Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சூரிய புராணம் பகுதி-1 சூரிய புராணம் பகுதி-3 சூரிய புராணம் பகுதி-3
முதல் பக்கம் » சூர்ய புராணம்
சூரிய புராணம் பகுதி-2
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2012
04:06

19. ஆலயப் பிரதிஷ்டை: வசிஷ்டர் பிரகத்பலனைப் பார்த்து மேலும் சொல்லலானார். ராஜன், மகர் எனப்படும் உத்தமர்களுடைய மகிமையை உனக்குச் கூறினேன். இப்போது சூரிய விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்வது பற்றிச் சொல்கிறேன். முன்பு நாரதர் சாம்பனுக்கு எவ்வாறு எடுத்துக் கூறினாரோ, அவ்வாறே நானும் உனக்குத் தெரிவிக்கிறேன். முன்பு உலகிலே சூரியனுக்கு விக்கிரகம் ஏதும் கிடையாது. சூரிய மண்டலத்தையே பக்தர்கள் பூஜித்து வந்தனர். அந்த மண்டலத்தின் நடுவே சூரியனையே தேவவடிவமாகத் தியானம் செய்து வந்தார்கள். உலகத்திலுள்ளவர்கள் நன்மை அடைய வேண்டுமென்று பகவான் சூரியன் தமக்கொரு விக்கிரகத்தை அமைக்க விரும்பினார். சாகத்வீபத்தில் அவரை விசுவகர்மா சாணை பிடித்த போது சிதறிய அம்சத்தைக் கொண்டு தம்முடைய ரூபத்தை விக்கிரகமாகச் செய்யுமாறு பணித்தார். விசுவகர்மாவும் அவ்விதமே சூரிய விக்கிரகத்தை உருவாக்கித் தந்தார். சூரியனுடைய விக்கிரகத்தை ஆலயத்திலோ வீட்டிலோ பிரதிஷ்டை செய்து ஆராதிப்பவர்கள் நோயற்ற வாழ்வையும் அளவற்ற செல்வத்தையும் அடைந்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து முடிவில் மோக்ஷத்தை அடைவர். சூரியனுக்கு ஆலயம் அமைக்கும் விஷயத்தில் மிகுந்த கவனம் செலுத்தப்படவேண்டும். ஆலயம் அமைக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் மிகவும் பரிசுத்தமான இடமாக இருக்கவேண்டும். ச்மசான (ருத்ர) பூமியாகவோ, மயிர், எலும்பு கரி, உமி, சாம்பல் முதலியன கிடக்கும் இடமாகவோ இருக்கக்கூடாது. அந்த இடத்தில் மண் நல்ல வாசனை உடையதாகவும் ருசியாகவும் இருக்கவேண்டும். அந்தப் பிரதேசத்தில் சக்காங்கற்கள் ஏதும் இருக்கக்கூடாது. அவ்விதக் கற்கள் பரவிக் கிடக்கும் இடம் பிரயோஜனமற்றது. சூரியனுக்கு ஆலயம் அமைக்கும் போது நான்கு வருணத்தாருக்கும் முதலில் வீடுகள் அமைக்கப்படவேண்டும். வெண்மை, சிவப்பு, மஞ்சள் கறுப்பு என்ற வர்ணங்களில் முறையே அவர்களுக்கு வீடுகளை அமைத்து அவற்றுக்கு நடுவிலே சூரியனுக்கு ஆலயம் நிர்மாணிக்கப்படவேண்டும். வீட்டிலே சூரிய விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து பூஜிக்க விரும்பினால் அதற்குச் சுத்தமான இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நான்கு முழம் நீளம், நான்கு முழம் அகலம் உள்ள சதுரமாகப் பள்ளம் வெட்டி அதனுள் மணல் முதலான மிருதுவான பொருள்களைப் போட்டு நிரப்ப வேண்டும். பின்னர் மேலே மெழுகி மேடை ஒன்று அமைத்து அதன் மீது விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து பூஜிக்க வேண்டும்.

விக்கிரகம் தோஷமில்லாததாக இருக்குமாறு பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். விக்கிரகத்தைக் கிழக்கு முகமாகப் பார்த்திக்குமாறு பிரதிஷ்டை செய்ய வேண்டும். சூரியனுடைய ஆலயத்துக்குத் தென்புறத்தில் கிணறோ குளமோ அமைக்கப்படவேண்டும். ஆலயத்துக்கு வடபுறத்தில் அக்கினி சாலை இருக்க வேண்டும். சிவனுக்கும் மாத்ரு கணங்களுக்கும் வடக்கு முகமாக ஆலயம் இருக்க வேண்டும். சூரியனுக்கு மேற்குப் புறத்தே பிரம்மாவுக்கான ஆலயம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். விஷ்ணுவுக்கு ஆலயம் வடக்குப்புறம் அமைந்திருக்க வேண்டும். சூரியனுக்குத் தெற்குப்புறம் நிக்ஷúபா தேவிக்கும், இடப்புறம் ராக்ஞி தேவிக்கும் ஆலயங்கள் அமைக்கப்பட்டிருக்கவேண்டும். துவாரபாலகர்களாக விளங்கும் பிங்களன் தெற்குப் புறமாகவும், தண்ட நாயகன் வாம பக்கத்திலும் பிரதிஷ்டை செய்யப் படவேண்டும். பூஜாகிருகத்துக்கு முன் அசுவினி தேவர்களுக்கு இருப்பிடம் அமைக்கவேண்டும். இரண்டாவது பிரகாரத்தில் ராஜா எனப்படும் ஸ்கந்தனுக்கும் தோஷர் எனப்படும் சிவனுக்கும் ஸ்தானங்கள் இருக்கவேண்டும். மூன்றாம் பிராகாரத்தில் கல்மாஷ பக்ஷிகளான யமனுக்கும் கருடனுக்கும் ஸ்தானம் அமைக்கப்படவேண்டும். தெற்குத் திக்கிலே ஜாந்தகாரன் எனப்படும் சித்திர குப்தனுக்கும் மாடரன் என்ற காலனுக்கும் சன்னதி இருக்க வேண்டும். ப்ராப்நுயான் என்ற சமுத்திர ராஜனுக்கும் க்ஷúதபா என்ற வருணனுக்கும் மேற்குத் திக்கிலே இருப்பிடங்கள் அமைக்கப்படவேண்டும். குபேரனுக்கும் சந்திரனுக்கும் வடபுறத்திலே சன்னதிகள் இருக்க வேண்டும். அவர்களுக்கு வடபுறம் ரேவந்தனுக்கும் விநாயகருக்கும் ஸ்தானங்கள் அமைக்கப்படவேண்டும்.

இவ்வாறாக சூரியனோடு அவருடைய பரிவார தேவதைகளுக்கும் அந்த ஆலயத்தில் இருப்பிடங்கள் அமைக்கப்படவேண்டும். சூரியனுக்கு ஆலயம் அமைப்பது பற்றிக் கூறிய வசிஷ்டர் அடுத்து சூரிய விக்கிரகம் அமைப்பதற்காக மரம் தேர்ந்தெடுப்பது பற்றி விவரிக்கலானார். ஏழு வகைகளில் சூரியனுக்குப் பிரதிமை அமைத்துப் பூஜிக்கலாம். தங்கள், வெள்ளி, தாம்பிரம், மண், கற்சிலை, மரம், சித்திரம் ஆகிய ஏழுமே அவை. மரத்திலே சூரியனுக்குப் பிரதிமை அமைப்பதானால் அதற்கு உயர்ந்த மரமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். தேவதாரு, வில்வம், மா, கருங்காலி, சம்பகம், வேம்பு, பலசம் ஆகிய மரங்கள் அதற்கு விசேஷமாகச் சொல்லப்பட்டுள்ளன. அந்த மரங்களில் வைரம் பாய்த்த மரங்களாகத் தேர்ந்தெடுத்து, அதுவரையில் பிரதிமையைச் செய்வதானது மிகவும் உத்தமம். பிரதிமைக்கான மரங்களைத் தேர்ந்தெடுக்கும்போது சில முக்கிய விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். புற்று உள்ள இடத்தில் இருக்கும் மரத்தைத் தேர்ந்தெடுக்கக் கூடாது. சுத்தமான இடத்தில் வளர்ந்திருக்கும் மரமே விசேஷமாகும். மேலும் அந்தப் பிரதேசத்தில் மயானமோ, மலஜலம் கழிக்கும் இடங்களோ இருக்கக்கூடாது. அந்த மரம் நல்ல வளர்ச்சி உடையதாக இருக்கவேண்டும். காற்று மழைகளால் கிளைகள் முறிந்ததாகவோ, நெருப்பினால் தகிக்கப்பட்டதாகவோ இருக்கக்கூடாது. இடி முதலானவற்றால் பட்டுப் போயிருப்பதோ, கோட்டான் ஆந்தை முதலானவை குடைந்த பொந்துகளை உடையதாக இருப்பதோ கூடாது.

பிரதிமை செய்வதற்குத் தேர்ந்தெடுக்கப்படும் மரங்கள் கிழக்கு, வடக்கு, வடகிழக்குத் திசைகளில் இருப்பதுதான் உகந்ததாகும். மரம் கோணல் மாணலாக விளைந்திருக்காமல் நேராக வளர்ந்து இருக்க வேண்டும். மரத்தை வெட்டும்போது அது வடக்கு வடகிழக்கு கிழக்கு ஆகிய திசைகளில் விழுமானால் அந்த மரம் பிரயோஜனமற்றதே. அது போலவே, மரம் கீழே விழும்போது பெருத்த சப்தமிட்டபடி விழக் கூடாது. கர்ண கடூரமான சப்தத்தோடு மரம் முறிந்து விழக் கூடாது. மரத்தை வெட்டும் முன்பு அதற்குப் பூஜை முதலியன செய்து பின்னரே வெட்ட வேண்டும். வெட்டிய மரத்தைக் கோலாகலமாக மேளதாளத்தோடு ஊர்வலமாக எடுத்து வரவேண்டும். அதன் பின்னரே சுபவேளையில் பிரதிமையைச் செய்யத் தொடங்க வேண்டும். அந்தச் சமயத்திலும் விசேஷமான பூஜைகளை நடத்த வேண்டும். அன்ன தானம் முதலான தானங்களைச் செய்வதானது மிகுந்த பலன்களைத் தரும். மரத்தின் நிறம் மஞ்சளாகவோ, வெண்மை கலந்த சிவப்பாகவோ இருத்தல் வேண்டும். பிரதிமையின் உயரம் ஒரு முழமாகவோ, இரண்டு முழமாகவோ மூன்று முழமாகவோ இருக்கலாம். மரத்தினுடைய அடிப்பாகமோ, மத்திய பாகமோ, மேல்பாகமோ பிரதிமை செய்வதற்கு ஏற்றதாகும். கிளைகள் ஏற்றவை அல்ல. சாஸ்திரங்களில் சொல்லப்பட்டவாறு விதிகளுக்கு ஏற்றதாகப் பிரதிமை அமைக்கப்படவேண்டும். பிரதிமையின் முகத்திலே சிரிப்பு தவழ வேண்டும். கருணை ரசம் ததும்ப அமைந்திருப்பதுதான் முறை. கையிலே தாமரை பிடித்திருக்க வேண்டும். அத்துடன் பக்தர்களுக்கு அருள்புரியும் அபய வரத ஹஸ்தங்களாக அமைந்திருக்க வேண்டுவது அவசியம். பிரதிமையின் கண்கள் விரிந்ததாகவோ குறுகியதாகவோ இருக்கக் கூடாது. இந்தவாறாகச் செய்யப்படும் பிரதிமையே பூஜை செய்வதற்கு உகந்ததாகும். அத்தகைய பிரதிமைகளையே பிரதிஷ்டை செய்து பூஜித்தால் பகவானுடைய அனுக்கிரகத்துக்குப் பாத்திரமாவார்கள் என்பதில் சந்தேகமேயில்லை.

20. பிரதிமா பிரதிஷ்டை

அரும்பாடு பட்டு எடுத்து வந்த மரத்திலிருந்து செய்த பிரதிமையை விதிப்படி ஜலாதி வாசம், தான்யாதி வாசம் செய்வித்து நன்கு பூஜை செய்து பிரதிஷ்டை செய்ய வேண்டும். சமுத்திரத்திலிருந்தும், சந்திரபாகா, கங்கை, யமுனை, சரஸ்வதி முதலான புண்ணிய நதிகளிலிருந்தும், புஷ்கரம் முதலா புண்ணிய தீர்த்தங்களிலிருந்தும் நீர் கொண்டுவரச் செய்து, அதனுடன் மலையருவி நீரையும் சேர்த்து அதிலே பிரதிமையைக் குறிப்பிட்ட காலம் போட்டு வைத்திருக்கவேண்டும். பின்னர் வெளியே எடுத்து அபிஷேக ஆராதனைகள் செய்ய வேண்டும். நானாவித அவுஷதிகள் சேர்க்கப்பட்ட நீராலும், வாசனைத் திரவியங்கள் கலந்த சுத்த நீராலும் அபிஷேகம் செய்ய வேண்டும். உயர்ந்த சந்தனத்தால் அபிஷேகம் செய்வது விசேஷம். கஸ்தூரி மஞ்சள், ஆல், அரசு, காட்டு வாகை முதலியவற்றைப் போட்ட நீரைக் கொண்டும் பிரதிமையை அபிஷேகம் செய்தல் வேண்டும். நவதானியங்களைக் கொண்டும் அபிஷேகம் செய்ய வேண்டும். காயத்திரி முதலான வேத மந்திரங்களை உச்சரித்து அபிஷேகம் செய்ய வேண்டும். தரையிலே சுத்தமான இடத்தில் சிறு மேடை அமைத்து அதன் மீது தர்ப்பைகளைப் பரப்பி அவற்றின் மீது பிரதிமையை நிறுத்த வேண்டும். நாற்புறமும் கலசங்களில் நீரை நிரப்பி வைத்து மந்திர உச்சாடனத்துடன் ஒவ்வொன்றாக எடுத்துப் பிரதிமைக்கு அபிஷேகம் செய்ய வேண்டிப் பிரதிமையின் சிரசிலே அவுஷதிகளை வைத்து அவற்றின் மீது நீரை விட்டு அபிஷேகம் செய்வது உத்தமம். முதலாவது கலசத்திலிருக்கும் நீரால், பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் மற்றுமுள்ள தேவர்களும் உங்களுக்கு அபிஷேகம் செய்யட்டும் என்ற மந்திர உச்சாடனத்தோடு அபிஷேகம் செய்ய வேண்டும். இரண்டாவது கலசத்திலிருக்கும் நீரை விடும்போது மருத்துக்கள் பகவானுக்கு அபிஷேகம் செய்வதாகக் கூற வேண்டும். மூன்றாவது கலசத்து நீரிலே ஆகாச கங்கை, மற்றும் சரஸ்வதி, யமுனை முதலான புண்ணிய நதிகள் சான்னித்தியம் கொண்டு பகவானை அபிஷேகம் செய்வதாகக் கூறவேண்டும். நான்காவது கலசத்து நீரின் மூலம் சாகரங்கள் அபிஷேகம் செய்கின்றன. ஐந்தாவது கலசத்திலுள்ள நீரின் மூலம் ஹிமவான் முதலான பர்வத ராஜர் ராஜர்களும் மலையருவிகளும் பகவானைத் திருப்தி செய்ய அபிஷேகம் செய்கின்றனர். சர்ப்பங்கள் ஆறாவது கலசத்திலுள்ள நீரினால் அபிஷேகம் செய்கின்றன. ஏழாவது கலசத்திலுள்ள நீரைக் கொண்டு சப்தரிஷிகள் பகவானை அபிஷேகம் செய்வதாகக் கூறவேண்டும். எட்டாவது கலசத்து நீர் அஷ்டவசுக்களுக்காக நியமிக்கப்பட்டது.

இவற்றிற்குப் பின்னர் அனேக துவாரங்களுள்ள பாத்திரத்தைப் பிரதிமையின் சிரசுக்கு மேல் பிடித்து, அதில் நீரைச் சொரியச் செய்து அபிஷேகம் செய்ய வேண்டும். அபிஷேகம் முடிந்ததும் முப்பது முறை ஆசமனம் கொடுக்க வேண்டும். அபிஷேகத்துக்குப் பின்னர் பிரதிமையை எடுத்துச் சுத்தமான வெண்பட்டினால் நன்கு ஈரம் போகத் துடைக்க வேண்டும். பிறகு அந்த இடங்களை நன்கு சுத்தப்படுத்தி மேடையில் நவதானியங்களைப் பரப்பி அவற்றின் மீது தர்ப்பையையும் பரப்பி மேலே பிரதிமையை நிறுத்த வேண்டும். அழகிய வஸ்திரங்களை அணிவித்து ஆபரணங்களைக் கொண்டு அழகு செய்ய வேண்டும். மலர் மாலைகளைச் சார்த்தி சந்தனம் குங்குமத் திலகங்களை இடர் வேண்டும். சுற்றிலும் வண்ணக் கோலங்கள் போட்டுப் பிரதிமையின் காலடியில் வாசம் மிகுந்த மலர்களைத் தூவி வைக்க வேண்டும். தூப தீப ஆராதனைகளைக் குறைவற நிறைவேற்றி அறுசுவை அன்னங்களைப் பசுவானுக்கு நிவேதனம் செய்ய வேண்டும். இவ்வாறு பூஜைகளை முடித்துப் பிரதிமையைக் கைகளிலோ சிரசிலோ தாங்கிக் கொண்டு ஊர்வலமாகப் பிரதிஷ்டை செய்ய வேண்டிய ஆலயத்துக்குச் செல்ல வேண்டும். அங்கே ஈசான்யத்திக்கிலே தரையிலே சுத்தமான இடத்தில் கீழே தர்ப்பையைப் பரப்பி அவற்றின் மீது வெண்பட்டை விரிக்க வேண்டும். அந்தப் பட்டிலே, எடுத்து வந்து பிரதிமையைப் படுக்க வைக்க வேண்டும். சூரியப் பிரதிமையோடு பிரதிஷ்டை செய்யப்பட வேண்டிய ராக்ஞீ, நிக்ஷúபா என்ற அவருடைய இரு பத்தினிகளின் பிரதிமைகளையும் தண்டநாயக பிளங்களருடைய பிரதிமைகளையும் எடுத்து வந்து அதன் அருகில் படுக்க வைக்க வேண்டும். நிக்ஷúபா சூரியப் பிரதிமைக்குத் தென்புறத்திலும், ராக்ஞீ வடபுறத்திலுமாக இருக்க வேண்டும். சூரியப் பிரதிமையின் கால் மாட்டிலே தண்ட நாயகன், பிங்களன் இருவருடைய பிரதிமைகளும் வைக்கப்பட வேண்டும். இரவு முழுவதும் கண்விழித்து அந்தப் பிரதிமைகளைக் சுற்றி அமர்ந்து பஜனை முதலானவை மேற்கொள்ள வேண்டும். பகவானைக் குறித்த பாடல்களைப் பாடிக்கொண்டும், நடனம் ஆடியும் இரவுப் பொழுதைக் கழிக்கவேண்டும். விடியற் காலையில் பகவானைத் திருப்பள்ளியெழுச்சி பாடி எழுப்ப வேண்டும். பொங்கல் நிவேதனம் செய்து பிரதிமையை மீண்டும் பூஜை செய்யவேண்டும். அங்கு வந்திருக்கும் உத்தமப் பிராமணர்களுக்கெல்லாம் தகுந்த தக்ஷணை கொடுத்துக் கவுரவித்து அவர்களைத் திருப்தியுறச் செய்ய வேண்டும்.

கர்ப்பகிருகத்தின் நடுவே பிரதிமையைப் பிரதிஷ்டை செய்யப்பட வேண்டிய இடத்தில் கீழே பள்ளம் தோண்டி அதனுள் மங்கலப் பொருள்களைப் போட்டு நிரப்பி உயரமான மேடை அமைக்க வேண்டும். அதன் முன்னர் ஏழு குதிரைகள் பூட்டிய இரதம் ஒன்றைச் செய்து நிறுவ வேண்டும். சுற்றிலும் நவதான்யங்களையும் வெள்ளைக் கடுகையும் தூவி, சங்கம் பேரிகை முதலான மங்கல வாத்தியங்கள் முழங்க சுபமுகூர்த்தத்திலே வேத கோஷங்களுக்கிடையே மேடையில் இரதத்திலே பிரதிமையைப் பிரதிஷ்டை செய்ய வேண்டும். பிரதிஷ்டை செய்யும் போது பிரதிமையின் முகம் கிழக்கு நோக்கி இருக்க வேண்டும். கீழ் நோக்கிச் சாய்ந்தோ மேல் நோக்கி நிமிர்ந்தோ இருக்கக் கூடாது. சமமாக இருக்க வேண்டும். பிரதிஷ்டை செய்யப்பட்ட பிரதிமைக்குத் தகுந்த முறையில் உரிய பிராமணர்களைக் கொண்டு சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளவாறு பூஜையைத் தொடங்க வேண்டும். பிரதிஷ்டையானதும் முறைப்படி பூஜைகளை முடித்துப் பலவித ருசிமிக்க பலகாரங்களைப் பகவானுக்குப் படைத்து அங்குக் குழுமியிருப்போருக்கு வினியோகம் செய்யவேண்டும். வேதப் பிராமணர்களுக்கும் மற்றும் உள்ளோருக்கும் வேண்டிய தக்ஷணைகளைக் கொடுத்துத் திருப்தி செய்யவேண்டும்.

இவ்விதம் முறையாகப் பிரதிஷ்டை செய்யப்படும் பிரதிமையில் பகவானுடைய சான்னித்தியம் ஏற்பட்டு நாளுக்கு நாள் விருத்தியாகும். பிரதிஷ்டை செய்யும் கோலாகலத்தை எவர் உடன் இருந்து கண்ணுறுகிறார்களோ அவர்கள் ஏழு ஜன்மங்களில் தாங்கள் செய்த பாபங்களிலிருந்து விடுபட்டவர்களாவர்கள். முதல் நாளைப் போலவே மூன்று நாட்களுக்கு உபவாசமிருந்து பூஜையை முடிக்க வேண்டும். அவ்விதம் பக்தி சிரத்தையோடு எவன் பிரதிஷ்டை செய்து பூஜைக்கு வழி செய்கிறானோ அவன் உத்தமமான லோகத்தை அடைவான். பத்து அசுவமேத யாகங்களும், நூறு வாஜபேய யாகங்களும் செய்த பலனை அடைகிறான். பிரமஹத்தி முதலான கொடிய பாபங்கள் அவனை விட்டு விலகி விடுகின்றன. அவனுக்கு மிருத்தியு பயம் என்பதே கிடையாது. பயம் ஒரு போதும் அவனை அண்டாது. குறைவற்ற செல்வம், அவனைச் சேரும். அனைவராலும் கொண்டாடப்பட்டு வெகு காலம் பூமியிலே மகிழ்ச்சியுடன் வாசம் செய்து முடிவில் சூரிய லோகத்தை அடைவான். அவன் வமிசம் விருத்தியாகும். புத்திர பவுத்திரர்கள் கீர்த்தி பெற்று வாழ்வார்கள். இவ்வாறு கூறி வந்த வசிஷ்டர் அரசனைப் பார்த்து ஹேராஜன், முன்னர் ரிஷப முனிவர் தன் குமாரனுக்கு இதை விவரித்தபோது அங்கே நாரதரும் உடன் இருந்து அதைப் பக்தியோடு கேட்டார். தாம் முனிவரிடமிருந்து அறிந்ததை நாரதர் சாம்பனுக்குக் கூறியதைத்தான் நான் உனக்கு இப்போது எடுத்துச் சொன்னேன் என்றார்.

21. கொடி மரம்

வசிஷ்ட மகரிஷி பிருகத்பல ராஜனுக்குக் கொடி மரத்தின் அவசியத்தைக் கூறலானார். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே யுத்தம் நிகழ்ந்த போது இரு தரப்பினரும் தாங்கள் வெற்றி பெறும் பொருட்டு பாணங்களில் தேவதைகளின் நாமங்களையும் சித்திரங்களையும் எழுதி உபயோகித்தனர். அதேபோல் தங்கள் தங்கள் இஷ்ட தேவதைகளுடைய சித்திரங்களை வஸ்திரங்களில் எழுதி ரøக்ஷயாகத் தேரின் உச்சியிலே கொடியாகக் கட்டிப் பறக்க விட்டனர். அதுவே பின்னர் நிலைத்த ஏற்பாடாகிவிட்டது.

ஒவ்வொரு தேவாலயத்தின் முன்பும் கொடி மரம் அதாவது துவஜஸ்தம்பம் இருக்கவேண்டியது அவசியம். அதற்காகத் தேர்ந்தெடுக்கப்படும் மரம் நேராக இருப்பதாகவும், நுனி சற்று வளைந்ததாகவும் இருக்கவேண்டும். வெட்டுக் காயங்கள் பட்டதாக இருப்பது கூடாது. மிகவும் மேன்மையானதும் வைரம் பாய்ந்ததுமான மரத்தைத் தேர்ந்தெடுத்து கொடிமரம் அமைக்க வேண்டும். மேன்மாடம் வரை உயரம் உடையதாக அது இருத்தல் வேண்டும். அதன் உச்சியில் தொங்கும்படியாகக் கொடி ஏற்றப்படவேண்டும். அழகிய வஸ்திரத்தைக் கொண்டு வந்து அதில் வண்ணங்களால் ஆலயத்தின் அடையாளத்தைத் தெரிவிக்கும் மூர்த்தியை அழகுற எழுதிப் பறக்கவிட வேண்டும். பொன்னாலோ, வெள்ளியாலோ, ரத்தினங்களாலோ கோலங்கள் எழுதி அவற்றால் கொடிமரத்தை மூடவேண்டும். ஒவ்வொரு தெய்வத்துக்கு ஓர் உருவம் கொடி மரத்திலுள்ள கொடியில் இருக்க வேண்டுமென நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விஷ்ணுவிற்கு கருடன் எழுதப்படவேண்டும். ரிஷபம் சிவனுக்கு எழுதப்படவேண்டும். சூரியனுக்கு விதிக்கப்பட்டிருப்பது வியோமா ஆகும். ஆகாசம்போல் வெட்ட வெளியாக இருத்தல் அவசியம். வருணனுடைய கொடியில் அன்னமும் குபேரனுக்கான கொடியில் நரனுடைய உருவமும், சுப்பிரமணியருடைய கொடியில் மயிலும் எழுதப்பட்டிருக்க வேண்டும். அதேபோல விநாயகருக்கு மூஷிகமும், இந்திரனுக்கு யானையும், யமனுக்கு எருமைக்கடாவும், துர்க்கைக்குச் சிங்கமும் கொடியிலே எழுதப்படவேண்டும். கொடி மரத்தை அழகான தோரணங்களாலும் கொடிகளாலும் அலங்கரித்து மேடையில் நிறுத்தி, இரவு முழுவதும் கண் விழித்து அதற்குப் பூஜை முதலான செய்ய வேண்டும். மந்திர உச்சாடனத்தோடு கயிறு சுற்றி, தூப தீப நைவேத்தியங்களால் பக்தியோடு ஆராதிக்க வேண்டும். எள்ளு கொண்டு செய்த பலகாரம் அப்பம் மற்றும் பலவித ருசி மிகுந்த பலகாரங்களை அதற்கு நிவேதனம் செய்து திக்குப் பாலகர்களுக்கு அவற்றால் பலியிட வேண்டும். பின்பு பிராமணர்களைக் கொண்டு விதிப்படி பூஜை முதலானவற்றை முடித்து நல்ல சுபயோக வேளையில் கொடி மரத்தை நிறுவ வேண்டும். வேத கோஷங்கள் அவ்வமயம் எழுப்பப் படவேண்டும். மங்கல வாத்தியங்களும் முழங்க வேண்டும். இவ்விதமாக சாஸ்திர விதிப்படி கொடி மரத்தை நிறுவுபவர்களுக்கு சகலவிதமான நன்மைகளும் உண்டாகும். கொடிமரம் இல்லாவிடில் அந்த இடத்திலே தேவதைகள் வாசம் செய்ய விரும்பமாட்டார்கள். கொடி மரத்திலே பறக்கும் கொடியிலே எல்லாத் தேவதைகளும் சான்னித்தியம் கொண்டு பிரஜைகளுக்கு அநேக நன்மைகளைச் செய்து வரவேண்டும் என்று உள்ளன்போடு பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறே தேவதைகளும் விதிப்படி பிரதிஷ்டை செய்யப்பட்ட கொடி மரத்திலே இருந்து கொண்டு அனைவருக்கும் சகல நன்மைகளையும் செய்து வருவார்கள்.

22. தேர்த் திருவிழா

சாம்பன் நாரத மகரிஷியைப் பார்த்துப் பணிவோடு, மகரிஷே, கொடிமரம் நிறுவிய பின்னர் பகவானுக்கு எப்படியெல்லாம் ஆராதனை செய்ய வேண்டும்? சொல்லுங்கள் என்று கேட்க நாரதரும் கூறலானார். சாஸ்திரங்களில் கூறியவாறு கொடிமரத்தை நிறுவிய பின்னர், அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் பகவானுக்கு பிரஜைகளுடைய நன்மைக்காகப் பிரம்மோத்ஸவம் செய்ய வேண்டும். புண்ணிய நதிகளிலிருந்து புனித நீரைக் கொண்டு வரச்செய்து அந்தப் புண்ணிய தீர்த்தங்களுடைய பெயரைக் கூறி பகவானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். புஷ்கரம், நைமிசம், குரு ÷க்ஷத்திரம், கங்கை, சரஸ்வதி, சிந்து, சந்திரபாகா, நர்மதா, பயோஷ்ணி, யமுனை, தாம்பிர பரணி, க்ஷீப்ரா, வேத்ரவதி முதலியவற்றிலிருந்து புண்ணிய தீர்த்தங்களையும், சமுத்திரங்களிலிருந்து நீரையும் கொண்டுவரச் செய்து அபிஷேகம் செய்ய வேண்டும். தூபதீப நைவேத்தியங்களைக் குறைவறச் செய்ய வேண்டும்.

மூன்று நாட்களோ, ஏழு நாட்களோ, பதினைந்து நாட்களோ, முப்பது நாட்களோ பகவானுக்குத் திருவிழா நடத்தலாம். ஜனங்களுடைய நன்மைக்காகவே பகவானுக்கு உத்ஸவங்கள் செய்யப்பட வேண்டுமென்று விதிக்கப்பட்டிருக்கிறது. அழகிய இரதத்திலே சூரியப் பிரதிமையை வைத்து வீதிவலம் வரவேண்டும். இரதோத்ஸவம் நடத்துவதால் மக்கள் சுகமாய் நோய் நொடிகள் இன்றி, வாழ்ந்து வருவார்கள். ராஜாவுக்குச் சத்துரு பயம் ஏற்படாது. பசு, பக்ஷி முதலான ஜீவராசிகள் மகிழ்ச்சியோடு இருந்து வரும். உத்ஸவத்தை முன்னின்று நடத்தி வைப்பவர்கள் எல்லாவித நன்மைகளையும் அடைவார்கள். அப்போது சாம்பன் நாரதரைப் பார்த்துக் கேட்டான். சுவாமி, எனக்கொரு சந்தேகம் தோன்றுகிறது. இரதத்திலே சூரியனுடைய பிரதிமையை எடுத்து வைத்து நகர்வலம் வரவேண்டுமென்று சொன்னீர்கள். சாஸ்திர முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்ட பிம்பத்தை அந்த இடத்திலிருந்து எவ்வாறு எடுப்பது? அது தோஷமில்லையா? என் சந்தேகத்தைப் போக்க வேண்டும். பிரதிஷ்டை செய்யப்பட்ட சூரியப் பிரதிமையை இரதோத்ஸவத்துக்காக வெளியே எடுப்பது தோஷமில்லை என்பதை நாரதர் விவரிக்கலானார். சூரியனுக்கு சஞ்சாரம் செய்வதற்காகப் பிரமனே முன்பு இரதத்தைச் செய்வித்தார். சம்வத்ஸரமாகிய காலத்தின் அங்கங்களைக் கொண்டே அழகுற இரதம் அமைத்துத் தந்தார். அது மிகவும் உயர்ந்ததாகக் காணப்பட்டது. அதைக் கண்ணுற்றோர் அனைவரும் அதன் மேன்மையைக் கண்டு வியந்தனர். மிகவும் உத்தமமாக விளங்கும் அந்த இரதத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்ட விசுவகர்மா இந்திரன் முதலானோர்க்கும் அம்மாதிரி அழகிய இரதங்களைச் செய்து தந்தான். மனு இக்ஷ்வாகு முதலானவர்களும் அம்மாதிரி இரதங்களைப் பெற்று அவற்றில் ஏறி சஞ்சாரம் செய்து வந்தார்கள். சூரியன் பொன்மயமான தேரிலே ஏறி உலகைச் சுற்றி வந்து பரிபாலிப்பதால் அவருடைய பிரதிமையைப் பிரதிஷ்டை செய்த இடத்திலிருந்து எடுத்து இரதத்திலே வைத்து வீதிவலம் வருவதானது தோஷம் இல்லை என்று சொல்வர். அதன் காரணமாகவே இரதோத்ஸவம் செய்வது மிகவும் உத்தமமானதாகக் கூறப்படுகிறது.

சூரியன் இரதத்திலேறிச் செல்லும்போது அவர்போவது எவருக்கும் தெரிவதில்லை. பிறருடைய பார்வைக்குப் புலப்படாதவாறு அவர் இரதத்திலே பிராயாணம் செய்கிறார். அவர் போகும்போது காலத்தை நாம் உணர முடிகிறதே அன்றி அவர் பிரயணப்படுவதைப் பார்க்க முடிவதில்லை. பிரமன், விஷ்ணு முதலானோருக்கும் அவ்வாறே இரத உத்ஸவம் செய்வது மிகவும் விசேஷம் எனக் கூறப்படுகிறது. பிரஜைகள் நன்றாக வாழ வேண்டும் என்ற குறிக்கோளை லட்சியமாகக் கொண்டே உத்ஸவாதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பொன்னாலோ வெள்ளியாலோ அல்லது நன்றாகத் திடமான மரத்தாலோ இரதம் செய்யலாம். மிகவும் உறுதியாக அச்சு, சக்கரங்கள், நுகத்தடி, தூண்கள், தட்டுகள், மேல்கும்பம் முதலான செய்து இரதத்தைக் கோக்க வேண்டும். இரதத்தின் நான்கு பக்கங்களிலும் மணிகளாலும், வண்ணக் கொடிகளாலும் அலங்காரம் செய்ய வேண்டும். முறைப்படி பரிவார தேவதைகள் அங்கங்கே நிறுவப்பட வேண்டும். சிவப்பு நிறமானதும் லக்ஷணங்களோடு கூடியதுமான குதிரைகளைப் பூட்டி இரதத்தை இழுக்கச் செய்வது உத்தமமாகும். பிரதிமையை விதிப்படி பூஜித்து உபசாரங்கள் செய்து இரதத்திலே ஏற்றி சத்திர சாமரங்கள் வீசிவர வாத்திய கோஷங்களோடு வீதிவலம் அழைத்து வரவேண்டும். புறப்படும் முன்பு அனேக ருசிமிக்கப் பலகாரங்களை நிவேதனம் செய்து வினியோகித்தல் அவசியம். அவசரப்படாமல் நிதானமாக விதிப்படி பூஜை செய்தே புறப்பட வேண்டும். பசியால் பீடிக்கப்பட்டவர்களும் பிறரைக் குறித்துக் கெடுதலான எண்ணங்களை மனத்திலே உடையவர்களும் பூஜை செய்யக் கூடாது. ஏனெனில் இரதத்திலே அவர்களுக்கு இடம் கிடைக்காது. அவர்களைப் பூமியிலே தள்ளிவிடும்.

இரதம் புறப்படும் முன்பு விசேஷமான பூஜைகளைச் செய்து பிராமணர்களுக்குத் தக்ஷணை முதலான கொடுத்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டு, தேவதைகளுக்கும் பூதாதிகளுக்கும் திருப்திக்காக அன்னத்தால் பலி கொடுத்துப் பிரார்த்திக்க வேண்டும். ஆதித்தன், சப்த மருத்துக்கள், விசுவதேவர்கள், அசுவினி தேவர்கள், கருடன், அசுரர்கள், ராக்ஷஸர்கள், மற்றும் இரதத்திலுள்ள பரிவார தேவதைகள், திக்குப்பாலகர்கள், லோகபாலகர்கள், விக்கினங்களை உண்டுபண்ணும் தேவதைகள், பூதாதிகள் ஆகியோருக்குப் பலிகொடுத்து திருப்தி செய்ய வேண்டும். உலகத்திற்கு சவுக்கியத்தைத் தரவேண்டும் என்றும், விக்கினங்கள் ஏற்படாது காப்பாற்ற வேண்டும் என்றும் தோஷங்களோ பாபங்களோ அணுகக் கூடாதென்றும் பிரார்த்தித்துக் கொள்ளவேண்டும். உத்தமமான மந்திரங்களைச் சொல்லி வேத கோஷங்களோடு இரதத்தைப் புறப்படச் செய்ய வேண்டும். சூரியனிடம் பக்தி கொண்ட புருஷர்களோ, உத்தம ஜாதி காளைகளோ இரதத்தை இழுத்து வரலாம். வீதி வலம் வருகையில் இரதத்தின் அச்சு, சக்கரங்கள், நுகத்தடி, ஏற்கால், இருசு ஆகியவற்றுக்குப் பங்கம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்விதம் நேருமானால் அதனால் கேடுகள் விளையக் கூடும். இரதத்தின் அச்சு முறிந்தால் அரசருக்கு ஆபத்து வரக்கூடும். தேர் முறிந்தால் பிராமணர்களுக்கு ஆகாது. பலவிதத் தீமைகள் அவர்களைப் பீடிக்கும். தேரிலுள்ள தட்டு முறிந்து போனால் வைசியருக்குத் துன்பங்கள் நேரிடும். ஏர்க்கால் முறிந்து விட்டால் நான்காம் வருணத்தாருக்குக் கெடுதிகள் பல உண்டாகும். நுகத்தடி முறிந்து விட்டாலோ நாட்டிலே மழை பொழியாது. பஞ்சம் ஏற்படும். பீடம் முறிந்தால் ஜனங்களுக்கு பயம் ஏற்படும். சக்கரங்களில் ஏதேனும் ஒன்று முறிந்தாலும் நாட்டுக்கு வெளியிலிருந்து ஆபத்து வரும். மேலே உள்ள குடம் முறிந்து விழுந்தால் மொத்தத்தில் அனைவருக்குமே கெடுதி உண்டாகும். பிரதிமை முறிந்து விழுந்தால் பெண்களுக்கு அகால மரணம் ஏற்படும். தேர் தலைகீழாகக் கவிழ்ந்தால் நாட்டுக்கே ஆபத்து உண்டாகும். எங்கும் நாசம் ஏற்படும். ஆகவே, வீதி வலம் வருகையில் இரதத்தை மிகவும் கவனமாக இழுத்து வரவேண்டும். வீதி வலம் முடிந்து தேர் ஆலயத்தின் வாயிலை அடைந்ததும், சாந்திக்காக விதிப்படி பூஜைகள் செய்ய வேண்டும். தேருக்கு ஈசான்னிய திக்கிலே வைதிக முறைப்படி அக்கினி வளர்த்து அவிசு முதலானவற்றால் ஆரம்பத்தில் செய்த வரிசையிலே தேவர்களுக்காக ஹோமம் செய்ய வேண்டும்.

முதலில் அக்கினிக்கு ஹோமம் செய்யவேண்டும். அடுத்ததாகச் சந்திரனுக்கு ஹோமம் செய்யவேண்டும். மூன்றாவதாகப் பிரமனுக்குச் செய்ய வேண்டும். இவ்வாறாக எல்லா தேவதைகளுக்கும் ஹோமம் முறைப்படி செய்து பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும். நான்கு வருணத்தாரும் பசு முதலான மிருக ஜாதிகளும் பக்ஷிவர்க்கங்களும் சவுக்கியமாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும். வீதி வலம் வரும்போது ஏதாகிலும் சிறு ஆபத்து ஏற்பட்டுத் தேரின் பாகங்களுக்குப் பழுது உண்டாகி விட்டால் அதனால் ஏற்படும் தோஷத்தின் கடுமை குறைய நவக்கிரக சாந்தி செய்ய வேண்டும். ஒருவன் பிரயாணப்படும்போது கிரக நிலைகள் பாதகமாக இருக்குமானாலும், கிரகங்களுடைய சஞ்சாரத்தால் கஷ்டங்கள் ஏற்படக் கூடிய நிலைமை உண்டானாலும் நவக்கிரக சாந்தி கர்மா செய்ய வேண்டும். அதனால் பாதகங்கள் ஏற்படுத்தாது கிரகங்களைத் திருப்தி செய்யலாம். அந்த அந்த கிரகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள பொருள்களை அவற்றுக்கான மந்திரங்களை உச்சரித்து அக்கினியில் ஹோமம் செய்ய வேண்டும். உத்தமப் பிராமணர்களுக்குத் தக்ஷணை முதலான கொடுத்து அன்னமளித்து திருப்தி செய்யவேண்டும். ஹோமத்துக்குச் சொல்லப்பட்டுள்ள சமித்து ஒரு சாண் அளவு தான் இருக்க வேண்டும். அதற்குக் குறைந்ததாகவோ, அதிகமாகவோ இருத்தல் நல்லதல்ல. நவக்கிரகங்கள் ஹோமம்செய்ய ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வித சமித்துக்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. சூரியனுக்கு எருக்குச் சமித்தைக் கொண்டு ஹோமம் செய்ய வேண்டும். சோமனுக்கு பலாசச் சமித்தால் ஹோமம் செய்யவேண்டும். கருங்காலி மரத்தின் சமித்து அங்காரனுக்குச் செய்யப்படும் ஹோமத்துக்குப் பயன்படுத்த வேண்டும். புதனுக்கு நாயுருவி சமித்து கொண்டு ஹோமம் செய்ய வேண்டும். பிரகஸ்பதிக்கு அரசச் சமித்து ஹோமத்துக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுக்கிரனுடைய ஹோமத்துக்கு ஏற்றது அத்தி சமித்தாகும். சனீஸ்வரனுக்கு வன்னி மரத்தின் சமித்தையே ஹோமத்துக்கு உபயோகப்படுத்த வேண்டும். அருகம்புல் ராகுவுக்கான ஹோமத்துக்கு உபயோகப்படுத்தவேண்டும்.கேதுவுக்கு ஹோமம் செய்ய தர்ப்பையே விதிக்கப்பட்டுள்ளது. ஹோமம் செய்யும் போது சமித்துக்களாலும், பசும் நெய்யாலும், அன்னத்தாலும் மந்திரங்களை நன்கு உச்சரித்து அக்கினியிலிட வேண்டும்.

சமித்துக்களைப் போல் நவக்கிரகங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாகப் பொருள்கள் விதிக்கப்பட்டுள்ளன. அந்தப் பொருள்களை அந்த அந்த தெய்வத்தின் திருப்திக்காகத் தக்ஷணையோடு வேதியருக்குத் தானம் அளிக்க வேண்டும். சூரியனுக்குப் பிடித்தமானது கறக்கும் பசு ஆகும். தங்கத்தைத் தானம் தந்தால் சந்திரன் திருப்தியுறுவான். அங்கா ரகனுடைய திருப்திக்காக புதனைத் திருப்தியுறச் செய்யலாம். மஞ்சள் நிறப் பட்டு வஸ்திரத்தைப் பிரகஸ்பதியின் திருப்திக்காகத் தானம் அளிக்க வேண்டும். சுக்கிரன் வெண்மை நிறமான வஸ்திரத்தையோ குதிரையையோ அளிப்பதால் திருப்தியுறுவான். சனீஸ்வரனுக்குக் காராம் பசு தானம் அளிக்கப்பட வேண்டும். ராகுவைத் திருப்திப்படுத்த வெல்லப்பாயசம் தானம் தரவேண்டும். கேதுவைத் திருப்திப்படுத்த செம்மறி ஆடு தானம் தரவேண்டும். ஹோமத்தின் முடிவில் நவக்கிரகங்கள் ஒவ்வொன்றுக்கும் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவை நிவேதனம் செய்ய வேண்டும். சூரியனுக்குச் சர்க்கரைப் பொங்கல் செய்து நிவேதனம் செய்தால் அவர் மிக்க திருப்தியுறுவார். சந்திரனுக்கு மிகவும் பிடித்த நிவேதனம் நெய்யால் செய்யப்பட்ட பாயசம் ஆகும். அங்காரகனுக்குக் கஞ்சி வடிக்காத அன்னத்தை நிவேதனம் செய்ய வேண்டும். பாலன்னம் புதனுக்கு மிகவும் பிடித்தமானது ஆகும். தயிர் சாதத்தைப் பிரகஸ்பதிக்குப் படைக்க வேண்டும். சுக்கிரனுக்கு மிகவும் பிடித்தமானது நெய்ப் பொங்கல். எள்ளுச்சாதம் சனீஸ்வரனுக்குப் பிடித்தமான நைவேத்தியம். ராகுவுக்கு உளுந்து வடை நிவேதனம் செய்தால் மிகவும் ப்ரீதி அடைவான். கேதுவுக்கு சித்திரான்னத்தில் பிரீதி அதிகம். இந்தப்படியாக ஒவ்வொருவருக்கும் பிடித்தமான உணவையே செய்து அவர்களுக்குப் படைக்க வேண்டும். யுத்தத்திலே போரிடும் வீரன் கவசம் அணிந்து போரிடுகின்றான். எதிரியால் விடப்படும் பாணங்கள் அவன் மார்பிலே தைக்கும்போது அந்தக் கவசம் அவற்றைத் தடுத்து விடுகின்றது. அதுபோல நவக்கிரக சாந்தி செய்து கொள்பவன் கிரகங்களால் ஏற்படும் கோளாறுகளினால் பாதிக்கப்படமாட்டான். அந்தப் பீடைகளை நவக்கிரக பூஜை ஒழித்து விடும். ஹிம்சை செய்யாதவன், பொறுமையுடன் கூடியவன், தப்பான வழிகளில் பணம் சம்பாதிக்காதவன், நியமங்களோடு நாள்தோறும் ஒழுங்காக நடப்பவன் ஆகியவர்களுக்கு நவக்கிரகங்கள் ஒருபோதும் கெடுதல் செய்யாது. அனுகூலமே செய்யும்.

நவக்கிரகங்கள், பசு, ராஜா, வேதம் அறிந்த உத்தம பிராமணர்கள் ஆகியோரை நாம் பேதமில்லாமல் பூஜிக்க வேண்டும். அவர்களைப் பூஜிப்பதால் அனேக நன்மைகள் ஏற்படும். அவர்களை அவமதித்தாலோ அதனால் துன்பங்களே சூழும். ஒரு யந்திரத்தைக் கொண்டு மற்றொரு யந்திரத்தை சரி செய்து கொள்வது போல நவக்கிரக பூஜை செய்து நம்மைப் பீடிக்க இருக்கும் துன்பங்களைப் போக்கிக் கொள்ள வேண்டும். யாகம் செய்பவர்கள், உண்மையே பேசுபவர்கள் நித்திய உபவாசமிருப்பவர்கள். (அதாவது ஒரு வேளை உணவருந்தி மறுவேளை உபவாசமிருப்பது) நியமமான ஜபதபங்களை உடையவர்கள் ஆகியோருடைய கிரகங்களில் கிரக பீடைகள் ஏதும் அண்டாது. அவ்விதமே ஏதாகிலும் துன்பம் நேருமானால் நவக்கிரக பூஜை செய்தால் அவை உடனே நீங்கி விடும். இவ்வாறாக நவக்கிரக சாந்தி முடித்த பின்னர் இரதத்திலே உள்ள பிரதிமையை மங்கல வாத்தியங்கள் ஒலிக்க எடுத்துச் சென்று ஆலயத்தில் உள்ள அதன் முந்தைய இடத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டும். நான்காவது நாள் விமரிசையாக விழாயாற்றி உத்ஸவம் நடத்த வேண்டும். இப்படியாக ஒவ்வோர் ஆண்டும் சூரியனுக்கு உத்ஸவம் விமரிசையாகச் செய்யப்படவேண்டும். ஏதேனும் ஒரு சமயம் உத்ஸவம் செய்ய முடியாது தடைப்பட்டுப் போய்விடுமானால் அதன் பின்னர் பன்னிரண்டு வருஷம் சென்ற பின்னரே உத்ஸவம் செய்ய வேண்டும். பயபக்தியோடு சூரியனுக்கு உத்ஸவம் நடத்தி வைத்து மகிழ்பவன் வெகு காலம் சூரிய லோகத்தில் அனைவராலும் பூஜிக்கப்படுவான். முடிவில் அவன் உத்தம குலத்தில் ரோகம் ஏதும் இல்லாத உத்தம புருஷனுக்குப் பிள்ளையாகப் பிறப்பான். இரதோத்ஸவத்தை விவரித்த வசிஷ்டர் ஹேராஜன். ரிஷப முனிவர் தம் குமாரனுக்கு, இவ்வாறு எடுத்துரைத்தார். அவனும் அதன் பிரகாரம் சூரியனுக்கு உத்ஸவத்தை நடத்தி அவர் அருளுக்குப் பாத்திரமானான் என்றார்.

23. தூபத்தால் பூஜை

நாரத மகரிஷி சாம்பனுக்கு மேலும் கூறலானார். ஒவ்வொரு தேவதைகளையும் அவற்றுக்குச் சொல்லப்பட்டுள்ள விதி முறைப்படி நல்ல மனத்தோடு பூஜை செய்யவேண்டும். சூரியனுடைய பத்தினிகளான ராக்ஞீ, நிக்ஷúபா இருவருக்கும் தனித்தனி இரதங்கள் அமைக்கப்படவேண்டும். அதே போலவே தண்ட நாயகருக்கும் பிங்களனுக்கும் தனி இரதங்கள் இருக்க வேண்டும். வீதி வலத்துக்குப் புறப்படும் முன்பு சூரியனுக்குச் செய்யப்படுவது போல அவர்களுக்கும் தூபதீபநைவேத்திய உபசாரங்களைச் செய்து கொண்டே புறப்பட வேண்டும். சூரியனுடைய குதிரைகள் காயத்திரி முதலிய ஏழு சந்தஸ்ஸுகள். ஆகவே, வேதமறிந்த பிராமணர்களே இரதத்திலே சூரியப் பிரதிமையோடு வரலாம். சூரியனைப் பூஜிக்காமல் மற்ற தேவதைகளைப் பூஜித்தால் அவர்கள் அந்தப் பூஜையை ஏற்கமாட்டார்கள். அக்ஞானத்தால் செய்யப்படும் பூஜை என ஒதுக்கிவிடுவார்கள். இரதத்திலே சூரியன் பவனி வருவதைத் தரிசிப்பவர்கள் சகல பாபங்களிலிருந்தும் விடுபட்டவர்கள் ஆவார்கள். அந்தத் தரிசனத்தை அமிருதத்துக்கு ஒப்பாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. பவுர்ணமி அமாவாசை ஆகிய நாட்களில் உபவாசமிருந்து பக்தியோடு சூரியனைத் தரிசிப்பவர்களுக்கு மிகுந்த புண்ணியம் உண்டாகும். ஆடி, கார்த்திகை, மாசி, வைகாசி இந்த நான்கு மாதங்களில் வரும் பவுர்ணமிகள் மிகவும் விசேஷமானதாகும். இந்த நாட்களில் உபவாசத்தோடு சூரியனை ஆராதிப்பவர்களுக்கு விசேஷமான பலன்கள் உண்டாகும். சூரியன் யக்ஞ புருஷன். யாகம் செய்பவர் தீக்ஷதர். வபநம், ஸ்நானம், தானம். ஜபம், ஹோமம், தேவகார்யம் ஆகியவற்றைச் செய்வது தீøக்ஷயாகும். சூரியனைக் குறித்துச் செய்யும் ஹோமத்தில் இத்தகைய தீøக்ஷயைப் பக்தி சிரத்தையோடு மேற்கொள்ள வேண்டும். அவர்கள் பெரும் புண்ணியசாலிகள் ஆவர்.

பகவானைக் குறித்துச் செய்யப்படும் பூஜையில் பக்தியில் சுத்தமும் அவசியம் இருக்கவேண்டும். அவை இல்லாதய பூஜைகள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா. சரீரத்தில் மூன்று முறை மண்ணைத் தடவிக் கொண்டு சுத்தமான நீரிலே ஸ்நானம் செய்ய வேண்டும். பின்னர் உடலை நீர் போகத் துடைத்து வேறு ஆடை அணிந்து கொண்டு மகிழ்ச்சி நிறைந்த மனத்தோடு சுத்தமான இடத்தில் உட்கார்ந்து மந்திரங்களைச் சொல்லி ஆசமனம் செய்ய வேண்டும். ஜலத்திலிருந்துகொண்டு ஒரு போதும் ஆசமனம் செய்யக் கூடாது. ஏனெனில் ஜலத்திலே அக்கினி, சூரியன், நாகதேவி, சரஸ்வதி ஆகியோர் வாசம் செய்கிறார்கள். ஜலத்திலிருந்து கொண்டு ஆசமனம் செய்தால் ஜலத்தையும் அவர்களையும் அசுத்தப்படுத்தியதாகும். ஆசமனம் செய்யாமல் செய்யும் காரியங்கள் அனைத்துமே பயனற்றவை. ஆசமனம்தான் மனிதனைச் சுத்தமாக்குகிறது. பரிசுத்தமான இடத்திலே கிழக்கு நோக்கியோ வடக்கு நோக்கியோ அமர வேண்டும். கால்களை மடித்து ஆசனமிட்டுக் கொண்டோ, உட்கார்ந்து கொண்டோ முழங்கால்களுக்கிடையே கையை வைத்துக் கொண்டு ஆசமனம் செய்ய வேண்டும். ஆசமனம் செய்யும்போது மூன்று தடவை தீர்த்தத்தைப் பருக வேண்டும். மூன்று முறை தலையிலே நீரைத் தெளித்துக் கொள்ள வேண்டும். ஆசமனம் செய்யாமல் காரியங்களைச் செய்பவன் ஆஸ்திகன் அல்லன். பகவானுடைய அனுக்கிரகத்துக்கு அவன் பாத்திரனாக மாட்டான். தேவதைகள் பரிசுத்தத்தையே விரும்புபவர்கள். நாஸ்திகனையும் சுத்தமில்லாதவர்களையும் ரிஷிகளும், விலக்கி விடுகிறார்கள். ரிஷிகள், பிதுருக்கள், தேவதைகள் மிகவும் பரிசுத்தமானவர்களாகையால் அவர்களைக் கோரிச் செய்யப்படும் எந்தப் பூஜையும் பரிசுத்தமாக இருக்க வேண்டும். ஆசமனம் செய்து சுத்திகரித்துக் கொண்ட பின்னர் தேவாலயத்துள் நுழைந்து பிராணாயாமம் செய்யவேண்டும். அதன் பின்னரே பூஜைக்குத் தொடங்க வேண்டும். தலை மயிரில் உள்ள ஜலம் கீழே கொட்டக் கூடாது. ஆகவே ஈரம்போக நன்றாகத் தலையைத் துவட்டிக் கொண்டதோடு தலையிலே துணியைச் சுற்றிக் கொள்வதும் நலம். பகவானுக்குத் தூபம் காட்டுவது மிகவும் விசேஷமானதாகும். வாசனை மிகுந்த சாம்பிராணியாலோ தசாங்கத்தாலோ தூபம் காட்டவேண்டும். வாசனை மிகுந்த புஷ்பங்களைக் கையிலெடுத்து தூபத்தின் மீது அஞ்சலி காட்டி பகவானுக்குச் சமர்ப்பிக்க வேண்டும். தூபம் காட்டிய பின்னர் மந்திர உச்சாடனத்தோடு பகவானுக்குப் புஷ்பாஞ்சலி செய்யவேண்டும்.

தண்ட நாயகனுக்குப் பிரதோஷ காலத்திலே தூபம் காட்டிப் பூஜை செய்யவேண்டும். ராக்ஞிக்கு அதிகாலையில் தூபம் காட்ட வேண்டும். சூரியனுக்கு காலை, பகல், மாலை மூன்று வேளைகளிலும் தூபம் காட்டிப் பூஜை செய்யவேண்டும். தாமரை, ரக்தோத்பலம் கரவீரம் முதலான புஷ்பங்களைச் சிவப்பு சந்தனத்துடன் கலந்து சூரியனுக்கு அர்ப்பணிக்க வேண்டும். மற்ற புஷ்பங்களைக் குங்குமத்தோடு கலந்து சமர்ப்பிக்கவேண்டும். பின்னர் சாம்பிராணி தூபம் காட்ட வேண்டும். சூரியனுக்கும் அவருடைய பரிவாரங்களுக்கும் தூபம் காட்டுகையில் தனித்தனி மந்திரங்கள் சொல்லப்படவேண்டும். பின்னர் இருகைகளையும் கூப்பிக்கொண்டு பகவானைப் பிரார்த்தித்து நமஸ்காரம் செய்யவேண்டும். பிறகு சூரியனுக்காக ஹோமம் செய்யவேண்டும். பலாசம், அரசு, எருக்கு, நாயுருவி, வன்னி, அத்தி, கருங்காலி, வில்வம், சந்தனம் ஆகிய மரங்களுடைய சமித்துக்கள் ஹோமத்துக்கு ஏற்றவை எனச் சொல்லப்பட்டிருக்கிறது. உத்தமமான மனிதர்களைக் கொண்டே ஹோமம் செய்யப்பட வேண்டும். அக்கினி புகையோடு இருக்கும் போதும், ஜ்வாலை இல்லாத போதும் ஹோமம் செய்யக் கூடாது. அவ்விதம் ஹோமம் செய்தால் எஜமானன் பார்வையை இழப்பான். ஜ்வாலை உள்ள அக்கினியே கோரிய பலன்களைத் தரக்கூடியது. ஒரே ஜ்வாலையாக உள்ளதும், உருக்கிய தங்கம் போன்று நிறம் உள்ளதும், பிரதக்ஷிணமாக வீசும் ஜ்வாலை உள்ளதும் ஆன அக்கினியிலே ஹோமம் செய்வதே சித்தி அளிக்கும். அக்கினி பிரத்தியக்ஷ தேவதை. ஆகவே அசுத்தமானவரோ, வித்தை இல்லாதவரோ, நோய் உள்ளவரோ, ஆசாரங்களைக் கைவிட்டவரோ ஹோமம் செய்யக் கூடாது. அவர்கள் ஹோமம் செய்வார்களே யானால் நரக வாழ்வே சித்திக்கும்.

24. பக்தியுடன் செய்யப்படும் பூஜை

சாம்பன் நாரதரை நமஸ்கரித்து மேலும் கேட்டான். மகரிஷே, என் மீது அன்பு கொண்டு சூரிய பகவானைப் பற்றிய எத்தனையோ விஷயங்களை விஸ்தாரமாகக் கூறினீர்கள். பிரதிமை செய்வதும், பிரதிஷ்டை செய்வதும் பூஜை முதலான நிறைவேற்றுவதும், வீதி வலத்தோடு உத்ஸவம் நடத்துவதும் பற்றி அரிய விஷயங்களைச் சொன்னீர்கள். பக்தியும் சுத்தமும் இல்லாத பூஜையைத் தேவதைகள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று தெரிவித்தீர்களே. அதைப் பற்றிச் சற்று விவரமாக அறிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். பகவானுடைய விஷயங்களை எடுத்துச் சொல்வதில் மகான்கள் பெரிதும் மகிழ்வார்கள். நாரதரும் சாம்பன் கேட்ட விவரத்தைத் தெரிவிக்கலானார். மனத்திலே திடமாகப் பகவானைத் தியானிப்பது தான் பக்தி. ஏகாக்கிர சித்தத்தோடு பகவானைத் தியானிக்கும் பக்தி, இச்சை, சிரத்தை, தியானம், சமாதி என்று பல கட்டங்களைக் கொண்டது. எப்போதும் பகவானுடைய கதைகளைக் கேட்பது, அவரையே மனத்தில் நினைப்பது, அவருக்குச் சிரத்தையோடு பூஜை செய்வது, அவருக்காகப் பலவித தொண்டுகளைச் செய்வது ஆகிய இவை அனைத்துமே பக்தியாகும். பகவானுடைய திருநாமங்களை உச்சரிக்கும்போது எவன் ஒருவனுக்குத் தேகம் புளகாங்கிதம் அடைகிறதோ அவனே சிறந்த பக்தனாவான். பகவானிடம் பக்தி கொண்டவர்கள் பிற பக்தர்களிடம் பொறாமை கொள்ளலாகாது. ஒரு தேவதையிடம் பக்தி கொண்டு அதை ஆராதித்து வருபவன் மற்றொரு தேவதையைப் பூஜிப்பது உகந்தது அல்ல. நடக்கும் போதும், நிற்கும் போதும், படுக்கும் போதும், உட்காரும் போதும், மற்ற காரியங்களைச் செய்யும் போதும் ஏன், கண்களைக் கொட்டும் போதும் சூரியனை மனத்திலே தியானிப்பவனே உத்தமமான பக்தன் ஆவான். பக்தியோடும் சுத்தத்தோடும் செய்யப்படும் எந்தப் பூஜையையும் தானத்தையும் பிதுருக்களும், தேவர்களும் அன்போடு ஏற்றுக் கொள்ளுகிறார்கள். பக்தியுடன் படைக்கப்படும் பழம் முதலான வஸ்துக்கள் மிகச் சாதாரணமாக இருந்தாலும் அவர்கள் உயர்ந்ததாகவே அவற்றை ஏற்றுக் கொள்ளுகிறார்கள். பக்தி இல்லாமல் ஒருவன் எத்தனை உயர்ந்த வஸ்துவை அளித்தாலும், தேவதைகளும் பிதுருக்களும் ஏற்க மாட்டார்கள். மனச் சுத்தியோடு செய்யப்படும் கர்மாக்கள் தான் முழுப் பலனையும் தரக் கூடியவை.

ஷஷ்டி தினம் மிகவும் விசேஷமானதாகச் சொல்லப்பட்டுள்ளது. அன்று உபவாசமிருந்து சிரத்தையோடு ஜபம், தவம், ஹோமம் முதலானவற்றைச் செய்தால் எல்லாப்பாபங்களும் நீங்கியவர் களாவார்கள். ஷஷ்டி அன்றும் சப்தமி அன்றும் ஒரு வேளை மட்டுமே ஆகாரம் உட்கொண்டு மறு வேளை உபவாசமிருந்து சூரியனை ஆராதிப்பவர் அசுவமேத யாகம் செய்த பலனை அடைவர். இந்த இரண்டு நாட்களிலுமே பூரண உபவாசமிருந்து பகலிலும் இரவிலும் சூரியனைத் தியானித்து பூஜை செய்பவர் சூரிய லோகத்தை அடைவர். இரண்டு ஆண்டுகளுக்கு இவ்விதம் விரதம் இருப்பவருடைய மகிமையை எவ்வளவோ சொல்லலாம் அவர்களுக்குக் கிட்டாத செல்வமே இருக்காது. பூமியில் தலை நன்றாகப்படும்படி நமஸ்காரம் செய்ய வேண்டும். அவ்விதம் செய்வதால் ஒருவன் தான் செய்த பாபங்களிலிருந்து விடுபடுகிறான். மாசிமாத சுக்கில சப்தமிக்கு விஜயா என்று பெயர். அன்று செய்யப்படும் புண்ணிய ஸ்நானம், தானம், ஜபம், ஹோமம், உபவாசம் ஆகிய அனைத்தும் மகா பாதகங்களையெல்லாம் போக்கும் சக்தி உடையவை. பாபங்களைப் போக்குவது மட்டுமல்ல. அவர்கள் கோரும் இஷ்டங்களையும் நிறைவேற்றி வைக்கும். சூரியனை ஆராதிப்பவன் குலத்தில் எவருமே தரித்திரராக ஆகமாட்டார்கள். குறையாத செல்வம் அவர்களை வந்து அடையும். சூரியனுடைய சன்னதியில் நெய்யிலோ எண்ணெயாலோ தீபம் ஏற்றவேண்டும். அவ்விதம் தீபம் ஏற்றுபவன் நீண்ட ஆயுளை உடையவராகவும், சிறந்த மேனியை உடையவராகவும் விளங்குவார். தீபதானம் மிகவும் விசேஷமானதாகும். தீபதானம் செய்பவனுடைய அக்ஞானமாகிய இருள் நீங்கி அவனிடம் ஞான ஒளி பிரகாசிக்கும். மற்றும் புத்தி, இந்திரியங்களான கண், மூக்கு, காது, நாக்கு, தோல் ஆகியவை எப்போதும் உணர்வு மங்காமல் விளங்கும். தீபத்தை எரிய விட்டால் சுடர் மேல் நோக்கியே எரியும். அது போலவே தீபதானம் செய்பவன் எப்போதும் மேல் நோக்கிய நிலையிலேயே இருப்பான். அவன் புகழ் எப்போதும் ஓங்கியே இருக்கும். அவன் ஒருபோதும் கீழான நிலையை அடைய மாட்டான். எரியும் தீபத்தை வேறு இடத்துக்கு எடுத்துச் செல்வது கூடாது. அதேபோல எரிந்து கொண்டிருக்கிற தீபத்தை அணைக்கவும் கூடாது. தீபத்தைத் திருடுபவன் அனேக பிறவிகளில் குருடனாகவே பிறந்து கஷ்டப்படுவான்.

சூரியனுக்கு ரத்த நிறமான சந்தனம் புஷ்பங்களால் அர்க்கியம் கொடுப்பவன் கோரிய விருப்பங்களை ஒரு வருடத்துக்குள்ளாக அடைவான். ஆதித்திய விரதம் மகாபாதகங்களையும் போக்கக் கூடியதாகும். காலை முதல் மாலை வரை சூரியனுக்கு எதிர்முகமாக அமர்ந்து சூரிய மந்திரத்தை ஜபம் செய்வது ஆதித்திய விரதமாகும். அர்க்கியத்துக்குப் பிறகு கன்றுடன் கூடிய பசுவைக் கொண்டு வந்து தானம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்பவன் சூரியலோகத்தை அடைவான். அர்க்கிய ஜலத்தைக் கண்ட இடங்களில் விடக்கூடாது. அக்கினியிலோ, ஜலத்திலோ சுத்தமான இடத்திலோ அதைக் கீழே விடவேண்டும். அக்கினிக்கு வலப் பக்கமாகவோ இடப் புறமாகவோ அர்க்கியம் விடக்கூடாது. தக்ஷிணாயண, உத்தராயண, புண்ணிய காலங்கள் ஆகியவற்றின் போது பக்தியோடு சூரியனைப் பூஜிப்பவருக்கு ஒரு போதும் அழிவு என்பதில்லை. அவர்கள் தொட்ட காரியமெல்லாம் வளர்ந்து பலனைத் தரும். சூரிய பூஜைக்குப் பிறகு அவரைக் குறித்து தர்ப்பணம் செய்யவேண்டும். நெய்யினால் தர்ப்பணம் செய்தால் நினைத்த காரியம் உடனே பூரணமாகும். பாலினால் தர்ப்பணம் செய்தால் மனத்திலுள்ள தாபங்கள் நீங்கிவிடும். தயிரினால் தர்ப்பணம் செய்தால் எடுத்த காரியம் கைகூடும். தேனைக் கொண்டு தர்ப்பணம் செய்தால் ஓர் ஆண்டிற்குள்ளாக விரும்பிய பயனை அடைவான். சூரிய பூஜைக்கான திரவியங்களும், குடை முதலான சாமான்களும் எவர் சேகரித்துத் தருகின்றாரோ அவர் செல்வம் பல மடங்கு விருத்தியாகும். அவருக்குச் சத்துரு பயம் என்பதே இல்லை. சூரியனுக்குப் பக்தியோடு செய்யும் ஒரு நமஸ்காரம் அனேக மடங்கு பலன்களைத் தரும். மனத்தாலும், வாக்காலும், உடலாலும் செய்த பாபங்கள் அனைத்தும் சூரியனுக்குச் செய்யும் நமஸ்காரத்தால் நீங்கி விடும். சாதாரணமாக ஆயிரம் பூஜைகள் செய்வதை விட பகவானுக்கு பக்தியோடும் நியாயத்தோடும் அவசரப்படாது ஒரு பூஜை செய்தாலே போதும். அவன் சகல தோஷங்களிலிருந்து நீங்கியவனாய் பரிசுத்தனாக ஆகிறான்.

25. ஆலயப் பிரதிஷ்டையும் ஹோமமும்

வசிஷ்டர் பிருகத்பலனுக்கு மேலும் சூரியனுடைய பூஜை பற்றிக் கூறலானார். க முதல் க்ஷ வரை உள்ள ஒவ்வொரு எழுத்தும் சூரிய மந்திரமாகும். சூரியனுக்கும் மற்றுமுள்ள ஆவரண தேவதைகளுக்கும் விதிப்படி மந்திரங்களைக் கூறி ஹோமம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்பவனுக்கு சூரிய லோக வாசம் ஏற்படும். புண்ணிய ÷க்ஷத்திரங்களிலும், புண்ணிய நதிகளிலும் நீராடிய பலன் அவனுக்குக் கிட்டும். சூரியமனுக்காக ஆலயம் எழுப்பத் தீர்மானம் செய்யப்பட்டுள்ள இடத்தில் முதலில் விதிப்படி பூமியை உழவேண்டும். அத்தி மரத்தால் செய்யப்பட்ட கலப்பையின் நுனியில் தங்கத்தை வைத்துப் பூமியை உழவேண்டும். பிறகு அந்த இடத்தில் சுண்ணாம்பினால் பூசி பஞ்சகவ்யத்தாலும் சிகப்புச் சந்தனத்தாலும் மேலே பூசவேண்டும். அந்த இடம் மிகவும் பரிசுத்தமானதாக இருக்க வேண்டும். அது அசுத்தமாக்கப்பட்டாலோ, பூமியில் வெடிப்பு ஏற்பட்டாலோ அல்லது ஒரு பக்கம் பள்ளமாக இருந்தாலோ, நாட்டில் வறுமை உண்டாகும். ஒரு பக்கம் மேடாகவோ, பொந்துகள் உள்ளதாகவோ இருந்தால் உலகுக்கு ஆகாது. அந்தப் பிரதேசத்தை பரிசுத்தமானவர்களைக் கொண்டும் சாதுக்களைக் கொண்டும் பாதுகாத்து வரவேண்டும். ஆலயம் எடுக்கப்படும் இடத்துக்கு வடப்புறத்தில் குருவுக்காக ஒரு கிருகம் அமைத்துத் தரவேண்டும். அவரைக் கொண்டே எல்லாக் காரியங்களையும் நடத்த வேண்டும். எடுத்த காரியம் நடுவில் தடைபடக்கூடாது. ஆகவே தேவைப்படும் பொருள்கள் அனைத்தையும் சேகரித்துக் கொண்டே குருவை அழைத்து வரவேண்டும். புனித காரியத்தைத் தொடங்க இருக்கும் குரு சாதாரணமானவராக இருக்கக் கூடாது. நற்குலத்தில் பிறந்தவராகவும், வேதங்களையும் வேதாங்கங்களையும் நன்கு கற்று உணர்ந்தவராகவும் தான் கற்ற வித்தையை முறைப்படி கடைப்பிடிப்பவராகவும், தேவப்பிராம்மணர்களைப் பூசிப்பவனாகவும், தர்ம மார்க்கத்தை ஒழுங்காகக் கடைப்பிடிப்பவனாகவும் இருக்கவேண்டும்.

கர்த்தாவாகிய சிஷ்யனும் குருவைப் போலவே சிறந்த ஒழுக்கங்களை உடையவனாக இருக்கவேண்டும். உயர் குலத்தில் பிறந்தவனாகவும், தர்மத்தில் ஈடுபாடு உள்ளவனாகவும் குருவினுடைய காரியங்களில் ஈடுபட பக்தியால் தூண்டப்பட்டவனாகவும் அவன் இருக்க வேண்டும். இந்தவாறாகக் குருவும் கர்த்தாவாகிய சிஷ்யனும் சேர்ந்தால் நாட்டுக்கு நன்மை உண்டாகும். குடிமக்களுக்குப் பலவித நன்மைகள் ஏற்படும். உபத்திரவங்கள் ஏதும் இல்லாதவர்களாய் இருப்பார்கள். கன்னிப்பெண் ஒருத்தியால் தயாரிக்கப்பட்டு மூன்றாக மடிக்கப்பட்ட நூல் அல்லது எருக்கஞ்செடியின் நாரினால் தயாரிக்கப்பட்ட கயிறு கொண்டு சூத்திரம் செய்து, தங்கம் அல்லது தாம்பிரத்தால் செய்யப்பட்ட பாத்திரத்தில் வைத்து அதன் மீது சுத்த நீரை விடவேண்டும். பின்னர் அந்த நீரைக் கொண்டு ஆலயப் பிரதிஷ்டைக்கான பூமியையும் ஹோமம் மற்றும் பூஜைக்காகச் சேமிக்கப்பட்டுள்ள திரவியங்களையும் மந்திரம் சொல்லித் தெளித்துச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். சூரியனை ஆவாகனம் செய்து தூபம் முதலான உபசாரங்களால் பூஜிக்க வேண்டும். அவ்விதமே மற்ற தேவதைகளையும் ஆவாகனம் செய்து மந்திர பூர்வமாக அர்க்கியம் முதலான கொடுத்துப் பூஜிக்க வேண்டும். காயத்திரி மந்திரங்களால் அந்த அந்த தேவதைகளுக்கு மண்டலம் எழுதி ஆவாகனம் செய்யவேண்டும். அதன் பின்னர் விதிப்படி அக்கினியை வளர்த்து ஆதித்திய மந்திரங்களைச் சொல்லி ஹோமம் செய்ய வேண்டும். இரவு குருவும் சிஷ்யனும் அதன் அருகில் கண் விழித்து அமர்ந்திருக்க வேண்டும். காலையில் மீண்டும் ஒரு முறை மந்திரங்களால் மண்டலங்களை எழுதி அ முதல் க்ஷ வரையிலுள்ள எழுத்துக்களால் அதில் நியாஸம் செய்யவேண்டும். அந்தந்த எழுத்துக்களைக் கூறி அந்தந்த இடத்தைத் தொடுவதே நியாஸம் எனப்படும். நியாஸம் செய்வதால் தேவதாமயமாகச் செய்யப்படுகிறது. நாம் ஜபம் செய்யத் தொடங்கும் முன்பு நம் தேகத்திலும் அவ்விதம் நியாஸம் செய்து கொள்ள வேண்டும். நம் தேகத்தைத் தேவதாமயமாகச் செய்துகொண்ட பின்னரே ஜபம் செய்வதும், பூமியில் பிரதிஷ்டை செய்வதும் முறையாகும்.

26. மித்திர வனத்தில் சூரிய பிரதிஷ்டை

சூரியனுடைய அனுக்கிரகம் பெற்ற சாம்பன் அவரை ஆராதிப்பதற்காக அவரால் கொடுக்கப்பட்ட பிரதிமையைப் பிரதிஷ்டை செய்யப்போகிறான் என்ற செய்தியை அறிந்ததும் கந்தருவரும், கின்னரரும், யக்ஷரும், குஹ்யகர்களும் அங்கே வந்து கூடினர். அந்தப் பிரதேசத்தில் தவம் செய்து கொண்டிருந்த மகரிஷிகள் பலரும் அந்த மகோத்ஸவத்தைக் காண அங்கே வந்து சேர்ந்தனர். கடுமையான விரத நியமங்களை உடையவரும், நித்திய உபவாசத்தை உடையவரும், மாச உபவாசத்தை உடையவரும் அந்த வனத்திலே வந்து கூடினர். உத்தமர்களான அவர்களுடைய வருகையால் மிகவும் ரம்மியமாக அந்த வனம் விளங்கியது. வனத்திலே சஞ்சரிக்கும் பிராணிகள் மகிழ்ச்சி நிறைந்தவைகளாய் சஞ்சாரம் செய்தன. மலர்ச் செடிகள் பூத்துக் குலுங்கின. தபஸ்விகளுக்கு அந்த இடத்தில் வேண்டிய சவுகரியங்கள் குறையாது இருந்தன. அனைவரும் அளவற்ற மகிழ்ச்சியில் திளைத்து வந்தார்கள். பகவானுடைய அனுக்கிரகத்துக்குப் பாத்திரமான இடம் அல்லவா அது? அதன் மகிமையை எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துச் சொல்லலாம். சாம்பன் நாரத மகரிஷியை நமஸ்கரித்தான். மகரிஷே, தங்கள் ஆசீர்வாதத்தாலும் அன்பாலும் இன்று நான் மற்றவருக்குக் கிட்டாத பாக்கியத்தை அடைந்தவனாக இருக்கிறேன். பகவானைப் பற்றிய விபரங்களையும் என்மீது கருணை கொண்டு தாங்கள் தெரிவித்தீர்கள். நான் மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்பதைத் தாங்கள் கூறவேண்டும் என்று பிரார்த்தித்தான்.

சாம்பா, நீ பாக்கியசாலி என்பதில் சிறிதும் சந்தேகமே இல்லை. பகவானைப் பிரத்தியக்ஷமாகத் தரிசித்து அவருடைய அனுக் கிரகத்துக்குப் பாத்திரமாகியிருக்கும் உன் பெயர் பூவுலகிலே நீடித்து விளங்கப் போகிறது. உன் மூலம் மக்கள் கிடைத்தற்கரிய நன்மையை அடைந்திருக்கிறார்கள். அவர்களுடைய சவுக்கியத்துக்காக நீ பகவானிடம் அனுமதி பெற்று விரைவில் இந்தப் பிரதிமையைப் பிரதிஷ்டை செய் என்றார். நாரதர் பணித்தபடி சாம்பன் பகவானை நமஸ்கரித்து அவருடைய அனுமதியைக் கேட்டான். பக்தி மேலிட்டதாலும், தவத்தின் கடுமையாலும் இளைத்துப் பேசவும் சக்தியற்றவனாக இருக்கும் சாம்பனைப் பார்த்துப் பகவான் சொன்னார். சாம்பா, உன் பக்தியால் நான் மிகவும் திருப்தி அடைந்தவனாக இருக்கிறேன். உனக்கு வேண்டிய வரத்தைக் கேள் என்றார் பகவான். சாம்பன் அவருக்கு அஞ்சலி செய்து, பிரபோ, தங்களிடம் என்றென்றும் எனக்குப் பக்தி குன்றாதிருக்க அருள்புரிய வேண்டும். மேலும் உலகத்தோருடைய நன்மைக்காக இந்தப் பிரதிமையை இங்கே பிரதிஷ்டை செய்ய தாங்கள் மனமுவந்து அனுமதி தரவேண்டும் என்று வேண்டினான். சாம்பா, உன் விருப்பம் நிறைவேற அனுக்கிரகம் செய்கிறேன். உன்னால் நடத்தப்பட இருக்கும் இந்த மகோத்ஸவத்தைக் கண்டு களிக்க இந்தத் தபோவனர்கள் வந்து கூடியிருக்கிறார்கள். அவர்களை நமஸ்கரித்து அவர்கள் அனுமதி பெற்றுப் பிரதிஷ்டையைத் தொடங்கு என்றார் பகவான். சாம்பன் அங்கே குழுமியிருந்த மகரிஷிகளை நமஸ்கரித்து இரு கைகளையும் கூப்பியவனாய், உத்தம புருஷர்களே, தவவலிமையால் சிறந்த உங்கள் வருகையால் இந்தப் பிரதேசமும் நானும் பெருமையை அடைகிறோம். தாங்கள் மனமுவந்து பிரதிமையைப் பிரதிஷ்டை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று பிரார்த்தித்தான்.

பகவானுடைய அனுக்கிரகத்துக்குப் பாத்திரமான சாம்பன் மூலம் அந்த மகரிஷிகள் தங்கள் வெகுநாளைய விருப்பம் ஒன்றை நிறைவேற்றிக் கொள்ள எண்ணம் கொண்டனர். ஹே கிருஷ்ண புத்திரா, உலகத்தோருடைய நன்மைக்காக நீ நல்ல காரியத்தையே செய்கிறாய். உன் முயற்சியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஒரு நல்ல காரியத்தைத் தொடங்கும் முன்பு அங்குக் குழுமியிருக்கும் பெரியோர்களுடைய ஆசீர்வாதமும் அனுமதியும் பெற வேண்டும் என்ற சாஸ்திர நியதிக்கு ஏற்ப நீயும் எங்களை வேண்டுகிறாய். இந்தச் சமயத்தில் ஒரு விஷயத்தை நாங்கள் தெரிவிக்க விரும்புகிறோம். எங்கள் விஷயத்தில் நீ திருப்தியுள்ளவனாக இருப்பாயேயாகில் இந்த விருப்பத்தை நீ நிறைவேற்ற வேண்டும். பகவானுடைய அத்தியந்த பிரீதிக்கு ஆளான நீ அவரிடம் கேட்டு, எங்கள் விருப்பத்தை நிறைவேறுமாறு செய். நாங்கள் பிரஜாபதிகளாக விளங்க பகவானுடைய அனுக்கிரகத்தைப் பெற்றுத்தா. இவ்வாறு அந்த மகரிஷிகள் தங்கள் விருப்பத்தை வெளியிட்டதும் பகவான் அவர்களுக்கு அனுக்கிரகம் செய்தார். தவத்தால் தெளிந்த மனத்தை உடையவர்களே, உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன். நீங்கள் விரும்பியது போல் ஒவ்வொரு மன் வந்தரத்திலும் உங்களில் ஒருவர் மண்மனுவாக விளங்கிக் கீர்த்தியைப் பெறுவீர்கள். நீங்கள் இந்த வனத்திலே தங்கி இதன் மேன்மையை மேலும் விளங்கச் செய்யுங்கள். பகவானுடைய அனுக்கிரகம் பெற்ற மகரிஷிகள் சொல்லொணா ஆனந்தத்தை அடைந்தார்கள். மெய்சிலிர்க்க பகவானை நமஸ்கரித்து பிரபோ, எங்கள் மீது தங்கள் கருணாகடாக்ஷம் விழப்பெற்றது பற்றி நாங்கள் என்ன சொல்வது என்பதே தெரியாது ஆனந்தப் பரவசமாகி நிற்கிறோம். தயாநிதே. நாங்கள் இந்தப் புண்ணிய ஸ்தலத்தில் தங்கி தங்களை ஆராதித்து வருவோம். அதனால் இந்தப் பிரதேசத்தின் பெருமை உலகெங்கும் பரவட்டும் என்றார்கள். பின்னர் அவர்கள் சாம்பனுடன் பகவானுடைய பிரதிஷ்டையில் உற்சாகமாகக் கலந்து கொண்டனர். பகவானால் கிடைக்கச் செய்யப்பட்ட அந்தப் பிரதிமையின் தோற்றம் அவர்களைப் பெரிதும் கவர்ந்தது. சாம்பா, இந்த அரிய பிரதிமை எங்கிருந்து உனக்குக் கிடைத்தது? நாங்கள் அறிய ஆசைப்படுகிறோம் என்று சாம்பனைக் கேட்டார்கள். மகரிஷிகளே, இந்தப் பிரதிமை பகவான் சூரியனால் எனக்குக் கிடைக்கச் செய்யப்பட்டது. பகவானுக்கு கோயில் எடுப்பித்து அவரைப் பிரதிஷ்டை செய்ய வேண்டுமென்ற எண்ணத்தோடு சந்திரபாகா நதியிலே நீராட இறங்கியபோது, நீரிலே தெரிந்த பகவானுடைய பிம்பம் பிரதிமையாக மாறி எனக்குக் கிடைத்தது. இந்தப் பிரதிமை முன்னர் சாகத்வீபத்திலே இருந்ததாம். பகவானுடைய உக்கிரமான தேஜஸ்ஸைத் தாங்க முடியாது சகல லோகங்களும் தவித்தபோது விசுவகர்மா ஜீவராசிகளுடைய நன்மைக்காக அவருடைய தேஜஸ்ஸை சாணைக்கல்லிலே சாணைப்பிடித்து குறைத்தாராம். அவ்வமயம் சிதறிய பகவானுடைய அம்சத்தைக் கொண்டு இந்தப் பிரதிமை செய்யப்பட்டதாம். பகவான் எனக்காக இதைக் கிடைக்கச் செய்தார்.

சாம்பன் கூறிய விவரத்தைக் கேட்டு, மகரிஷிகள் மகிழ்ந்து அவனைப் பெரிதும் பாராட்டினர். அன்றிரவு முழுவதும் அவர்கள் பகவானுடைய கருணையை எண்ணி எண்ணி ஆனந்தப் பரவசமாக இருந்தனர். மறுநாள் காலைப் பொழுது புலர்ந்தது, அந்தப் பிரதேசம் முழுமையுமே தேவலோகம் போல் காட்சியளித்ததைக் கண்டு அனைவரும் மிகுந்த ஆச்சரியப்பட்டார்கள். தகதக வென்று சிவப்பு நிறத்தோடு பிரகாசிக்கும் சூரியன் பாதி நீரிலுள்ளும் மறுபாதி வெளியிலுமாக உதயமாகும் வைபவத்தைக் கண்டு அவர்கள் மேனி சிலிர்த்தனர். எங்கும் ஆனந்த வெள்ளம் பெருகி ஓடியது. மிகுந்த கோலாகலத்துக்கிடையே சாம்பன் பகவானுடைய பிரதிமையைப் பிரதிஷ்டை செய்தான். உத்தமமானவர்களும் தீøக்ஷ செய்து கொண்டவர்களுமான பெரியோர்கள் மூன்று இடங்களில் சூரியனைப் பிரதிஷ்டை செய்தார்கள். அனைவரும் சாம்பனைக் கொண்டாடினார்கள். அவன் செய்த உத்தமமான அந்தக் காரியத்தினால் மக்கள் நன்மை அடையப் போவதைக் குறித்து எல்லோரும் அவனைப் பாராட்டினார்கள். அந்தப் புண்ணிய காலத்தில் வைபாசம், ஸ்த்திரவம், யமுனா, கங்கா முதலான புண்ணியநதிகள் சந்திரபாகா நதியில் கலந்து அதன் மகிமையை மேலும் அதிகப்படுத்தின. அந்த இடம் மோதகங்கா என்ற பெயரில் சீரும் சிறப்பும் பெற்று விளங்கலாயிற்று. மித்திர வனமும் சந்திரபாகா நதி தீரமும் உலகத்தோரால் கொண்டாடப்பட்டன. அவற்றின் பெருமை நாற்புறமும் பரவ மக்கள் இந்த இடத்துக்கு வந்து குழுமி, பகவானைத் தரிசித்து அவரைப் பக்தியுடன் ஆராதித்து அளவற்ற நன்மைகளைப் பெற்றனர். அந்த மகரிஷிகள் காலக்கிரமத்தில் மனுக்களாகி தேவதைகளால் கொண்டாடப்பட்டார்கள். சந்திரபாகா நதி தீரத்தில் சாம்பனால் சூரியனுடைய திருவுருவம் பிரதிஷ்டை செய்யப்பட்ட அந்தப் பிரதேசம் மிகச் சிறந்த புண்ணிய ÷க்ஷத்திரமாக விளங்கி வருகிறது. அங்குச் சென்று ஆராதிக்கப்படும் எந்தக் கர்மாக்களும் பூரண சித்தியைத் தருகின்றன. அந்தப் புண்ணிய தீர்த்தத்தில் நீராடி பகவானைத் தரிசிப்பவன் எல்லாப் பாபங்களிலிருந்து விடுபட்டவனாகிறான். சூரியனுக்கு மிகவும் உகந்த ÷க்ஷத்திரமாக அது விளங்கி வருகிறது.

27. ஆசார விதிகள்

சாம்பன் நாரதரை நமஸ்காரம் செய்து கேட்டான். மகரிஷே, ஆசாரத்தை மிகவும் உயர்ந்ததாகக் கூறுகிறார்கள். அது தரித்திரத்தைப் போக்கி ஆயுளை விருத்தி செய்வதாகவும் சொல்லப்படுகிறது. பகவானிடம் பக்தி கொள்ள முதற் சாதனம் ஆசாரமே என்கிறார்கள். சூரிய பக்தன் எவ்வித ஆசாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்? அதைப்பற்றி எனக்கு விவரமாகக் கூறவேண்டும். இவ்விதம் அவன் கேட்டதும் நாரதர் மகிழ்ச்சி கொண்டு ஆசார நியமங்களை எடுத்துக் கூறலானார். ஆசாரம் தான் முதல் தர்மம். ஆசாரத்தால் ஒருவனுடைய ஆயுள் விருத்தியாகிறது. செல்வமும் கீர்த்தியும் அவனைத் தாமே வந்தடையும். அவனுக்குத் துன்பங்கள் ஏற்படாது. சிரத்தை இல்லாதவனும் நாஸ்திகனும் ஆன குருவிடம் சேரக்கூடாது. வேதங்களில் சொல்லப்பட்டவற்றில் நம்பிக்கை கொள்ள வேண்டும். குருவிடம் நம்பிக்கை, பெரியோர்களுடைய ஆசாரத்தை மீறாது நடத்தல், கோபம் இல்லாமை, உண்மையே பேசுவது, பிராணிகளிடத்திலும் மற்றவர்களிடத்திலும் அகிம்சையுடன் நடந்து கொள்வது, அசூயை இல்லாதிருப்பது, கபட மில்லாதிருப்பது, சுத்தமாய் இருப்பது, பலவிதமாகப் பேசாமலிருப்பது, சோம்பல் இல்லாமலிருப்பது ஆகிய இந்தக் காரியங்கள் ஆசாரத்தில் முக்கியமாகச் சொல்லப்பட்டுள்ளன. காரணமில்லாமல் மண் கட்டிகளையோ, கல்லையோ உடைப்பது, புற்களைக் கிள்ளுவது, நகத்தைக் கிள்ளுவது, எச்சில் செய்வது ஆகிய காரியங்கள் கூடாது. ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும். அதைப் பிரம்ம முகூர்த்தம் என்பர். எழுந்திருக்கும்போதே மனத்தில் தர்ம சிந்தனை மேலோங்கியிருக்க வேண்டும்.

காலையில் எழுந்ததும் நீராடி சந்தியாவந்தனம் செய்யவேண்டும். உதயமாகும் சூரியனையும், அஸ்தமிக்கும் சூரியனையும் கிரகண காலத்தில் பீடித்திருக்கும்போதும் பார்க்கக் கூடாது. சூரியனை ஜலத்திலே பார்ப்பதும் கூடாது. அயலார் மனைவியை விருப்பத்தோடு பார்க்கக்கூடாது. தலை வாரிக் கொள்ளுதல், பல் தேய்த்தல் காலையிலேயே வைத்துக் கொள்ள வேண்டும். பகல் வேளையில் அந்தக் காரியங்கள் செய்யக்கூடாது. ஜலமலங்களைப் பார்க்கக்கூடாது. வீட்டுக்கு விலக்கான பெண்களுடன் பேசக்கூடாது. காலை வேளையில் வீட்டை விட்டு வெகுதூரத்தில் சென்று மலத்தைக் கழிக்க வேண்டும். ஜலத்திலும், சாம்பலிலும், உழுத நிலத்திலும் மலஜலம் கழிக்கக்கூடாது. பசு, ஆலயம், சூரியன், ஸாது, அரசமரம் ஆகியோர் முன்னிலையில் மலஜலம் கழிப்பதும் கூடாது. சாப்பாட்டிற்குப் பின் சுத்தமான ஜலத்தால் ஆசமனம் செய்து கண், காது, மூக்கு, வாய் ஆகியவற்றைத் துடைக்க வேண்டும். உமி, மாவு, மயிர், சாம்பல், கம்பளி, எரும்பு, வியர்வை ஆகியவற்றால் உடல் அசுத்தமடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சாந்தி ஹோமங்கள் செய்யவேண்டும். தூங்குபவனை எழுப்பக்கூடாது. போகிறவனையும் கூப்பிடக்கூடாது. பெரியோர்களைக் கண்டால் எழுந்து வரவேற்று ஆசனம் தரவேண்டும். போகிறவர்களைப் பின் தொடர்ந்து செல்ல வேண்டும். தூங்குபவனுக்கும் நடப்பவனுக்கும் நமஸ்காரம் செய்யக்கூடாது. ஈரக்காலுடன் படுக்கக்கூடாது. கால் அலம்பாது உணவு உட்கொள்ளக் கூடாது. உடைந்து போன பாத்திரத்தை உணவுக்காக உபயோகப்படுத்தக் கூடாது. அதேபோல உடைந்த ஆசனத்தில் உட்காரவும் கூடாது. ஒரு வஸ்திரத்தை மட்டும் உடுத்திக்கொண்டு சாப்பிடக்கூடாது. உடம்பிலே துணியில்லாமல் நீராடக் கூடாது. ஆடையில்லாமல் படுத்து உறங்குவதும் கூடாது.

ஒரு கை எச்சிலாக இருக்கும்போது மற்றொரு கையால் தலையைச் சொரிதல் கூடாது. தலைமயிரை விரித்துப்போட்டுக் கொண்டிருக்கக் கூடாது. தலைமயிரை அவிழ்த்துவிட்டு இரு கைகளாலும் தட்டிவிடக்கூடாது. அடிக்கடி தலைமுழுகக் கூடாது. தலையிலே தேய்க்கப்பட்ட எண்ணெயை வழித்து உடலின் மற்ற அவயவங்களில் தேய்க்கக் கூடாது. நெய்யையும் தேனையும் ஒன்றாகச் சாப்பிடக்கூடாது. எள்ளு, பயறு இரண்டையும் தனியே சாப்பிடுதல் கூடாது. வெல்லத்துடனோ சர்க்கரையுடனோ கலந்து சாப்பிட வேண்டும். எச்சில் கையோடு வேதங்களைச் சொல்லக்கூடாது. எச்சிலுடன் அத்தியயனம் செய்வதும் கூடாது. அவ்வாறு செய்தால் ஆயுள் குறையும். எச்சிலுடன் வேதம் கற்பவனுக்கும், வேதம் கற்றுக்கொடுப்பவனுக்கும் பிள்ளை பிறக்காது. பகலிலும் மாலையிலும் இரவிலும் தெற்கு முகமாகவோ வடக்கு முகமாகவோ உட்கார்ந்து மலஜலங்களைக் கழிக்க வேண்டும். இரவிலே புல் நிறைந்த இடத்தில் மலம் கழிக்க வேண்டும். எவரையும் அவமதிக்கக் கூடாது. பிராம்மணர், க்ஷத்திரியர், சர்ப்பம் ஆகியோரை முக்கியமாக அவமதிக்கக் கூடாது. பொய் சொல்லுதல், அசத்தியம் செய்தல் இவை ஒருபோதும் கூடாது. குருவிடம் பொய் சொல்லக் கூடாது. அவரை நிந்தித்துப் பேசக்கூடாது. பிறர் யாராவது குருவை நிந்தித்துப் பேசுவதைக் கேட்க நேரிட்டால் இரு காதுகளையும் பொத்திக் கொண்டு அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும். அங்கே நின்று கொண்டு அந்த வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது. சிறுநீர் கழித்த பின்னர் கைகால்களைச் சுத்தம் செய்து கொண்டு ஆசமனம் செய்யவேண்டும். அதிகாலையிலோ, மாலையிலோ, நடுப்பகலிலும் நள்ளிரவிலும் பிரயாணம் செய்வது கூடாது. பிரயாணம் செய்யும் போது தனியே செல்வதும் கூடாது. நடந்து செல்லும் போது பாதையில் பசு, பிராம்மணன், அரசன், வயதானவர்கள், பாரம் சுமந்து வருபவர், கர்ப்பிணி, சக்தியற்றவர் ஆகியோர் எதிர்ப்பட்டால் அவர்களுக்கு விலகி முதலில் போக வழிவிட வேண்டும். ஒருவர் உடுத்திக் கழித்த ஆடையை மற்றவர் உடுத்துவது கூடாது. அந்த ஆடையைக் காலால் மிதிப்பதும் கூடாது. அஷ்டமி, சதுர்தசி, பவுர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களில் மனைவியுடன் கூடாமல் பிரம்மசாரியாக இருக்கவேண்டும். அந்த நாட்களில் எண்ணெய் தேய்த்துக் கொள்வதோ, க்ஷவரம் செய்து கொள்வதோ கூடாது.

கோபத்தோடு பேசுவது, பிறர் மீது அபவாதம் கூறுவது, பிறரைப் பற்றிக் கோள் சொல்லுவது, கொடூரமாக இருப்பது, மற்றவர் மனம் புண்படும்படி பேசுவது ஆகியவற்றை விட்டு விடவேண்டும். ஈனனிடமிருந்து, உயர்ந்த பொருளாக இருந்தாலும் வாங்கக்கூடாது. ஈனன், மேலானவன், அங்கம் குறைந்தவன், க்ஞாதி, பாபி, வெறுக்கத்தக்கவன் ஆகியோர்களாக இருந்தாலும் அவர்களை மிரட்டிப் பேசக்கூடாது. நாஸ்திக வாதம், வேதங்களை நிந்தித்து பேசுவது, ஜம்பமாகப் பேசுவது, கர்வத்தோடு நடப்பது, உக்கிரமாய் இருப்பது, துவேஷத்தோடு நடந்துகொள்வது ஆகியவற்றை கடைப்பிடிக்கக் கூடாது. மனைவி, பிள்ளை, வேலைக்காரன், வேலைக்காரி, சிஷ்யன், சகோதரன் ஆகியவர்களைத் தவிர மற்றவர்கள் விஷயத்தில் கோபம் வந்தாலும் அடிக்கக்கூடாது. பிராமணர்கள் மீது அபவாதம் சொல்லக்கூடாது. திதி, வாரம், நக்ஷத்திரங்கள் முதலானவற்றின் விஷயத்தில் பரீøக்ஷ பார்ப்பது கூடாது. ஜலமலம் கழித்த பின்னும் வெளியே சென்று விட்டு வந்த போதும் கைகால்களை அலம்பிச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பாயசம், பக்ஷணம் முதலானவற்றை நாம் சாப்பிடுவதற்காக மட்டுமே தயாரித்துக் கொள்ளக் கூடாது. தினந்தோறும் அக்கினி பூஜை செய்து வரவேண்டும். பிரம்மசாரிகளுக்கும் துறவிகளுக்கும் பிøக்ஷ அளித்துப் பின்னரே சாப்பிடவேண்டும். பல் தேய்க்கும்போது கிழக்கு முகமாக அமர்ந்து பேசாமல் பல் தேய்க்க வேண்டும். விடியற்காலையில் எழுந்திருந்ததும் முதலில் மாதா பிதாவையும் குருவையும் நமஸ்காரம் செய்யவேண்டும். பல் தேய்க்காமல் பகவானுடைய பூஜை சம்பந்தமான காரியங்களில் இறங்காதே. பூஜை செய்யவேண்டிய இடத்தை மெழுகுவதோ, திரவியங்களை எடுத்து வைப்பதோ, புஷ்பம் பறிப்பதோ ஆகிய எந்தக் காரியமும் பல் தேய்த்த பின்னரே மேற்கொள்ள வேண்டும். குரு, தார்மிகர், வயோதிகர் ஆகியோருடன் பேசிக் கொண்டிருக்கும்போது கவனத்தை வேறு பக்கம் திருப்பாதே. அது அவர்களை அவமதிப்பதற்கு ஒப்பாகும்.

வடக்குப் பக்கமாகத் தலைவைத்துப் படுத்தல் கூடாது. உடைந்த கட்டிலில் சயனிப்பது கூடாது. ஆசனத்தைக் காலால் இழுத்துப்போட்டுக் கொண்டு அதில் உட்காரக் கூடாது. பூமியில் அசுத்தமோ, ஈரமோ, இருக்குமானால் அதைக் காலால் துடைத்துவிட்டு உட்காரக் கூடாது. தினமும் சூரியனுக்குப் பூஜை செய்து அவருடைய கதையைக் கேட்கவேண்டும். நாள்தோறும் ஒரு பிராமணனுக்கு அன்னமிட வேண்டும். முக்கியமாக புராணம் சொல்பவனுக்கு அன்னமளிப்பது விசேஷமானதாகும். இரவு நேரத்தில் நீராடக்கூடாது. நீராடிய பின்னர் மீண்டும் உடம்பைத் தேய்க்கக்கூடாது. ஈரம் போகத் தேகத்தைத் துடைக்க வேண்டும். நீராடியபின் ஈர வஸ்திரத்துடன் இருக்கக்கூடாது. உலர்ந்த ஆடையை உடுத்த வேண்டும். ஈரவஸ்திரத்தை உதறக்கூடாது. மாலையைப் பூமியிலே வைக்கக்கூடாது. தலையில் மலரைச் சூடும்போது கேசத்துக்குமேல் அலங்காரமாகத் தெரியுமாறு சூடக்கூடாது. சிவந்த மலரைச் சூடக்கூடாது. வெண்மையான மலர்களை அணிந்து கொள்ள வேண்டும். தாமரை மலரையும் கேசத்திலே சூடிக்கொள்ளக் கூடாது. மற்றவர் சூடிய புஷ்பம், உடுத்திய ஆடை, அணிந்த காலணி ஆகியவற்றை உபயோகிக்கக் கூடாது. வசதி படைத்தவன் நல்ல வஸ்திரத்தையே உடுத்தவேண்டும். அவன் கிழிந்த ஆடைகளை உடுத்தக்கூடாது. பிறர் உபயோகித்த படுக்கையில் சயனிக்கக் கூடாது. பிறருடைய திரவியங்களைக் கொண்டு தேவதையை ஆராதிக்கக்கூடாது. பிற தேவதையையும் ஆராதிக்கக்கூடாது. புழு, மயிருள்ள அன்னத்தை உட்கொள்ளக் கூடாது. அத்திக்காய் சாப்பிடுவதற்கு ஏற்றதல்ல. அதை ஒதுக்கவேண்டும். ஆடு, மயில் உலர்ந்துபோன, பழைய மாமிசங்களையும் விலக்க வேண்டும்.

உப்பைக் கையால் எடுத்துப் போடக்கூடாது. நாய் முகர்ந்த உணவை புசிக்கக்கூடாது. குழந்தைகள் கையால் அளைந்த உணவும் சாப்பிடுவதற்கு ஏற்றதல்ல. இரவிலே மாவையும், தயிரையும் சாப்பிடக்கூடாது. காலை மாலை தவிர மத்தியான்ன சமயத்தில் போஜனம் கூடாது. அதாவது ஒரு நாளைக்கு இரண்டு வேளைக்கு மேல் சாப்பிடக்கூடாது. படுத்துக் கொண்டு பேசக் கூடாது. படுக்கப்போய் விட்டால் பேசுவது கூடாது. உடலில் துணியில்லாமல் படுக்கக் கூடாது. நாம் சாப்பிட்டு மிகுந்ததை அதிதிக்குப் போடக்கூடாது. அதிதிக்கு முதலில் உணவளித்துப் பின்னரே நாம் சாப்பிட வேண்டும். ஒரே பந்தியில் அமர்ந்திருப்பவர்களுக்குத் தயிர், தேன், மாவு, பாயசம் ஆகியவற்றைப் பரிமாறும்போது சேஷம் என்பது ஏற்படாது. சாப்பாட்டுக்குப்பின் தயிரைக் குடிக்கக்கூடாது. மோர் அருந்தலாம். சாப்பிட்ட பின் கையலம்பி வலது காலின் கட்டைவிரலில் ஜலத்தை விட்டுப் பின்னர் கால்களை அலம்ப வேண்டும். தலையிலே கையை வைத்துக் கொண்டு உட்காரக் கூடாது. எரிந்து கொண்டிருக்கும் தணலைக் கையால் தொடுவது கூடாது. நெய்யை இடக் கையால் பரிமாறக் கூடாது. ஈரக்கையோடும் நெய் பரிமாறுதல் கூடாது. பதிதர்களுடைய பேச்சைக் கேட்பது, அவர்களுடன் சேருதல் கூடாது. பிறரைப்பற்றி அபவாதம் பேசுவதோ பிறருக்குக் கோபம் வரும்படி பேசுவதோ கூடாது. பகலில் இன்பம் நுகரக் கூடாது. கன்னிப்பெண், தாசி, முன்பின் தெரியாதவள், கர்ப்பிணி, அங்கஹீனம் உள்ளவள், வயதான ஸ்திரீ, விதவை, மேல்குலத்துப் பெண், தாழ்ந்த குலத்து மங்கை, நோய் உள்ளவள், தகாத ஸ்திரீ ஆகியவர்களுடன் ஒரு போதும் இன்பம் நுகரக்கூடாது. அரச குலத்து ஸ்திரீ, வைத்தியர் மனைவி, உன்னையே சரணமென்று அடைந்தவள், சம்மந்தி, பிராம்மணி, மலட்டு ஸ்திரீ, நண்பனுடைய மனைவி ஆகியவர்களையும் விலக்கவேண்டும். காறித் துப்பக்கூடாது. துப்பினாலும் தும்மினாலும் ஆசமனம் செய்து சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். வயதானவர், வேறுகதி இல்லாதவர், களைத்துப் போனவர், நண்பர் ஆகியோருக்கும் கிளி, குருவி, புறா, வவ்வால் முதலியவற்றுக்கும் வீட்டிலே இடம் தரவேண்டும். சந்தியா காலத்தில் சாப்பிடக் கூடாது.

இரவு நேரத்தில் சிரார்த்தம் செய்யக் கூடாது. அலங்காரம் செய்வது தகாது. சாமான்களை விற்பதோ வாங்குவதோ இரவு நேரத்தில் கூடாது. பிதுருக்களுடைய தினத்திலும், பிறந்த நக்ஷத்திரத்திலும் மற்றும் புண்ணிய காலங்களிலும் தலை முழுக வேண்டும். சந்தியா காலத்தில் பிரேத கர்மாக்களைச் செய்யக்கூடாது. ஸந்தியா காலம் இன்பம் நுகர ஏற்ற சமயமல்ல. மனைவி விரும்பினாலும் அதற்கு இடம் கொடுக்கக்கூடாது. பகல் நேரத்தில் தூங்கக் கூடாது. இரவு வேளையில் தனியே பிரயாணம் கூடாது. மாலை நேரத்தில் வீட்டில் இருக்கவேண்டும். பெற்றோர்கள் சொல்வது மனத்துக்குப் பிடிக்காமலிருந்தாலும் கூட அதை நிறைவேற்ற வேண்டும். வில்வித்தை, யானை, குதிரை, எருது ஆகியவற்றின் விஷயத்திலும் இரதத்தில் ஏறுவதிலும் மிகுந்த ஜாக்கிரதை அவசியம். தர்க்கம், வியாகரணம், புராணம், இதிகாசம், மகாத்மியம், சரித்திரங்கள் ஆகியவற்றைக் கற்க வேண்டும். சப்தமியில் ஆதித்திய விரதம் இருக்க வேண்டும். பசுவைக் காலால் உதைக்கக் கூடாது. அதன்மீது கால் படவும் கூடாது. பசுவைக் கட்டியிருக்கும் கயிற்றைத் தாண்டவும் கூடாது. நம்பிக்கைத் துரோகம் ஒரு போதும் செய்யக்கூடாது. மகாத்மாக்கள், பசு, பிராம்மணன், ஸ்திரீ ஆகியோரிடம் உன் வலிமையைக் காட்டக்கூடாது. ஒருவர் செய்த நன்றியை எந்நாளும் மறக்காமல் இருக்க வேண்டும். ருசியான பலகாரங்களை உனக்கென்று செய்து தனியாகப் புசிக்கக் கூடாது. பெண்கள் மூலமோ, அல்லது அவர்களைச் சேர்ந்தவர்கள் மூலமோ ஜீவனம் செய்வது கூடாது. உன்னை நிந்திப்பவனை வெறுக்காதே. அவனுக்குச் சமமான நண்பன் வேறு இல்லை. ஏனெனில் உன்னை நிந்திப்பதால் அவன் தன்னுடைய புண்ணியங்களை உனக்குத் தந்துவிட்டு உன்னுடைய பாபங்களை எடுத்துக் கொள்ளுகிறான். எந்தச் சமயத்திலும் யாருக்கும் எதிராக பொய் சாக்ஷி சொல்லக்கூடாது. உன்னை நம்பிச் சரணமடைந்தவனை ஒருபோதும் கைவிட்டு விடக்கூடாது. நீ செய்த தானங்களைப் பற்றிப் பெருமையுடன் கூறிக் கொள்வது சரியல்ல. கன்றுக்கு வயிறு நிரம்பப் பாலை விட்டபின்னரே பசுவைக் கறக்க வேண்டும். பசுவுக்கும் கன்றுக்கும் புஷ்டியான ஆகாரத்தைக் கொடுக்கவேண்டும். வீட்டுக்கு விலக்கான மனைவியோடு சேரக்கூடாது. அவளுடன் பேசவும் கூடாது. விலக்கு நாட்கள் சென்ற பின்னர் குளித்து வந்த மனைவியுடன் பதினாறு நாட்களுக்குச் சேரலாம். பிள்ளை வேண்டுமென்றால் இரட்டைப்படை நாட்களில் சேர வேண்டும். பெண் வேண்டுமானால் ஒற்றப்படை நாட்களில் சேர வேண்டும். அக்கினியில் அசுத்தமானப் பொருள்களைப் போடக் கூடாது. கையால் அக்கினியை விசிறக்கூடாது. மழை பெய்து கொண்டிருக்கும் போது ஓடக்கூடாது. விளைந்து வரும் புதிய தானியங்களைத் தேவதைகளுக்கு ஹோமம் செய்யாமல் நாம் உபயோகிக்கக் கூடாது. எப்போதும் சுத்தமான ஆடையையே உடுத்த வேண்டும். காரணம் ஏதுமின்றி தாடியோ நகங்களோ வளர்க்கக் கூடாது.

நீரிலே நம் முகத்தைப் பார்த்தல் கூடாது. கையினால் நீரை அடித்து சப்தம் செய்வது கூடாது. மனைவியோடு சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடக் கூடாது. அடக்கமில்லாமல் இஷ்டப்படி கைகால்களை நீட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கும்போதும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதும் கொட்டாவி விடும் போதும், ஆடையின்றி இருக்கும்போதும் மனைவியைப் பார்க்கக் கூடாது. அக்கினியை வாயால் ஊதி எரியச் செய்யக் கூடாது. அக்கினியில் கால்களை நீட்டிக் குளிர் காயக்கூடாது. அக்கினியைப் பூமியில் வைக்கக் கூடாது. காலால் அதைத் தாண்டவும் கூடாது. நகங்களால் பூமியைக் கீறக் கூடாது. ஜலத்திலே எச்சிலையோ கோழையையோ உமிழக் கூடாது. மலஜலங்களை நீரில் கழிப்பதும் தகாது. எலும்பு ரத்தம் ஆகியவற்றையும் நீரில் போடக்கூடாது. சூனியமான வீட்டில் தனியாகப் படுத்துத் தூங்கக் கூடாது. அக்கினி, ஆசாரியன், வேதம் ஓதிய பிராமணன், பசு, அத்யயனம் செய்பவன் ஆகியோரின் முன்பு கோபத்தோடு வலது கையை ஓங்கக் கூடாது. பயிரை மேயும் பசுவை அடித்து விரட்டாதே. மலைச்சிகரத்தில் அதிகக் காலம் வசிக்கக்கூடாது. கண்ட சேஷ்டைகளையெல்லாம் செய்யக்கூடாது. பிறர் எதிரில் அடக்கமாக இருக்கவேண்டும்.

இரண்டு கைகளாலும் நீரை ஏந்தி அருந்தக்கூடாது. மடியிலே வைத்துக் கொண்டு ஆகாரத்தைச் சாப்பிடக் கூடாது. அளவுக்கு மீறிய குதூகலம் கூடாது. நடனம், பாட்டு, குத்துச்சண்டை, இந்திரஜாலம் ஆகியவற்றில் பிரியம் கூடாது. வெண்கலப் பாத்திரத்தில் கால் அலம்பக்கூடாது. குதிரை, வண்டி ஆகியவற்றின் அருகே கால் நடையாகச் செல்லக்கூடாது. இளம் வெய்யில், பிரேதம் எரியும் புகை, பெருக்கும்போது எழும்பும் தூசி ஆகியவை மேனியில் படக்கூடாது. சூதாடுவது கூடாது. செருப்பைக் கைகளில் எடுத்துச் செல்வது கூடாது. படுத்துக் கொண்டவாறே எதையும் சாப்பிடக்கூடாது. நதியைக் கையால் நீந்திக் கடக்கக் கூடாது. மரங்களில் ஏறக்கூடாது. பத்திரமில்லா படகுகளில் ஏறிக் கரையைக் கடக்கக்கூடாது. பிராமணன், ஆசாரியன், அரசன் ஆகியோரிடம் செல்லும்போது படுக்கையுடன் போகக்கூடாது. சாப்பிட்ட உடன் நீராடக்கூடாது. பரிச்சயமில்லாத ஏரிகளிலோ, குளங்களிலோ இறங்கக்கூடாது. சத்துரு, அவனுடைய எதிரி, அதர்ம வழி செல்பவன், திருடன் ஆகியோருடன் சகவாசம் கூடாது. சத்தியத்தைச் சொன்னாலும் அது பிரியமாய் இருந்தால் தான் சொல்லவேண்டும். பிரியமானதென்று அசத்தியத்தையும் பொய்யையும் கூறக்கூடாது. வீணாகப் பெருமைப்பட்டுக் கொள்வதும், காரணமற்ற சண்டையும் கூடாது. எப்போதும் மங்களகரமான காரியத்தையே செய்ய வேண்டும். அதில் பிரியத்தோடு இருக்கவேண்டும்.

காரணமில்லாமல் அவயவங்களைத் தொட்டுக்கொண்டோ சேஷ்டைகள் புரிந்து கொண்டோ இருக்கக்கூடாது. மயிர்களை ஒதுக்கப்புறமான இடத்தில் போட வேண்டும். பரபரப்பு அடையும்படியான காரியத்தைச் செய்யக் கூடாது. எந்தக் காரியமும் நிதானமாகவே செய்ய வேண்டும். மனத்துக்கு சந்தோஷத்தைத் தரக்கூடிய காரியங்களையே செய்யவேண்டும். அந்தக் காரியங்கள் தம் வழிகளுக்குட்பட்டவையாக இருத்தல் வேண்டும். அதர்மமான காரியங்களைச் செய்யக் கூடாது. கால், கை, கண் இமைகளை அனாவசியமாக அசைத்துக் கொண்டிருத்தல் கூடாது. துரோகம் செய்தவன், புரோஹிதர், ஆசாரியர், மாமன், வீட்டுக்கு வந்த விருந்தாளி, உன்னை அண்டியிருப்பவர், வயதானவர், குழந்தைகள், நோயாளி, சகோதரர், இளைய தாயார், பெண்கள், வேலைக்காரர் ஆகியோருடன் விவாதம் செய்வது கூடாது. வேதமறியாதவருக்குத் தானம் கொடுக்கக் கூடாது. அவர்களுக்கு முக்கியமான பசு, தங்கம், பூமி, குதிரை, வஸ்திரம், அன்னம், எள்ளு, நெய் ஆகியவற்றைத் தானம் செய்யக்கூடாது. அப்படியே தானம் கொடுத்தாலும் வேதமறியாதவர் அவற்றைத் தானம் பெறக்கூடாது. கிணறு, நதி, ஏரி, குளம் ஆகியவற்றில் நீராடும்போது ஏழு பிடி மண்ணை எடுத்து வெளியே போடவேண்டும். கோபம் உள்ளவன், மூடன், நோயாளி, வேலைக்காரன், தாசி, வெறுக்கத்தக்கவன் ஆகியோர் தரும் அன்னத்தை ஏற்கலாகாது. நித்திக்கத்தக்கவன், குலத்தை விட்டவன், பதிதன், மூர்க்கன், துர்நடத்தைகள் உள்ளவன், நரஸ்துதி செய்பவன் ஆகியோர் தரும் அன்னத்தையும் ஏற்கக்கூடாது. சத்துருக்கள் அன்னத்தையும், வேலைக்காரன் அன்னத்தையும் சாப்பிடுபவன் ஆயுள் குறையும்.

காலமற்ற காலத்தில் வேதம் சொல்பவனுடன் சேரக்கூடாது. அவன் ஒதுக்கப்பட வேண்டும். தீர்த்தம், அன்னம், எள்ளு, தீபம், பூமி, தங்கம், கிருகம், வஸ்திரம், பசு ஆகியவற்றைத் தானம் செய்யவேண்டும். யக்ஞம் செய்தவர்களுக்கும் அத்யயனம் பூர்த்தி செய்தவர்களுக்கும் சக்திக்கேற்ப தானம் கொடுக்க வேண்டும். பாதுகைகளையும் குடையையும் சூரியன் திருப்திக்காகக் தானம் செய்தால் சகல பாக்கியங்களும் உண்டாகும். படுக்கை, கிருகம், தர்ப்பம், மலர், தீர்த்தம், தயிர், பால், அன்ன வகைகள் தானம் செய்தால் மிகச் சிறந்தவர்களுடன் சம்பந்தம் ஏற்படும். அதன் காரணமாகக் குலம் மேன்மை அடையும். தேவதை, அதிதி, குரு, வேலைக்காரன் ஆகியோர்களை முன்னுக்குக் கொண்டுவர விரும்பினால் வேதாந்த சாஸ்திரத்தில் ஊக்கம் காட்ட வேண்டும். ஆசாரம் உள்ளவன் தன் ஜீவிய தசையில் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை அடைவதோடு, மறு உலகிலும் கொண்டாடப்படும் மேன்மையை அடைகிறான். ஆசாரத்தால் ஆயுளும் ஆரோக்கியமும் விருத்தியாகிறது. செல்வம் குவிவதோடு கீர்த்தியுடன் அவன் பிரகாசிப்பான். ஆசாரமில்லாதவனை துர்ப்பாக்கியசாலி என்றே சொல்லலாம். அவனை நோய்கள் பீடிப்பதோடு அல்பாயுசு உடையவனாகச் செய்து வருகின்றன. ஆசாரம் மூதேவியை விலக்கி ஸ்ரீதேவியைத் தங்கச் செய்கிறது. சூரிய பக்தன் ஆசாரம் உள்ளவனாக இருத்தல் வேண்டும். அதன் மூலமே அவன் பகவானிடம் பக்தியை அடைய முடியும்.

28. சூரியனை மிரட்டிய ஜமதக்கினி முனிவர்

சூரியனை உபாசிக்கத் தகுந்தவன் கடைப்பிடிக்கவேண்டிய ஆசார நியமங்களை எடுத்துக் கூறியபோது, சாம்பன் நாரதரைக் கேட்டான். மகரிஷே, தாங்கள் இப்போது கூறிவந்த அரிய விஷயங்களில் ஒரு வார்த்தை என் கவனத்தைப் பெரிதும் கவர்ந்திருக்கிறது. சூரியனுடைய திருப்திக்காக ஏன் குடையோ பாதுகைகளோ தானம் செய்ய வேண்டும்? சூரியனுக்கு அதனால் திருப்தி ஏற்படக் காரணம் என்ன? யார் முதலில் அவருடைய திருப்திக்காகப் பாதுகைகளையும் குடையையும் தானம் செய்தார்கள்? இவற்றைத் தாங்கள் எனக்குக் கூற வேண்டும். நாரதரும் அவன் கேட்ட விவரத்தைச் சொல்லத் தொடங்கினார். ஜமதக்கினி என்ற முனிவர் பிருகு வம்சத்தில் பிறந்தவர். அவர் மகா தபஸ்வி. அவர் தனுர் வேதத்தையும் கற்று அதில் தேர்ந்து விளங்கினார். அவர் பாணங்களை வில்லிலே பூட்டித் தூரத்திலுள்ள குறியை வீழ்த்துவார். அவருடைய மனைவி ரேணுகாதேவி. அவள் கணவருடை வில்வித்தையின்போது கலந்து கொண்டு அவருக்குத் தேவையான உதவிகளைக் செய்து வருவாள். அவரால் எய்யப்பட்ட பாணங்களை ஒடிச் சென்று பொறுக்கி எடுத்து வந்து கொடுப்பாள். இவ்விதம் நாள்தோறும் நிகழ்ந்து வந்தது. ஒரு நாள் காலையில் நித்திய கர்மானுஷ்டானங்களுக்குப் பிறகு ஜமதக்கினி முனிவர் வழக்கமான தம்முடைய வில்வித்தையை ஆரம்பித்தார். அன்று அவருக்கு உற்சாகம் அதிகமாகி விட்டது. அதனால் பொழுது போனது கூடத்தெரியாமல் மகிழ்ச்சியோடு பாணங்களை எய்து வந்தார். ரேணுகாதேவி ஓடி ஓடிச் சென்று பாணங்களைப் பொறுக்கி எடுத்து வந்து கொடுத்தாள்.

சூரியன் உச்சியை நோக்கி விறுவிறு என்று ஏறிக் கொண்டிருந்தான். வெப்பம் அதிகமாக இருந்தது. பூமியில் அந்த உஷ்ணத்தால் சுட்டது. உற்சாகத்திலிருக்கும் முனிவர் அதைக் கவனிக்கவில்லை. வெகு தூரத்திலுள்ள ஒரு வஸ்துவை நோக்கி பாணத்தை எய்த அவர், மனைவியை நோக்கி, ஓடிச்சென்று அதை எடுத்து வருமாறு சொன்னார். ரேணுகா தேவியும் புறப்பட்டுச் சென்றாள். வெகு நேரமாக அவள் ஓடிப் பாணங்களைப் பொறுக்கி வருவதால் களைப்பு அடைந்திருந்தாள். அதனோடு சூரிய வெப்பமும் சேரவே அவள் மிகுந்த தாபத்தை அடைந்துவிட்டாள். பாணம் விழுந்திருந்த இடத்தை அடைந்த அவள் அதைக் கையிலே பொறுக்கிக் கொண்டு புறப்பட்டதும் மிகவும் களைத்துப் போய்விட்டாள். பூமியில் காலடி எடுத்து வைத்து நடக்க முடியவில்லை. கீழே தணலைப்போலச் சுட்டது. அது மட்டுமல்ல. சூரிய கிரணங்கள் உடலில் படும்போது மிகுந்த உஷ்ணத்தைத் தோற்றுவித்ததால் அவள் தடுமாறினாள். அப்போதைய நிலையில் அவள் கணவன் இருக்குமிடத்தைச் சென்று அடைய முடியாதுபோல் இருந்தது. ஆகவே அங்கே இருந்த ஒரு மரத்தின் நிழலில் ஒரு முகூர்த்த நேரம் தங்கி இளைப்பாறி விட்டுத் திரும்பினாள். கணவர் இருக்குமிடத்தை அவள் அடைந்தபோது மிகவும் பயந்து போயிருந்தாள். தாமதித்து வந்ததற்காக அவர் கோபிப்பாரே என்ற பயத்தால் அவள் வெலவெலத்துப் போயிருந்தாள். முகத்திலே வியர்வை வழிந்தோடியது. மனைவியைப் பார்த்த ஜமதக்கினி முனிவர் அவள் பயந்ததுபோலக் கோபிக்கவில்லை. பிரியே, வருவதற்கு இவ்வளவு தாமதம் ஏற்பட்டது ஏன்? என்று பரிவுடன் கேட்டார். சுவாமி, சூரிய வெப்பம் தாங்க முடியவில்லை. பூமியிலே காலடி வைக்க முடியாமல் சுடுகிறது. வெய்யிலில் போனதால் என் தலை கொதிக்கிறது. மிகவும் களைத்துப் போய்விட்டதால் சிறிது நேரம் ஒரு மரத்தின் நிழலில் தங்கி இளைப்பாறி விட்டு வந்தேன். அதனால் தான் தாமதம் ஏற்பட்டுவிட்டது என்றாள் ரேணுகாதேவி பணிவோடு. மனைவியின் வார்த்தைகளைக் கேட்டதும் முனிவருக்கு சூரியன் மீது கோபம் உண்டாயிற்று. ஆக்ரோஷத்தோடு வில்லிலே பாணத்தைப் பூட்டினார்! பிரியே, உன்னைத் தவிக்கச் செய்த அந்தச் சூரியனை என்ன பாடு படுத்துகிறேன், பார் என்று கோபமாகக் கூறினார்.

முனிவருடைய உள்ளத்திலே பொங்கி எழும் கோபத்தை உணர்ந்த சூரியன் அவரைச் சாந்தப்படுத்த எண்ணம் கொண்டார். ஒரு பிராமணன் வேடம் கொண்டு முனிவருடைய எதிரிலே வந்தார். மகரிஷே, இதென்ன உக்கிரம்? வில்லிலே பாணத்தைப் பூட்டியிருக்கிறீர்கள்? யார் மீது கோபம்? என்று கேட்டார். சூரியனை அடிக்கவே இந்தப் பாணத்தைப் பூட்டியுள்ளேன் என்றார் ஜமதக்கினி. அடாடா!... தங்கள் விஷயத்தில் சூரியன் என்ன அபசாரம் செய்தான்? சகலமானவருக்கும் நன்மை செய்ய அன்றோ அவன் வானிலே சஞ்சாரம் செய்கிறான் என்று தெரிவித்தார் பாஸ்கரன். தாங்க முடியாத வெப்பத்தைத் தந்து என் மனைவியைக் களைப்படையச் செய்து விட்டான். அதனால் என்வித்தை தடைப்பட்டு விட்டது என்றார் ஜமதக்கினி கோபத்தோடு. மகரிஷே, நான் ஒரு வார்த்தைசொல்ல விரும்புகிறேன். சூரியன் உஷ்ணம் தருவது உலகத்தோருடைய நன்மைக்காகத் தானே. அந்த உஷ்ணத்தால் அன்றோ பயிர் பச்சைகள் வளர்கின்றன. பூமியிலுள்ள நீரைத் தம்முடைய கிரணங்களால் உஷ்ணத்தைக் கொடுத்துக் கிரகித்து அதை மேகமாக்குகிறான். அந்த மேகம் ஆயிரம் மடங்காக நீரை வர்ஷிக்கின்றது. மழையின் மூலம் சகல ஜீவராசிகளுக்கும் பிராணனாக விளங்கும் அன்னம் உண்டாகிறது. சூரியன் உலக நன்மைக்காகத்தானே ஜலத்தைக் கிரகித்து மழையைப் பொழியச் செய்கிறான். அது பயிர்களை வளரச் செய்து உணவுப் பொருள்களைக் கிடைக்கச் செய்கின்றது. அவற்றைப் புசித்து மக்கள் தங்கள் வம்சத்தை விருத்தி செய்கின்றனர். தங்களுக்கு உணவு அளிக்கும் பகவானுக்கு அவர்கள் யாகம் முதலான கர்மாக்களைச் செய்தும், தானங்கள் கொடுத்தும் அவரைத் திருப்தியடையச் செய்கின்றனர். அவ்விதமிருக்க சூரியனிடம் தாங்கள் கோபம் கொள்வது நல்லதா என்பதை யோசித்துப் பாருங்கள் என்றார் சூரியன். முனிவரோ அந்த வார்த்தைகளைச் சமாதானமாக ஏற்றுக் கொள்ளவில்லை. தம்முடைய வித்தை தடைப்பட்டுக் போகக் காரணமாக இருந்த சூரியனை பாணத்தால் அடித்தே தீருவேன் என்றார். அவருடைய உறுதியைக் கண்ட சூரியன் அவரைப் பார்த்துக் கேட்டார்.

மகரிஷே, தாங்களோ சூரியனைப் பாணத்தால் அடிக்கப் போவதாகக் கூறுகிறீர்கள். சூரியன் எவ்வாறு தங்கள் பாணத்துக்கு இலக்காவான்? அவனோ சஞ்சலமானவன். ஒரு கணம் கூட நிற்காமல் நகர்ந்து கொண்டிருக்கும் அவனை உம்மால் எப்படி அடிக்க முடியும்? என்று கேட்டார். அந்த கேள்வியைக் கேட்டு ஜமதக்கினி முனிவர், கலகல வென்று நகைத்தார். ஐயா, என்னை யாரென்று உணராது பேசுகிறீர்கள். சூரியன் எப்போது சஞ்சலமாக இருப்பான்: எப்போது அசைவற்று இருப்பான் என்பதை நான் ஞானக் கண்ணால் அறியக்கூடியவன். அபரான்ன காலத்தில் ஒரு நிமிஷ நேரம் சூரியன் அசைவற்று இருப்பான் என்பதை நான் அறிவேன். அந்தச் சமயத்தில் என் பாணத்தால் அவனை அடித்து வீழ்த்த முடியும் என்றார் முனிவர். அவருடைய பதிலைக் கேட்டு சூரியன் ஒரு கணம் திடுக்கிட்டார். முனிவரைப் பார்த்து மெல்லக் குறுநகை செய்தார். மகரிஷே, தங்கள் அறிவை நான் பாராட்டுகிறேன். சிறந்த வில்லாளியான தங்களால் சொன்னபடி செய்யமுடியும் என்பதையும் நான் அறிகிறேன். உலகத்தோருடைய நன்மைக்காக அல்லும் பகலும் உழைத்துவரும் என்னைப்பற்றித் தாங்களும் நன்கு அறிவீர்கள். பிராமண வேஷத்துடன் தங்கள் முன்பு நின்று பேசும் என்னை உணர்ந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன் என்றார். சூரியனே தம் முன்பு வந்து நிற்பதை அறிந்த ஜமதக்கினி முனிவர் உள்ளூற மகிழ்ச்சி கொண்டார். பாஸ்கரா, உன்னை அறிந்து கொண்டேன். நீ செய்யும் காரியங்கள் உலகத்தோருடைய நன்மைக்காகத்தான் என்றாலும் தாபத்தை அகற்ற வழி என்ன? அதைச் சொல் கேட்டார் முனிவர். மகரிஷே, அதற்கு ஒரு வழி இருக்கின்றது. குடையும் பாதுகையும் உத்தம பிராம்மணனுக்குத் தானம் செய்யுங்கள். தாபங்களை அகற்றி விடும். மறுமையிலும் தாபம் உங்களைப் பீடிக்காது என்று சொன்ன சூரியன் தம்முடைய உண்மையான ரூபத்தைக் காட்டி அருளினார். அந்தத் திவ்விய சொரூபத்தைக் கண்ட மகரிஷி ஆனந்தப் பரவசரானார். அவரைப் பலவாறு தோத்திரம் செய்தார். சூரியன் ஒரு குடையையும் இரு பாதுகைகளையும் வரவழைத்து முனிவரிடம் அளித்தார். மகரிஷே, இந்தப் பாதுகைகளைக் கால்களில் அணிந்து கொள்ளுங்கள். பூமியில் உள்ள உஷ்ணம் கால்களைப் பற்றாது. குடை உமது தலையிலே உஷ்ணம் ஏற்படுவதைப் பாதுகாக்கும். இன்றுமுதல் உலகிலே எவர் குடையும் பாதுகைகளும் தானம் செய்கிறார்களோ அவர்கள் சொர்க்கம் செல்வர். என்று அருளி மறைந்தார். அது முதல் உலகிலே குடையும் பாதுகைகளும் தானம் செய்யும் வழக்கம் தோன்றலாயிற்று.

29. ஸப்தமி விரதம்

குடையும் பாதுகைகளும் தானம் கொடுக்கும் வழக்கம் ஏற்படக் காரணத்தைக் கூறிய நாரதர், சாம்பனுக்கு ஸப்தமி விரதத்தைப் பற்றிச் சொல்லலானார். உத்தராயணத்தில் சக்கில பக்ஷ ஞாயிற்றுக் கிழமையில் ஸப்தமி விரதத்தைத் துவங்க வேண்டும். இந்த விரதம் மிகவும் உத்தமமானதாகச் சொல்லப்பட்டுள்ளது. எல்லாப் பாபங்களையும் இந்த விரதம் போக்கடித்து விடும். முதல் ஸப்தமியில் பிரதமை முதல் ஸப்தமிவரை அர்க்க பத்திரத்தைக் கொண்டு சூரியனைப் பூஜிக்க வேண்டும். முதல்நாள் ஒரு பத்திரத்தாலும் இரண்டாம் நாள் இருண்டு பத்திரத்தாலும், மூன்றாம் நாள் மூன்று பத்திரங்களாலும் பூஜிக்க வேண்டும். இது போலவே ஒவ்வொரு நாளும் ஒரு பத்திரம் அதிகமாக்கிக் கொண்டு ஸப்தமி வரை பூஜை செய்யவேண்டும். பிரதமை முதல் ஸப்தமி வரை உபவாசம் இருக்க வேண்டும். அர்ச்சனை செய்த அந்தப் பத்திரங்களையே புசிக்க வேண்டும். அடுத்த மாதம் பிரதமை முதல் ஸப்தமி வரை மறுபடியும் உபவாசமிருந்து முதல் நாள் ஒன்று, மறு நாள் இரண்டு என்ற வகையில் மரீச பத்திரத்தால் அர்ச்சனை செய்து அந்தப் பத்திரங்களையே புசிக்க வேண்டும். மூன்றாவது மாதம் வேப்பிலையை அர்ச்சனைக்கு உபயோகிக்க வேண்டும். நான்காவது மாதம் பழத்தை உபயோகிக்க வேண்டும். அதற்கு அடுத்த மாதம் எதையுமே சாப்பிடாமல் பூரண உபவாசம் இருக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் பூஜை செய்ய வேண்டிய பத்திரங்களை எடுத்து வந்து ஒரு புதுக்குடத்தில் போட்டு ஒரு புருஷனால் ஒரு யோசனை தூரம் எடுத்துச் செல்லப்பட்டு, திரும்பவும் கொண்டுவரப்பட்டு அவற்றால் பூஜை செய்யவேண்டும். இரவும் பகலும் கண் விழித்துப் பகவானைத் தியானிக்க வேண்டும். இவ்வாறு எவன் ஏழு ஸப்தமிகளில் நியமத்தோடு விரதம் இருக்கிறானோ, அவன் எல்லாப் பாபங்களும் நீங்கியவனாக ஆகிறான். அர்க்க பத்திரத்தால் அர்ச்சனை செய்தால் தனம் பெருகும். மரீச பத்திரத்தால் அர்ச்சனை செய்தால் விருப்பமானவரோடு சினேகத்தை உண்டாக்கும். வேப்பிலையால் பூஜை செய்தால் ரோகங்கள் நாசமாகும். பழங்களால் அர்ச்சித்தால் உத்தமமான பிள்ளைகள் உண்டாவார்கள். அனோதன ஸப்தமி தன தான்யங்களை அளிக்கும். விஜய ஸப்தமி எல்லாக்காரியங்களிலும் ஜயத்தைத் தரும். சாமிகா ஸப்தமி எல்லாவித விருப்பங்களையும் நிறைவேற்றும்.

உத்தமமான இந்த சப்தமி விரதத்தைப் புருஷனோ, ஸ்திரீயோ யார் செய்தாலும் அவர்கள் சூரியலோகத்தில் மகிழ்ச்சியோடு வாசம் செய்வார்கள். மூன்று லோகங்களிலும் அவர்களால் அடையத்தகாதது என்பதே இல்லை. நியமத்தோடும் பக்தி சிரத்தையோடும் இந்த விரதத்தை இருந்து, பிராமணர்களுக்கு தக்ஷணை முதலான கொடுத்துத் திருப்தி செய்தவன் ஆயிரக்கணக்கான ரூபாய்களை தக்ஷணையாகக் கொடுத்துச் செய்யப்படும் கர்மாக்களால் அடையக்கூடிய பலன்களை எளிதில் அடைகிறான் என்பதில் சந்தேகமே இல்லை. அனேக விரதங்களைக் கடைப்பிடிப்பதாலும் சாதாரணமானவர்களால் செய்ய முடியாத தர்ம காரியங்களாலும் கிடைக்கும் பலன்களை ஸப்தமி விரதத்தை ஒருவன் கடைப்பிடிப்பதன் மூலம் அடையலாம். மேலும் சூரிய லோகத்தில் நிரந்தரமாக வாசத்தையும் அடைகிறான். அப்படியே அவனுக்கு மீண்டும் பிறவி இருக்குமேயானால் அவன் குருடு, குஷ்டம் முதலான ரோகங்கள், நபூம்ஸகத்தன்மை, அங்கஹீனம், ஏழ்மை ஆகிய தோஷங்களிலிருந்து விடுபட்டவனாகி உத்தமமான குலத்திலே பிறப்பான். ஸப்தமி விரதத்தை பிரியத்தோடு செய்பவன் அழகான ஸ்திரீ, யானை, குதிரை முதலான வாகனாதிகளையும் அடைந்து அழிவில்லாத வளத்தையும் பெறுகிறான். வித்தையை விரும்புபவன் சப்தமி விரதத்தைச் செய்தால் வித்தையில் நல்ல தேர்ச்சி அடைவான். செல்வத்தை விரும்புபவன் செய்தால் அழிவற்ற செல்வத்தை அடைவான். அழகிய மனைவி மக்களை விரும்புபவன் செய்தால் உத்தமப் பெண்ணை மனைவியாகவும் அவள் மூலம் சத் புத்திரர்களையும் பெறுவான். விரதத்திலே நடுவே எதிர்பாராது ஏதாகிலும் தடை ஏற்படுமானால் மூன்று நாட்கள் உபவாசமிருந்து, தலையை மொட்டை அடித்துக் கொண்டு மறுபடியும் விரதத்தைத் தொடங்க வேண்டும். ஏழு ஸப்தமிகளிலும் விரதம் இருந்து தூபதீப நைவேத்தியங்களால் பகவானை ஆராதித்து தகுந்த பிராம்மணர்களுக்கு போஜனம் செய்வித்தால் அவர்கள் மேலான வாழ்வை அடைவர்.

ஸப்தமி விரதத்தில் எவன் ஒருவன் எந்தெந்தப் பொருள்களை மகிழ்ச்சியோடு தானம் செய்கிறானோ அந்த அந்தப் பொருள்கள் அவர்களுக்கு நன்கு விருத்தியாகும். முடிவில் அவன் சூரியலோகத்தை அடைவான். பன்னிரண்டு சுக்ல ஸப்தமிகளில் கோமயத்தை உட்கொண்டு எவன் பூஜிக்கிறானோ அவன் அளவற்ற பலன்களை அடைகிறான். கஞ்சியே மட்டும் உட்கொண்டு விரதம் இருப்பவனும் உலர்ந்த சருகுகளை மட்டுமே ஆகாரமாக உட்கொண்டு விரதம் இருப்பவனும், பாலை மாத்திரம் உட்கொண்டு விரதம் இருப்பவனும், ஒரு வேளை மட்டுமே ஆகாரம் உட்கொண்டு விரதம் இருப்பவனும், பிøக்ஷ எடுத்துப் புசித்து விரதம் இருப்பவனும், ஜலத்தை மட்டுமே அருந்தி விரதம் இருப்பவனும் அடையும் பலன்கள் இவ்வளவுதான் என்று வரையறுக்கவில்லை. பகவானுக்குத் தங்கத்தால் அனேக ஆபரணங்களைச் செய்து அணிவித்தும் மலர் மாலைகளால் அலங்கரித்தும் தூப தீப நைவேத்தியங்களால் ஆராதனை செய்தும் ருசி மிகுந்த பலகாரங்களைச் செய்து நிவேதனம் செய்து உத்தமரான பிராமணர்களுக்குத் தட்சணை முதலானவற்றோடு கொடுத்துக் கவுரவித்தும் விரதம் இருப்பவர் சூரிய லோகத்தை அடைந்து எல்லோராலும் கவுரவிக்கப்படுவர். சுவர்க்க வாசத்தை அடைந்த அவர்கள் மீண்டும் பிறவி இருக்குமானால் உயர்ந்த குலத்தில் வந்து பிறப்பார்கள்.

இவ்வாறாக ஒவ்வொரு மாதமும் பக்தி சிரத்தையோடு அவரவர் சக்திக்கு ஏற்ப ஆராதனை செய்யவேண்டும். ஒவ்வொரு மாதமும் சூரியனுடைய ஒவ்வொரு பெயரைக் கூறிப் பூஜை செய்யவேண்டும். சித்திரை மாதத்தில் விஷ்ணு என்றும், வைகாசியில் அர்யமா என்றும், ஆவணியில் பர்ஜன்யன் என்றும், புரட்டாசியில் வருணன் என்றும், ஐப்பசியில் இந்திரன் என்றும், கார்த்திகையில் தாதா என்றும், மார்கழியில் மித்திரன் என்றும், தை மாசத்தில் பூஷா என்றும், மாசிமாதத்தில் பகன் என்றும், பங்குனி மாசத்தில் துவஷ்டா என்றும் பெயர்களைக் கொண்டு ஒவ்வொரு மாதமும் பூஜிக்க வேண்டும். பக்தி இல்லாதவனுக்கும், பாபம் செய்பவனுக்கும், சுத்தமில்லாதவனுக்கும், அசூயை உடையவனுக்கும் இந்த சூரிய விரதத்தை உபதேசிக்கக்கூடாது. இந்த விரதத்தைப் படிப்பவருக்கே சூரியலோக வாசம் கிட்டும் என்று சொல்லப்படும் போது இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால் ஏற்படும் பலன்களைப் பற்றிச் சந்தேகமே வேண்டாம். தேவலோகம், பிரம்மலோகம், இந்திரலோகம் இம்மூன்றிலும், தடையற்ற பிரவேசத்தை உடையவர்களாய் எல்லாராலும் கொண்டாடப்படுவார்கள்.

30. ஜப யக்ஞம்

ஸப்தமி விரதம் செய்வதைக் கூறிய நாரதர், ஹேயது குலதிலக, அரிய இந்த விரதத்தைக் கேட்டாய். இப்போது மிகச் சிறந்த ஜப யக்ஞத்தைப் பற்றிக் கூறுகிறேன், கேள் என்று சாம்பனைப் பார்த்துக் கூறலானார். எல்லா யாகங்களிலும் மிகச் சிறந்ததாக ஜபயக்ஞத்தைச் சொல்லுகிறார்கள். எந்தக் காரியத்தைச் செய்தாலும், செய்யாவிட்டாலும் ஜபயக்ஞத்தைச் செய்தால் உத்தமமான நிலையை அடைகிறான். விதிப்படி செய்யும் ஜபத்தால் சூரியன் திருப்தி அடைகிறார். ஜபம் செய்வதால் ஒருவன் எல்லாப் பாபங்களிலிருந்தும் விடுபட்டுச் சன்னியாச ஆச்ரமத்தை மேற்கொள்ளும் தகுதியை அடைகிறான். ஜபம் செய்யாதவர்கள், தர்மத்துக்கு விரோத காரியங்களைச் செய்பவர்கள் ரோகத்திற்கு ஆளாகிறார்கள். பவழம், தங்கம், முத்து, மணி, ருத்திராக்ஷம், தாமரை மணி, தர்ப்பை, பத்ராக்ஷி, சங்கம் முதலியவற்றால் மாலைகளைச் செய்து அவற்றைக் கொண்டு ஜபம் செய்ய வேண்டும். அதனால் பாபங்கள் நீங்கிப் புண்ணியம் உண்டாகும். ஜபம் செய்வது மூன்று வகைப்படும். மனத்தாலும், வாயினாலும், வார்த்தைகளை சப்தத்தோடு உச்சரித்து ஜபம் செய்யலாம். வார்த்தைகளை உச்சரித்து சப்தத்தால் செய்யப்படும் ஜபத்துக்கு நூறு மடங்கு பலன் கிட்டும். வாயினால் ஜபம் செய்தால் ஆயிரம் மடங்கு பலன் கிடைக்கும். மணியால் செய்யப்பட்ட மாலை கொண்டு ஒரு முறை ஜபம் செய்தால் அது ஐம்பதினாயிரம் முறை செய்த பலனைத் தரும். ருத்திராக்ஷ மணிகளைக் கொண்ட மாலையால் செய்யப்படும் ஜபம் பத்தாயிரம் முறை செய்த பலனைக் கொடுக்கும். தாமரை மணிகளால் செய்த மாலையைக் கொண்டு ஜபம் செய்வது எட்டாயிரம் முறை செய்த பலனைத் தருகிறது. தர்ப்பையை மணிகள் போல் முடிந்து மாலை தயாரித்துச் செய்த ஜபமானது நாலாயிரம் தடவை செய்த பலன் கிட்டச் செய்கிறது. பவழத்தால் உண்டான மாலையைக் கொண்டு செய்யப்பட்ட ஜபத்தால் முடிவில்லாத அளவு பலனைப் பெறலாம். தங்கத்தால் ஆன மாலையைக் கொண்டு ஜபம் செய்வதானது கோடிமுறை ஜபம் செய்த பலனைத் தருகிறது. முத்தினால் செய்யப்பட்ட மாலையால் ஜபம் செய்தால் லக்ஷம் மடங்கு பலனைப் பெற முடியும். பத்தி ராக்ஷி மாலையில் செய்யும் ஜபம் ஆயிரம் மடங்கு பலனையும் சங்கத்தால் செய்யும் ஜபம் ஐயாயிரம் மடங்கு பலனையும் தரும்.

ஜபம் செய்யும்போது அசுத்தமான காரியங்களை செய்யக் கூடாது. காரித்துப்புவது, பேசுவது, கொட்டாவி விடுவது போன்ற காரியங்கள் செய்வது விரதத்துக்குப் பங்கத்தை உண்டாக்கும். தடைப்பட்ட விரதத்தை ஆசமனம் செய்து தன்னைச் சுத்தி செய்து கொண்ட பின்னரே தொடங்க வேண்டும். ஜபம் செய்யும் போது ஜபமாலை கை நழுவி பூமியில் விழுந்து விட்டால் அதை எடுத்துச் சுத்தம் செய்த பின்னரே ஜபத்தைத் தொடர வேண்டும். கட்டைவிரல் மத்திய விரல் ஆகியவற்றின் நுனியினால் தான் மாலையிலுள்ள மணிகளை எண்ண வேண்டும். நூற்றெட்டு மணிகளை உடைய மாலைகளையோ, ஐம்பத்து நாலு மணிகளை உடைய மாலைகளையோ, இருபத்தேழு மணிகளை உடைய மாலைகளையோ ஜபம் செய்வதற்கு வைத்துக் கொள்ள வேண்டும். ஜபமாலையின் நடுவிலுள்ள மத்திய மணியைத் தாண்டுவது அதிக்கிரமிப்பாகும். ஜபம் செய்யும் போது ஆசனத்தில் அமர்ந்தே ஜபம் செய்யவேண்டும். பகவானுக்கு எதிர் முகமாய் உட்கார்ந்து கொண்டு மவுனமாக மனத்தை அடக்கி ஜபம் செய்யவேண்டும். கிரகணம் ஏற்படும்போதும், இடி விழுந்த போதும், துஸ்வப்னம் ஏற்பட்ட போதும், கடல் பொங்கிய போதும், இதர மதங்களைச் சேர்ந்தவர்களுடன் பேசியபோதும், பாபிகளுடன் பேசிய போதும் நூற்றெட்டு காயத்திரி ஜபம் செய்தல் வேண்டும். பகவானுடைய ஆராதனையில் முத்திரைகள் காட்டுவதையும் ஓர் உபசாரமாகச் சொல்லியிருக்கின்றனர். அந்த அந்த முத்திரைகளுக்குரிய மந்திரங்களைக் கூறுகையில் விரல்களுடைய முத்திரைகளைக் காட்ட வேண்டும். ரதமுத்திரை; வாஜிமுத்திரை, அருணமுத்திரை, வசுமுத்திரை, வியோக சிகாமுத்திரை முதலான முத்திரைகள் சூரியனை ஆராதிக்கச் சொல்லப்பட்டுள்ளன. ஸ்நானம் நியாசம், சவுசம் முதலியன செய்தால் தான் பூஜையில் பரிபூரண பலனைப் பெறமுடியும். சுத்தமான இடத்தில் உட்கார்ந்து மவுனமாக இருந்து தலையை வஸ்திரத்தால் மூடிக்கொண்டு மண்ணினாலும், ஜலத்தாலும் வடக்கு நோக்கி இருந்து சவுசம் செய்து கொள்ள வேண்டும். உபவீதம் செய்து கொண்டு ஆசமனம் செய்ய வேண்டும். ஆசமனம் செய்வதற்குச் சுத்த நீரே வேண்டும். நுரையோடு கூடியதாகவோ உப்புத் தண்ணீராகவோ, குமிழிகள் நிறைந்ததாகவோ அந்த ஜலம் இருக்கக் கூடாது. ஜபம் செய்வதைப் பற்றி விவரித்த நாரதர் அடுத்து சாம்பனுக்கு பூஜையின் போது செய்யப்படும் உபசாரங்களை எடுத்துக் கூறலானார்.

31. பூஜையில் செய்யப்படும் உபசாரங்கள்

சூரிய பகவானை ஆவாகனம் செய்வதற்குச் சில உத்தம பொருள்கள் சொல்லப்பட்டுள்ளன. பசும் சாணத்தால் மெழுகிய இடத்தில் சூரிய மண்டலத்தை வரைந்து அதில் ஆவாகனம் செய்யலாம். ஆகாசத்திலே பிரகாசிக்கும் சூரிய பிம்பத்திலும் அவரை ஆவாகனம் செய்யலாம். அக்கினியிலும், ஜலத்திலும், பிரதி பிம்பத்திலும், யந்திரத்திலும், தங்கத்தாலும் ஆன பாத்திரத்திலும், தாம்பிர பாத்திரத்திலும் ஆல மரத்திலும் சூரியனை ஆவாகனம் செய்யலாம். சூரியனைப் பூஜை செய்வதில் மந்திரங்கள் சொல்லப்பட வேண்டும். மந்திரமில்லாமல் செய்யப்படும் பூஜை பிரயோசன மற்றதே. பகவானுக்கு ஒவ்வொரு உபசாரம் செய்யும்போதும் அவரை நமஸ்கரித்தால் நூறு மடங்கு பலனைப் பெறலாம். ஆயிரம் நமஸ்காரம் செய்வது அதமமாம். லக்ஷம் நமஸ்காரம் செய்து மத்திமம் என்று சொல்லப்படுகிறது. கோடி முறை நமஸ்காரம் செய்வது உத்தமமானது. அவ்விதமே ஆயிரம் முறை ஜபம் செய்வது அதமமாம். லக்ஷம் முறை ஜபம் செய்வது மத்திமம். கோடிமுறை ஜபம் செய்வது உத்தமம். உத்தமமான காரியம் அந்த க்ஷணமே பலனைத் தரும். பகவானுக்குச் செய்யப்படும் உபசாரங்கள் பலவகையாகச் சொல்லப்படுகிறது. ஐந்து உபசாரம், பதினாறு உபசாரம், இருபத்து நான்கு உபசாரம், அறுபத்து நான்கு உபசாரம் என்று சொல்வார்கள். அந்த அந்த காலத்துக்கு ஏற்ப அவரவர் சக்திக்கு ஏற்ற வகையில் பகவானுக்கு உபசாரங்கள் செய்ய வேண்டும். ஸப்தமி விரதம் இருந்து பூஜை செய்யும்போது பகவானுக்கு இருபத்து நான்கு உபசாரங்கள் செய்ய வேண்டுமென்று விதிக்கப்பட்டுள்ளது. ஆவாகனம், ஸ்தாபனம், ரோதனம், ஸாந்நித்தியம், பாத்யம், அர்க்கியம், ஸ்நானம், வஸ்திரம், சந்தனம், புஷ்பம், தூபம், ஆபரணம், அங்க பூஜை, தபம், பலி, அர்க்கியம், ஜபம், நியாஸம், ஸ்தோத்திரம், ஹோமம், ஸஹோரம், சுத்திபாதம், விஹாரணம், விசர்ஜனம் என்ற இருபத்து நான்கு உபசாரங்களைச் செய்யவேண்டும். ஒவ்வொரு உபசாரங்களைச் செய்யும் போதும் அதற்கெனச் சொல்லப்பட்டுள்ள மந்திரங்களைப் பக்தியோடு சொல்லிப் பூஜிப்பதே உத்தமம். நிர்குண ஸ்வரூபியும், நிஷ்கலமானவருமான பகவானை ஸகுண ஸ்வரூபியாக பிம்பத்திலே சான்னித்தியம் கொள்ளுமாறு மந்திரம் சொல்லி அழைப்பது ஆவாகனம் ஆகும். எல்லாப் பூஜைகளிலும் இதுவே முதல் உபசாரமாகும். வரவழைத்த பகவானுக்கு ஆசனமளித்து அதில் உட்காருமாறு வேண்டுவது ஸ்தாபனம் எனப்படும். வேறு இடங்களுக்குப் போகாமல் அந்த ஆசனத்திலேயே பகவானை உட்காரச் செய்வது ரோதனம் எனப்படும். பகவானை ஏகாக்கிர சித்தத்தோடு தியானிப்பது ஸாந்நித்தியம் என்பதாகும். கால்களில் ஜலம் விட்டு அலம்புவதற்கு பாத்யம் எனப்படும்.

தங்கத்தால் செய்யப்பட்ட பாத்திரத்திலோ, தாமிரப் பாத்திரத்திலோ சந்தனம் கலந்த தீர்த்தத்தை வாசம் மிகுந்த புஷ்பங்களால் எடுத்து, இரண்டு முழங்கால்களால் நடந்து பகவானுக்குத் தீர்த்தம் அளிப்பது அர்க்கியம் ஆகும். வாசனைத் திரவியங்கள் கலந்த நீராலும், பாலாலும், தயிராலும், இளநீராலும், பன்னீராலும், சந்தனத்தாலும், பஞ்சாமிருதத்தாலும், சுத்த நீராலும் பகவானுக்கு அபிஷேகம் செய்வது ஸ்நாநம் எனப்படும். அழகிய வஸ்திரத்தை பகவானுக்குச் சார்த்தி அலங்கரிப்பது வஸ்திரம் என்ற உபசாரமாகும். சந்தனத்தால் திலகமிட்டு குங்குமப் பொட்டிடுவது சந்தனம் என்ற உபசாரமாகும். வாசனை மிக்க மலர் மாலைகளைக் காண்பித்து பாதங்களில் மலர் தூவுவது புஷ்பம் என்ற உபசாரம். சாம்பிராணிப் புகையோ, தசாங்கமோ காட்டுவது தூபம் என்ற உபசாரம் ஆகும். ஆபரணங்களை அணிவித்து உபசரிப்பது ஆபரணம் எனப்படுவதாகும். பகவானுடைய அங்கங்களுடைய பெயரைச் சொல்லி அந்த அந்த அங்கங்களில் அர்ச்சனை செய்வது அங்கபூஜை. நெய்யிட்ட திரியை ஏற்றிப் பகவானுக்கு அலங்காரமாகக் காட்டுவது தீபம் என்ற உபசாரம் ஆகும். சூரிய பூஜைக்கு குறைந்த பக்ஷம் அறுபது விளக்குகள் ஏற்றி வைக்கவேண்டும். அதிகப்படியாக ஏற்றுவது அவரவர் சவுக்கியத்தைப் பொறுத்தது. பகவானுக்கு நிவேதனம் செய்து பரிவார தேவதைகளுக்கு அவ்விதத் திருப்தி ஏற்பட பலி கொடுப்பது பலி என்ற உபசாரம் ஆகும். மறுபடியும் சந்தன தீர்த்தத்தால் அர்க்கியம் தருதல் வேண்டும். பகவானைக் குறித்து ஜபம் செய்வதும் ஜபம் என்ற உபசாரம் ஆகும். நியாயம் என்பது முத்திரைகளால் தேகத்தை தேவதாமயமாகச் செய்வது. ஸ்தோத்திரம் என்ற உபசாரமாவது பகவானைக் குறித்து மந்திர ஸ்லோகங்களில் துதி செய்வதாகும். ஹோமம் என்ற உபசாரம் விதிப்படி அக்கினிக் குண்டத்தில் பகவானைக் குறித்து ஹோமம் செய்வதாகும். ஸம்ஹாரம் என்பது பூஜை செய்வதால் ஏற்படக் கூடிய பலன்கள் தனக்குச் சித்தியாக வேண்டும் என்று பிரார்த்திப்பதாகும். சுத்தபாதம் என்ற உபசாரம் பகவானுடைய கை கால்களை அலம்பிவிடுவது ஆகும். விஹாரணம் என்பது சாமரம் வீசுவதும் கீதம், நிருத்தியம் முதலானவற்றால் பகவானைத் திருப்திப்படுத்துவதுமாகும். விஸர்ஜனம் என்பது பகவானை யதாஸ்தானம் செய்வதாகும். மூல மந்திரங்களைக் கூறி இருபத்து நான்கு உபசாரங்களையும் செய்யவேண்டும். விஸர்ஜனம் செய்து ஹோமம் முடிந்தபோது கொஞ்சம் புஷ்பம், ஹோமபஸ்மம் ஆகியவற்றை வடக்குத் திக்கிலே வைக்க வேண்டும். அதற்கு நிஹோரம் என்று பெயர். பிறகு ஸாஷ்டாங்கமாகப் பகவானை நமஸ்காரம் செய்ய வேண்டும். தலை, மனது, வாக்கு, கண், புத்தி, இரண்டு முழங்கால்கள், இரண்டு கைகள், மார்பு இவற்றால் நமஸ்காரம் செய்வது சாஷ்டாங்க நமஸ்காரம் எனப்படும். சூரியனுடைய திருப்திக்காக உத்தமமான பிராமணருக்குத் தானம் வழங்க வேண்டும். சூரிய பூஜை செய்பவர்கள் ஒவ்வொரு மாதமும் அவருடைய ஒவ்வொரு பெயரைக் கூறிப் பூஜை செய்ய வேண்டும்.

மாசி மாதம் அருணன் என்ற பெயரையும், பங்குனி மாதம் சூரியன் என்ற பெயரையும், சித்திரை மாதம் அம்சுமான் என்ற பெயரையும், வைகாசி மாதம் தாதா என்ற பெயரையும், ஆனி மாதத்தில் இந்திரன் என்ற பெயரையும், ஆடி மாதத்தில் ரவி என்ற பெயரையும், ஆவணியில் கபஸ்தி என்ற பெயரையும், புரட்டாசியில் யமன் என்ற பெயரையும், ஐப்பசியில் சுவர்ண ரேதஸ் என்ற பெயரையும், கார்த்திகை மாதத்தில் துவஷ்டா என்ற பெயரையும், மார்கழி மாதத்தில் மித்திரன் என்ற பெயரையும், தை மாதத்தில் விஷ்ணு என்ற பெயரையும் சூரிய பகவானுக்குச் சூட்டி அவரைப் பூஜிக்க வேண்டும். சூரியனைப் பூஜிப்பதோடு அவருடைய தேரில் உள்ள மற்ற தேவதைகளையும் விதிப்படி ஆராதிக்க வேண்டும். அப்போதுதான் அவர் திருப்தியுறுவார். ஒவ்வொரு தேவதைகளையும் பூஜிக்கத் தனி பூஜா முறைகள் சொல்லப்பட்டுள்ளன. அவ்வாறு அவர்களைப் பூஜிக்க வேண்டும். நியமத்தோடு ஸப்தமியிலோ, ஞாயிற்றுக் கிழமையிலோ சூரியனை விதிப்படி ஆராதிப்பவர் ஆயுள் விருத்தியடைந்தவராய் ஆரோக்கியமான வாழ்க்கை, ஐசுவரியம், தேஜஸ், கீர்த்தி, புத்திர பவுத்திரர்கள் முதலியவற்றைப் பெற்று முடிவில் சூரிய லோகத்தைச் சென்று அடைவர். சூரியனிடம் எப்போதும் பக்தி உடையவரும், சோம்பல் இல்லாதவரும் நற்குணங்களை உடையவருமான குருவை அடைந்து அவரைக் கொண்டு பூஜையை ஆரம்பிக்க வேண்டும். பூஜை செய்யும்போது நியமங்களை அனுசரித்தால் தான் பூரண பலனைப் பெறமுடியும். ஸப்தமிக்கு முதல் நாளான ஷஷ்டி அன்று முதலே நியமங்களைக் கைக்கொள்ள வேண்டும். வெளியிடங்களுக்குப் பிரயாணப்படாமல் இருத்தல்; மனத்திலே காம விகாரமில்லாதிருத்தல், மயக்கத்தைத் தரும் வஸ்துக்களைச் சாப்பிடாதிருத்தல், யாருக்கும் ஹிம்சை செய்யாதிருத்தல், வீட்டுக்கு விலக்கான ஸ்திரீகளுடன் பேசாதிருத்தல், அத்தகைய பெண்களுக்குச் சொந்தமான பொருளை ஏற்காமலிருத்தல், எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்யாதிருத்தல் ஆகிய விரத நியமங்களைக் கை கொள்ள வேண்டும். இவ்வாறாக நியமத்தோடு விரதம் இருப்பவன் சூரியனுடைய அனுக்கிரகத்துக்குப் பாத்திரனாவான். நாரதர் சாம்பனுக்கு சூரிய பூஜையில் செய்யப்படும் உபசாரங்கள் முதலானவற்றை எடுத்துக் கூறிய பின்னர் மேலும் சூரியனுடைய மகிமைகளைப் பற்றித் தெரிவிக்கலானார்.

32. ககோல்கம் எனப்படும் பிரமாண்டம்

ஆதியில் இந்த உலகம் செயலற்றதாக இருந்தது. ஆனந்தமில்லாமலும் ஆத்ம சொரூபமில்லாமலும் அவ்யக்தமாகவும் நித்தியமாகவும் இருந்தது. அதைப் பிரகிருதி என்றும் பிரதானம் என்றும் தத்துவத்தை அறிந்தவர்கள் சொல்வார்கள். வாசனையோ, ரூபமோ, ரசமோ உணர்ச்சி உள்ளதாகவோ இல்லாமல் இருந்த அந்தப் பிரகிருதியை உலகத்திற்குக் காரணமாகவும், புராதனமானதாகவும் சர்வ பூதங்களுக்கும் காரணமாகவும் சொல்லுவார்கள். அந்தப் பிரகிருதி எனப்படும் புருஷன் எல்லாவற்றுக்கும் முதல்வனாகவும், பிறவி இல்லாதவனாகவும், பங்கம் இல்லாதவனாகவும், மிகவும் சூக்ஷ்மமாகவும், மூன்று குணங்களோடு கூடியவனாகவும், புருஷ சிரேஷ்டனாகவும் பரமேச்வரன் என்றும் சொல்லப்பட்டான். சகல லோகங்களிலும் வியாபித்தவனாகவும், சராசரமயனாகவும் இந்த உலகைப் படைத்து ரக்ஷித்து முடிவில் தன்னிடத்தில் ஒடுக்கிக் கொள்பவனாகவும் அந்தப் புருஷன் சொல்லப்படுகிறான். யோகத்திலிருந்து விடுபட்ட அப்புருஷன் மாயையால் பிரஜைகளைச் சிருஷ்டிக்க எண்ணி முதலில் நீரை உண்டுபண்ணினான். அந்த ஜலம் எங்கும் பரவி நின்றது. அந்த ஜலத்தையே அப்புருஷன் இருப்பிடமாகக் கொண்டிருந்ததால் அவனுக்கு நாராயணன் என்ற பெயர் உண்டாயிற்று. பிரிக்கப்படாது எங்கும் நீர்மயமாக இருந்த அந்தப் பிரளய ஜலத்திலே அவர் படுத்திருந்தார். தேஜோ ரூபமாக அந்தப் பிரளய ஜலத்திலே அவர் படுத்திருந்தார். வெகுகாலம் சென்ற பின்பு அவர் தங்கமயமான ஒரு அண்டத்தைச் சிருஷ்டித்து தம்மையே அதனிடமிருந்து சிருஷ்டித்துக் கொண்டார். அந்த அண்டத்துக்குக் ககோல்கம் என்று பெயர். அந்த அண்டத்திலிருந்து விராட் புருஷன் என்ற உருவத்தோடு அவர் தோன்றினார்.

ககோல்கம் எனப்பட்ட அண்டத்திலிருந்து உண்டானதால் அவர் ககோல்கர் என்று அழைக்கப்பட்டார். தங்கமயமான அண்டத்திலிருந்து வெளிப்பட்டதால் அவர் ஹிரண்ய கர்ப்பன் என்றும் சொல்லப்பட்டார். மிகவும் பெரிதாகவும் விரிவை அடையக் கூடியதாகவும் உள்ள உருவத்தைப் பெற்றிருந்ததால் அவர் பிரம்மா என்றும் அழைக்கப்பட்டார். புரம் என்ற நாடியில் வசிப்பதால் புருஷன் என்ற பெயரை அவர் அடைந்தார். தேவதைகளுக்கு முதல்வனாக அவர் விளங்கியதால் மகாதேவன் என்றும் அழைக்கப்படலானார். அவர் எப்போதும் லோகத்துக்கு சுகத்தை உண்டு பண்ணுவதால் மகேச்வரன் என்ற பெயரைப் பெற்றார். அவரிடமிருந்து மக்கள் உண்டானதால் பிரஜாபதி என்றும் அவர் சொல்லப்பட்டார். தாமே அவர் உண்டானதாலும் எங்கும் நிறைந்தவராக இருப்பதாலும் அவர் சுவயம்பு என்றும் அழைக்கப்பட்டார். ஆயிரம் முகங்கள், ஆயிரம் கண்கள், ஆயிரம் கைகள், ஆயிரம் கால்கள் கொண்ட பிரும்மாண்ட உருவத்தை உடைய அவர் எல்லோருக்கும் முதல் புருஷனாகச் சொல்லப்படுகிறார். தேஜோரூபமாய் இருப்பதால் ககோல்கர் என்று அழைக்கப்படுகிறார். சுகதுக்கங்கள் இவற்றின் பந்தங்களால் சம்பந்தப்படாதவரும், அழிவற்றவரும், ஞானரூபியாகவும் எல்லாவற்றுக்கும் காரணமாக விளங்குபவருமான அவர் அவ்யக்தத்திலிருந்து உண்டானார். அவரிடமிருந்து மகத் என்பது உண்டாயிற்று. அதனிடமிருந்து அகங்காரம் உண்டாயிற்று. அதிலிருந்து இந்திரியங்கள் உண்டாயின. அவற்றினிடமிருந்து நான்குவித உலகமானது வியக்தமாக உண்டாயின. அவர் எப்போது மனசோடு சம்பந்தத்தை அடைகிறாரோ அப்போது பஞ்ச பூதங்கள் எனப்படும் பிரவிருத்தி உண்டாகின்றது. அவருடைய தினத்தின் முடிவில் அவர் எல்லாவற்றையும் மறுபடியும் தம்மிடத்திலேயே ஒடுக்கிக் கொண்டு நித்திரை செய்யத் தொடங்கி விடுகிறார். மீண்டும் கண்விழித்ததும் முன்னிருந்தபடியே மகாபூதங்களோடு கூடிய முக்குணங்களை உடையதுமான உலகைச் சிருஷ்டிக்கிறார்.

இந்த விதமாக ஏழு குதிரைகளை உடையவரும் ஆயிரம் கிரணங்களை உடையவருமான சூரியன் இந்த உலகை சிருஷ்டித்துக் காப்பாற்றி முடிவில் தம்மிடத்திலேயே ஒடுக்கி கொள்ளுகிறார். அவரே பிரளய காலத்தில் இந்த அண்ட சராசரங்களையும் கொளுத்துகிறார். ஆகவே காலாக்கினி ருத்திரன் என்ற பெயரைப் பெறுகிறார். அவரே மழையைப் பொழிவிக்கிறார். அவரே சமுத்திர ராஜன். நீலலோகிதன் என்ற பெயரும் அவருக்கே உரியது. எல்லா தேஜஸ்ஸுகளுக்கும் அவர் அதிபனாக விளங்குகிறார். யோகியாகவும் அவர் இருக்கிறார். அழிவற்றவராகவும், பிரம்மாவாகவும், அக்ஷரமாகவும் விளங்கும் அவரைவிடச் சிறந்த தெய்வம் இல்லை. தாவர ஜங்கமங்களை உடைய இந்த ஜகத்தை அவரே சிருஷ்டித்து, பரிபாலித்து, பிரளய காலத்தில் தாமே தம்முள் ஒடுக்கிக் கொள்கிறார். அவர் தம்முடைய கிரணங்களின் மூலம் மூன்று லோகங்களையும் பிரகாசிக்கச் செய்கிறார். எல்லாக் கோரிக்கைகளையும் கொடுப்பவராக இருப்பதால் அவர் பன்னிரண்டு ஆதித்தியர்களாக விளங்கி பிரும்மாண்டத்தையே கொளுத்திச் சாம்பராக்கித் தன்னுள் ஒடுக்கிவிடுகிறார். அவர் கிழக்கில் உதயமாகி மேற்கில் அஸ்தமிக்கிறார். மேருவை பிரதக்ஷணம் செய்து எல்லா லோகங்களிலும் அவர் பிரகாசிக்கிறார். எல்லா ஜீவராசிகளுடைய சரீரத்தில் அவர் விளங்குவதால் சூரியன் என்றும் அருணன் என்றும் அழைக்கப்படுகிறார். சகல லோகங்களையும் தரிப்பவர் என்றும் அவர் கொண்டாடப்படுகிறார். அவர் உதயாஸ்தமனங்களை நாள்தோறும் உண்டாக்குவதால் சூரியன் எனக் கொண்டாடப்படுகிறார். கிரணங்கள் நிறைந்திருப்பதால் அவரை அம்சுமான் என்பர். சகலமான ஐசுவரியங்களுக்கும் அதிபதியாக அவர் விளங்குவதால் இந்திரன் என்று அழைக்கப்படுகிறார். சகல லோகங்களிலும் உள்ள எல்லா ஜீவராசிகளையும் ரக்ஷிப்பதால் ரவி என்ற பெயரைப் பெற்றார். எல்லோரையும் அடக்கி ஆள்வதோடு முடிவில் தம்முள் ஒடுக்கிக் கொள்வதால் யமன் என்ற நாமதேயத்தைப் பெற்றார். எல்லாப் பிரஜைகளையும் அவர் சிருஷ்டிப்பதால் சுவர்ணரேதஸ் என்ற பெயர் அவருக்கு உண்டாயிற்று. அனைவரையும் அவர் சிநேகத்தால் ரக்ஷிப்பதால் மித்திரன் என்ற பெயரை அடைந்தார். இவ்வாறு அவர் பல்வேறு காரியங்களால் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறார்.

க என்பது ஆகாசத்தைக் குறிக்கிறது. அதன் குணம் சப்தம். ககாரம் என்பது வாயுவைக் குறிக்கிறது. அதன் குணம் ஸ்பரிசம். ஓங்காரம் தேஜோ மயமானது. அதன் குணம் ரூபம்; லகாரம் வருணனைக் குறிக்கிறது. அதாவது நீர். அதன் குணம் ரகம், ககாரம் பூமியைக் குறிக்கும். அதன் குணம் கந்தம். மேலே சொன்ன நான்கு விதமான குணங்களும் பூமியில் இருந்து கொண்டு பரமேசுவரனுடன் கூடி ஐந்தாகின்றன. பிராணன் முதல் ஐந்து இந்திரியங்கள் உண்டாகின்றன. காமேந்திரியங்கள் ஐந்தும் ஞானேந்திரியங்கள் ஐந்தும் உண்டாகின்றன. இவ்விதம் எல்லாம் சேர்ந்து இருபத்தாறு தத்துவங்களாகின்றன. இவற்றைக் கொண்டு அவர் சகல லோகங்களையும் எல்லா ஜீவராசிகளுடன் படைத்து, காத்து, முடிவில் அழிக்கவும் செய்கிறார். அவர் தம்முடைய வெப்பமான கிரணங்களால் பூமியிலுள்ள நதிகள், குளங்கள், ஏரிகள், சமுத்திரங்கள் ஆகியவற்றிலுள்ள நீரைக் கிரகித்து மேகமாக்கி மழையாக வர்ஷிக்கிறார். அஸ்தமன சமயத்தில் அவருடைய கிரணங்கள் அக்கினியில் பிரவேசிக்கின்றன. ஆகவே இரவு வேளையில் அக்கினி நன்கு பிரகாசிக்கின்றது. அக்கினியில் பிரவேசித்த கிரணங்கள் காலையில் மீண்டும் சூரியனை அடைகின்றன. இவ்வாறாக அவர் பகலையும் இரவையும் உஷ்ணத்தையும் உண்டாக்குகிறார். அவரே பிரமனாகவும், விஷ்ணுவாகவும், ருத்திரனாகவும், விளங்குகிறார். அவரே மூன்று வேதங்களின் வடிவாகவும் பிரகாசிக்கிறார்.

ரிக்வேத ஸ்வரூபியாக அவர் உதயமாகிறார். மத்தியானத்தில் அவர் யஜுர்வேத சொரூபியாக இருக்கிறார். அஸ்தமன சமயத்தில் அவர் சாமவேத சொரூபியாக விளங்குகிறார். மூன்று கிரணங்களால் அவர் பூலோகத்தையும், நான்கு கிரணங்களால் பிதுருலோகத்தையும் மூன்று கிரணங்களால் தேவலோகத்தையும் பிரகாசிக்கச் செய்கிறார். சூரிய மந்திரம் அல்லது தீøக்ஷ இல்லாதவர் சூரியனைப் பூஜை செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் அவன் ரோகத்தால் பீடிக்கப்படுகிறான். நியமத்தோடு உத்தமமான ஆசாரியரிடம் உபதேசம் பெற்றுச் சிரத்தையோடு சூரிய பூஜை செய்து வந்தால் அவனுக்கும் அவனைச் சேர்ந்தவர்களுக்கும் எல்லா நன்மைகளும் உண்டாகும். நாரதர் மேலும் சாம்பனுக்கு சூரியனுடைய ஆலயத்தில் எந்தெந்த தேவதைகளை எங்கெங்கு பிரதிஷ்டை செய்து எவ்வாறு மந்திரங்களால் பூஜை செய்வது என்பதை விளக்கினார். அ முதல் க்ஷ வரை உள்ள எழுத்துகள், அவற்றின் பெயர், அவை உண்டாகும் இடம் ஆகியவற்றையும் எடுத்துக் கூறினார்.

33. அபிசார ஹோமம்

பிறரைக் கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு சூனியம் வைப்பதை சூரிய பக்தன் சூரிய மந்திரங்களைக் கொண்டு ஆபிசார ஹோமம் செய்து போக்க முடியும். சூனியம் வைப்பதைப் பொதுவாகக் கீழ்க்கண்ட விதங்களில் சொல்வார்கள். ஒருவரை அவர் இருக்குமிடத்தை விட்டுச் செல்லும்படி செய்யும். எந்தவித வைத்தியத்திற்கும் கட்டுப்படாத வியாதிகள் உண்டாகும். பாடுபட்டுச் சேர்த்த தனம் காரணமின்றிப் பலவகைகளிலும் வீணாகச் செலவழியும். அந்த மனிதனையும் அவனைச் சேர்ந்தவர்களையும் பித்துப்பிடிக்கச் செய்யும். கண்பார்வை இழக்கும்படி செய்யும். உடலிலுள்ள அங்கங்களுக்குத் திடீரென ஆபத்து ஏற்பட்டு அவற்றை இழக்கவும் நேரிடலாம். பிறருடைய இஷ்டத்திற்கு நடக்கும்படி வசியம் செய்யலாம். சிறைவாசம் செய்யும்படியோ காவலில் இருக்கும்படியோ நேரலாம். அரசனோ, அதிகாரிகளோ கோபம் கொள்ளலாம். காரணமில்லாமல் செல்வம் குறைந்து போகும். எந்தவிதப் பலனுமில்லாமல் அடிக்கடி வெளியிடங்களுக்கும் பிரயாணம் செய்யும்படி நேரிடலாம். நாட்டை விட்டுக் காட்டுக்குச் செல்லும்படியாகலாம். இவ்விதமாகப் பலவகைத் துன்பங்களுக்கு ஒருவனை சூனியம் வைப்பதால் துன்புறுத்தலாம். இவ்விதம் சூனியம் வைக்கப்பட்டவன் அந்தக் கொடுமைகளிலிருந்து விடுபட பரிகாரமும் சொல்லப்பட்டிருக்கிறது. சூரிய மந்திரத்தோடு அகோரம் மகாரவுத்திரம் முதலிய மந்திரங்களையும் சேர்த்துக்கொண்டு ஹோமம் செய்யவேண்டும்.

துஷ்ட பூதங்கள் நடமாடும் சுடுகாட்டிற்குச் சென்று இரவு வேளையில் ஹோமம் செய்யவேண்டும். இடுப்பில் கறுப்பு வஸ்திரத்தை அணிந்துகொண்டு இரத்தத்திலே நனைக்கப்பட்ட பூணூலைத் தரித்துக் கொள்ள வேண்டும். தலையிலே இரத்தத்திலே நனைக்கப்பட்ட வஸ்திரத்தையே தலைப்பாகையாக அணிந்து கொண்டிருக்க வேண்டும். ச்மசான சாம்பலையே உடலெங்கும் பூசிக் கொள்ள வேண்டும். எலும்புகளையும் நரம்புகளையும் கபாலங்களையும் வைத்துக்கொண்டு ஹோமம் செய்யவேண்டும். முக்கோண வடிவில் அக்கினி குண்டம் அமைத்து அதில் விதிப்படி அக்கினி வளர்த்து இரத்தத்திலே தோய்த்து எடுக்கப்பட்ட சமித்துக்களால் ஹோமம் செய்யவேண்டும். சூனியம் வைத்தவருடைய உருவத்தை மூத்திரம், இரத்தம், புழுதி, சாம்பல், புற்றுமண் ஆகியவற்றால் எழுதவேண்டும். கறுப்பு ஆட்டின் இரத்தத்தைக் கொண்டு விஷம், அழுக்கு எண்ணெய் இவைகளைக் கலந்து, எழுந்து நின்று கொண்டு, தெற்கு முகமாகப் பார்த்தபடி இடது கையால் இரும்பினால் செய்யப்பட்ட கரண்டியால் எடுத்து ஹோம குண்டத்திலிட்டு ஹோமம் செய்யவேண்டும். இவ்விதம் ஹோமம் செய்தால் பகைவனால் வைக்கப்பட்ட சூனியத்தால் ஏற்படக் கூடிய கொடுமைகள் நீங்குவதோடு பகைவனும் அழிந்து போவான். நியமப்படி பக்தி சிரத்தையோடு சூரியனை ஆராதிப்பவர்களைப் பகைவர்கள் வைக்கும் சூனியம் ஒரு போதும் அண்டாது.

34. மந்திர சித்தி

பெண்களுடைய வார்த்தைகளுக்கு அடங்கி அவர்கள் விருப்பப்படி நடப்பவனாகவோ, ஸ்திரீலோலனாவோ தாழ்ந்த ஸ்திரீகளிடத்தில் சம்பந்தம் உள்ளவனாகவோ இருக்குமாறு ஒருவனை ஆபீசார பிரயோகத்தால் செய்து விடலாம். ஆகவே பக்தியோடு ஆசாரியரிடத்தில் மந்திர உபதேசம் பெற்று சித்தி பெறுபவன் அவ்வித துன்பங்களுக்கு ஒரு நாளும் ஆளாகமாட்டான். சரீரத்திலே உள்ள ஒவ்வொரு அங்கங்களிலும் ஒருவித நோய் ஏற்பட்டு தோற்றுவிக்கும் உபத்திரவங்களிலிருந்தும் அவன் பூரணமாக விடுபட்டு விடுவான். சூரியனுடைய சக்கரத்தை எழுதி அதை விதிப்படி சாஸ்திரோத்தமாகப் பூஜித்து மூன்று வேளைகளிலும் துர் தேவதைகளுக்கு மாமிசம் முதலானவற்றை நிவேதனம் செய்து அவற்றைத் திருப்தி செய்ய வேண்டும். பின்னர் சுத்தமான இடத்தில் அமர்ந்து மந்திரத்தைப் பக்தியோடு ஜபித்து வர வேண்டும். இவ்வாறு செய்தால் மந்திர சித்தி உண்டாகும். மந்திர சித்தி ஏற்பட்டவனை எந்தத் துர்தேவதைகளும் நெருங்காது. அவனை எந்தத் துன்பங்களும், தோஷங்களும் பீடிக்காது. மந்திரசித்தி பெறவேண்டும் என்ற ஆசைமட்டுமே கொண்டு முறைப்படி நியமங்களோடு மந்திர ஜபத்தைச் செய்யதாவன் பலவிதத் துன்பங்களுக்கு உள்ளாவான். ஆகவே தகுந்த ஆசாரியனிடம் உபதேசம் பெற்றுத் தத்துவ யோகத்தில் இருந்து இந்திரியங்களை ஒடுக்கி மந்திரங்களை ஜபிக்க வேண்டும். இவ்வாறு அந்த அந்தக் காலங்களில் முறைப்படி ஜபித்து வருவானேயாகில் எல்லாத் தேவதைகளுடைய திருப்தியையும் அவன் பெறுவான். அதனால் அவன் இஷ்டங்கள் அனைத்தும் பூர்த்தியாகும். சூரிய மந்திரத்தின் சக்தியின் மூலம் பூமியில் இரகசியமாகப் புதைக்கப்பட்டிருக்கும் கெடுதல்களைத் தோற்றுவிக்கும் சூலம், யந்திரம் முதலானவற்றை எடுத்து விடலாம். குரூரமான சில சிறிய தேவதைகளையும், மகாபலம் வாய்ந்த பைரவர்களையும் மகாமாரியின் வகுப்பைச் சேர்ந்த பூதங்களையும் அருகில் நெருங்க முடியாமல் விரட்ட முடியும்.

சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளபடி பரிசுத்தமான அன்னத்தை உட்கொண்டு நியமங்களோடு மந்திர சித்திக்காகச் சொல்லப்பட்ட ஹோமங்களைச் செய்யவேண்டும். நீரினாலும் ஆகார நியமங்களாலும் சரீரத்தைச் சுத்தி செய்து கொள்ள வேண்டும். மனத்தை அடக்கி ஆயிரக்கணக்கில் பிரணவத்தை உச்சரித்து மனத்தையும் சுத்தி செய்து கொண்டு பகவான் விதிப்படி பிரதிஷ்டை செய்து பூஜை செய்து மந்திரத்தை ஆயிரக்கணக்கில் ஜபித்து வர வேண்டும். இவ்விதம் ஜபித்து வந்தால் அவனுக்கு மந்திர சித்தி உண்டாகும். மந்திரம் சித்தியான பிறகும் அவன் தொடர்ந்து அந்த மந்திரத்தை உச்சரித்து அதை உருவேற்றிக்கொள்ள வேண்டும். மந்திரம் பலிக்குமா, பலிக்காதா என்ற சந்தேகம் கொள்பவனுக்கு மந்திர சித்தி ஏற்படாது. பெண்பித்து பிடித்தவனுக்கும், பேராசை உள்ளவனுக்கும், நித்திய கர்மாக்களைக் கை விட்டவனுக்கும், பொருளிலே ஆசை கொண்டவனுக்கும், குடும்பக் கவலையால் பீடிக்கப்பட்டவனுக்கும், மந்திரசித்தி ஏற்படாது. அநாசாரம் உள்ளவருக்கும் மந்திர சித்தி உண்டாகாது. பக்தி உள்ளவனும், தபஸ்ஸை உடையவனும், புலன்களை ஜபித்தவனும் மந்திர சித்தையைச் சுலபத்தில் அடைவான். மந்திர சித்தியை அடைந்தவன் மிகுந்த தேஜஸ்ஸுடன் கூடியவனாக விளங்குவான். அவன் எண்ணங்கள் எண்ணியபடி நிறைவேறுமானால் அவன் மந்திர சித்தி பெற்று விட்டான் என்று சொல்லலாம்.

மந்திர சித்தி அடைந்தவன் சகலமான துன்பங்களிலிருந்தும் விடுபட்டு விடுவான். மந்திர சித்தியால் நாட்டை விட்டு வெளியேற நேர்ந்த அரசன் திரும்பவும் தன் ராஜ்ஜியத்தை அடைய முடியும். மந்திர சித்தியை அடையும் முயற்சியில் ஈடுபட்டிருக்கையில் நடுவே விக்கினங்கள் ஏற்படலாம். அதற்காக அவன் மனம் கலங்கி முயற்சியை நிறுத்திவிடக் கூடாது. தன்னைச் சுத்தி செய்து கொண்டு தைரியத்தோடு மறுபடியும் தொடர வேண்டும். விடா முயற்சியுடன் மேற்கொள்ளுபவன் அஷ்ட சித்திகளையும் அடைந்து பிரம்மா, விஷ்ணு, சிவன் போலப் பிரகாசிப்பான். மந்திர சித்தி பெற்றவன் ஆனந்தத்தைப் பெறுவான் சிவலோகத்தை அடைவான். நல்ல மனைவியை அடைந்து புத்திர பவுத்திரர்களைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வான். முடிவில் மீண்டும் அவனுக்குப் பிறவி இருக்குமானால் உத்தம குலத்தில் பிறப்பான். ஜாதகர்மாதி சம்ஸ்காரங்களைச் செய்து உபநயனம் முடிந்ததும் உத்தமமான ஆசாரியாரிடம் உபதேசம் பெற்று, நல்ல குலத்தில் பிறந்த அழகிய பெண்ணை மனைவியாக அடைந்து மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்துவான். ஒரு ஹவிர்யக்ஞம், ஏழு பாகயக்ஞம், ஏழு சோமயாகம் முதலானவற்றை நியமமாக அனுஷ்டித்து, நற்குணங்களோடு கூடியவனாய் சித்த சுத்தியை அடைந்து விளங்குவான். அவன் சுக துக்கங்களினால் ஏற்படும் துன்பங்களிலிருந்து விடுபட்டவனாய், காம குரோதாதிகளின் சம்பந்தம் இல்லாதவனாய், பிற உயிரைத் தன் உயிரைப்போல எண்ணுபவனாய் சுத்தமான ஆசாரத்தோடு கூடியவனாயும் விளங்குவான். இவ்வாறாக, கிரமத்தோடு அந்த மந்திர கர்மாக்களை அனுஷ்டித்துத் தியானம் செய்து வந்தால் எப்பொழுதும் அவன் சிவனைத் தன் தேகத்திலேயே இருப்பவராக உணர்வான். சகல மதங்களையும் நிராகரித்து, காரணமில்லாததையும் ஆசாரமில்லாததையும் விலக்கி, மகிமையை வாயினால் எடுத்துச் சொல்வதற்குள் மேம்பட்டவனாகி, எல்லாத் தியாகங்களுக்கும் மேற்பட்டவனாகி, வஸ்திரமானது நூலால் நெய்யப்பட்டிருப்பது போல, இந்த உலகமானது ஈசுவரனால் சிருஷ்டிக்கப்பட்டது என்பதை உணர்ந்து தியானத்தால் சரீரத்தைத் தியாகம் செய்து மோக்ஷத்தை அடைகிறான்.

35. மந்திரசித்தி அடைந்தவனுக்கான விதிகள்

கல்பத்தின் ஆரம்பத்தில் தேவதைகளைக் குறித்து மாமிஸத்தால் ஹோமம் செய்து வந்தார்கள். அதனால் அவர்கள் உடனேயே பலன்களை அனுபவித்தார்கள். தேவதைகளுடைய அனுக்கிரகத்தைக் கோருகிறவர்கள் பக்தி சிரத்தையோடு நியமங்களைக் கைக்கொள்ளவேண்டும். எப்போதும் உண்மை பேசுவதையே கடைப் பிடிக்க வேண்டும். மூன்று வேளைகளிலும் நித்திய கர்மாக்களை விடாது அனுஷ்டிக்க வேண்டும். நல்ல கர்மாக்களையே செய்வதென்று சங்கல்பித்துக் கொண்டு அவ்வாறே நடக்க வேண்டும். எப்போதும் ஆசாரத்தோடு சுத்தமாக இருக்கவேண்டும். உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கண்டபடி உணவு உட்கொள்வதோ, மனம்போனவாறு பேசுவதோ கூடாது. யார் எந்த தேவதையைப் பூஜித்து வந்தாலும் அவரவர் தருமத்திற்கு ஏற்ப நியமிக்கப்பட்ட நித்திய கர்மாக்களை அனுஷ்டிக்க வேண்டும். ஏக அக்கினியைப் பூஜிப்பதோடு வேதம் கூறியபடி மூன்று அக்கினிகளையும் ஆராதிக்க வேண்டும். பிரம்மசாரி உத்தம குருவை அடைந்து அவருடைய நன் மதிப்பைப் பெற்று வேதங்களை நன்கு கற்க வேண்டும். உயர்ந்த குலத்தில் பிறந்த அழகிய பெண்ணை மணந்து யக்ஞயாகாதிகளைச் செய்து புத்திர பவுத்திரர்களைப் பெற வேண்டும். பின்னர் தன் புத்தரனிடம் அக்கினி பூஜையையும் கிருகத்தையும் ஒப்புவித்து விட்டு கானகம் சென்று வானப் பிரஸ்த ஆசிரமத்தை மேற்கொள்ள வேண்டும். அந்த ஆசிரமத்தில் சிறிது காலம் இருந்து அதற்குரிய கர்மாக்களை நியமத்துடன் அனுஷ்டித்து வரவேண்டும். பின்னர் அவற்றையும் கைவிட்டுச் சன்னியாச ஆசிரமத்தை மேற்கொள்ள வேண்டும்.

நாட்டிற்கு ஏதேனும் ஆபத்து வரும் சமயத்தில் அரசனும் வந்து பிரார்த்தித்துக் கொள்வானேயாகில் சன்னியாசி தன் ஆசிரமத்தை விட்டு விட்டு நாட்டுக்கு வந்து சேவையில் ஈடுபடவேண்டும். சன்னியாசிக்கு எந்தவிதக் கர்மாவும் விதிக்கப்படவில்லை. ஆயினும் ஆபத்துக்காக அவன் மீண்டும் நகர வாழ்வை மேற்கொண்டதால் அந்தத் தோஷம் நீங்கப் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். நாட்டிலே அவன் இருக்க வேண்டிய அவசியத்துக்கு மேல் ஒரு நாள் கூடத் தங்கக்கூடாது. மீண்டும் கானகம் திரும்பி சன்னியாச ஆசிரமத்தை மேற்கொள்ள வேண்டும். மூன்று நாட்கள் ஸம்ஹார மந்திரங்களைக் கூறிப் பூஜை முதலியவற்றைச் செய்து தனக்குரிய கர்மா அல்லாததை ஏற்றுக் கொண்டதற்காக அவன் பகவானைப் பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும். தட்சிணாமூர்த்தியை ஆராதித்து அவருடைய அனுக்கிரகத்தைப் பெற்று ஸ்திரமான சித்தத்தை உடையவனாகவும், திடமான விரதத்தை உடையவனாகவும் இருக்க வேண்டும். மந்திர சித்தி அடைந்தவன் ஜப ஹோமங்களைத் தொடர்ந்து கைப்பிடித்து வரவேண்டும். அருகம்புல், எள்ளு, தர்ப்பை முதலியவற்றைக் கொண்டு பகவானைக் குறித்து ஹோமம் செய்யவேண்டும். அரளி புஷ்பம், சுவர்ண பஸ்ப புஷ்பம், வெள்ளெருக்கு புஷ்பம், சத்புஷ்பம் ஆகியவற்றைக் கொண்டு பூஜை செய்யவேண்டும். எட்டி, கருங்காலி முதலான சமித்துக்களைக் கொண்டும் ஹோமம் செய்ய வேண்டும்.

இவ்விதம் தொடர்ந்து பகவானை ஆராதிப்பவன் சகலமான துன்பங்களிலிருந்தும் விடுபடுவான். ஹோமம் பஸ்பமான சாம்பலை மேனியில் பூசிக் கொள்ளவேண்டும். அது ரøக்ஷ போன்று அவனைக் காத்துவரும். அவன் எந்த விதமான பயமுமின்றிசஞ்சாரம் செய்யலாம். மந்திர சித்தி உடையவன் உபவாசம் முதலிய நியமங்களை அவசியம் மேற்கொள்ள வேண்டும். உபவாஸம் இருக்கச் சக்தி இல்லாதவர் கிழங்கு, பழம், கீரை, கஞ்சி வடிக்காத அன்னம் இவற்றில் ஏதாகிலும் ஒன்றை ஏற்று அதில் எட்டு கவளம் மட்டுமே புசிக்க வேண்டும். அல்லது பிøக்ஷ எடுத்துப் புசிக்கலாம். இவ்விதம் சாப்பிட்டு ஜபம் செய்தால் பூரணமாக உபவாசம் இருந்த பலனை அடைவான். ஒவ்வொரு மந்திரத்தையும் ஒரு எழுத்திற்கு லக்ஷம் முறை ஜபம் செய்ய வேண்டும். அவ்விதம் ஜபம் செய்வதில் அதில் ஒரு பங்கு நெய்யினால் ஹோமம் செய்யவேண்டுமெனச் சொல்லப் பட்டிருக்கிறது. அவ்விதம் செய்வதற்கு வசதி இல்லாவிட்டாலோ, பொருள் இல்லாவிட்டாலோ, நூறில் ஒரு பங்கு அதிகப்படியாக மனதால் ஜபம் செய்ய வேண்டும். அப்போது அந்தப் பலனை அடையலாம். இவ்வாறாக மந்திர சித்தி அடைந்தவன் தினமும் சூரியனைக் குறித்துப் பூஜை, ஹோமம் முதலான செய்வதோடு மனத்தினால் பிராணாயாமம் முதலான செய்து மந்திர ஜபமும் செய்து வரவேண்டும்.

36. மானஸீக புஷ்ப பூஜை

ஒவ்வொருவருடைய இருதயத்திலும் உள்ள தன்யமே லிங்கமாகும். பிரத்திபக்ஷமாக லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து பூஜிப்பவர் கூட முதலில் ஹிருதயத்திலுள்ள லிங்கத்தை மானஸீகமாகப் பூஜிக்க வேண்டும். பிரதிஷ்டை செய்த லிங்கத்தைப் பூஜிப்பதால் ஏற்படும் பலன்களை விட அதிக மடங்கு பலன்களை இருதயத்திலுள்ள லிங்கத்தைப் பூஜிப்பதால் அடையலாம். பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கத்தை வாசம் மிகுந்த மலர்களைக் கொண்டு பூஜிப்பது போல இருதயத்திலுள்ள லிங்கத்தைப் பூஜிக்க எட்டுவித மானஸீக புஷ்பங்கள் சொல்லப்பட்டுள்ளன. உடல், வாக்கு, மனம் எனப்படும் முக்கரணங்களாலும் யாருக்கும் எந்தவித ஹிம்சையும் செய்யக்கூடாது. அஹிம்சை எனப்படும் அதுவே முதல் புஷ்பமாகும். கண், காது, மூக்கு, வாய், மனம் என்னும் பஞ்ச இந்திரியங்களையும் அடக்கி ஒருநிலைப்படுத்த வேண்டும். இந்திரிய ஜபம் என்பது இரண்டாவது புஷ்பமாகும். தேகத்துக்கோ, மனத்துக்கோ துன்பம் நேருமானால் மனம் கலங்கக்கூடாது. தைரியமாக அவற்றை ஏற்கவேண்டும். தைரியம் என்பது மூன்றாவது புஷ்பம். ஒருவர் எந்தவிதத் தீங்கு இழைத்தாலும் அதைப் பொறுமையோடு சகித்துக்கொள்ள வேண்டும். அதைப் பொருட்படுத்தக் கூடாது. பொறுமை எனப்படுவது நான்காவது புஷ்பம். தேகம், மனம், வாக்கு இம்மூன்றின் விஷயத்திலும் எப்போதும் சுத்தமாக இருக்கவேண்டும். அவைகளின் ஈடுபாடுகளில் களங்கமோ அசுத்தமோ கூடாது. சவுசம் எனப்படும் சுத்தியே ஐந்தாவது புஷ்பம்!

கோபம் ஏற்படக்கூடிய சமயம் வந்தாலும், பிறர் உன்னைக் கோபம் கொள்ளுமாறு தூண்டினாலும், அதற்கு இடமளித்து விடக்கூடாது. கோபத்தை அறவே ஒழிக்க வேண்டும். அத்ரோஹம் எனப்படும் இது ஆறாவது புஷ்பம். அதர்மமான காரியத்தைச் செய்வதில் மனம் கூச வேண்டும். எண்ணத்திலும் பேச்சிலும் அதர்மமான காரியங்களில் ஈடுபட மனம் கூசி அதைச் செய்யாமல் தடுக்க வேண்டும். வெட்கப்படக்கூடிய இத்தன்மையை அடைவதே ஹரீ என்னும் ஏழாவது புஷ்பமாகச் சொல்லப்பட்டுள்ளது. மனத்திலே எப்போதும் ஸத்தியத்தையே நினைக்க வேண்டும். பேச்சிலும் ஸத்தியத்தையே கடைப்பிடிக்க வேண்டும். ஸத்தியம் எனப்படும் இது எட்டாவது புஷ்பம். இவ்வாறாக இருதயத்திலுள்ள லிங்கத்தைப் பூஜிக்க எட்டு வித மானஸீக புஷ்பங்கள் விதிக்கப்பட்டுள்ளன. நாள்தோறும் எவன் இந்த மானஸீக புஷ்பங்களால் மந்திர ஜபம், ஹோமம் முதலான செய்து பகவானைப் பூஜிக்கிறானோ அவன் அக்ஞானம் எனப்படும் இருளிலிருந்து வெளிப்பட்டவனாய் சுஷும்நா நாடிவழியாக சிரசைப் பேதித்துக்கொண்டு நிஷ்கலமாகவும் நித்தியமாகவும் விளங்கும் பகவானை அடைகிறான். தியானம் முதலான உபசாரங்களாலும் பகவானைப் பூஜிக்க வேண்டும். தியானமென்னும் அக்கினியால் உடலிலுள்ள அகங்காரம் முதலான மலங்களைப் பொசுக்கித் தேகத்தைச் சுத்திகரித்துக் கொள்ள வேண்டும்.

ஞானமே மிகவும் உத்தமமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. தினந்தோறும் நியம அனுஷ்டானங்களோடு பகவானைத் தியானம் செய்து, தகுந்த ஆசாரியன் மூலம் சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ள எல்லாவற்றையும் அறிந்து மனம் தெளிந்து விஷய சுகாதிகளின் பந்தங்களிலிருந்து விடுபட்டுப் பிராணாயாமத்தால் இந்திரியங்களை அடக்கி, தாமரை போல மலர்ந்திருக்கிற இருதயத்திலே பகவானைக் காண்பவன் சுஷும்நா நாடி மூலம் கபாலத்தைப் பிளந்து கொண்டு பகவானுடைய சமீபத்தை அடைகிறான். அதுவே மோக்ஷம் அடைவதாகும். அவனுக்கு மறுபடியும் பிறப்பு என்பதே இல்லை. ஞானத்தால் நான், என்னுடையது என்ற அகங்காரம் நசித்துப் போகிறது. நம்முடைய கண்களுக்குப் பார்வை சூரியனுடைய அருளால் கிட்டுகிறது. ஆகவே கண்களே சூரியன். நாக்கு அவற்றை அறிவது வருணனுடைய அனுக்கிரகத்தால், ஆகவே நாக்கே வருணன். மூக்கின் மூலம் நாம் முகர்வது பூமிதேவியின் கடாக்ஷத்தால். அதனால் நமது மூக்கே பூமி. நம்முடைய உடலில் அக்கினியும் வாயுவும் வியாபித்திருக்கின்றது. ஆகவே இந்தச் சரீரம் அக்கினியும் வாயுவுமாகும். இந்திரியங்களுக்கும் கைகளுக்கும் அதிஷ்டான தேவதையாக இந்திரன் இருந்து காரியங்களை நிறைவேற்றுகிறான். ஆகவே கர்மேந்திரியங்களே இந்திரன். நம்முடைய உடலில் விஷ்ணு இருந்து எல்லாவற்றையும் அனுபவிக்கிறார். ஆகவே விஷ்ணுவே போக்தா. பாபங்களுக்கு இருப்பிடம் அபானம் ஆகும். ஜீவன் மனத்திலிருந்து கொண்டு எல்லாக் காரியங்களையும் கவனித்து வருகிறது. ஆகவே மனமே ஜீவாத்மா. இவ்வாறு தியானித்து உபாசிப்பது உயர்ந்த மானஸீக பூஜை என்று சொல்லப்படுகிறது.

37. புராண பலன்

இவ்வாறாக நாரதர் கூறி முடித்ததும் சாம்பன் அவரை நமஸ்கரித்துப் பணிவோடு கேட்டான். மகரிஷே, இவ்வுலகிலே எத்தனையோ பேர் அருவருப்பான குஷ்டம் என்ற நோயினால் பீடிக்கப்பட்டுத் துன்புறுகின்றார்கள். அவர்கள் எந்தக் கர்மாவைச் செய்தால் தாங்கள் பட்டு வரும் துன்பங்களிலிருந்து விடுபட்டு சவுக்கியத்தை அடைவர்? தயவுகூர்ந்து அந்த மார்க்கத்தைக் கூற வேண்டும்.

சாம்பன் கேட்டதும் நாரதர் மனமகிழ்ந்து, ஹே கிருஷ்ணபுத்திரா, உலகத்தோரின் நன்மைக்காக இந்தக் கேள்வியைக் கேட்ட உன் பரோபகார சிந்தையைப் பாராட்டாமலிருக்க முடியவில்லை. பிரத்தியக்ஷ தெய்வமான சூரியனைப் பூஜிக்காதவர் குஷ்டம் முதலான கொடிய ரோகங்களால் பீடிக்கப்படுவர். எவ்வித ரோகத்தை உடையவனும் சூரியனை ஆராதிப்பானேயாகில் அவன் அவருடைய அருளுக்குப் பாத்திரவானாகி, உடனேயே உடலை வருத்தி வரும் நோயின் கொடுமைகளிலிருந்து விடுபடுவான். சூரியனிடம் பக்தி கொண்டு நியம நிஷ்டைகளோடு, சுத்தமான ஆசாரத்தைக் கடைப்பிடித்து விதிப்படி சொல்லப்பட்டுள்ள ஜபம், ஹோமம் முதலான பூஜைகளைத் தினமும் செய்து வருபவனுக்கு எந்த நோயினாலும் துன்பம் இல்லை. அவன் உடலைப் பற்றியிருக்கும் நோய்கள் விரைவில் நீங்கி வரும். தகுந்த ஆசாரியரைக் கொண்டு பகவானுடைய மகிமைகளைக் கூறக் கேட்க வேண்டும். புராணம் கூறுகின்ற பவுராணிகரைப் பக்தியுடன் பூஜித்துத் திருப்தி செய்யவேண்டும். சந்தனம், வஸ்திரங்கள் முதலான தந்து கவுரவிக்க வேண்டும். கோதுமை, உளுந்து, பயறு முதலான தான்யங்களைப் பாத்திரங்களில் வைத்து அவருக்கு அளிக்க வேண்டும். மேலும் தானம் செய்யப்படும் பொருள்களை வெள்ளி, தங்கம், தாம்பிரம் ஆகிய இவற்றால் செய்த பாத்திரங்களிலே வைத்துத் தானம் தரவேண்டும். பகவானாகிய சூரியனை அவருடைய இரு பத்தினிகளோடு பூஜித்து உத்தமப் பிராம்மணர்களுக்கு அறுசுவை அன்னம் அளிக்கவேண்டும். இவ்விதம் செய்பவன் புத்திர பவுத்திரர்களைப் பெற்றுச் சகல போகங்களையும் அனுபவிப்பான். அவன் செல்வம் ஒரு நாளும் குறையாது. அக்ஷயபாத்திரம் போன்று வளர்ந்து கொண்டே இருக்கும். முடிவில் அவன் சூரிய லோகத்தை அடைவான். இவ்வாறு நாரதர் கூறி முடித்தபோது, சாம்பன் அளவற்ற ஆனந்தம் அடைந்து அவரால் ஆசீர்வதிக்கப்பட்டவனாய் சூரியனை விதிப்படி ஆராதித்து அங்குக் குழுமியிருப்போருக்கும் பகவானுடைய அருள் பிரசாதம் கிட்டச் செய்தான். வசிஷ்டர் பிரகத் பலனைப் பார்த்து, ஹே ராஜன், இதுவரை சூரியனுடைய மகிமையை நான் சொல்லக் கேட்டாய். அப்பெருமானிடம் பக்தி கொண்டு அவரை ஆராதித்து நீயும் அவருடைய அருளுக்குப் பாத்திரமாவாயாக என்றார். அரசனும் மகரிஷியை நமஸ்கரித்து அவர் அனுக்கிரகத்தால் சூரியனை ஆராதித்து அளவற்ற நன்மைகளைப் பெற்று அனைவராலும் கொண்டாடப்பட்டான். நைமி சாரண்ய வனத்திலே குழுமியிருந்த முனிவர்களைப் பார்த்து சூதமுனிவர், தவத்தால் சிறந்தவர்களே, நாரத முனிவர் சாம்பனுக்கு எடுத்துக்கூறிய இந்த அரிய புராணத்தை நான் சொல்லக் கேட்டீர்கள். பதினெட்டுப் புராணங்களையும் பக்தியுடன் கேட்பவரும் படித்தவரும் அடையும் புண்ணியங்களை இந்த ஒரு புராணத்தைக் கேட்டதினால் மட்டுமே பெறலாம். பகவான் சூரியன் தம்மை ஆச்ரயித்தவர்களுக்கு எப்போதும் அருள் செய்யக் காத்துக் கொண்டிருக்கிறார் என்றார். ஆயிரம் கிரணங்களோடு ஜகஜ்ஜோதியாகப் பிரகாசிக்கும் சூரிய பகவானுடைய திவ்விய சொரூபத்தை முனிவர்கள் தங்கள் மனமாகிற ஆகாசத்திலே கண்டு பரவசமடைந்தார்கள்.

 
மேலும் சூர்ய புராணம் »
temple news
தக தகவென்று தங்கத் தாம்பாளம் போன்று ஜொலித்துக் கொண்டு ஆயிரம் கிரணங்களோடு கீழ்த்திசையில் சூரியன் ... மேலும்
 
temple news
புராணங்களில் காணப்படும் கதைகள்: (சாம்ப புராணம் எனப்பட்ட சூரியபுராணத்தில் சூரியன் பரம்பொருளாகச் ... மேலும்
 
temple news
சூரிய கோயில்கள் கோணார்க்: வேத காலம் தொட்டு சூரிய வழிபாடு நம் நாட்டில் இருந்து வந்தாலும் ஆறாம் ... மேலும்
 
temple news
சூரிய வழிபாடு: உலகத்தின் உயிராக விளங்கும் சூரியனுடைய வழிபாடு தொன்று தொட்டே இருந்து வருகிறது. வேதங்கள் ... மேலும்
 
temple news
சூரிய நமஸ்காரப் பதிகம் வெண்பா: மின்னுஞ் சூரியன் மீது மேவச் சிறு பதிகம், பன்னும் படி யெனக்குப் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar