|
வேத வியாசர் இயற்றிய மகாபாரதத்தை தமிழில் இயற்றியவர்கள் மூவர். அவர்கள் பெருந்தேவனார், வில்லிபுத்துாரார், நல்லாபிள்ளை. இவர்களில் நல்லாப்பிள்ளையின் வாழ்வில் நடந்த சம்பவம் சுவாரஸ்யமானது. படிக்காத இவருக்கு திருமணம் நடந்தது. கல்வி கற்காததால் மனைவி அலட்சியமாக நடந்தாள். கல்வி கற்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் குருநாதரை நாடிச் சென்றார். அவருடைய குருகுலத்தில் தங்கி தமிழ், சமஸ்கிருத மொழி இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். உணவை பொருட்படுத்தாமல் பாடங்களில் மட்டும் கவனம் செலுத்தினார். ஆண்டுகள் சில கடந்தன. கவி பாடும் புலமை பெற்றார். இந்நிலையில் குருகுலத்தில் ஒருநாள் மதிய உணவுக்கு சாப்பிட அமர்ந்தார். அன்று மதிய உணவாக தயிர்ச்சாதம், துவையல் பரிமாறப்பட்டது. அதை ஒரு வாய் வைத்ததும், ‘துவையல் கசக்கிறதே’ என தன்னை மறந்து கத்தினார். ‘‘நல்லாப்பிள்ளாய்! நீ வீட்டுக்கு செல்லும் நாள் வந்து விட்டது. பாடத்தில் மட்டும் கவனம் செலுத்தியதால் இதுநாள் வரையில் தினமும் வேப்பந்துவையலை சாப்பிட்டும் அதன் கசப்பை நீ உணராமல் இருந்தாய். இப்போது புறவுலகச் சிந்தனை உன்னுள் வந்ததால்தான் துவையலின் கசப்பை சகிக்க முடியாமல் கத்துகிறாய். கவிபாடும் திறமை பெற்ற உனக்கு நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன். சொந்த ஊருக்கு நீ புறப்படலாம்’’ என்றார் குருநாதர். நல்லாப்பிள்ளையும் குருநாதரிடம் விடைபெற்று புறப்பட்டார். இவர் எழுதிய ‘நல்லாப்பிள்ளை பாரதம்’ புகழ் மிக்கதாகும்.
|
|
|
|