பதிவு செய்த நாள்
17
அக்
2020
11:10
நவராத்திரியில் தேவியை ஆராதிப்பதில் கொலுவைப்பது என்பது கொண்டாட்டத்தின் ஒரு முக்கியமான அங்கம். மண்ணால் செய்யப்பட்டு வண்ணம் தீட்டப்பட்ட கடவுளின் வெவ்வேறு திருவுருவங்கள் முதல், அவதாரங்கள், மகான்கள், குருநாதர்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள், காய்கறி, பழங்கள் இன்னும் காலமாறுதல்களுக்கு ஏற்ப விதம்விதமான பொம்மைகளை அடுக்கி வைக்கிறோம்.
பொதுவாக கொலுவில் பொம்மைகளை அடுக்கி வைப்பதில் சில பாரம்பரியமான வழக்கங்கள் உள்ளன. ஒன்பது படிகளில் பொம்மைகளை வைக்க வேண்டும். இடவசதி கருதி ஏழு அல்லது மூன்று படிகளில் மட்டும் வைப்பதும் உண்டு. ஒன்பது படிகள் என்பது நவக்கிரகங்களைக் குறிப்பதாக, அன்னையின் ஒன்பது அம்சங்களைக் குறிப்பதாக, வாழ்க்கையின் நவரசங்களைக் குறிப்பதாகப் பலவாறு விளக்கப்படுகிறது.
நாம் நண்பர்களுடைய இல்லங்களில் சென்று கொலு பார்க்கும் போதும் பொம்மைகளின் புதுமையை, அழகை, அலங்காரத்தையே வேடிக்கை பார்க்கிறோம். ஒரு பக்தருக்கு அல்லது ஆன்மீக சாதகருக்குப் பொம்மைகளைப் படிகளில் அடுக்கி வைக்கும் இந்தச் சடங்கில் என்ன உள்ளது? அதுவும் ஒவ்வொரு வருடமும் திரும்பத் திரும்ப அதே பொம்மைகளைப் பார்ப்பதால் என்ன பயன்?
சனாதன தர்மமான இந்து மதத்தில் எந்த ஒரு சடங்கும் அதற்கான ஆன்மீகப் பின்புலத்தோடும் ஒரு தத்துவத்தின் குறியீடாகவும்தான் இருக்கும். தத்துவங்களை எளிதில் புரிந்துகொள்ள முடியாத எளியவர்களும்கூட சடங்குகளின் வழியாக ஆன்மீக அனுபவத்தை அடையும் பொருட்டே இவ்வாறு நம் முன்னோர்கள் சடங்குகளாகவும், விழாக்களாகவும், கதைகளாகவும் எளிமைப்படுத்தி நமக்குத் தந்திருக்கிறார்கள்.
கொலுவின் அழகிற்கு அப்பால் உள்ள தத்துவத்தைக் கண்டுகொள்ள வேண்டும். கொலு என்றால் அரசசபையில் கம்பீரமாக வீற்றிருப்பது என்று பொருள்.
நாம் பொம்மைகளைப் படிகளில் வீற்றிருக்கச் செய்கிறோம். நாம் யாரை அல்லது எதை எங்கே வைக்கிறோம் என்பதே அங்கு முக்கியம்.
பூர்ணத்துவத்தின் அடையாளமான பூர்ணகும்பத்தையும், விநாயகர் முதலான தெய்வங்களையும், அன்னை சக்திதேவியையும் உச்சியில் (முதல் படியில்) வைக்க வேண்டும். பின்னர் அவதாரங்களையும், மகான்களையும், குருமார்கள் மற்றும் சான்றோர்களையும், மனிதர்களையும், விலங்கு, பறவைகள், புல், செடிகள் என்று மேலிருந்து கீழாக வரிசைக்கிரமாக வைக்க வேண்டும். எல்லாம் கிரமமாக இருக்கும் இடத்தில் அக்கிரமம் இருக்காது.
பொம்மைகள வைக்கும் இந்த வைப்புமுறை மிக முக்கியமான ஒரு உண்மையை நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. நம் மனம்தான் கொலு மேடை. அதில் யாருக்கு முக்கியத்துவம் கொடுத்து முதல் படியின் உச்சத்தில் வைக்க வேண்டும் என்பதை நாம் உணர வேண்டும்.
உலகை ஆக்கிக் காத்து அழித்து அருள் செய்யும் அன்னைக்கு -இறைசக்திக்குத் தான் நாம் முதல் இடம் கொடுக்க வேண்டும்.
பாசம் பராசக்திக்கே, பொருட்களெல்லாம் ஒரு பொருட்டல்ல என்கிற விவேகம் நமக்கு வரும்போதே உண்மையான ஆனந்தத்தை அனுபவிக்க முடியும்.
ஆனால் அன்றாட வாழ்வில் நம் பொருட்களின் மேல் பாசம் வைத்து அவற்றிற்கு மேல்படியில் முக்கியத்துவம் கொடுத்து, சக மனிதர்களையும் இறைவனையும் மறந்து அவர்களுக்குக் கடைசிப்படியை ஒதுக்கி விடுகிறோம்.
நவராத்திரி கொலுவின் குறியீட்டை நாம் உணர்ந்தால் நம் மனம் என்னும் கொலுமேடையிலும் இறைவனே முதல்படியில் கொலு வீற்றிருப்பான். வெறும்பொருளில் இருந்து பரம்பொருளுக்கு நம் தேடல் மேன்மையடையும்.
கொலுவின் கீழ்படிகளில் அஃறிணைப் பொருட்களில் தொடங்கி ஓரறிவு, ஈரறிவு உயிர்களில் தொடந்து ஆறறிவு மனிதரையும், அவர்களில் மேலானவர்களையும் கடந்து இறைவனில் சென்றடையும் ஆன்மீகப் பரிணாம வளர்ச்சியை காட்டும் ஒரு படிமம்.
புல்லாகிப் பூடாகிப் புழுவாகி மரமாகி பல்மிருகமாகி பறவையாகி பாம்பாகி கல்லாய் மனிதராய் பிறந்திளைத்த நாம் கொலு என்னும் இந்தப் படிமம் நமக்கு உணர்த்தும் உண்மையை உள்வாங்கிக் கொள்ள வேண்டும். தெய்வத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தால் மனம் பக்குவப்பட்டு பரிணமித்து இறைவனின் பூரணத்துவத்தை நாமும் அடைய முடியும்.
உயிர்களெல்லாம் இறைவனின் தோற்றங்களே, கல்லிலும் முள்ளிலும் கூட இறைவனே உள்ளுறைந்து இருக்கிறான். ‘ஈசாவாஸ்யம் இதம் சர்வம்’ என்பது உபநிடத வாக்கு. பிரபஞ்சத்தையே இறைவனின் தோற்றமாகப் பார்ப்பது உன்னதமான ஒரு ஆன்மீக நிலை. ஆனால் நடைமுறையில் நமக்கு மனத்தை ஒருமுகப்படுத்திச் இறைவனில் செலுத்த பிரார்த்தனையும், பிராத்திக்க ஓர் இடமும் தேவையாகிறது.
ஸ்ரீ ராமகிருஷ்ணர் கூறுவார், “பசுவின் உடம்பு முழுவதும் பால் இருந்தாலும் அதன் காம்பின் வழியாக மட்டுமே நாம் பாலைப் பெற முடியும். அதே போல கடவுள் எல்லா இடத்திலும் இருந்தாலும் பக்தியால் மனங்கள் ஒன்றுபட்டு அழைக்கும் இடத்திலேயே இறையருள் இறங்கி வரும்”.
அன்னை சக்தியைப் பக்தியால் வரவழைப்பது எளிது. பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரும் நிறைய மந்திரங்கள் உச்சரித்ததைவிட தாயைத் தன் உள்ளார்ந்த பக்தியால் மனமுருகி அழைத்தே வரவழைத்தார். தஞ்சாவூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் சமீபத்தில் நிகழ்ந்த இரண்டு சம்பவங்களை ‘பக்தர்களின் பிரார்த்தனைக்கு கடவுளே இறங்கிவருவார்’ என்ற உண்மைக்கு உதாரணமாக கொள்ளலாம்.
நம் மடத்தில் நவராத்திரி விழாவில் கொலு வைக்கலாம் என்று முடிவாயிற்று. பல பக்தர்கள் கொலுபொம்மைகளைக் காணிக்கையாகக் கொடுக்க துவங்கினார்கள். நவராத்திரி நெருங்க, ஒருநாள் மாலை பொம்மைகளைப் பிரித்து புதிதாகச் செய்த படியில் அடுக்கிப் பார்க்கத் தீர்மானித்தோம். தசாவதார பொம்மைகளில் இரண்டு பொம்மைகள் உடைந்திருந்தன. அதைக் கண்டதும், உடன் இருந்த பக்தர்கள் மனம் வருந்தினார்கள். எல்லாம் தேவியின் லீலை. அன்னையின் சித்தப்படியே எல்லாம் நன்றாக நடக்கும் என்று வேண்டிக்கொண்டு பொம்மைகளை வைத்துவிட்டோம்.
அப்போது மடத்திற்கு வயதான ஒரு பெண்மனி ஒரு பழைய பெட்டியுடன் வந்தார். தான் மடத்திற்கு கொண்டுவந்துள்ள அன்பளிப்பை வாங்கிக்கொள்ள முடியுமா என்று கூச்சத்துடன் கேட்டார். மற்ற பொம்மைகளையும் அடுக்கி வைத்தவுடன், அந்தப் பெண்மனி கொண்டுவந்த பெட்டியைப் பிரித்தால் அதற்குள் புத்தம் புதியதாக பொம்மைகள், அதுவும் தசாவதார பொம்மைகள். உடைந்த தசாவதார பொம்மைகளைக் காட்டிலும் இன்னும் பெரிதாக, புதிய அழகான பொம்மைகள். பக்தர்களின் மனதிற்கு இறைவன் அந்தக் கணத்திலேயே தான் அங்கு வந்துவிட்டதைக் குறிப்பால் உணர்த்திவிட்டான்.
சக்தி வழிபாட்டிற்கு முக்கியத்துவம் மிகுந்த வங்காளத்தில் நவராத்திரி துர்காபூஜையாக வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படும். வங்காள ஹிந்துக்கள் அனைவரும் துர்கா பூஜையைக் கொண்டாடுவார்கள். கம்யூனிஸ்டுகளும்கூட துர்காபூஜை செய்தாக வேண்டிய அளவிற்கு அது வங்காளச் சமூகத்தில் தவிர்க்கமுடியாதது.
வங்காளத்தில் துர்காபூஜைக்கு முன்பு அன்னையை ஆவாஹனம் செய்யும் (வரவேற்கும்) விதமாக “ஆகமனி பாடல்களை”ப் பாடும் வழக்கம் உண்டு. பக்தியால் உருகிப் பாடப்படும் பாடல்களால் அன்னை மனம் இறங்கி வருவாள் என்பது ஐதீகம்.
வெறும் களிமண்ணால் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட அழகான பொம்மைகளாக மட்டும் இருக்கும் உருவங்கள் எப்படி சட்டென்று தெய்வம் ஆகிறது?
பக்திதான் வெறும் மண்ணை பகவானாக்குகிறது. பக்தியோடு நாம் செய்யும் பிரார்த்தனையால்தான் அன்னை அந்தக் களிமண் உருவத்தினுள் வந்து உறைகிறாள். அந்த அற்புத கணத்தில் அது தேவியின் திருமேனியாகிறது. மண்ணுள்ளிருந்து உயிர்ப்புடன் தெய்வீகத் தன்மை கூடி நமக்கு அருள் செய்கிறது.
தேவயே ‘மண்ணிலும் விண்ணிலும் நானே நிறைந்திருக்கிறேன்” என்கிறாள். வங்காளத்தில் காளியன்னையின் உருவம் செய்ய வெவ்வேறு இடங்களில் இருந்து மண் சேகரிப்பார்கள். அவ்வாறு மண்ணால் செய்த காளியின் உருவத்திற்கு ‘ம்ருண்மயீ’ என்று பெயர். ம்ருண்மயி உருவத்திற்கு பரத்தையர்கள் வீட்டு மண்ணும் சேர்க்கப்படும்! சமூகத்தின் இருள்நிறைந்த பக்கங்களில் ஒதுக்கப்பட்டு இருக்கும் அவர்களும் அன்னையின் உருவங்களே.
பரத்தையரிலும் பராசக்தியைக் காண முடியுமென்றால் உண்மையான மெய்ஞ்ஞானம் வந்துவிட்டதென்று கொள்ளலாம். அந்த அத்வைத அனுபூதி நம்முள் கூடிவரும் தருணம் அன்னை சக்தி ம்ருண்மயீ -இல் இருந்து சின்மயீ ஆகிறாள் – மண்ணுருவில் இருந்து மெய்யுணர்வு ஆகிறாள்.
அன்னையின் அருளைப்போற்றும் இந்த ஒன்பது இரவுகளும் மேலான மெய்யுணர்வை நம்முள் கண்டுகொள்வதற்கான தோற்றுவாயாக அமையட்டும்!
-சுவாமி விமூர்த்தானந்தர், ராமகிருஷ்ண மடம் , தஞ்சாவூர்