குரு கோயில்கள் என ஒருபுறம் இருக்க, குரு வழிபட்ட கோயில்களும் தமிழகத்தில் உள்ளன. அவர் முருகனை வழிபட்ட கடற்கரை தலம் துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார். பத்மாசுரனை அழித்து தேவர்களை காக்க முருகப்பெருமான் இங்கு வந்தார். அப்போது அசுரர்களின் குணம் பற்றி, தேவ குருவான பிரகஸ்பதி, முருகனுக்கு எடுத்துச் சொன்னார். இதனால் இது குரு தலமாக கருதப்படுகிறது. இங்கு மேதா தட்சிணாமூர்த்தி என்ற பெயரில் ஆமை, எட்டு நாகங்கள், எட்டு யானைகளுடன் கூடிய பீடத்தில் அமர்ந்திருக்கிறார். இவருக்கு பின்புறம் கல்லால மரத்தில, ரிக், யஜூர், சாமம், அதர்வணம் ஆகிய வேதங்கள் கிளி வடிவில் உள்ளன.