தேடி இலங்கை சென்ற ஆற்றல் மிக்க அனுமனையே பிரம்மாஸ்திரத்தால் கட்டுப்படுத்தியவன். அதோடு மாயவித்தைகள் தெரிந்தவன். ஆகவே இவனுடன் எச்சரிக்கையாகவே போரிட வேண்டும்’’ என்றான் விபீஷணன். அதைப் போலவே இந்திரஜித் மழை போலக் கணைகளைப் பொழிந்து ஆயிரக்கணக்கில் வானரர்களை மாய்த்தான். வானரர்கள் அவனை நோக்கி எறிந்த பெரும் பாறைகள், மலைகள், நெடியதாகவும் பருத்தும் விளங்கிய மரங்கள் எல்லாவற்றையும் தவிடுபொடியாக்கினான். சுக்ரீவன் மீதும் பாணங்களை வீசி திக்குமுக்காட செய்தான். அப்போது அனுமன் அவன் மீது எறிந்த ஒரு குன்றைத் தன் கணையால் துாளாக்கிய இந்திரஜித், ‘இலங்கைக்குள் புகுந்த அன்றே உன்னைக் கொல்லாமல் விட்டது என் தவறுதான். என் தம்பி அக்ககுமாரனைத் தரையோடு தரையாகத் தேய்த்துக் கொன்ற உன்னை சும்மா விட்டிருக்கக் கூடாது. வெறும் கல், மரம் என வீசிப் போரிடும் உன்னை அழிப்பது வெகு எளிது. அதை நீயும் விரைவில் புரிந்து கொள்வாய்’ என ஆத்திரத்துடன் கத்தினான். ‘எங்கள் படையில் வில் எடுப்போருக்குச் சமமாக கல் எடுப்போரும் வீரமிக்கவர்கள்தான், தெரிந்து கொள்’ என பதிலளித்த அனுமன், ‘நீ யாருடன் போரிட விரும்புகிறாய், என்னுடனா, எங்கள் இளவல் லட்சுமணனுடனா அல்லது உன் தந்தையின் தலைகளைப் பந்தாட வந்திருக்கும் ராமனுடனா?’ என கேலியாகக் கேட்டான். ‘நீங்கள் மூவரும் சேர்ந்துதான் வாருங்கள். என் ஆற்றலால் மூவரையும் வானுலகம் அனுப்புவேன்’ எனக் கொக்கரித்த இந்திரஜித், ‘எங்கே அவன், லட்சுமணன், முதலில் அவனைத் தீர்த்து விடுகிறேன்’என சொன்னதோடு நுாற்றுக்கணக்கான அம்புகளை அனுமன் மீது வீசி சோர்வடையச் செய்தான். இந்திரஜித்தின் வெறியாட்டத்தை அடக்கிட வந்தான் லட்சுமணன். உடனே அனுமன் அவனைத் தன் தோளில் சுமந்து கொண்டு இந்திரஜித்தின் தாக்குதலைச் சமாளிக்கவும், எதிர் தாக்குதல் புரியவும் வழிசெய்தான். லட்சுமணனின் போர்த்திறன் கண்டு இந்திரஜித் திகைத்தான். இத்தகைய வில்லாளனை அவன் இதற்கு முன் சந்தித்ததில்லை. அவனுடைய லாவகமும், வேகமும், இலக்கு தப்பாத நேர்த்தியும் பிரமிக்க வைத்தன. ஆயுதங்களால் அவனைத் தடுமாற வைக்க முடியாது என புரிந்து கொண்ட இந்திரஜித் சட்டென மாயமாய் மறைந்தான். லட்சுமணன் திகைத்தான். அப்போது வானில் இருந்து மழை போல அம்புத் துளிகள் சரமாரியாக விழுந்தன. அவற்றில் ஒன்றான நாகபாசம் லட்சுமணனை மயக்கமடைய வைத்தது. ஆனால் நல்ல வேளையாக ராமனுக்கு உதவி செய்ய வந்த கருடன் தன் ஆற்றலால் நாகபாசத்தில் இருந்து விடுவித்தான்.
விபீஷணன் ஆறுதலாக, ‘கவலைப்படாதே லட்சுமணா, அவன் தன்னை விட பலசாலியுடன் போரிட நேர்ந்தால், உடனே மாயமாக மறைவான். எல்லா திக்குகளிலிருந்து அம்பு மழை பொழிவான். யார் தாக்குகிறார்கள் என அறிய முடியாமல் திகைத்து நிற்பவர்கள் அம்புகளால் தாக்கப்பட்டு உயிரை இழப்பர். இது அவன் பெற்ற வரம். பொறுத்திரு. உன்னால் அவனை வீழ்த்த முடியும்’ என்று உற்சாகப்படுத்தினான்.
இந்நிலையில் இந்திரஜித் நிகும்பலா யாகம் நடத்தினால் தன் பிரமாஸ்திரத்துக்கு மேலும் பலம் கூடும், அதன் மூலம் ராமன், லட்சுமணனோடு வானரப் படைகளையும் வெல்ல முடியும் எனத் தீர்மானித்தான். போர்க்களத்தில் எல்லோரையும் மாயக் குழப்பத்தில் ஆழ்த்தி விட்டு அரண்மனைக்கு திரும்பினான். யாகம் நடைபெற போதிய அவகாசம் வேண்டும் என்பதால் ஒரு திட்டம் தீட்டினான். அதாவது போர்க்களத்தில் மாயத் தோற்றத்தில் சீதையை உருவாக்குவது, அவளைக் கொல்வது, அதைப் பார்த்த அனைவரும் தவிக்கும் போது, அயோத்திக்கும் சென்று தாயார்கள் மூவர், பரதன், சத்ருக்னன் ஆகியோரையும் வெட்டப் போவதாகச் சொல்வது, அப்போது அவர்கள், சீதையே போன பிறகு இனி எதற்கு ராவணனுடன் சண்டை எனக் கருதி அயோத்திக்குப் புறப்பட்டு விடுவார்கள் அல்லது குறைந்த பட்சம் அயோத்தி நடவடிக்கையை அறிந்து வர அனுமனையாவது அனுப்பி வைப்பார்கள். இந்த அவகாசத்திற்குள் யாகத்தை முடித்து, தான் பெரும் பலவானாகி விடலாம் என்று கருதினான்.
அதே போல உக்கிரமாகப் போரிட்டுக் கொண்டிருந்த தன் முன்னர் சீதை தோன்றவே திகைத்தான் அனுமன். அசோகவனத்தில் பார்த்த அதே சீதை! அவளைப் பற்றி நின்ற இந்திரஜித், ‘உங்களின் கண் முன்னே இவளைக் கொல்கிறேன். இவளால்தானே இத்தனை போராட்டம்? இவளுக்குப் பிறகு அயோத்தியில் உள்ள உங்கள் சொந்தங்களை வெட்டுவேன்‘ என கத்தியபடி வாளை ஓங்கினான். உடனே மண்டியிட்டு அழுதாள் சீதை. அனுமனும் கெஞ்சியும் இரக்கப்படாத இந்திரஜித், வாளால் சீதையைத் வெட்டி எறிந்தான். ஆளுடையாய் அருளாய் அருளாய் என்று ஏழை வழங்குறு சொல்லின் இரங்கான் வாளின் எறிந்தனன் மாக் கடல் போலும் நீள் உறு சேனையினேடு நிமிர்ந்தான் – கம்பர் பிறகு புஷ்பக விமானத்தை வரவழைத்து அயோத்தி நோக்கிப் போவது போல பாசாங்கு செய்து இலங்கை அரண்மனைக்கே திரும்பினான். அனுமன் பதறித் துடித்தான். புலம்பியபடி ராமனிடம் சென்று நடந்ததைச் சொன்னான். திடீர் துக்கத்தால் சிலையானான் ராமன். ஆனால் விபீஷணனுக்கு மட்டும் சந்தேகம் ஏற்பட்டது. சீதையை அவள் விருப்பம் இல்லாமல் பிறர் தீண்ட முடியாதே! இந்திரஜித் மாயாஜாலம் செய்கிறான். அதை என்னவென்று அறிய வேண்டும் என வண்டு உருவில் அசோகவனம் சென்றான். அங்கு சீதை இருப்பதைக் கண்டு நிம்மதி அடைந்தான். அயோத்திக்குச் செல்வதாகப் போக்குக் காட்டிய இந்திரஜித், நிகும்பலா யாக ஏற்பாடுகளைச் செய்வதையும் கண்டான். யாகம் நிறைவேறினால் அவனை வீழ்த்த முடியாதே என கவலை கொண்டான். தான் கண்டவற்றை ராமனிடம் தெரிவித்தான். அனைவரும் மகிழ்ந்தனர்.
ராமன் மனத்தெளிவுடன் யாகத்தைத் தடுக்குமாறு லட்சுமணனுக்கு ஆணையிட்டான். அவனும் கோபத்துடன் புறப்பட்டான். யாகசாலையில் காவல் புரிந்த அரக்கர்கள் மீது அம்புகள் எய்யவே, அவர்களுடைய தலைகள் யாகத்தீயில் விழுந்தன. அதனால் யாகம் தடைபட்டது. போரில் வெல்ல முடியாது எனத் தெரிந்ததால்தானே யாகம் செய்து பிரம்மாஸ்திரத்தைப் புதுப்பிக்க முயன்றான் இந்திரஜித்! அதனால் இவ்வுலகையே கட்டிப் போட்டு அடிமையாக்கலாமே! ஆனால் லட்சுமணன் எல்லாவற்றையும் அழித்து ஒழித்தான். இனியும் சும்மா விடக்கூடாது எனக் கறுவிய இந்திரஜித், படைபலத்துடன் லட்சுமணனை எதிர்த்து உக்கிரமாகப் போரிட்டான். அவனது தாக்குதல்களை எளிதாக முறியடித்த லட்சுமணன், பிறைச் சந்திரன் வடிவிலான அம்பை எய்தான். அது இந்திரஜித்தின் தலையைத் துண்டித்து உடலை சாய்த்தது. வானமே அதிரும்படி வானரப்படையினர் ஆர்ப்பரித்தனர். அங்கதன் கீழே விழுந்த இந்திரஜித்தின் தலையை ராமனின் பாதங்களில் வைத்து வெற்றியைக் கொண்டாடினான். லட்சுமணன் வெற்றிக்களிப்பில் மிதந்தான். ராமன் பெருமித உணர்வுடன் தம்பியின் தலையை வருடி மகிழ்ந்தான்.
|
|
|
|