|
‘சத்யம் வத’ என்கிறது வேதம். உண்மையைப் பேசு. உண்மையாக நடந்து கொள் என்பதே இதன் பொருள். சனாதன தர்மத்தின் உயிர் மூச்சே சத்தியம் தான். நம் நாட்டின் அரசு சின்னத்தில் இருக்கும் வாக்கியம் ‘சத்யமேவ ஜயதே’ அதாவது வாய்மையே வெல்லும். இந்த இரண்டு சொற்களை விவரிப்பதே ராமாயணம். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற வார்த்தையின்படி பதவியேற்பு விழா நிச்சயித்த நாளில் பதினான்கு ஆண்டுகள் கானகம் போ என சிற்றன்னை சொன்னவுடன் ரிட் வாங்க கோர்ட்டுக்குப் போகாமல் காட்டுக்குச் சென்ற உத்தம புருஷன் ராமன். அந்த ராமனுக்குச் சேவை செய்திட அண்ணனுடன் சென்றான் லட்சுமணன். தாய் கைகேயி வரமாக வாங்கித் தந்த நாட்டை வேண்டாம் என வெறுத்தவன் பரதன். தந்தைக்கு இறுதிச் சடங்குகள் கூடச் செய்ய இயலாத சூழலில் இருந்தான் பரதன். காரணம் தசரதன் இறக்கும் போது, ‘கைகேயி எனக்கு மனைவியும் இல்லை. பரதன் எனக்கு மகனும் இல்லை’ எனக் கூறி விட்டான். எனவே பரதனால் தந்தைக்கு இறுதிச் சடங்குகள் செய்ய இயலவில்லை. எல்லோரும் பரதனை இவனும் கூட்டு சேர்ந்து தான் சதித் திட்டம் தீட்டி இருப்பானோ எனச் சந்தேகக் கண் கொண்டு பார்த்தார்கள். ஆயினும் பரதன் ஒரே முடிவுடன் ராமனை அழைத்து வந்து நாட்டை ஒப்படைப்பது எனத் துணிந்து அனைவரையும் அழைத்துக் கொண்டு சென்றான். ராமனைச் சந்தித்து மன்றாடினான். ஆனால் ராமன் மறுக்கவே அவனது பாதுகைகளை வாங்கி வந்து அயோத்திக்கு வெளியே நந்தியம்பதி என்னுமிடத்தில் வைத்து ஆட்சி செய்தான். பதினான்கு ஆண்டுகள் முடிவடையும் போது ராமன் வராததால் நெருப்பினுள் விழுந்து உயிர் விடத் துணிந்தான். அப்போது சத்ருகனனை அழைத்து நாட்டின் பொறுப்பினை ஏற்கச் சொன்னான் பரதன். அதை மறுத்தான் சத்ருகனன். சத்தியத்தின் வேராக அவன் விளங்கினான் என்பதற்கு இந்த ஒரு பாடலே சான்று. அவன் சொன்னான், ‘‘தந்தையின் சொல் கேட்டு பதினான்கு ஆண்டுகள் காட்டில் தவம் செய்யப் போனான் ராமன். அவனுக்குத் தொண்டு செய்யச் சென்றான் லட்சுமணன். ராம பாதுகைகளை வைத்து ஆட்சி செய்து, பதினான்கு ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில் ராமன் வராமல் போனால் பரதனாகிய நீ தீயில் விழுந்து உயிர் விடத் துணிந்துள்ளாய். இந்தச் சூழலில் நான் மட்டும் எப்படி பதவி ஏற்பேன்? வேண்டாம் இந்த பதவி. நானும் உன்னுடன் உயிரை விடத் துணிந்து விட்டேன்’’ என்றான். வார்டு கவுன்சிலர் பதவிக்கே போட்டி நிலவும் இந்தக் காலத்தை சற்று எண்ணிப் பாருங்கள். பதவி வேண்டாம் என நான்கு பேரும் சொன்னார்கள். ஒருவருக்கொருவர் நீயே அரசாட்சி செய் என விட்டுக் கொடுத்தனர். அத்தகைய உயர்ந்த பண்பாளர்கள். சாதாரண பதவி இல்லை நாட்டிற்கே சக்கரவர்த்தி பதவி. ஆனால் வேண்டாம் என்றனர். காரணம் ஒழுங்கு, நேர்மை, சத்தியம் என்னும் சாலையில் அவர்கள் நால்வரும் பயணித்தனர். அத்தகைய நேர்மையான ஆட்சியையே ‘ராமராஜ்யம்’ என்கிறோம். ‘என்னுடையது இல்லை; எனவே எனக்கு வேண்டாம்’ என்ற இந்த விதை இந்த நாட்டில் ஆழ விதைக்கப்பட்டிருக்கிறது. சாதாரண கீரை விற்கும் பாட்டி கூட, நாம் கூடுதலாக காசு கொடுத்தால் ‘வேண்டாம் தம்பி... உழைக்காத காசு ஒட்டாது’ என்கிறாள். சமீபத்தில் ஒரு பள்ளி மாணவன் சாலையில் கிடந்த பர்சை எடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்து உரியவரிடம் சேர்க்க உதவினான். நிறைய பணமும், அடிப்படை ஆவணங்களும் அதில் இருந்தன. அதற்கு உரியவர் உயிரையே திருப்பித் தந்ததாக எண்ணி மாணவனைப் பாராட்டி பரிசுகள் தந்தார். அவனோ பரிசை ஏற்க மறுத்தான். அவனது நேர்மையை அனைவரும் கொண்டாடினர். இது போல ஆட்டோ, டாக்சி டிரைவர்கள், பஸ் கண்டக்டர்கள், சாதாரண மக்கள், அடுத்த வேளை உணவுக்கு வழி இல்லாதவர்கள் அல்லது அதனைப் பெற உழைக்க வேண்டியவர்கள் கூட மற்றவர் பொருள் தமக்குத் தேவை இல்லை என உணர்ந்து உரியவரிடம் ஒப்படைக்கிறார்கள். இது இந்த நாட்டின் மரபோடு வந்த பண்பு. சொல்லில், செயலில், நடத்தையில் நேர்மையை பின்பற்றுபவர்கள் இன்றும் இருக்கிறார்கள். மகாபாரதப் போர் தொடங்கும் நேரம். போரில் வெற்றி பெறுவதற்காக களப்பலியிட நல்ல நாள் குறிக்க வேண்டும் என முடிவெடுத்தான் துரியோதனன். அவனுக்குத் தெரிந்த சிறந்த ஜோதிடர் சகாதேவன் தான். எதிரியாக இருந்தாலும் அவனது நேர்மை, தொழில் நேர்மையை துரியோதன் நன்கறிவான். எனவே துணிவுடன் எதிரியின் வீட்டிற்குள் நுழைந்து சகாதேவனைச் சந்தித்தான். சகாதேவனும் உயர்பண்புடன் அவனை வணங்கி வரவேற்றான். தனியிடம் அழைத்துச் சென்ற போது, போருக்கு முன்பாக களப்பலியிட நல்லநாள் பார்த்துத் தருமாறு கேட்டான் துரியோதனன். எதிரிக்கு நல்லநாள் குறித்துக் கொடுத்தால் தங்களின் வெற்றி கேள்விக்குறியாகுமே என கலங்கவில்லை. ‘வரும் அமாவாசை நாளில் களப்பலி கொடுத்தால் வெற்றி நிச்சயம்’ என உறுதியாகச் சொல்லி நாள் குறித்துக் கொடுத்தான். துரியோதனனும் நம்பிக்கையுடன் விடை பெற்றான். பின்னர் நடந்த சம்பவங்கள் உலகமே அறியும். பாண்டவர்களுக்கு கடவுளே துணை நின்று தர்மத்தை காப்பாற்றினார்.
இன்றோ உணவுப் பொருட்கள் எல்லாவற்றிலும் கலப்படம். முன்பு பருப்பில் தான் கலப்படம் செய்தார்கள். இப்போது எண்ணெய் தொடங்கி எல்லாம் கலப்படம். உச்சமாக அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலப்படம். டைமண்ட் கல்கண்டு போன்றே பிளாஸ்டிக் கல்கண்டு. எது உண்மை, எது போலி என அறியாமல் திகைக்கிறோம். சிறு குழந்தைகளின் ஊட்டச்சத்து மாவு தொடங்கி சாக்லேட் வரை கலப்படம். மாட்டிற்குக் கொடுக்கும் வைக்கோலைக் கூடச் சோதித்து சரிபார்த்து அதில் ஏதாவது விஷ செடிகள், முட்கள் உள்ளதா என சரிபார்த்து கொடுப்பார்கள் நம் முன்னோர்கள். உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என்ற மகாகவி பாரதியாரின் எடுத்துக்காட்டாக வாழ்ந்தார்கள்.
வாய்மை தவறி வாழ்பவர்கள் ஜொலிப்பது போலத் தோன்றும். வாய்மை உள்ளவர்கள் கஷ்டப்படுவது போலத் தோன்றும். ஆனாலும் வாய்மை தான் என்றும் வெல்லும். தர்மமெல்லாம் சும்மா! நீ்ங்க வேற... எந்தக் காலத்துல இருக்கீங்க... என வாய் கிழியப் பேசுபவர்கள் இன்றைக்கும் திரைப்படங்களில், நாடகங்களில் இறுதியில் கதாநாயகன் அல்லது கதாநாயகி வெல்வது போல ஏன் காட்ட வேண்டும்? காரணம் நம் பாரத நாட்டின் உயிர்ப்பு சத்தியம் மட்டுமே. பொய்யாமை ஒன்றை மட்டும் பின்பற்றினால் போதும், பிற அறங்கள் ஏதும் வேண்டாம் என்கிறார் திருவள்ளுவர். மேலான சத்தியத்தை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்வோம். இதுவே பாரத நாட்டின் பண்பாடு. சனாதன தர்மத்தின் உயிர்நாடி. ‘வாய்மையே வெல்லும்’ என்பதை போர்டு எழுத்துக்களில் மட்டுமல்ல... அன்றாட வாழ்விலும் கடைபிடிப்போம்.
|
|
|
|