பதிவு செய்த நாள்
05
டிச
2019
10:12
திண்டுக்கல்: ஐதராபாத்தில் இருந்து சபரிமலைக்கு 1,200 கி.மீ., பாதயாத்திரையாக செல்லும் ஆந்திரா, தெலுங்கானாவை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் திண்டுக்கல் வழியே சென்றனர்.
ஆந்திரா, தெலுங்கானாவைச் சேர்ந்த 250 ஐயப்ப பக்தர்கள், ஸ்ரீராம ரக் ஷா சுவர்ண பூமி பாத யாத்திரை குழு என்ற பெயரில் ஆண்டுதோறும் சபரிமலை செல்கின்றனர்.
இந்தாண்டும் கடந்த அக்.29 ல் ஐதராபாத்தில் புறப்பட்டனர். குருசாமிகள் வினய்குமார், வசந்த் தலைமையில் 900 கி.மீ., கடந்து, நேற்று திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே சித்தையன்கோட்டை வந்தனர். இவர்கள் வழியில் உள்ள கோவில்களில் ஐயப்பனை வைத்து பூஜைகள் செய்கின்றனர். இவ்வாறு 42 நாட்கள் நடைபயணமாக சென்று சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க உள்ளனர்.
பெண்களை அனுமதிக்க கூடாது: குருசாமி வினய் குமார் 57, கூறியதாவது: பன்னிரெண்டாவது ஆண்டாக பாதயாத்திரை செல்கிறோம். அக்.29 ல் துவங்கி 1,200 கி.மீ., பாதயாத்திரையாக வந்து டிச.9 ல் ஐயப்பனை தரிசிப்போம். நாற்பது நாட்கள் விரதமிருந்து 42 நாட்கள் நடைபயணமாக சென்று, ஐயப்பனை காண்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியை, வேறு எதுவும் ஈடு செய்ய முடியாது. ஒவ்வொரு நாள் பயணத்தையும் புத்துணர்ச்சியோடு துவங்குகிறோம். உடல், கால் வலி ஏற்பட்டதில்லை. இளைஞர்கள் மட்டுமின்றி 60 வயதை கடந்தவர்களும் எங்களுடன் வருகின்றனர். யாத்திரை மன நிம்மதியை தருகிறது. புனிதத்தை கெடுக்கும் வகையில் இளம் பெண்களை சபரிமலைக்கு அனுமதிக்க கூடாது’ என்றார்.