பதிவு செய்த நாள்
29
செப்
2020
04:09
‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்கிறார் அவ்வைப்பாட்டி. கோயில் வழிபாட்டால் மனதில் நிம்மதியும், உடலுக்கு பலமும் ஏற்படும். பிரசாதமாக கோயிலில் தரப்படும் திருநீறு, குங்குமம், பொங்கல், புளியோதரையை வாங்கி பயன்படுத்தும் முறை பற்றி பார்ப்போம்.
சாம்பல் தானே என திருநீறை அலட்சியமாக கருதக் கூடாது. பக்தியுடன் வாங்கி நெற்றியில் பூச வேண்டும். நாடாளும் மன்னராக இருந்தாலும் என்றாவது ஒருநாள் சாம்பலாவது உறுதி என்பதை உணர்த்தவே திருநீறு தருகின்றனர். பூசியது போக மீதி இருந்தால் அதை துாணில் வைப்பது, காற்றில் ஊதுவது பாவச்செயல். இதைப் போலவே குங்குமம், மஞ்சளை துாண்கள், உண்டியல் மீது கொட்டக் கூடாது. வீட்டிற்கு எடுத்துச் சென்று குடும்பத்தினருக்கு தரலாம்.
கோயிலில் கிடைக்கும் பூக்கள், மாலைகளை முறையாக பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் தீங்கு உண்டாகும். ஒருமுறை முனிவரான துர்வாசர் தனக்கு கிடைத்த தெய்வீக மாலையை இந்திரனுக்கு பரிசளித்தார். அவரோ அதன் பெருமை அறியாமல், தன் வாகனமான யானையின்( ஐராவதம்) தலை மீது வைத்தார். அந்த யானை துதிக்கையால் மாலையை கீழே தள்ளி காலால் மிதித்தது. அதைக் கண்ட துர்வாசர் கோபத்தில் சாபமிட்டார் என்பது வரலாறு.
பூக்களை பெண்கள் தலையில் சூடிக் கொள்ளலாம். உதிரிப்பூக்களாக இருந்தால் பூஜை அறையில் வைக்கலாம். மாலையாக இருந்தால் வீட்டுநிலை, வியாபாரம் செய்யும் இடத்தில் மாட்டலாம். பிரசாதமாக பொங்கல், புளியோதரை வாங்கினால் அதை சாப்பிட்டதும் கைகளை துாணில் துடைக்கக் கூடாது. துாண்கள் கோயிலின் மண்டபத்தை மட்டும் தாங்கவில்லை. அவை நம் பாரம்பரியம், கலாசாரம், பண்பாட்டுச் சின்னங்கள் என்பதை உணருங்கள். கோயில் துாய்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக ‘உழவாரப்படை’ என்னும் கருவியால் திருநாவுக்கரசர் தொண்டு செய்தார். கோயிலைத் துாய்மை செய்து அதன் மூலம் பக்தியை வெளிப்படுத்திய நாவுக்கரசரின் பக்தி தனித்துவம் மிக்கது. அவர் கோயில்களை துாய்மைப்படுத்துவதை தன் லட்சியமாக கொண்டார். எந்தக் கோயிலுக்குள் நுழைந்தாலும் மனமுருகி தேவாரம் பாடியபடி அங்குள்ள அசுத்தம், அழுக்கினைக் களைந்து கோயிலை அழகுபடுத்துவார். அவர் காட்டிய வழியில் கோயிலின் துாய்மையை பாதுகாப்போம். புதிய கோயில்கள் கட்டுவதை விட பழங்கால கோயில்களை பாதுகாப்பதே நம் முக்கிய கடமை.