மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள ஏ. விளாக்குளம் நிறைகுளத்து அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு கிராமத்தினர் விவசாயம் செழிக்க வேண்டி மானாமதுரையில் இருந்து 15க்கும் மேற்பட்ட புரவிகளை ஏ.விளாக்குளம் கிராமத்திற்கு ஊர்வலமாக தூக்கி சென்றனர்.
மானாமதுரை அருகே ஏ.விளாக்குளம் கிராமத்தில் உள்ள நிறைகுளத்து அய்யனார் கோயிலில் வருடந்தோறும் ஆனி மாதம் விவசாயம் செழிக்க வேண்டியும், நல்ல மழை பொழிய வேண்டியும் புரவி எடுப்பு திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்நிலையில் கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக திருவிழா நடைபெறாத நிலையில், இந்தாண்டு திருவிழாவிற்காக நேற்று காலை ஏ. விளாக்குளம் கிராமத்தில் இருந்து ஏராளமான மக்கள் ஊர்வலமாக மானாமதுரை குலாலர் தெருவிற்கு வந்தடைந்தனர்.அங்கு செய்து வைக்கப்பட்டிருந்த புரவிகள் மற்றும் காளை மாடுகள்,சாமி உருவங்கள் ஆகியவற்றிற்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக,ஆராதனைகள் நடத்தியும் மாலைகள் அணிவித்தும் வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் புரவிகளையும்,சுவாமி உருவங்களையும் சுமந்து கொண்டு மேள, தாளங்கள் முழங்க மானாமதுரை நகரின் முக்கிய வீதிகளின் வழியே ஊர்வலமாக சென்று கிராமத்தில் உள்ள நிறைகுளத்து அய்யனார் கோயில் முன்பாக புரவிகளை இறக்கி வைத்து நேர்த்திக்கடன்களை செலுத்தினர். இன்று புதன்கிழமை கோயில் முன்பாக ஆடு, கோழிகளை பலியட்டும் தங்களது நேர்த்திகடன்களை செலுத்துவர்.நாளை(வியாழக்கிழமை) புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு பெரிய மாடு,சின்ன மாடு மாட்டு வண்டி பந்தயமும், வடமாடு மஞ்சுவிரட்டும், நாளை மறுநாள்(வெள்ளிகிழமை) ஆட்டுகிடா முட்டு சண்டையும் நடைபெற உள்ளது.விழா நாட்களின் போது தினந்தோறும் இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. விழாவிற்கான ஏற்பாடுகளை ஏ.விளாக்குளம் கிராமத்தினர் செய்து வருகின்றனர்.