சுப்ரபாதம் என்றாலே நினைவுக்கு வருவது எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம் தான். ‘கவுசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்த்யா பிரவர்த்ததே’ எனத் தொடங்கும் இதை இயற்றியவர் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார்யார் என்றாலும், தன் இனிய குரல் வளத்தால் உலகறியச் செய்தவர் எம்.எஸ்.சுப்புலட்சுமிதான். இவரது ஆன்மிக சேவையை பாராட்டி கீழ்த்திருப்பதி பிரதான சாலையில் இவருக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது. ஆனால் திருப்பதி கோயிலிலோ, மாடவீதிகளிலோ எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய சுப்ரபாதத்தை நாம் கேட்க முடியாது. ஆகம ரீதியாக சுவாமியின் முன்னிலையில் வேத பண்டிதர்கள் தான் சுப்ரபாதம் பாட வேண்டும் என்பது விதிமுறை. இதுவே கோயில் மாடவீதிகள் உள்ளிட்ட திருப்பதி மலை எங்கும் ஒலிபரப்பாகிறது. ஆனால் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய விஷ்ணு சகஸ்ரநாமம் திருப்பதியில் ஒலிபரப்பப்படுகிறது.